Published:Updated:

கேப்டன் கோலி Vs மென்ட்டார் தோனி... சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தும் வியூகங்கள் பெங்களூருவிடம் உண்டா?

போட்டி எந்தப் பக்கம் முடிவடையும் என்பதையும் தாண்டி, வின்டேஜ் கோலி மற்றும் தோனியை திரும்ப தரிசித்து விட மாட்டோமா என்பது, அவர்களது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ரன்கள் டன் கணக்கில் விளைவிக்கப்படும் ஷார்ஜாவில், பவர்ஃபுல் பேட்டிங் லைன் அப்போடு, ஆர்சிபியின் பௌலிங் படையை, நெருக்கடிக்குத் தள்ளக் காத்திருக்கிறது சிஎஸ்கே. ' செம என்டர்டெய்ன்மென்ட்டுக்கு நாங்க கியாரன்ட்டி' என கோலியின் ஆர்சிபியும் தயாராக இருப்பதால் இன்று ஆட்டம் களைகட்டும் என எதிர்பார்க்கலாம்.

கலவர நிலவரம்!

ஆர்சிபிக்கு எதிராக, அதிகப் போட்டிகளை வென்ற ஐபிஎல் அணி என்னும் ரெகார்டை, தன் வசம் வைத்துள்ளது சிஎஸ்கே. இதுவரை இவ்வணிகள் மோதிக் கொண்ட போட்டிகளில், 9 போட்டிகளில் ஆர்சிபி வென்றிருக்க, அதற்கு இரு மடங்காக 17 போட்டிகளை வென்று, மஞ்சள் கொடியை சற்று உயரமாகவே பறக்க விட்டுள்ளது சிஎஸ்கே. இந்த சீசனில் மட்டும் என கருத்தில் கொண்டாலும்கூட, கடந்த முறை ஜடேஜாவின் ஜெட்வேக இன்னிங்சில், அடங்கிப் பணிந்திருந்தது ஆர்சிபி.

ருத்துராஜ் கெயிக்வாட்
ருத்துராஜ் கெயிக்வாட்

கெய்க்'வாட்' எனும் உயர்மின்னழுத்தம்!

டுப்ளெஸ்ஸிக்கு சப்போர்டிங் ரோல் ஆடினாலே போதுமென கருதப்பட்ட ருத்துராஜ் கெயிக்வாட், இப்போது அடுத்த கட்டத்த நகர்ந்து விட்டார். அவர் அரைசதம் அடித்த எந்த ஒரு போட்டியிலும், சிஎஸ்கே தோற்றதில்லை எனும் புள்ளி விவரங்களும், அவரை அணியின் முக்கியப் புள்ளியாக மாற்றி உள்ளது. தொடக்க காலத்தில், 60-களில் ஆட்டமிழந்து கொண்டிருந்தவர், தற்சமயம், அதனை பெரிய இன்னிங்ஸாகவும் மாற்றத் தொடங்கி 'இறுதிப் பந்தைச் சந்திக்கும் வரை என் கடமை முடிவதில்லை' என்கிற நிலைக்கு உயர்ந்திருக்கிறார்.

சாமுக்கு ஸ்லாட் கிடைக்குமா?!

குவாரன்டைன் காரணமாக, முதல் போட்டியில் பங்குபெறாத சாம் கரணின் இடம் சற்றே ஆட்டம் கண்டுள்ளது. அவர் உள்ளே வருவதனால் யார் வெளியே அனுப்பப்படுவார் என்பது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. டுப்ளஸ்ஸி மற்றும் மொயின் அலியின் முந்தைய ஆட்டங்கள் அவர்களது இடத்தை உறுதி செய்வதால், பிராவோ மற்றும் ஹேசில்வுட்டின் பக்கம்தான் கண்கள் திரும்பும். போன போட்டியில், பிராவோவின் முப்பரிமாண ஆட்டம், அவருக்குக் கேடயமாக உதவியது. அதனால் ஹேசில்வுட்தான் தனது இடத்தை, சாம் கரணுக்காக தாரை வார்க்க வேண்டியதிருக்கும்.

உத்தப்பா ரிட்டன்ஸ்!

'புது தொடக்கத்துக்கு தயாராகிறேன்' என உத்தப்பா, சிஎஸ்கே ஜெர்சியோடு, தான் வலைப் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படத்தை, தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி இருக்கிறார். அவர் சூசகமாகச் சொல்லி இருப்பது, சிஎஸ்கேவுக்காகக் களமிறங்குவதுதான் எனில் ஒருவேளை அது கடந்த போட்டியில் ரிட்டையர்ட் ஹர்ட் ஆகி வெளியேறிய அம்பதி ராயுடுக்கு பதிலாக இருக்கலாம்.

கோலி
கோலி

கேப்டன்கள் கலக்குவார்களா?

போட்டி எந்தப் பக்கம் முடிவடையும் என்பதையும் தாண்டி, வின்டேஜ் கோலி மற்றும் தோனியை திரும்ப தரிசித்து விட மாட்டோமா என்பது, அவர்களது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. இந்த சீசனில் இதுவரை ஆடிய எட்டு போட்டிகளில், கோலி 203 ரன்களை, 29 சராசரியோடு குவித்துள்ளார். 2014-ம் ஆண்டுக்குப் பிறகு, அவரது மோசமான ஐபிஎல் சராசரி இதுதான். தோனியின் ஸ்ட்ரைக் ரேட்டோ, அவரது ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாததாக, 114.28 என மிகக் குறைவாக இருக்கிறது. இந்த இருவரது விஸ்வரூபமும் பழையபடி காணக் கிடைக்குமா என்பது விடை தெரியாத கேள்விதான். எனினும் இருவரில், பேட்ஸ்மேனாக தோனி, அணிக்குத் தேவைப்படுவதை விட, பல மடங்கு அதிகமாகவே கோலி, பேட்ஸ்மேனாக, ஆர்சிபிக்குத் தேவைப்படுகிறார்.

அறிமுகமாகுமா இருமுகங்கள்?

ஐபிஎல்-ன் இந்த சீசனின் இரண்டாவது அத்தியாயத்துக்காக, டிம் டேவிட்டின் பெயர் சேர்க்கப்பட்டதில் இருந்து, அவர் எப்போது ப்ளேயிங் லெவனில் இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. உள்ளூர்ப் போட்டிகளில் இருந்து சமீபத்தில் நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக் வரை, கட்டம் கட்டிக் கலக்கி இருந்தார் டிம் டேவிட். எனவே ஆர்சிபியன்களின் ஆஸ்தான, அபிமான நாயகராக, டிம் டேவிட் உருவெடுத்துள்ளார்.

இன்னொரு பக்கம், முகமது அசாருதினை மூன்றாவது இடத்தில் களமிறக்குவதன் மூலமாக, மிடில் ஆர்டரை, ஆர்சிபி வலுவடையச் செய்யலாம். மேலும், கடந்த போட்டியில், தனக்கான வாய்ப்பை பயன்படுத்தத் தவறிய பரத்துக்கு பதிலாக, அசாருதினை, ஆர்சிபி முயற்சித்துப் பார்க்கலாம். இந்த இருவருமே கடந்த இரு நாட்களாக, தொடர்ந்து வலைப் பயிற்சியில் ஈடுபடுவதும், அவர்களது புகைப்படங்கள், ஆர்சிபியின் சமூக ஊடகங்களில் வலம் வருவதுவும், அவர்கள் இந்தப் போட்டியில் களமிறக்கப்படலாம் என்ற எண்ணத்தை விதைத்துள்ளது.

இருபக்க இடறல்கள்!

ஆர்சிபி, கேகேஆருக்கு எதிராக மோசமான தோல்விக்கான வடுவை, தோளில் ஏற்றிக் கொண்டதற்கு முக்கிய காரணம் அவர்களது பேட்டிங் சொதப்பல்தான். மறுபுறம், சிஎஸ்கே மும்பையுடன் வெற்றி வாகை சூடியிருந்தாலும், அதற்குக் காரணம் சிறப்பான பேட்டிங்கே என புகழ் மாலை சூட்டிவிட முடியாது. ஏனெனில், அடிக்கப்பட்ட ரன்களில், சரிபாதிக்கும் அதிகமான ஸ்கோரை, கெய்க்வாட் மட்டுமே அடித்திருந்தார். அதிலும், ரெய்னா ஆட்டமிழந்த விதத்தை, பள்ளி கிரிக்கெட்டர் ஆடியது போல் முதிர்ச்சியற்று இருந்தது என ஸ்டெய்ன் விமர்சித்திருந்தார். எனவே இரண்டு பக்கங்களுமே, பேட்டிங்கில் கவனம் வைக்க வேண்டும். அப்படியில்லை எனில், இது லோ ஸ்கோரிங் கேமாக முடிய வாய்ப்புகள் உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மன ரீதியான நெருக்கடி!

கடந்த சில நாட்களாக, மீடியாக்களில் கோலியின் பெயர் தவறாமல் இடம் பெற்று வருகிறது. அது உளவியல் ரீதியாகவும் அவருக்கு நெருக்கடி தருகிறது. கேப்டனாக மற்றும் பேட்ஸ்மேன் என இரு தளங்களிலுமே, தான் யார் என்பதைக் காட்ட வேண்டிய அக்னிப் பரிட்சையில், நிகழ் காலத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்த சீசனில், முந்தைய சந்திப்பில், வரிசையாக நான்கு போட்டிகளில், வெற்றியைச் சுவைத்து வந்த ஆர்சிபிக்கு, தோல்வியின் கசப்பை, சிஎஸ்கேதான் காட்டியது. எனவே இதனை மீண்டு எழ வேண்டிய நேரமாகவும், திருப்பித் தர வேண்டிய தருணமாகவும் கோலி பார்க்கலாம். அவருக்கு, டிராக்கிற்குத் திரும்ப, ஒரு பெரிய இன்னிங்ஸ்தான் தேவை. அது இப்போட்டியாக மாறி, அவர் வெகுண்டெழும் பட்சத்தில், சிஎஸ்கேவுக்கு அது நெருக்கடி தரலாம்.

தோனி
தோனி

அட்டாக்கிங் கிரிக்கெட்!

ஆர்சிபியைப் பொறுத்தவரை, அது கேகேஆருக்கு எதிரான போட்டியில், தோல்வியை ஒப்புக் கொண்டு, மொத்தமாகப் பணிந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். கோலி பேட்டிங்கில் மட்டுமல்லாது ஒரு அட்டாக்கிங் பௌலிங் மற்றும் ஃபீல்டிங் செட்டப்பை எடுத்து வந்தால் மட்டுமே, சிஎஸ்கே-வின் நீண்ட பேட்டிங் லைன் அப்பை ஆர்சிபியால், சற்றேனும் அசைத்துப் பார்க்க முடியும்.

மேக்ஸ்வெல் ஸ்பெல்!

கடந்த போட்டியில், எல்லாவற்றையும் முயன்று பார்ப்போமே, என்று கூட ஆர்சிபி முனையவில்லை. மேக்ஸ்வெல்லின் கையில், ஓரிரு ஓவர்களைக் கொடுத்துப் பார்ப்பதும், கோலியின் முன்பு உள்ள இன்னொரு தேர்வு. அது பௌலிங்கில் வேரியேஷனைக் கொண்டுவந்து, ஸ்பின்னர்களைச் சமாளிக்கத் திணறும், ரெய்னா உள்ளிட்ட வீரர்களை சற்றே ஆட்டங்காண வைக்கும்.

கடைசியாக, இந்த இரு அணிகளும் மோதிக் கொண்ட, 11 போட்டிகளில், 9 முறை, சிஎஸ்கேதான் வென்றுள்ளது. எனினும், மேலும் ஒரு வெற்றி என்பது, சிஎஸ்கேவுக்கு அவசியம் என்றால், ஆர்சிபிக்கு அது அத்தியாவசியம். எனவே அதற்கான ஓட்டங்களும், ஆட்டங்களும், இம்முறை, வழக்கத்தை விட, வெறி கொண்டவையாகவே இருக்கும். அதுவே போட்டியின் சுவாரஸ்யத்தை உச்சத்துக்கு உயர்த்தும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு