Published:Updated:

சென்னை சூப்பர் கிங்ஸை மீண்டும் சாம்பியனாக்கிவிட்டு விடைபெறுவாரா தோனி... பலம், பலவீனம் என்ன?! #CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் - தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் - தோனி

மூன்று முறை சாம்பியன்ஸ், விளையாடிய எல்லா முறையும் ப்ளே ஆஃபுக்குள் நுழைந்த அணி என சுமந்த எல்லாப் பெருமையையும், பழம்பெருமையாய் மாற்றிவிட்டது சிஎஸ்கே.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கனவில் கூட சிஎஸ்கே ரசிகர்கள் நினைத்துப் பார்க்க விரும்பாத, ஒரே ஒரு சீசன் 2020 ஐபிஎல். எட்ட முடியாத உயரங்களை எட்டித்தொட்ட தோனியின் அணி, கடந்த ஆண்டு, அதளபாதாளத்தில் விழுந்தது. எங்கே எதனால் தொடங்கியது சிஎஸ்கேயின் வீழ்ச்சி, இந்த சீசனில் சரிவை சரிகட்டுவார்களா?!

பலவீனம் - 1: ரெய்னாவின் விலகல்

5000+ ரன்கள், 33.34 சராசரி, 137.14 ஸ்ட்ரைக் ரேட் என பிரமிக்க வைக்கும் சாதனைகளை நிகழ்த்தி அணியின் எல்லாமுமான ஒரு வீரராக இருந்தவர் ரெய்னா. கடந்த சில சீசன்களாக அவரின் பங்களிப்பு எதிர்பார்த்த அளவுக்கு இல்லையென்றாலும் திடீரென முக்கியமானப் போட்டிகளில் முக்கியமான இன்னிங்ஸ் ஆடிவிடுவார் ரெய்னா. ஆனால், அவர் இல்லாத கடந்த சீசன் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவைத்தந்தது. ஆஃப்டர் ஷாக் எனச் சொல்லப்படும் எண்ணற்ற அதிர்ச்சிகளை, கடந்த சீசன் முழுவதும், சிஎஸ்கேவும் அதன் ரசிகர்களும் சந்தித்தது ரெய்னாவின் விலகலில் இருந்துதான் தொடங்கியது. பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாகச் செயல்பட்ட அவர் இல்லாத அந்த வெற்றிடத்தை யாரைக் கொண்டும் சென்னையால் நிரப்ப முடியாமல் போனது.

Raina
Raina

பலவீனம் - 2: பவர்ப்ளேயில் ரன்களைக் குவிக்கத் தவறிய ஓப்பனர்கள்!

முரளி விஜய், வாட்சன், டுப்ளெஸ்ஸி, சாம் கரண் என பல ஓப்பனர்களைக் கொண்டு ஓப்பனிங்கை பலப்படுத்த தோனி முயற்சிக்க, எதவுமே கை கொடுக்கவில்லை. முதல் பந்தில் இருந்து பட்டாசு வெடிக்க வேண்டிய டி20 ஃபார்மேட்டில், பவர்ப்ளே ஓவர்களில், ஓவருக்கு ஒன்று இரண்டு ரன்களாகச் சேர்த்துக் கொண்டிருந்தனர் சென்னை ஓப்பனர்கள். தோனி காண விரும்பிய அந்த ஸ்பார்க்கை கண்முன் காட்டியது, கெய்க்வாட் மட்டுமே. ஆனால் அதற்குள் தொடர், இறுதியை எட்டி விட்டது.

பலவீனம் - 3 : பராசக்தி எக்ஸ்பிரஸ் இயக்கப்படாமல் போனது!

முந்தைய சீசனில், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி, பர்ப்பிள் கேப்பை வென்ற ஒரு வீரரை வெளியே உட்கார வைக்க வேண்டிய நிலைக்கு, சிஎஸ்கே தள்ளப்பட்டது. இதுவும் ரெய்னாவின் விலகலால் ஏற்பட்ட விளைவுகளில் ஒன்றுதான். அவரது இடத்தை நிரப்பும் முயற்சியில், வாட்சன் மட்டும் டுப்ளெஸ்ஸி என இரண்டு வெளிநாட்டு பேட்ஸ்மேன்களோடு களமிறங்கும் முடிவுக்கு சிஎஸ்கே தள்ளப்பட, அதன் விளைவாக, வெளிநாட்டு வீரர்களுக்கான ஸ்லாட் முழுமையடைய, அதனால் வெளியே உட்கார வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார், இம்ரான் தாஹிர். அது அவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அணிக்குத்தான் பேரிடியைக் கொடுத்தது. அவரது இடத்தை ப்யூஷ் சாவ்லாவை வைத்து அவர்கள் நிரப்ப முயற்சிக்க, அது மோசமான விளைவுகளைத் தந்தது.

Imran Tahir
Imran Tahir

பலவீனம் - 4: காயங்கள் காட்டாத கனிவு!

சென்ற தொடரில், எதுவும் சரியில்லை, இதுவும் சரியில்லை என்ற வகையில் சில விஷயங்களைச் சந்தித்தது சிஎஸ்கே. அவற்றில் ஒன்று, ராயுடு மற்றும் பிராவோவின் காயங்கள். இந்த காயங்கள் மோசமான வலியை அந்த வீரர்களுக்குக் கொடுத்ததோ இல்லையோ, ரசிகர்களுக்கு அழியாத வலிதரும் வடுவாக மாறிப்போனது.

பலவீனம் - 5: லேட் பிக் அப்!

ஓப்பனர்கள் அதிரடி தொடக்கத்தைக் கொடுப்பது, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஸ்பின் பௌலர்களை அட்டாக் செய்வது என எதுவும் நடக்காமல் போக, கூடுதல் அழுத்தத்தை தோனி தோளில் தூக்கிச் சுமக்க வேண்டியதாயிற்று. இதன் காரணமாக, அடித்து ஆட வேண்டிய நிலையில் இறங்கினாலும், தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, தோனி சில பந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டியதாக, பல போட்டிகளில் மெல்லிய நூலிழை வித்தியாசத்தில் போட்டியைக் கோட்டை விட்டது சிஎஸ்கே. அவரது, ஐபிஎல் கரியரில், வருடவாரியாகப் பார்க்கும்போது அவரது இரண்டாவது மோசமான ஸட்ரைக்ரேட்டான 116.27-ஐ கடந்த சீசனில்தான் தோனி சந்தித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2021 சவால்கள்: ரெய்னா மற்றும் தோனியின் ஃபார்ம்!

இந்த ஆண்டு சிஸ்கே கோப்பையை வெல்ல முக்கிய காரணிகளில் ஒன்றாக பார்க்கப்படுவதில் பெரும்பங்கு இவர்களின் பேட்டிங் ஃபார்ம். சிஎஸ்கே ரசிகர்கள் ரெய்னா திரும்பி வந்ததை என்னதான் கொண்டாடினாலும், அவர் பழைய ரெய்னாவாகத் திரும்புவாரா என்பதில்தான் இருக்கிறது சிஸ்கேவின் வெற்றி மந்திரம். ஏனெனில், ரெய்னா கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடியே பல காலங்கள் ஆகி விட்டது. நடந்து முடிந்த சையது முஷ்தாக் அலி டிராபியில் வெறும் 102 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளதால் அவரின் பேட்டிங் ஃபார்ம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. பழைய பன்னீர்செல்வமாக திரும்பும் பட்சத்தில் மட்டும்தான் அவரின் வரவு ரசிகர்கள் எதிர்பார்க்கும் பலன் தரும் வரவாக இருக்கும்

Dhoni
Dhoni

அடுத்ததாக, தோனியைப் பொறுத்தவரை 2018, 2019-ம் சீசன்களுக்குப் பின், அவரது ஆட்டத்திறன் வெகுவாகக் குறைந்து விட்டது. நிறைய சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் ஆடாததன் எதிர்விளைவை கடந்த சீசனில் நன்றாகவே பார்க்க முடிந்தது. எனவே இந்த ஆண்டும், இந்த தோனியுடம் இருந்து அந்த பழைய உத்வேகமும் துடிப்பும் இருக்குமா என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை!

ஆல் ரவுண்டர்கள் பயன்பாடு!

சிஎஸ்கே-வைப் பொறுத்தவரை, இந்த வருடம், ஜடேஜா தவிர்த்து, சாம் கரண், பிராவோ, மொயின் அலி, கிருஷ்ணப்ப கௌதம் என ஒரு பெரிய ஆல் ரவுண்டர் பட்டாளமே இருக்கிறது. ஆனால், இவர்களை எப்படி, எந்த அடிப்படையில், சிஎஸ்கே, 'பதினொரு வீரர்களுக்குள், நான்கு வெளிநாட்டு வீரர்கள்' எனும் வரைமுறைக்குள் எல்லாம் வசப்பட்டு, இணைத்து, வெற்றி சூத்திரத்துக்கு உட்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு முழுமுதல் அணியாகக் கொடுக்கப் போகிறார் என்பதே தோனிக்குக் காத்திருக்கும் பெரிய சவால்தான்.

வேகப்பந்து வீச்சு சந்தித்துள்ள நெருக்கடி!

தனது வெளிநாட்டு வேகப்பந்து வீச்சுத்துறைக்கு ஹேசில்வுட் மற்றும் என்கிடியை நம்பியே இருந்தது சிஎஸ்கே அணி. இதில், என்கிடியின் சமீபத்திய ஃபார்ம் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. வெகுசமீபத்தில் நடந்து முடிந்த, தென் ஆப்ரிக்கா பாகிஸ்தான் தொடரிலேயே, அவரது ஃபார்ம் குறித்த பேச்சுகள் அடிபட்டன. இது ஒருபக்கம் என்றால், கடைசி நொடியில், ஹேசில்வுட்டின் விலகல், அணியை பெரிய இக்கட்டில் ஆழ்த்தி இருக்கிறது. அவருக்கான மாற்று வீரருக்காக எவ்வளவோ வீரர்களை சிஎஸ்கே அணுகியும், கொரோனா அச்சம் காரணமாக, சிஎஸ்கேவுக்கான வேகப்பந்து வீச்சாளராக இணைய, எந்த வீரரும் முன்வரவில்லை. இது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, சிஎஸ்கே-வில், பும்ரா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்து வந்த நிலையில், தற்போது ஹேசில்வுட்டின் விலகலும், அணிக்கு பாதகமாக மாறி இருக்கிறது.

Sam Curran | #RRvCSK
Sam Curran | #RRvCSK
twitter.com/IPL

மின்னல்வேகம் இல்லை!

சிஎஸ்கேவுக்காக விளையாடும் வீரர்கள் யாராலும், உட் போல மணிக்கு 145+ வேகத்தில் மிரட்ட முடியவில்லை. பிரோவா மற்றும் சாம் கரண், மீடியம் ஃபாஸ்ட் பௌலர்கள் மட்டுமே. இவர்களோடு மற்ற சிஎஸ்கே வீரர்களைச் சேர்த்துப் பார்த்தாலும், எல்லோருமே, 140-க்கும் கீழ் பந்து வீசக் கூடியவர்கள்தான். இது அணியின் பலத்தை பன்மடங்கு குறைத்து, மோத முழுபலமற்றதாய் மாற்றுகிறது. இந்த வேகமின்மையும் சிஎஸ்கேயின் வெற்றிக்கான வேகத்தடையாக இருக்கப் போகிறது.

வெளிநாட்டு வீரர்களுக்கான ஸ்லாட்!

இம்முறை ரெய்னா அணியுடன் இணைந்திருப்பதால், தாஹிரை உள்ளே கொண்டு வர சிஎஸ்கேவால் இயலுமென்பது அணிக்குத் தேவையான அசுர பலத்தைத் கொண்டு வந்துள்ளது. டுப்ளஸ்ஸி, மொயின் அலி, சாம் கரண்/பிராவோ, தாஹிர் என நான்கு வீரர்களுக்கான ஸ்லாட்டை நிரப்பலாம்.

இடது கை ஆல்ரவுண்டர்கள்!

தோனியின் சிஎஸ்கேவுக்கு இந்த ஆண்டு இன்னொரு சிறப்பம்சமாக இருப்பது, ஆல் ரவுண்டர்களில் பெரும்பாலானோர் இடக்கை ஆட்டக்காரர்களாக இருப்பதே. ரெய்னா, மொயின் அலி, சாம் கரண், ஜடேஜா என மொத்தம் நான்கு இடக்கை ஆல் ரவுண்டர்கள் இருப்பது, இடக்கை வலக்கை காம்பினேஷனுக்கு பெரிய வகையில், சிஎஸ்கேவுக்கு உதவப் போகிறது.

உத்தப்பாவின் சமீபத்திய ஃபார்ம்!

பல ஐபிஎல் அணிகள் கண்டு தற்போது சிஎஸ்கேவுடன் பயணப்படும் உத்தப்பாவின் சமீபத்திய ஃபார்ம், அற்புதமாக இருக்கிறது. நடந்து முடிந்த, விஜய் ஹசாரே தொடரிலேயே சிறப்பான தடம் பதித்திருந்தார் உத்தப்பா. ஓப்பனராக இவர் இறங்கி, பழைய உத்தப்பாவாய் பலம் காட்டும் பட்சத்தில், அது கடந்த இரண்டு ஆண்டுகளாக, பவர்ப்ளே ஓவர்களில் ரன் வரவில்லை, அதனால் தேவையான ஸ்டார்ட் அப் கிடைக்கவில்லை என்ற குறையையும் களைந்தெறியும். கடந்த வருடம், நிறைய போட்டிகளில், ரன்களை சேஸ் செய்து ஆட வேண்டியிருந்த போது, இந்தக் குறை வெளிப்படையாகவே தெரிந்தது. அது இந்த வருடம் எப்படி மாறுகிறது என்று பார்ப்போம்.

ராபின் உத்தப்பா - சிஎஸ்கே
ராபின் உத்தப்பா - சிஎஸ்கே

கிருஷ்ணப்ப கௌதம்!

அணிக்கு மிகப்பெரிய நல்வரவாக இருக்கப் போவதாகக் கருதப்படுகிறார் கிருஷ்ணப்ப கௌதம். தோனியை ரோல் மாடலாகக் கொண்டாடும் இவர், தற்போது தோனியின் கீழ் விளையாட இருக்கிறார். பல மேட்ச் வின்னர்களை இந்தியாவுக்காக உருவாக்கிக் கொடுத்துள்ள சிஎஸ்கேவுக்கு இவரும் ஒரு எக்ஸ் ஃபேக்டராக மாறுவார்.

எக்ஸ் ஃபேக்டர்!

ஒவ்வொரு அணியிலும் கோப்பையை வெல்லும் எக்ஸ் ஃபேக்டர் வீரராக ஒருவர் இருப்பார். மேக்ஸ்வேல், ரிஷப் பன்ட் போல் இந்தமுறை சிஸ்கே கோப்பையை வெல்ல எக்ஸ் ஃபேக்டராக இருக்கப்போவது ஜடேஜாதான். உலககோப்பைக்குப் பிறகு அவரின் பேட்டிங் ஃபார்ம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதே ஃபார்ம் இந்தத் தொடரில் தொடருமேயானால் கோப்பையை வென்று கொடுக்கும் வீரராக ஜடேஜா இருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மும்பை வீழ்த்தவே முடியாத அணியா... ரோஹித் ஷர்மா ஹாட்ரிக் சாம்பியன்ஷிப் வெல்வாரா? LEAGUE லீக்ஸ் -7 #MI
Faf Du Plesis
Faf Du Plesis

உத்தேச பிளேயிங் லெவன்!

டுப்ளெஸ்ஸி, உத்தப்பா, ரெய்னா, ராயுடு, மொயின் அலி, தோனி, ஜடேஜா, சாம் கரண், தாக்கூர், சஹார், இம்ரான் தாஹிர்

சில பிரச்னைகள் இங்கொன்றும் அங்கொன்றுமாய்த் தெரிந்தாலும், தோனியின் தலைமைப் பண்பே, இருக்கின்ற விஷயங்களை, தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வதுதான். கோப்பைகள் அவருக்குப் புதிதல்ல. எனினும், சிஎஸ்கேவுக்காக அவர் விளையாடும் கடைசி சீசனாக இது இருக்கும் என்பதால், கோப்பையைக் கையிலேந்தி விடைபெறுவதுதான் இன்னும் கம்பீரமாக இருக்கும். அதைச் செய்வதற்கான எல்லா முயற்சியை அவரும் அணி வீரர்களும் செய்வார்கள் என எதிர்பார்ப்போம்!

ஐபிஎல் சீசன் 14 இனிதே தொடங்குகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு