Published:Updated:

DC v RCB: மீண்டும் ஆர்சிபியை காப்பாற்றிய ஏபிடி; ஹெட்மயரின் அதிரடி வீண்... பண்ட் செய்த தவறு என்ன?!

DC v RCB
DC v RCB

பண்ட் - ஸ்டாய்னிஸ் பார்ட்னர்ஷிப்பில் கடந்த வருட சிஎஸ்கேவின் தாக்கம் அதிகமாக இருந்தது. கஷ்டப்பட்டு அடித்து வெற்றிபெறுவதற்குப் பதிலாக, தட்டி தட்டி நெட் ரன்ரேட்டுக்காக ஆடுவோமே என்கிற மனநிலையிலேயே இந்தக் கூட்டணி ஆடிக்கொண்டிருந்தது.

நொடிக்கு நொடி பங்குசந்தையில் மாற்றம் உண்டாகிக் கொண்டே இருப்பதை போல, ஐபிஎல் புள்ளிப்பட்டியலிலும் போட்டிக்கு போட்டி மாற்றம் உண்டாகிக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக, முதலிடத்திற்கு இந்த முறை கொஞ்சம் அதிகமாகவே போட்டியிருக்கிறது. சென்னை, பெங்களூர், டெல்லி என மூன்று அணிகள் முதலிடத்திற்கு முண்டியடித்துக் கொண்டிருக்கின்றன. சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் கடந்த போட்டியில் பலப்பரீட்சை நடத்திவிட்ட நிலையில், பெங்களூரும் டெல்லியும் இன்று மோதின.

டி20 போட்டிகளை டே-நைட் டெஸ்ட் மேட்ச் போன்று மாற்றிய பெருமைமிக்க சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதால் அத்தனை அணிகளும் கொஞ்சம் உற்சாகமாகவே இருந்தன. ரசிகர்களுமே கூட. இனியாவது 200+ ரன்களை குவிக்கும் அதிரடி ஆட்டங்களை காணலாம் என்கிற ஆவலுடன் அனைவரும் இருந்தனர். ஆனால், அணிகள் இப்போது சென்றிருக்கும் அஹமதாபாத்தின் பிட்ச்சும் சேப்பாக்கத்தின் கார்பன் காப்பி பிட்ச்சை போலவே இருப்பதால் 10 மணிக்கெல்லாம் கண்ணை கட்டத் தொடங்கிவிடுகிறது.

DC v RCB
DC v RCB

கடந்த பஞ்சாப் vs கொல்கத்தா போட்டி அளவுக்கு இல்லையென்றாலும், இந்தப் போட்டியும் ஒரு செமி தாலாட்டாகவே இருந்தது. முதல் இன்னிங்ஸில் ஏபிடியின் அதிரடியும்... சேஸிங்கில் ஹெட்மயரின் அதிரடியும் மட்டுமே கொஞ்சம் காப்பாற்றியது.

டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்டே டாஸ் வென்றார். அஹமதாபாத்தில் பனியின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் சேஸிங்கைத் தேர்வு செய்தார். டாஸை தோற்றதில் கோலி கொஞ்சம் அப்செட்டாகவே இருந்தார். பனியின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் கோலியும் சேஸிங் செய்யவே விரும்பினார்.

டேன் கிறிஸ்டியனையும் சைனியையும் பென்ச்சில் வைத்துவிட்டு, ஆஸ்திரேலிய இடக்கை வேகப்பந்து வீச்சாளரான டேனியல் சாம்ஸையும் ரஜத் படிதரையும் ப்ளேயிங் லெவனில் சேர்த்திருந்தார் கோலி. அஷ்வினுக்குப் பதிலாக இஷாந்த் சர்மாவை மட்டும் ப்ளேயிங் லெவனில் சேர்த்திருந்தார் பண்ட்.

இந்த சீசனில் வெறியாட்டம் ஆடிவரும் படிக்கலும் கேப்டன் கோலியும் ஆர்சிபிக்கு ஓப்பனர்களாகக் களமிறங்கினர். இஷாந்த் சர்மாவை வைத்து பந்துவீச்சைத் தொடங்கினார் பண்ட். முதல் ஓவரிலேயே படிக்கல் ஒரு பவுண்டரியை அடித்து அசத்தினார். ரபாடா வீசிய அடுத்த ஓவரில் கோலி படிக்கல் இருவரும் ஆளுக்கொரு பவுண்டரியை அடித்தனர். சிறப்பாக தொடங்கியதால் இவர்கள் பெரிய பார்ட்னர்ஷிப் அமைப்பார்கள் எனத் தோன்றியது. ஆனால், அது நடக்கவில்லை. ஆவேஷ் கான் வீசிய நான்காவது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த கோலி, நான்கு டாட்கள் ஆடி கடைசிப் பந்தில் இன்னர் எட்ஜ்ஜாகி ஸ்டம்பை பறிகொடுத்தார். 12 ரன்களில் கிங் கோலி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

DC v RCB
DC v RCB

இஷாந்த் சர்மா, ஆவேஷ் கான் இருவருமே குட்லெந்தில் ஒரு பாயிண்ட்டை பிடித்துக் கொண்டு டெஸ்ட் போட்டிகளில் வீசுவது போல தொடர்ந்து ஒரே லெந்தில் வீசிக்கொண்டே இருந்தனர். பந்து கொஞ்சம் மூவும் ஆனதால் இருவரும் பவர்ப்ளேயில் விக்கெட் வீழ்த்தினர். இஷாந்த் சர்மா வீசிய 5வது ஓவரின் முதல் பந்திலேயே தேவ்தத் படிக்கலும் ஸ்டம்பைப் பறிகொடுத்தார். குட்லெந்தில் இஷாந்த் வீசிய பந்து கொஞ்சம் இன்ஸ்விங் ஆக, அதை எதிர்கொள்ள முடியாமல் ஆஃப் ஸ்டம்பைப் பறிகொடுத்தார் படிக்கல்.

படிக்கல் அவுட் ஆனவுடன் உள்ளே வந்த மேக்ஸ்வெல், அந்த ஓவரில் மீதமிருந்த 5 பந்துகளையும் டாட் ஆக்கினார். புலி கொஞ்சம் பதுங்குவது போல இருக்கிறதே எனத் தோன்றும் போதே அடுத்த ஓவரிலேயே பவுண்டரி அடித்து அசத்தினார் மேக்ஸ்வெல். பவர்ப்ளே முடிந்தவுடனேயே மேக்ஸ்வெல்லை டேக்கிள் செய்ய லெக் ஸ்பின்மரான அமித் மிஷ்ராவை அழைத்து வந்தார் பண்ட். மேக்ஸ்வெல்லுக்கு 5 இன்னிங்ஸ்களில் பந்து வீசியிருக்கும் அமித் மிஷ்ரா அவரை 4 முறை வீழ்த்தியிருக்கிறார். அதேநேரத்தில், மிஷ்ராவுக்கு எதிராக மேக்ஸ்வெல்லின் ஸ்ட்ரைக் ரேட்டும் 190. இரண்டு சமபலம் வாய்ந்த வீரர்கள் மோதிக்கொண்டதால் இந்த மோதல் சுவாரஸ்யமாக இருகந்தது.

அமித் மிஷ்ரா வீசிய முதல் ஓவரில் மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். முதல் ரவுண்டில் மேக்ஸ்வெல் வின்! மிஷ்ரா வீசிய அடுத்த ஓவரில் லாங் ஆனில் பெரிய சிக்சருக்கு முயன்ற மேக்ஸ்வெல் ஸ்மித்திடம் கேட்ச் ஆனார். இரண்டாவது ரவுண்ட்டில் மிஷ்ரா வின்! 5வது முறையாக வெற்றிகரமாக மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை வீழ்த்தினார் மிஷ்ரா.

கோலி, மேக்ஸ்வெல் இருவருமே ஏமாற்றியதால் ஆர்சிபியை கரை சேர்க்க வேண்டிய முழு பொறுப்பும் 2468 வது முறையாக டீவில்லியர்ஸ் கையில் ஒப்படைக்கப்பட்டது. போர்க்களத்தில் தன்னுடைய படை பலங்கள் அத்தனையையும் இழந்து நிராயுதபாணியாக நிற்கும் போதும், கடைசிவரை நின்று உயிரைக் கொடுத்து போராடுபவனே வீரன். அப்படிப் பார்த்தால் டீவில்லியர்ஸை மாவீரன் என்றே அழைத்தாக வேண்டும். ஆர்சிபி நிராயுதபாணியாக நின்ற அத்தனை முறையும் கைவிடாமல் உயிரைக் கொடுத்து ஆடி கரை சேர்த்திருக்கிறார் டீவில்லியர்ஸ். இந்தப் போட்டியிலும் அதையே செய்தார் அந்த மாவீரர்!

DC v RCB
DC v RCB

9வது ஓவரில் க்ரீஸுக்குள் வந்த டீவில்லியர்ஸ் நாட் அவுட்டாக பெவிலியனுக்குச் சென்றார். 42 பந்துகளில் 75 ரன்களை சேர்த்திருந்தார். இந்த ரன்கள்தான் ஆர்சிபியை ஒரு சவால் அளிக்கும் வகையிலான ஸ்கோரை எட்ட வைத்த்து. ஏதுவான பந்துகளை மட்டுமே பவுண்டரியாக்கி செட்டில் ஆகியிருந்த டீவில்லியர்ஸ் டெத் ஓவர்களில் வெளுத்தெடுத்தார். குறிப்பாக, ஸ்டாய்னிஸ் வீசிய 20 வது ஓவரில் 3 சிக்ஸர்களுடன் 23 ரன்களை சேர்த்தார். டீவில்லியர்ஸின் அதிரடியின் விளைவாக 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 171 ரன்களைச் சேர்த்தது.

டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் இருந்ததாலும், பனியின் தாக்கம் இருக்கும் என்பதாலும் இந்த டார்கெட் டெல்லி அணியால் எட்டக்கூடியதாகவே பார்க்கப்பட்டது. ஆனால், டெல்லி அணியின் டாப் ஆர்டர் சொதப்பி அந்த அணிக்கு நெருக்கடியை உண்டாக்கியது.

சிராஜ் வீசிய 2வது ஓவரில் ப்ரித்வி ஷா மூன்று பவுண்டரிகளை அடிக்க, டெல்லி கேப்பிடல்ஸ் நன்றாகவே சேஸிங்கை தொடங்கியது. ஆனால், கைல் ஜேமிசன் வீசிய மூன்றாவது ஓவரிலேயே ஃபார்மிலிருக்கும் தவான் அவுட் ஆகி வெளியேறினார். ஜேமிசன் ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து வீசிய பந்தை லெக் ஸ்டம்புக்கு வெளியே நகர்ந்து ஆஃப் சைடில் ஷாட் ஆட நினைத்தார். ஆனால், ஜேமிசன் தவானை ஃபாலோ செய்து ஷார்ட் ஆக வீச அதை எதிர்கொள்ள முடியாமல் எட்ஜ் ஆகி சஹாலிடம் கேட்ச் ஆனார் தவான்.

DC v RCB
DC v RCB

பிட்ச் ஸ்லோவாக இருப்பது போல் தெரிந்ததால் 'ஆஷஸுக்கு இப்போதிருந்தே பயிற்சி செய்யலாம்' என்கிற நினைப்புடனே ஸ்மித் உள்ளே வந்தார். அவர் ஆசை மண்ணாய் போகும் வகையில் 4 ரன்களிலேயே அவரை எட்ஜ் எடுக்க வைத்து வெளியேற்றினார் சிராஜ். கொஞ்சம் நின்று ஆடிக்கொண்டிருந்த ப்ரித்வி ஷாவும் ஹர்ஷல் படேல் வீசிய ஒரு வைடு பந்துக்கு தேவையில்லாமல் பேட்டை விட்டு எட்ஜ்ஜாகி டீவில்லியர்ஸிடம் கேட்ச் ஆனார்.

7.2 ஓவர்களில் 47-3 என்ற இக்கட்டான சூழலில் கேப்டன் ரிஷப் பண்ட்டும் ஸ்டாய்னிஸும் கூட்டணி போட்டனர். இவர்களின் பார்ட்னர்ஷிப்பில் கடந்த வருட சிஎஸ்கேவின் தாக்கம் அதிகமாக இருந்தது. கஷ்டப்பட்டு அடித்து வெற்றிபெறுவதற்குப் பதிலாக, தட்டி தட்டி நெட் ரன்ரேட்டுக்காக ஆடுவோமே என்கிற மனநிலையிலேயே இந்தக் கூட்டணி ஆடிக்கொண்டிருந்தது. கொஞ்சம் நேரம் கழித்து இவர்களுக்குத் தெளிவு உண்டாக, ஒன்றிரண்டு பவுண்டரிகளை மட்டுமே அடித்த கையோடு ஹர்ஷல் படேல் வீசிய ஓவரில் ஸ்டாய்னிஸ் எட்ஜ்ஜாகி வெளியேறினார்.

உண்மையிலேயே ஸ்டாய்னிஸ் அவுட் ஆன பிறகுதான் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது. இதுவரை தூங்கிக் கொண்டிருந்தவர்களை சிக்ஸர்களாக பறக்கவிட்டு ஹெட்மயரே எழுப்பிவிட்டார். கடைசி 5 ஓவர்களில் டெல்லியின் வெற்றிக்கு 61 ரன்கள் தேவைப்பட்டது. கைல் ஜேமிசன் வீசிய 18வது ஓவரில் மட்டும் 3 சிக்சர்களை அடித்து 21 ரன்களை சேர்த்தார் ஹெட்மயர். ஹர்ஷல் படேல் வீசிய 19வது ஓவரில் பவுண்டரி அடித்து 22 பந்துகளில் அரைசதம் கடந்தார் ஹெட்மயர்.

கடைசி ஓவரில் டெல்லியின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டன. ரிஷப் பண்ட், ஹெட்மயர் என இருவரும் க்ரீஸில் இருந்ததால் டெல்லி அணி வெற்றிகரமாக சேஸ் செய்துவிடும் என்றே தோன்றியது. ஆனால், இந்தக் கடைசி ஓவரை சிராஜ் சிறப்பாக வீசினார். முதல் நான்கு பந்துகளையும் யார்க்கருக்கு முயன்று நன்றாக வீசி பவுண்டரி கொடுக்காமல் கட்டுப்படுத்தினார் சிராஜ். இதனால் கடைசி 2 பந்துகளில் டெல்லி அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டன. சிராஜ் ஃபுல் டாஸாக வீசிய அந்த இரண்டு பந்துகளையும் பண்டால் பவுண்டரியாக்க மட்டுமே முடிந்தது. இறுதியாக, 1 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றிபெற்றது.

DC v RCB
DC v RCB

46 பந்துகளில் மெதுவாக அரைசதம் அடித்திருந்த பண்ட் இன்னும் கொஞ்சம் அதிரடி காட்டியிருந்தால் போட்டியின் முடிவே மாறியிருக்கும். அதேமாதிரி, பௌலிங்கிலும் ஸ்டாய்னிஸை மிட் ஓவர்களில் பயன்படுத்தாமல் நேராக கடைசி ஓவருக்கு அழைத்து வந்திருந்தார் பண்ட். இந்த முடிவும் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. டீவில்லியர்ஸ் அந்த ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டிருந்தார்.

நியூ ஏஜ் மலையாள படங்கள் போல செட்டில் ஆவதற்கு டைம் எடுத்துக் கொண்ட இந்த ஆட்டம், போக போக பரபர த்ரில்லராக மாறியிருந்தது. இந்தப் போட்டியை ஆர்சிபி வென்றதன் மூலம் புள்ளிப்பட்டியலின் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஒருநாள் கூத்து?!
அடுத்த கட்டுரைக்கு