Published:Updated:

PBKS v DC: கேப்டன் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை... மயாங்கின் 99* வீண்... டேபிள் டாப்பர் டெல்லி!

அம்பயரையும் ஆடியன்ஸையும் எழுப்பிவிடும் முயற்சியாக, பண்ட்டின் விக்கெட்டை ஜோர்டன் வீழ்த்த, ஜென் மனநிலையில் "இனி விக்கெட் விழுந்தால் என்ன, விழாவிட்டால் என்ன?" என்று மாறிவிட்டது பஞ்சாப்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புள்ளிப் பட்டியலின் முதலிடத்தை முற்றுகையிடும் முயற்சியில், சிஎஸ்கேயும் ஆர்சிபியும் தள்ளுமுள்ளில் ஈடுபட, எல்லோரையும் கீழிறக்கி, முதலிடத்துக்கு முன்னேறி முத்திரை பதித்துள்ளது டெல்லி. கேப்டன்கள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற அதே ஸ்கிரிப்ட், ஒரே நாளில் மீண்டும் எழுதப்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவால், கேஎல் ராகுல் ஆட மாட்டார் என்பதே அதிர்ச்சி தரும் ஆரம்பமாக இருந்தது. ஒரே நாளில் நடக்கும் இரண்டு வெவ்வேறு ஐபிஎல் போட்டிகளில், இரண்டு புதுக் கேப்டன்களோடு அணிகள் களமிறங்குவது இதுவே முதன்முறை.

அணியின் ஒட்டுமொத்தச் சுமையையும் தோளில் சுமந்த ராகுல் இல்லாத பஞ்சாப்பை, கற்பனை செய்யக்கூடக் கசப்பாக இருந்தாலும், நிகழ்வதை ஏற்றுக்கொண்டு மயாங்கைக் கேப்டனாக்கிக் களமிறங்கியது பஞ்சாப். டாஸை வென்ற பண்ட், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். டக்அவுட் ஆவதில் ரெக்கார்ட் செய்து கொண்டிருந்த பூரணுக்குப் பதிலாக, மலானுடன் களமிறங்கியது பஞ்சாப். பன்டோ, 'மாற்றமில்லை' என முழுநம்பிக்கையோடு களமிறங்கினார்.

PBKS v DC
PBKS v DC

ஓப்பனிங் ஓவரை கவனிக்க பிரப்சிம்ரனைக் கூட்டிக்கொண்டு மயாங்க் களமிறங்க, அவர்களை மெய்டன் ஓவரோடு வரவேற்றார் இஷாந்த். சந்தித்த ஆறு பந்துகளையும் டாட் பாலாக்கி, பாழாக்கி நற்தொடக்கம்(!!) தந்தார், பிரப்சிம்ரன்.

ராகுல் ஆங்கரிங் ரோல் செய்தால், மயாங்க் அடித்து ஆடுவார், ஆனால், இன்று அவரே இல்லாததால், கேப்டன் பதவியோடு, அந்தக் கூடுதல் பொறுப்பையும் ஏற்றார், மயாங்க்! பவர்பிளே முடியும்வரை பதுங்கிப் பாயும் முடிவோடு களமிறங்கி இருப்பார் போலும்‌. இதற்கேற்றாற் போல்தான் மறுபுறமும் நிகழ்வுகள் நகர்ந்து கொண்டிருந்தன. பிரப்சிம்ரன் விக்கெட்டை ரபாடா காலி செய்தார். தோட்டாவாய்ப் பாய்ந்துவந்த அவரது பந்தை, பிரப்சிம்ரன், ஓவர் த எக்ஸ்ட்ரா கவரில் அனுப்ப, அது ஸ்மித்தின் கைகளில் அடைக்கலமானது.

கெய்ல் இருக்கிறார், பார்த்துக்கொள்வார் என ரசிகர்கள் நினைத்தனர். நடந்ததோ வேறு. ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸரோடு அமர்க்களமாகத் தொடங்கினார் கெய்ல். ஆனால், மணிக்கு 143 கிமீ வேகத்தில், ஃபுல்டாஸாக வீசப்பட்ட ரபாடாவின் பந்து, கெய்லின் ஆஃப் ஸ்டம்பைச் சிதறச் செய்து, அவரையே ஒரு கணம் ஸ்தம்பிக்கச் செய்தது. இந்தத் தொடரில், பவர்பிளேயில் இதுவரை ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்திருந்த ரபாடா, இன்று மட்டுமே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்ததாக வந்த உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் மலான், சப்போர்டிங் ரோல் செய்ய ஆரம்பித்தார். இந்தியாவில், ஸ்பின்னர்களுக்கு எதிராக, அவரது ரன்ரேட் வெறும் 4.7 என்பதால், அவரைக் குறிவைத்து, உடனடியாக, லலித்தையும் அக்ஸர் பட்டேலையும் மாற்றி மாற்றிப் போட வைத்தார் பண்ட். ரன்கள் மட்டுப்பட்டது. 47 பந்துகளில், 52 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த இந்தக் கூட்டணியை, மலானைக் க்ளீன் போல்டாக்கி அக்ஸர் முறித்தார்.

இதே ஓவரில், பாகிஸ்தான் வீரர்களின் பரம்பரையில் வந்தவர்களைப் போல், ஹுடாவும் மயாங்கும் ஒரே எண்டுக்கு ஓடிச்செல்ல, அவர்களுக்கு முன்பு பந்தைக் கொண்டு அக்ஸர் பெய்ல்ஸைத் தகர்த்ததோடு, மறுமுனைக்கு பன்டிடம் எறிந்து இருபக்க ஸ்டம்பையும் காலி செய்தார். இறுதியில், நான் ஸ்ட்ரைக்கர் எண்டை அடையத்தவறிய ஹுடா அவுட் என மேலிடத்திலிருந்த மூன்றாவது அம்பயர் தீர்ப்புச் சொல்ல, அவர் வெளியேறினார்.

ஷாருக்கான் உள்ளே வர, 'பொறுத்தது போதும் பொங்கியெழு!' என, அதிரடி காட்டத் தொடங்குனார் மயாங்க். 37 பந்துகளில் அரைசதத்தை எட்டியபின், இன்னமும் வீரியம்கூடியது அவரது ஆட்டத்தில். ரபாடா பந்தில் மிட் விக்கெட்டில் பறக்கவிட்ட சிக்ஸர் எல்லாம் அள்ளியது, டெல்லி பக்கம் அனலை எடுத்துக் கொட்டியது. அக்ஸர் ஓவரில் பேக் டு பேக் பவுண்டரிகளோடு, அதகளம் காட்ட, அரண்டது டெல்லி.

ஷாருக்கான், ஜோர்டன் எல்லாம் வந்து போய்க் கொண்டிருந்தனர், விருந்தாளிகள் போல. மயாங்க் மட்டும், மைதானத்திலேயே கடையைப் போட்டு, சிக்ஸர் பவுண்டரிகளை பௌலர்களுக்குப் பரிசாகக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேப்டன் மட்டுமே போராட வேண்டுமென்பது பஞ்சாப் வாங்கிவந்த சாபம் போலும், ஆனால், அதையும் இன்று வரமாக்கி, ரன்மழை பொழியச் செய்தார் மயாங்க். டெத் ஓவர்களில், இந்த சீசனில் மூன்றாவது சிறந்த எகானமியான 8.12 வைத்திருக்கும் அவிஷ்கானை வீசச் செய்தார். அவர் வீசிய, போட்டியின் கடைசி ஓவரின் கடைசி மூன்று பந்துகளில், பவுண்டரி, சிக்ஸர் மறுபடி ஒரு பவுண்டரி என முடித்து, 58 பந்துகளில் 99 ரன்களைக் குவித்து, கடைசிவரை ஆட்டமிழக்காமலும் இருந்தார் மயாங்க். ஒரு ரன்னில் சதத்தைக் கோட்டை விட்டு, ரசிகர்களை உச்சுக் கொட்ட வைத்துவிட்டார். கேப்டனான அறிமுகப் போட்டியில், ஒரு வீரரின் இரண்டாவது சிறந்த ஸ்கோர் இது‌! மற்ற அத்தனை பஞ்சாப் வீரர்களும் இணைந்து, 62 பந்துகளில் 62 ரன்களைச் சேர்த்திருக்க, 58 பந்துகளில் 99 ரன்களைக் குவித்து டெல்லி பௌலிங் யூனிட்டை மயாங்க் தகர்த்தெறிய, 167 என்னும் நல்ல இலக்கை பஞ்சாப் நிர்ணயித்தது.

PBKS v DC
PBKS v DC

168 என்பது அகமதாபாத்தைப் பொறுத்தவரை, துரத்தக் கடினமான இலக்கெனினும், அது டெல்லியின் ஓட்டமென்பதால், முடிவு எட்டும்வரை பொறுத்திருக்க வேண்டிய அவசியமிருந்தது‌. வழக்கம் போல, அதிரடித் தொடக்கத்தைத் தந்தது தவான் - பிரித்வி கூட்டணி. ஒருபக்கம், பிரித்வி அதிரடியாக ஆடிக்கொண்டிருக்க, தவானோ நிதானமாகத் தொடங்கினார். இந்த சீசன் முழுவதிலும், பவர்பிளே ஓவர்களில் சராசரியாக 7 ரன்ரேட்டோடு ஓடையாக ஓடத்தொடங்கும் தவானின் இன்னிங்ஸ், ஆறு ஓவர்களுக்குப்பின், 8.4ஆக காட்டாறாகும்! இதைத்தான் இன்றும் செய்தார்‌. எனினும் 21 பந்துகளில், 39 ரன்களைக் குவித்த பிரித்வியின் அதிரடியால் ஆறு ஓவர்களில், 63 ரன்களைக் குவித்தது, டெல்லி. போதுமென்ற மனதோடு, அடுத்த ஓவரிலேயே ஹர்பிரீத் வீசிய முதல் பந்திலேயே, தனது விக்கெட்டைக் கொடுத்து வெளியேறினார் பிரித்வி‌. போன போட்டியில், பேட் மற்றும் பாலால் அசத்தியிருந்த ஹர்பிரீத், இன்றும் நல்ல தொடக்கம் கொடுத்தார்.

ஆனால் அப்போதே, 83 பந்துகளில், 104 ரன்கள் மட்டுமே தேவை, என இலக்குக்கு அருகே டெல்லி சென்று விட்டது. எனினும், இருவரையும் தாக்கும் நோக்கில், ரவி பிஷ்னாயையும், ஹுடாவையும் வீச வைத்தார் மயாங்க். மிரளவுமில்லை, மடங்கவுமில்லை இந்தக் கூட்டணி. கூக்ளி மேல் கூக்ளியாக, அவரது வித்தியாசமான பௌலிங் ஸ்டைலால் வீசிக்கொண்டிருந்தார் ரவிபிஷ்னாய். அதை அநாயாசமாக எதிர்கொண்டார் ஸ்மித். பெரிய ஷாட்டுகளுமின்றி, விக்கெட்டுமின்றி, வறண்டு நகர்ந்தன சில ஓவர்கள்.

PBKS v DC
PBKS v DC

ஒருபக்கமாகப் போய்க் கொண்டிருந்த போட்டியில், மியர்டித் எடுத்த ஸ்மித்தின் விக்கெட்தான், அம்பயரையே கொஞ்சம் அலெர்டாக்கியது. பண்ட் வர, "இவன் வந்தா எல்லா ரன்களையும் இவனே எடுத்துவிடுவானே?!", என நினைத்தாரோ என்னவோ, அதற்கடுத்த பந்திலேயே, சிக்ஸரைத் தூக்கி அரைசதம் கடந்தார் தவான். பண்ட்டும் தனது கணக்கை ரிவர்ஸ் ஸ்வீப்பில் அடித்த பவுண்டரி மூலமாகத் தொடங்க, தனியாக மாட்டிய ரவி பிஷ்னாயின் ஓவரில், 15 ரன்களைக் குவித்து, போட்டியைச் சீக்கிரமாக முடித்துவிடும் மோடுக்கு மாறினர் இருவரும்.

அதற்கடுத்து வந்த ஷமியின் ஓவரையும் 13 ரன்களோடு சிறப்பித்து, 30 பந்துகளில் 28 ரன்கள் தேவை என்ற இடத்தை எட்டியது டெல்லி. மயாங்காலும் அவரது பௌலர்களாலும், கைகட்டி வேடிக்கைப் பார்க்க முடிந்ததே தவிர, விக்கெட்டை வீழ்த்தவும் முடியவில்லை, நெருக்கடியும் தர முடியவுமில்லை. இந்த பௌலிங் படையா அன்று ஆர்சிபியை அப்படிச் சுருட்டியதென்ற சந்தேகமே எழத் தொடங்கியது.

நேற்றைய போட்டி ஏற்படுத்திய அதிர்வலையில், அரை சொட்டுக்கூட இந்தப் போட்டியில் இல்லை. பொதுவாக வீக் எண்டில் சூப்பர் ஓவர்வரை கூட்டிப் போய் சுற்றிக்காட்டும் பஞ்சாப்பும், இன்று மரண மொக்கை போட, சென்னை 'சேப்பாக்கம் நினைவலைகள் பகுதி - 2' போலத் தொடர்ந்து கொண்டிருந்தன அகமதாபாத் அசமந்தக் கதைகளும்.

அம்பயரையும் ஆடியன்ஸையும் எழுப்பிவிடும் முயற்சியாக, பண்ட்டின் விக்கெட்டை ஜோர்டன் வீழ்த்த, ஜென் மனநிலையில் "இனி விக்கெட் விழுந்தால் என்ன, விழாவிட்டால் என்ன?" என்று மாறிவிட்டது பஞ்சாப்.

PBKS v DC
PBKS v DC

உள்ளே வந்த ஹெட்மையர், பொங்கி எழுந்து, மியர்டித்தின் ஓவரில், இரண்டு சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விளாசி, 18-வது ஓவரிலேயே போட்டியை முடித்துவைத்து, 4 பந்துகளில் 16 ரன்கள் என 400 ஸ்ட்ரைக்ரேட்டோடு, அணியை இலக்கை எட்ட வைத்தார். ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.

கேப்டனாகத் தனது முதல் போட்டியில் அசத்தலாக ஆடியும், தோல்விக் கணக்கோடு தொடங்கியிருக்கிறார், மயாங்க். மற்ற வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தாலும், அட்டாக்கிங் பௌலிங்கை செய்யத் தவறியதாலும், நடப்பு சீசனில், டெல்லியிடம் இரண்டாவது முறையாகத் தோற்று, புள்ளிப் பட்டியலில் மேலேறும் வாய்ப்பை இழந்து, ஆறாவது இடத்திலேயே தொடர்கிறது பஞ்சாப். பண்ட் தலைமையிலான டெல்லியோ, அசத்தலான ஆறாவது வெற்றியோடு, டேபிள் டாப்பராகத் தலை நிமிர்ந்து நிற்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு