Published:Updated:

DC v PBKS: பவர்ஹிட்டர்களின் பாசறை டெல்லி நிகழ்த்திய மேஜிக்... பௌலிங்கில் பம்மிய பஞ்சாப்!

"டி20 உலகக்கோப்பை அணிக்கான தேர்வாளர்களின் கவனத்திற்கு..." என்னும் ரீதியில் ஒவ்வொரு ஷாட்டையும் ஆடிக்கொண்டிருந்தார் தவான்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஃபாஸ்ட் ஃபார்வேர்டாக நகர வேண்டிய முதல் இன்னிங்க்ஸ் ராகுலின் ஸ்லோமோசன் ஆட்டத்தினால் மட்டுப்பட வெற்றி வாய்ப்பை இழந்தது பஞ்சாப். மறுபுறம் தவானோ இன்னொரு மலைக்க வைக்கும் ஆட்டத்தால், டெல்லியை வெல்ல வைத்திருக்கிறார்.

சென்னையை வென்று ராஜஸ்தானிடம் தோத்த கதையை பண்ட்டும், ராஜஸ்தானைத் தோற்கடித்து சென்னையிடம் சிதைந்துபோன சோகக்கதையை பர்த்டே பேபி ராகுலும், பேசிக்கொண்டே சாவகாசமாக டாஸுக்குச் சென்றனர். டாஸ் பண்ட்டுக்குச் சாதகமாக விழ, இந்த சீசனில் வான்கடேயில் நடந்த நான்கு போட்டிகளில் மூன்றில் சேஸ் செய்த அணியே வென்றுள்ளது எனக் கணக்குகளை கணத்தில் போட்டு, பௌலிங் என்றார். பஞ்சாப், முருகன் அஷ்வினை அனுப்பி, சக்ஷேனாவைச் சேர்த்திருக்க, டெல்லியோ ஸ்மித்தையும் மெரிவாலாவையும் சேர்த்திருந்தது.

DC v PBKS
DC v PBKS

போட்டியின் முதல் பந்திலிருந்தே, 'எங்கள் கடன் ரன்னெடுத்துக் கிடப்பதே!' என்பதைப் போல, அதிரடி சரவெடியைக் கொளுத்திப் போட்டனர் பஞ்சாப்பின் பாரம்பர்ய ஓப்பனர்களான ராகுலும் மயாங்கும்! வோக்ஸை ஓயச் செய்தவர்கள், 'மே ஐ கம் இன்' எனக் கேட்டு வந்த மெரிவாலாவை மிரட்டி அனுப்ப, அஷ்வினின் பந்தும் பலத்த அடிவாங்க, 50 ரன் பார்ட்னர்ஷிப்பை, ஐந்தே ஓவரில் எட்டியது இக்கூட்டணி! பவர்பிளே பயங்கரவாதி, ரபாடாவை பயங்காட்ட பண்ட் இறக்க, அவருக்கும் இரண்டு பவுண்டரிகளைப் பார்சல் செய்தனர். 14, 0 ரன்களோடு இரண்டு போட்டிகளில் நடையைக் கட்டியிருந்த மயாங்க், மாறி, உருமாறி வந்திருந்தார்!

கொரோனா வந்ததுபோல் குளிரெடுக்கத் தொடங்கியது டெல்லிக்கு. ரபாடாவையும் ஒரு ஓவரோடு நிறுத்தி, லலித்தைப் போடவைத்தார் பண்ட்! 'இந்தா எடுத்துக்கோ' என அவருக்கு மேலேயும் ரன்மழை பொழிய வைத்தனர். 25 பந்துகளிலேயே, அரைசதத்தை அடித்து அசத்தினார் மயாங்க்! அவிஷ்கானால் ரன்னைக் கட்டுப்படுத்த முடிந்ததேதவிர, விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.

ரபாடாவினை பெரிதும் நம்பி பந்தை பண்ட் அவரிடம் மறுபடி தர, அதிலும் மூன்று சிக்ஸர்களைப் பறக்கவிட்டுப் பதற வைத்தனர், பஞ்சாப்பின் பாசப்பிணைப்புகள். "இனி நாங்கதான் பந்து போடணும்போல!" என பண்ட்டும் பாண்டிங்கும் புலம்பத் தொடங்கினர். இறுக்கம் கூடியிருந்தது, பண்ட்டின் முகத்தில்!

அடுத்ததாக, அவிஷ் வீசிய பந்தில், ராகுல் தந்த ஒரு கேட்ச் வாய்ப்பையும், பிரித்தீவ் தவறவிட, "ஒன்ஸ்மோர் போலாமா?!", என அடுத்த ரவுண்டுக்குத் தயாராகியது இந்த இருவரணி. 12 ஓவர்களிலேயே, 120 வந்துவிட, இன்று 220கூட எளிதானதே என பஞ்சாப் ரசிகர்கள் ஆனந்தத்தில் அழ, "இழக்க எதுவுமில்லை!" என மெரிவாலாவை, 'அடுத்த ஸ்பெல்லை வீசி, ஓவர்களையாவது முடிச்சுவிடுங்க!' என பண்ட் அனுப்ப, டெல்லி ரசிகர்கள், காத்துக் கிடந்த காட்சி காணக்கிடைத்தது இறுதியாக!

DC v PBKS
DC v PBKS

மயாங்க் அடித்த பந்தை கேட்ச்களின் கேடயம், தவான் தப்பாமல்பிடிக்க, 122 ரன்களைக் குவித்த கூட்டணி, ஒருவழியாக முறிய, மயாங்கின் மாயவித்தைகளும் ஒருவழியாக முற்றுப்பெற்றது. ரசிகர்களின் ரத்தஅழுத்தம் சற்றே இறங்கி, ஒன்டவுனில் உள்ளேவந்த கெயிலைப் பார்த்ததும் ஏறியது பலமடங்காக!

ராகுல் தந்த இன்னொரு கேட்ச் வாய்ப்பையும், ஸ்டோய்னிஸ், கோட்டைவிட, வான்கடே டெத்ஒவர்களில் விக்கெட்காவு கேட்கும் என்பதை ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பார்த்திருந்த பஞ்சாப் ரசிகர்களுக்கு, கெட்ட சகுனமோ இதுயென கொஞ்சம் பதற்றம் அதிகரிக்கவே செய்தது. ரன்ரேட் மட்டுப்படத் தொடங்க, அதனை ஒரு சிக்ஸர், பவுண்டரி மூலமாக சற்றே நேர்செய்தார் ராகுல்.

கையில் கிடைத்த போட்டியின் கடிவாளத்தை, திரும்பத் தங்கள் கைகளுக்குள் கொண்டுவர, ரபாடாவைத் திரும்ப டெல்லி இறக்க, ராகுலை, 61 ரன்களில் அனுப்பிவைத்தார், அவர்! டீப் மிட்விக்கெட்டில் இருந்த ஸ்டோய்னிஸ் இம்முறை கேட்சைத்தவற விடவில்லை. 51 பந்துகள் ஆடி 61 ரன் மட்டும எடுத்தது மற்ற பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்து அவுட் ஆக வைத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராகுல் அவுட்டான உடன் ஹுடா வர, கூடவே அவரது ராஜஸ்தானுக்கு எதிரான இன்னிங்ஸும் "ஞாபகம் வருதே!" என கூடவேவந்தது. எனினும், மறுபுறம், கெயிலின் விக்கெட்டை வோக்ஸ் வீழ்த்தி, கொஞ்சம் நம்பிக்கை அளித்தார்.

எனினும் ஹுடாவைக் கட்டுப்படுத்த முடியாமல்போக, அவிஷ்கான், பூரணை வெளியேற்றி ஆறுதல்படுத்திக் கொண்டனர். இறுதிஓவரில், ஷாருக்கானும் வந்து, தன் பங்குக்கு, ஐந்து பந்துகளில், 15 ரன்களை விளாச, ஹுடா, 13 பந்துகளில், 22 என ஒருபாக்கெட்சைஸ் கேமியோ ஆட, 195ரன்களை எட்டியது, பஞ்சாப்.

ஒருகட்டத்தில், 220ஐ எட்டித்தொடும் எனக் கணிக்கப்பட்ட ஸ்கோர், மயாங்கின் விக்கெட்வீழ்ச்சிக்குப்பின், ராகுலின் மந்தமான ஆட்டத்தாலும், அடுத்தடுத்த விக்கெட்டுகள் வீழ்ச்சினாலும், 195 ரன்களுக்குள் முதல் இன்னிங்க்ஸை முடிந்தது. சிஎஸ்கேவுக்கு எதிராக, குறைந்த ஸ்கோரில் சுருண்ட பஞ்சாப்பின் பேட்டிங் இன்று ஆறுதல் அளித்தாலும் அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை.

DC v PBKS
DC v PBKS

பவர்ஹிட்டர்களின் பாசறை டெல்லிக்கு 196 எல்லாம், சர்வசாதாரணமே என்ற பார்வையோடே தொடங்கியது, இரண்டாவது பாதி. போட்டியின் ரீப்ளேதான் திரும்ப ஓடுகிறதா எனுமளவு, பஞ்சாப் முன்செய்த மேஜிக்கை பின்செய்தது டெல்லி. 'ஓப்பனர்ஸ் டே' எனச் சொல்லுமளவு அந்த இரட்டையர்கள் செய்ததை அச்சுப்பிசகாமல், இவர்களும் நிகழ்த்தி, யூரேனஸிலிருந்து இறங்கி வந்த ஏலியன்களாக ஆடிக் கொண்டிந்தனர்.

பிரித்வி ஷாவின் பிக் ஷோவைக் காண, டெல்லி அன்பர்கள் ஆயத்தமாக, அதில் அனலை அள்ளிக்கொட்டினார் அர்ஷ்தீப்சிங். அவர் மெதுவாக வீசிய ஷார்ட் பாலை, ஆஃப் சைடில் பவுண்டரிக்கு அனுப்ப பிரித்வி ஷா முயல, பந்து டாப் எட்ஜாகி, கெயிலின் கையில் தஞ்சம்புகுந்தது. 17 பந்துகளில், 32 ரன்களைச் சேர்த்துவிட்ட திருப்தியில் வெளியேறினார், பிரித்தீவ்.

தேவைப்படும் ரன்ரேட்டைவிட, தற்போதைய ரன்ரேட் அதிகமாக இருக்க, சரி அதைக் கொஞ்சம் குறைப்போமென ஸ்மித்தை அனுப்பி வைத்தார் பண்ட். அந்தப் பணியை சிறப்பாகவே செய்தார் ஸ்மித்‌‌. பேருக்குக்கூட பந்தை பவுண்டரிலைன் போகாமல் அவர் பார்த்துக் கொள்ள, தவானில் தலையில் மொத்த பாரமும் விழுந்தது. முடிந்த அளவு பாலுக்கும் தேவைப்படும் ரன்களுக்குமான இடைவெளியை தவான் குறைத்துக் கொண்டே இருந்ததோடு 31 பந்துகளில், அரைசதத்தையும் எட்டினார்‌. இறுதியாக, புல்ஷாட் ஆட முயன்ற ஸ்மித்தின் விக்கெட்டை மியர்டித் வீழ்த்த, பண்ட் உள்ளே வர, 'இது நமக்கு நல்லதா கெட்டதானே தெரியலையே!' என்பதே பஞ்சாப் ரசிகர்களின் மைண்ட் வாய்ஸாக இருந்தது. ஆனாலும், பண்ட்டோ, அடக்க ஒடுக்கமாக சப்போர்டிங்ரோல் மட்டுமே ஆட, தவான் மறுபுறம் பஞ்சாப் பௌலர்களின் பந்துகளை பஞ்சராக்கிக் கொண்டிருந்தார்! ராகுல் பொறுப்பாக ஆடினார் என்றால், தவான் வெறித்தனமாக ஆடிக் கொண்டிருந்தார்.

DC v PBKS
DC v PBKS

ஸ்டெம்பைக் கிராஸ் செய்துவந்து, மிட்விக்கெட்டில் நிறைய பவுண்டரிகளை அனுப்பிவைத்தார். "டி20 உலகக்கோப்பை அணிக்கான தேர்வாளர்களின் கவனத்திற்கு" என்னும் ரீதியில் ஒவ்வொரு ஷாட்டையும் ஆடிக்கொண்டிருந்தார் தவான்.

பவுண்டரிகளை சீரான இடைவெளியில் அடித்துக் கொண்டிருந்தவர், மியர்டித் வீசிய ஓவரை, ஹாட்ரிக் பவுண்டரியுடன் ஒருகை பார்த்ததுடன், பிக் ஸ்கோரை சேஸ் செய்யும் ஒரு ஓப்பனர், எப்படி ஆட வேண்டுமென்பதற்கு பிராக்டிகல் கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார். பண்ட்டை ஒருபுறம் நிறுத்திவைத்து, நூறை நெருங்கிக் கொண்டிருந்த தவானின் அற்புதமான ஃபிளாலெஸ் இன்னிங்ஸை ரிச்சர்ட்சன், க்ளீன் போல்டாக்கி முடித்து வைத்தார். மிகச் சிறப்பாக ஆடிய தவான், 92 ரன்களோடு அணியைக் கிட்டத்தட்ட கரைசேர்த்து விட்ட பெருமையோடு வெளியேறினார்.

RCB v KKR: இது கனவா... நனவா... உயரே பறக்கும் ஆர்சிபியின் கொடி!

31 பந்துகளில், 44 ரன்கள் தேவை என்ற நிலையில், மீதி பணி தற்போது பண்ட்டிடம். ஸ்டோயனிஸும் வந்துசேர, அதிரடி ஆயுதமெடுக்காது, அஹிம்சை வழியில் சிங்கிள் சிங்கங்களாகவே தொடங்கியது இந்தக் கூட்டணி.

இடையில், ஷமி வீசிய ஒரு பந்தை ஸ்டோய்னிஸ் அடிக்க, அது பேக்வேர்ட் பாயிண்டிலிருந்த சக்ஷேனாவைச் சென்றடைந்து கேட்சாக, பஞ்சாப் பக்கம் குஷியாக, இடுப்புக்கு மேலே சென்றதென ஸ்டோய்னிஸ் ரிவ்யூவுக்குச் சென்றார். அது, விக்கெட் இல்லை, நோ பால், ஃப்ரீ ஹிட், அதிலும் சிக்ஸர் என மூன்று ஆயுள்தண்டனையை மொத்தமாய்த் தந்தது பஞ்சாப்பின் பக்கம்.

DC v PBKS
DC v PBKS

எனினும் மறுபுறம், வந்ததிலிருந்து தன்னுடைய இயல்பான ஆட்டத்தையே மறந்ததுபோல், ஆடிக் கொண்டிருந்த பண்ட், ரிச்சர்ட்சனின் பந்தில் ஆட்டமிழந்தார். இரண்டு பாயிண்டுகளுக்கான இறுதிக் காரியங்களை கவனிக்க லலித் உள்ளே வந்தார். இரண்டு பவுண்டரிகளுடன், லலித் அசத்த, பத்துப் பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே, பவுண்டரியோடு வெற்றிக் கோட்டைத் தொட்டார் ஸ்டோய்னிஸ். ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது, டெல்லி.

எட்ட முடியாத இலக்கு என்று எதுவுமில்லை, அதுவும் டி20 போட்டிகளில் எதுவுமே நித்தியமானதுமில்லை, பந்துக்குப் பந்து போட்டியே மாறலாம், கணத்திற்கு கணம் காட்சிகளும் மாறலாம் என்பதனை மறுபடியும் நிரூபித்திருக்கிறது பஞ்சாப் டெல்லிக்கு இடையேயான போட்டி. இரண்டு புள்ளிகளை தங்கள் கணக்கில் ஏற்றிக் கொண்டு புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது டெல்லி.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு