Published:Updated:

DC v MI: மிஸ்ராவின் மேஜிக்; தவான், ஸ்மித்தின் பொறுப்பு... சென்னையில் கொடியேற்றிய டெல்லி!

DC v MI
DC v MI

மிஸ்ரா நான்கு ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து நான்கு விக்கெட்கள். இன்னும் ஏழே விக்கெட்கள் எடுத்தால் ஐபிஎல்லில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய சாதனைக்கு இவர் சொந்தக்காரர்.

மும்பையிலிருந்து அகமதாபாத் போகும் வழியில் ஒரு சின்ன சம்மர் வெக்கேஷனுக்காக சென்னையில் ஆட வந்திருக்கிறது டெல்லி கேப்பிடல்ஸ். மறுமுனையில் மும்பை இந்தியன்ஸ் அணியோ கிட்டத்தட்ட ஒரு மாதமாக மெரினா பீச்சிலேயே டென்ட் போட்டு தங்கியுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்களின் முதுகில் சவாரி செய்யும் டெல்லி போன்ற அணி ஸ்பின்னுக்கு பெயர்போன சென்னை போன்ற ஸ்லோ பிட்ச்சில் அதுவும் மும்பை மாதிரியான செட்டிலான அணியோடு வெற்றிபெற முடியுமா என்பதுதான் எல்லாருடைய கேள்வியுமாக இருந்தது. 'அதெல்லாம் ஜெயிச்சுடுவோம்' என இதற்கு பதில் சொல்லக்கூட டெல்லி ரசிகர்களால் முடியவில்லை. காரணம், கடந்த ஆண்டு மட்டும் நான்கு முறை மும்பையோடு மோதி நான்கிலும் தோற்றது டெல்லி.

DC v MI
DC v MI

ஸ்பின் பிட்ச் என்பதால் மிஸ்ராவையும் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் என்கிற வகையில் ஹெட்மெய்ரையும் அணிக்குள் கொண்டுவந்திருந்தது டெல்லி. மெர்ரிவாலாவுக்கும், வோக்ஸுக்கும் அநேகமாய் அடுத்த ஆட்டத்திலும் வேலை இல்லை. மும்பையோ மில்னேயை வெளியே உட்காரவைத்துவிட்டு ஜெயந்த் யாதவை அழைத்து வந்திருந்தது. ஆல்ரவுண்டரான அவர் இந்த மாதிரியான பிட்ச்களில் கைகொடுப்பார் என்பது அவர்களின் கணக்கு. மும்பை இப்படி மூன்று வெளிநாட்டு வீரர்களோடு களமிறங்குவது இது மூன்றாவது முறை. முதல் தடவை 2010-ல், இரண்டாவது முறை 2012-ல்.

டாஸ் வென்ற மும்பை அணி வழக்கம்போல டிபெண்ட் செய்யும் எண்ணத்தில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. முதல் ஓவரை வீசியது ஸ்டாய்னிஸ். ரோஹித்தின் பேட்டிங் பார்ம் கொஞ்சம் மோசமாக இருப்பதால் அவரைவைத்து ஒப்பேற்றலாம் என நினைத்தார்கள் போல. அதேபோல டி காக்கை மூன்றாவது ஓவரில் காலி செய்து கடமையை முடித்தார் ஸ்டாய்னிஸ். அடுத்து லோக்கல் பாய் என்கிற பிராண்டோடு களமிறங்கிய அஷ்வினை முதல் ஓவரிலேயே பொளந்தார் ரோஹித். 15 ரன்கள். அடுத்துவந்த ரபாடா ஓவரிலும் 14 ரன்கள். பண்ட் லெக்ஸ்பின்னிடம் சரணடைய வேண்டியதாய் இருந்தது. ஆனால் மிஸ்ராவும் தன் முதல் ஓவரில் 10 ரன்களை வாரிக்கொடுக்க பவர்ப்ளே முடிவுல் 55 ரன்கள் எடுத்து கெத்துக் காட்டியது மும்பை.

DC v MI
DC v MI

இந்த சீசனின் நம்பிக்கை நட்சத்திரமான அவேஷ் கான் ஸ்பெல்லுக்குள் வந்ததும்தான் சூர்யகுமார் யாதவின் விக்கெட் விழுந்தது. அடுத்த ஓவர் லலித் யாதவ் ரன்களை மட்டுபடுத்த 9வது ஓவரில் மும்பைக்கு டபுள் ஷாக் கொடுத்தார் மிஸ்ரா. ஏற்கெனவே லெக்ஸ்பின்னில் திணறும், அதுவும் மிஸ்ராவிடம் அடிக்கடி விக்கெட் விட்டுக்கொடுக்கும் ரோஹித் இந்த முறையும் அதைச் செய்யத் தவறவில்லை. கேப்டன் எவ்வழியோ அதுவே தன்வழி என ஹர்திக்கும் முதல் பால் டக்கில் வெளியேறினார். ஹர்திக் டெல்லி அணிக்கெதிராக எடுக்கும் நான்காவது டக் இது. சோகமான சாதனை. அதோடு மும்பை அணியின் 150 ரன்கள் டார்கெட் என்கிற கனவும் மலையேறியது.

லலித் க்ருணாலை பேக்கப் செய்ய, மிஸ்ரா விடாமல் தாண்டவமாடினார். பொல்லார்டை இரண்டே ரன்களுக்குச் சுருட்டி, ஓரளவு தாக்குபிடித்த இஷான் கிஷனையும் கிளப்பிவிட்டு, 'வயசானாலும் என் ஸ்டைலும் திறமையும் இன்னும் என்னைவிட்டுப் போகல' என நிரூபித்தார் மிஸ்ரா. நான்கு ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து நான்கு விக்கெட்கள். இன்னும் ஏழே விக்கெட்கள் எடுத்தால் ஐபிஎல்லில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய சாதனைக்கு இவர் சொந்தக்காரர். மலிங்கா ஓய்வு பெற்றுவிட்டநிலையில் மிஸ்ராவுக்கு இந்த சீசனே வாய்ப்புகள் பிரகாசம்.
DC v MI
DC v MI

ஜெயந்த் யாதவும் டீசன்ட்டாக 23 ரன்கள் அடித்துவிட்டு வெளியேற மொத்தமே 137 ரன்கள்தான் எடுத்தது மும்பை. சரி வழக்கம்போல ஸ்பின்னர்களை இறக்கிவிட்டு சோலியை முடித்துவிடலாம் என களமிறங்கியது மும்பை. ஆனால் உலகின் தலைசிறந்த இரண்டு ஸ்பின் அட்டாக் பேட்ஸ்மேன்கள் டெல்லியில் இருந்தார்கள். அவர்களால் ஆட்டமே மாறிவிட்டது.

'மும்பை என் ஹோம் டீம்... அதுகூட நான் அடிச்சா ஏரியாவுக்குள்ள கேங் வார் ஆயிடும்' என பாசம் கண்ணை மறைக்க பௌலிங் போட்ட ஜெயந்த் யாதவிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார் ப்ரித்வி ஷா. முன்னர் சொன்ன இரண்டு பேட்ஸ்மேன்கள் இப்போது க்ரீஸில். ஒருபக்கம் தவான், மறுபக்கம் ஸ்மித். இரண்டு பேரும், 'பங்காளி நீ இப்படிக்கா தட்டு, நான் அப்படிக்கா அடிச்சுவிடுறேன்' என லெப்ட்டில் டீல் செய்தார்கள் மும்பை பௌலிங்கை! பொருத்தமான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டுவது, ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வது என இவர்கள் போட்ட அஸ்திவாரத்தில் ஜம்மென ஜமுக்காளம் போட்டு உட்கார்ந்தது டெல்லி.

33 ரன்கள் அடித்த ஸ்மித்தை போராடிப் பிரித்தார் பொல்லார்ட். ஆனாலும் தவான் ஓய்வதாய் இல்லை. தன் பங்கிற்கு 45 ரன்களைக் குவித்துவிட்டே நடையைக் கட்டினார். மீதிப்படகை பார்ட்னர் லலித் யாதவ் பொறுமையாக ஓட்டிக் கரை சேர்ப்பார் என்கிற நம்பிக்கையில் பண்ட்டும் பெவிலியன் திரும்ப, கேப்டனின் நம்பிக்கையைப் பொய்யாக்காமல் கடைசி ஓவரில் வெற்றிக்கோட்டை தொடவைத்தார் யாதவ்.

DC v MI
DC v MI

ஏலத்தில் ஸ்மித்தை எடுத்தது மும்பை போன்ற அணிகளை சமாளிக்கத்தான் என ஏலம் முடிந்ததும் சொன்னார் டெல்லி அணியின் உரிமையாளர் பார்த் ஜின்டால். அதை செவ்வனே செய்திருக்கிறார் ஸ்மித். மறுபக்கம் குண்டூசி அளவுக்குக் கூட ஓட்டை இல்லாத அணி எனத் தொடருக்கு முன் வர்ணிக்கப்பட்ட மும்பையின் மிடில் ஆர்டர் பொக்ரானை போட்டதுபோல பெரிதாக விரிசல் விட்டிருக்கிறது.

இதிலிருந்து எழுவதும் இன்னும் கீழே விழுவதும் முழுக்க முழுக்க மும்பையை மட்டுமே சார்ந்திருக்கிறது. ஏனெனில் கடந்தகாலங்களில் அந்த அணி இந்த இரண்டையுமே செய்திருக்கிறது!
அடுத்த கட்டுரைக்கு