Ipl-2021 banner
Published:Updated:

IPL 2021: அசால்ட் காட்டிய கபார் - ஷா கூட்டணி... தோனியும் சென்னையும் சொதப்பியது எங்கே? #CSKvDC

#CSKvDC | IPL 2021
#CSKvDC | IPL 2021

மொத்த மேட்ச்சுமே ஹைலைட்ஸ் போலத்தான் இருந்தது. சடார் சடாரென பவுண்டரியும் சிக்ஸரும் பறக்க, ஓரளவிற்கு தாக்குப்பிடித்தது சென்னையின் பழைய தாதா பிராவோதான்.

தோனி ஆட்டத்தை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை பார்த்துவிட வேண்டும் என்பதுதான் சென்னை அணி ரசிகர்களின் ஆசையாகவே இருக்கும். ஆட்டம் இந்த முறை சென்னையில் கிடையாது என்றபோதே ஏமாற்றத்தில் ஆழ்ந்தனர் ரசிகர்கள். சரி, ஆட்டம்தான் இங்கில்லை. தலயின் பார்மாவது பழைய அதிரடியில் இருக்குமா என்கிற கேல்வியோடுதான் ஆட்டத்திற்குள் வந்தார்கள் சென்னை ரசிகர்கள்.

மும்பை பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச் என்பது செவ்வாயிலிருந்து பார்க்கும் ஏலியனுக்குக் கூட பரிச்சயம் என்பதால் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் பண்ட் பௌலிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணியில் க்வாரன்டீனில் இருக்கும் ரபாடாவுக்கும் நார்க்கியாவுக்கும் பதில் வோக்ஸும் டாம் கர்ரனும் களமிறங்கினார்கள். ஆச்சர்ய அனுமதி அவேஷ் கான். இஷாந்த் ஆடுவார் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. மற்றொருபுறம், ஊருபக்கம் பேட்டிங் மட்டும் ஆடிவிட்டு ஓடிவந்துவிடலாம் என்பதற்காக டீம் எடுப்போமே, அப்படி 11 பேட்ஸ்மேன்களை உள்ளடக்கிய டீமாக இருந்தது சென்னை. சஹார், தாக்கூர் என இரண்டே பிரதான பௌலர்கள். அவர்களும் பேட்டிங் நன்றாக ஆடுவார்கள் என்பதால் இப்படி.

#CSKvDC | IPL 2021
#CSKvDC | IPL 2021

ஓப்பனிங் கெய்க்வாட்டும் டுப்ளெஸ்ஸியும். முதல் ஓவர் 5 ரன்கள். அடுத்த ஓவரிலேயே அவேஷ் கான் பந்தில் எல்.பிடபிள்யூ ஆனார் கடந்த சீசனில் சென்னை அணியில் 'ஆடிய' ஒரே பேட்ஸ்மேன் டுப்ளெஸ்ஸி. ஆச்சர்யமாக, ஒன் டவுன் ஆடியது மொயின் அலி. அடுத்த ஓவரிலேயே 'சாரி பாஸ். முதல் மேட்சிலேயே அடிச்சா நான் கெய்க்வாட் கிடையாது. இப்ப ஸ்பார்க் இல்லை' என நடையைக் கட்டினார் கெய்க். சோகமாக வேண்டிய சென்னை ரசிகர்கள் குஷியானார்கள். ஏனென்றால் சின்ன தல என்ட்ரி.

ரெய்னாவின் பார்மில்தான் டீமின் பேலன்ஸ் அடங்கியிருக்கிறது என்பதால் அவருக்கு நிரூபித்தாக வேண்டிய கட்டாயம். அஷ்வினின் ஓவரில் இரண்டு பவுண்டரிகளைத் தொடர்ந்து அடித்து ஓப்பனிங் பிஜிஎம் அதிர நிமிர்ந்து நின்றார். அடுத்த சில ஓவர்களுக்கு அவரும் மொயினும் பௌலர்களை நன்றாகவே பந்தாடினார்கள். சொங்கிப் போயிருந்த ரன்ரேட் டீசன்ட்டாக உயர்ந்தது. இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டு அடுத்த பாலில் பெவிலியன் கிளம்பினார் மொயின். 36 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் - 150.

#CSKvDC | IPL 2021
#CSKvDC | IPL 2021

அடுத்து வந்த ராயுடுவும் தன் பங்கிற்கு இழுக்க, அஷ்வின் மட்டுமே 4 ஓவர்களில் 46 ரன்களை வாரிக்கொடுத்தார். டாம் கர்ரன் ஓவரில் அவுட்டானார் ராயுடு. அடுத்து வந்த ஜடேஜா பவுன்டரி அடித்த கையோடு ரெய்னாவையும் ரன் அவுட்டாக்க, தன் பார்ம் குறித்த கேள்விகளை கிரிக்கெட் பந்தை வைத்தே நொறுக்கிவிட்டு 54 ரன்களில் கிளம்பினார் ரெய்னார். பலத்த ஆரவாரத்தோடு க்ரீஸில் நின்ற தோனி அவேஷ் கானை இழுத்து அடிக்க, எட்ஜாகி ஸ்டம்ப்பை பெயர்த்தது பந்து. தோனி டக் அவுட். பின் ஜடேஜாவும் சாம் கர்ரனும் கடைசி நேர வாண வேடிக்கைகளை நிகழ்த்தினார்கள். அதிலும் உடன்பிறப்பு டாம் ஓவரில் ரத்தத்தின் ரத்தம் சாம் 17 ரன்கள் வெளுக்க ஸ்கோர் எகிறி 20 ஓவர்கள் முடிவில் 188 ஆனது. ஆனால், வான்கடே ஸ்டேடியத்தில் சேஸிங்கிற்கு இது கம்மிதான்.

IPL 2021: `யார் சாமி இவன்?' - ஒரே ஸ்பெல்லில் ஆர்சிபியின் வரலாற்றையே மாற்றிய ஹர்ஷல் படேல்!

அதை முதல் ஓவரிலேயே 9 ரன்கள் அடித்து நிரூபித்தார்கள் டெல்லி பேட்ஸ்மேன்கள். சஹார், சாம் கர்ரன், தாக்கூர் மூவரையும் போட்டு வெளுத்ததில் பவர்ப்ளே முடிவிலேயே 65 ரன்கள். 'பரவாயில்ல, என்னைவிட இன்னொருத்தன் ரன்னு நிறைய கொடுத்திருக்கான்' என்பதுதான் மூவரின் மனசமாதானமும். ஜடேஜாவும் மொயினும் வந்து கொஞ்சம் மட்டுப்படுத்தினாலும் பத்து ஓவர்களில் 100 ரன்களைக் கடந்து விறுவிறுவென ஓடியது டெல்லி ஸ்கோர். தவான், ஷா இருவருமே அரைசதம் அடித்து தொடையைத் தட்டி நின்றார்கள்.

#CSKvDC | IPL 2021
#CSKvDC | IPL 2021

அதன்பின் மொத்த மேட்ச்சுமே ஹைலைட்ஸ் போலத்தான் இருந்தது. சடார் சடாரென பவுண்டரியும் சிக்ஸரும் பறக்க, ஓரளவிற்கு தாக்குப்பிடித்தது சென்னையின் பழைய தாதா பிராவோதான். ஒருகட்டத்தில் ஷா ஸ்லிப்பாகி அவுட்டாகவும்தான் சென்னைக்கு வந்தது முதல் விக்கெட். 72 ரன்கள். அதன்பின்னும் அடித்து விளாசிய தவான் 85 ரன்கள் அடித்துவிட்டே தாக்கூர் பௌலிங்கில் ஓய்ந்தார். கடைசி நேரத்தில் ஸ்டாய்னிஸும் கிளம்ப, மூன்று விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது டெல்லி. ஆட்டநாயகன் தவான். விருது பெறும்போது, சென்னையின் அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப் லைன் ப்ளானை கணித்து ஆடியதாகக் கூறினார். ஏனென்றால், சென்னை இதைத்தான் கடந்த சீசனும் செய்தது என்றும் மேற்கோள் காட்டினார்.

#CSKvDC | IPL 2021
#CSKvDC | IPL 2021
இங்கே கேள்விக்குறி தோனியின் எண்ணவோட்டம் என்ன என்பதுதான். முழுநேர ஸ்பின்னரே இல்லாமல் களமிறங்குவது தொடங்கி அசட்டையான உடல்மொழி வரை அத்தனையுமே சென்னை ரசிகர்களை கவலைக்குள்ளாக்குகிறது. முதல் ஆட்டம்தான் என்றாலும் இன்றைய சென்னை அணியின் பெர்ஃபாமென்ஸ் தொடரில் தொடர்வது தொடர்பான ஏகப்பட்ட சந்தேகங்களை எழுப்புகிறது. அத்தனைக்கும் பதில் தல தோனியிடம்தான் இருக்கிறது.
Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு