Published:Updated:

KKR v CSK: டேபிள் டாப்பில் சென்னை... இதயங்களை வென்ற கொல்கத்தா! | IPL 2021

CSK ( IPL )

ரஸலும், கம்மின்ஸும் தலா ஆறு சிக்ஸ் விளாசி நினைவு கொள்ளத்தக்க ஓர் ஆட்டத்தை பரிசளித்திருக்கிறார்கள். In the end the cricket has won என்பார்களே. இன்று நடந்த போட்டி அப்படியானதொன்று!

KKR v CSK: டேபிள் டாப்பில் சென்னை... இதயங்களை வென்ற கொல்கத்தா! | IPL 2021

ரஸலும், கம்மின்ஸும் தலா ஆறு சிக்ஸ் விளாசி நினைவு கொள்ளத்தக்க ஓர் ஆட்டத்தை பரிசளித்திருக்கிறார்கள். In the end the cricket has won என்பார்களே. இன்று நடந்த போட்டி அப்படியானதொன்று!

Published:Updated:
CSK ( IPL )
முதலில் விளையாடும் அணி 200+ ஸ்கோரை எடுத்துவிட்டாலே, போட்டியின் முடிவு ஓரளவு உறுதியாகிவிடும். அதையும் தாண்டி, இரண்டாவது இன்னிங்ஸ் ஆடும் அணி, 31 ரன்களுக்குள்ளேயே முக்கியமான ஐந்து விக்கெட்டுகளை இழந்துவிட்டால் அவ்வளவுதான். அதற்கு மேலும் அந்தப் போட்டியைப் பார்ப்பவர்களை வீட்டில் இருக்கும் கிரிக்கெட் பிடிக்காதவர்கள் கொலைக் கடுப்பில் பார்ப்பார்கள். இன்றைய ஆட்டம் அப்படியானதொரு போட்டிதான்.

தோனியின் 150வது டிஸ்மிஸல், டுப்ளெஸ்ஸியின் 95*, கெய்க்வாட்டின் பாசிட்டிவான 50 , தீபக் சஹாரின் அசத்தல் ஸ்விங் பவுலிங் என சென்னை பக்கம் ஆயிரம் ஆயிரம் மரண மாஸ் விஷயங்கள். இருந்தாலும் கொல்கத்தா வெல்லட்டுமே என ஹார்ட்டின்களை அள்ளினர் கொல்கத்தாவின் ரஸலும், பேட் கம்மின்ஸும். இருவருமே தலா ஆறு சிக்ஸ் விளாசி நினைவு கொள்ளத்தக்க ஓர் ஆட்டத்தை பரிசளித்திருக்கிறார்கள். In the end the cricket has won என்பார்களே. இன்று நடந்த போட்டி அப்படியானதொன்று!

தோனி இன்று ஆட்டம் முடிந்ததும் பேசியது இதையே பிரதிபலித்தது. "அவர்களிடம் விக்கெட் இருந்திருந்தால், ஆட்டம் வேறு மாதிரியாக மாறியிருக்கும். பேட்ஸ்மேனுக்கும், ஃபாஸ்ட் பௌவுலருக்கும் நடக்கும் போட்டியில் நாம் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது. கிரிக்கெட்டில் நிறைய பார்த்திருக்கிறோம். அமைதியாக இருக்க வேண்டும். நம்மால் ரன் அடிக்க முடியும். அடுத்தவர்களால் முடியாது என்றெல்லாம் எதுவுமே இல்லை." என்றார். "நாங்கள் பவர்பிளேயில் விளையாடியதற்கு இவ்வளவு ரன்கள் எடுப்போம் என்றெல்லாம் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ரஸலுக்கு உதவ முடியவில்லை என வருந்துகிறேன்" என்றார் கொல்கத்தா கேப்டன் மோர்கன். இவ்வளவுதான் கிரிக்கெட்!

சரி, போட்டிக்குள் செல்வோம்...

இன்றைய போட்டியில் பிரேவோவுக்கு ரெஸ்ட் கொடுத்து, இங்கிடியை அணியில் சேர்த்திருந்தார் தோனி. டாஸ் வென்ற மோர்கன் பலிங் தேர்வு செய்தார். ஹர்பஜனுக்குப் பதிலாக நாகர்கோட்டியையும், சகிப் ஹல் ஹஸனுக்குப் பதிலாக நரைனையும் அணியில் எடுத்தார் மோர்கன். தோனி இருக்கும் போட்டியில் நரைன் இருப்பார் என்பதால், அதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

கெய்க்வாட்டும் டுப்ளெஸ்ஸியும் வழக்கம்போல சென்னைக்கு ஓப்பனிங் இறங்கினார்கள். வருணின் முதல் ஓவரில் பெரிதாக சேதாரம் இல்லை. கம்மின்ஸ் வீச ஆரம்பித்த ஓவரிலிருந்து எல்லாமே வீடியோ கேம் ஆட்டம்தான். இத்தனை போட்டிகளாக மாணிக்கம் மோடிலிருந்த கெய்க்வாட் இந்தப் போட்டியில் மொத்தமாக பாட்ஷாவாக மாறினார். கம்மின்ஸின் முதல் ஓவரில் 15 ரன்கள். அதில் கெய்க்வாட் ஒரு பவுண்டரி & சிக்ஸர். பவர்பிளே இறுதியில் விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் எடுத்திருந்தது சென்னை. ஒவ்வொரு ஓவரிலும் ரன்ரேட் ஏறிக்கொண்டேயிருக்க பெரிய இலக்கை நோக்கி அடியெடுத்து வைத்தது சென்னை.

யார் ஓவர் போட்டாலும் பவுண்டரி, சிக்ஸ் என சென்றுகொண்டே இருந்தது. ரஸல் வந்த வேகத்துக்கு ஒரு ஷார்ட் பால் வீச, அதை டீப் விக்கெட் திசையில் சிக்ஸுக்கு விளாஸினார் கெய்க்வாட். 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள். கெய்க்வாட் 43 ரன்களுடனும், டுப்ளெஸ்ஸி 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நாகர்கோட்டியும் தன் முதல் ஓவரிலேயே ஷார்ட் பால் வீசினார். இன்னுமா நான் வேற மாதிரின்னு தெரியலை என்பது போல் மீண்டும் அதை மிட் விக்கெட் திசையில் சிக்ஸுக்கு அனுப்பினார் கெய்க்வாட். நாகர்கோட்டி வீசிய ஓவரின் கடைசி பந்தை முன்னரே கணித்து டுப்ளெஸ்ஸி அதற்கேற்ப லாஃட் ஷாட் அடித்து, அதை சிக்ஸுக்கு அனுப்பினார்.

KKR v CSK
KKR v CSK

முதல் ஓவரில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து இன்னும் டேமேஜாக ப்ரசீத் கிருஷ்ணா பந்து வீச வந்தார். கெய்க்வாட் பவுண்டரி விளாச அடுத்த பந்து நோ பால். ஃப்ரீ ஹிட் பந்தைச் சிறப்பாக வீச, டுப்ளெஸ்ஸியால் ஒரு ரன் மட்டுமே அடிக்க முடிந்தது. அடுத்த பந்தை, டீப் விக்கெட் திசையில் புல் ஷாட்டாக சிக்ஸுக்கு விளாசினார் கெய்க்வாட். மீண்டும் ஒரு நோ பால் வீசினார். அடுத்த ஃப்ரீ ஹிட்டிலும் ஒரு ரன். இந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள். 13வது ஓவரை பந்து வீச வந்தார் வருண். தினேஷ் கார்த்திக்கும் வழக்கம் போல தமிழில் வருணுக்கு அறிவுரை வழங்க முதல் விக்கெட். வருண் வீச கம்மின்ஸ் கேட்சில் அவுட்டானார் கெய்க்வாட். தோனி இத்தனை நாள்களாக இவர் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு, இன்று அதை மெய்ப்பித்துக்காட்டினார் கெய்க்வாட்.

மொயின் அலி எல்லா பந்துகளையும் அடிக்க வேண்டும் என முடிவெடுத்து ஆடிக்கொண்டிருந்தார். தோனி கண்ணாடி ரூம் வழியே ரெடி ஆகிக்கொண்டிருக்க , 'தோனிதான் வராரு, சிக்ஸ் அடிக்க போறாரு' என ரெடி ஆனார்கள் சென்னை ரசிகர்கள். நரைன் பந்தில் பவுண்டரி, அடுத்து லாங் ஆன் திசையில் ஒரு சிக்ஸ் அடித்தார் மொயின். அடுத்த பந்தையும் இறங்கி அடிக்க ஆசைப்பட்டு ஸ்டம்பிங் முறையில் அவுட்டானார். உள்ளே வந்தார் தோனி. தோனிக்காகவே கொல்கத்தாவால் அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் நரைன் பந்து வீச வேண்டும். முதல் பந்து சிங்கிள். அடுத்து பந்து நோ பால். தோனிக்கு ஃப்ரீ ஹிட். நரைனால் எப்படியும் தோனியின் விக்கெட்டை இந்த முறை எடுக்க முடியாது. ஒய்டாக வீச, அதை பவுண்டரிக்கு விளாசினார் தோனி. நரைன் பந்தில் தோனி அடிக்கும் முதல் பவுண்டரி. இந்த சீசனிலா என்கிறீர்களா? அதுதான் இல்லை. ஐபிஎல் வரலாற்றிலேயே நரைன் பந்தில் தோனி அடித்த முதல் பவுண்டரி இதுதான். நரைனின் 65 பந்துகளை இதற்கு முன்னர் சந்தித்திருக்கிறார் தோனி என்கிறது வரலாறு. இந்த ஓவரிலும் 17 ரன்கள்.

KKR v CSK
KKR v CSK

அடுத்த ப்ரசீத் கிருஷ்ணா ஓவரில் தோனி எங்கேயோ அடிக்க, பந்து எங்கேயோ போனது. என்னவா இருந்தா என்ன, 'அப்பா சம்பாதிச்ச காசுடா' என்பது போல் பவுண்டரியைக் கணக்கில் சேர்த்து கிளாப் தட்டியது சென்னை. அடுத்த பந்து தோனி ஸ்பெஷல். மிட் விக்கெட் திசையில் அட்டகாசமாக சிக்ஸர் விளாசினார். அடுத்த ரஸ்ஸல் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார் டுப்ளெஸ்ஸி. தோனியால் இந்தப் போட்டியிலும் ஷார்ட் பந்துகளைப் பெரிதாக அடிக்க முடியவில்லை. பந்தை மிடில் செய்யவே அவ்வளவு கடினப்பட்டார். அதையும் மீறித்தான் அந்த ஸ்பெஷல் சிக்ஸை அடித்தார். தோனிக்கு மீண்டும் ஒய்டு லைனில் பந்து வீசினார் ரஸல். இனி அணியை நம்பி பிரயோஜனம் இல்லை என்பது போல், ஒட்டுமொத்தமாய் அதில் பாய்ந்து அந்த மின்னல் வேக பந்தைப் பிடித்தார் கேப்டன் மோர்கன். இந்த ஆட்டத்தின் சிறப்பான கேட்சாக அது பின்னர் தேர்வு செய்யப்பட்டது.

ஆட்டத்தின் கடைசி கம்மின்ஸ் ஓவரில் 19 ரன்கள். அவர் நாட்டில் பைக்கில் டபுள் ஸ்டாண்டிங்கில் சென்றவரை கூட்டி வந்து பொளந்து எடுத்தது சென்னை. டுப்ளெஸ்ஸி மீண்டும் இரண்டு சிக்ஸ். கொஞ்சம் சுயநலத்தோடு ஆடியிருந்தால், டுப்ளெஸ்ஸி 100 ரன்கள் எடுத்திருக்கலாம். ஆனால், 19.5 பந்தில் அவர் சிங்கிள் எடுக்க, கடைசி பந்தை சிக்ஸருக்கு விளாசினார் ஜடேஜா. இந்த பந்தை ஜடேஜா சிக்ஸர் அடித்தார் என்பதைவிட , நிதிஷ் ரானா சிக்ஸுக்கு தள்ளிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். கொல்கத்தா உபரிகளாக 13 ரன்களும், மிஸ் ஃபீல்டில் ஒரு இருபது ரன்களும் சென்னைக்கு மொய் வைத்திருந்தனர். இறுதியில் இந்த ரன்கள்தான் கொல்கத்தாவுக்கு ஆப்பாக அமைந்தன. 95 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார் டுப்ளெஸ்ஸி.

KKR v CSK
KKR v CSK

220 ரன்கள் டார்கெட். கொல்கத்தா பேட்டிங்கை மூன்றாகப் பிரித்து விடலாம். சிங்கிள் டிஜிட்டில் ரன் எடுத்தவர்கள். ரன்னே எடுக்காதவர்கள். சென்னைக்கு மரண பயம் காட்டியவர்கள். கொல்கத்தாவின் வீழ்ச்சியை ஆரம்பித்து வைத்தவர் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் கில். கோல்டன் டக். நிதிஷ் ரானா முதல் மூன்று பந்துகளில் தடவி சிங்கிள் அடித்து நான் - ஸ்டிரைக்கர் எண்டுக்கு வர, சந்தித்த முதல் பந்தை பறக்கவிட்டார் கில். பால் எங்கடா என தேடினால், அது இங்கிடியிடம் சேஃபாக தஞ்சம் அடைந்தது. தீபக் சஹாருக்கு முதல் ஓவரே விக்கெட்.

அடுத்த சாம் கர்ரன் ஓவரில் நிதிஷ் ரானா இரண்டு பவுண்டரி. மூன்றாவது ஓவரை வீச வந்தார் தீபக் சஹார். எந்த மெனக்கெடலும் இல்லை வந்த பந்தை தோனியிடன் கேட்ச் கொடுத்து 9 ரன்களுக்கு நடையைக் கட்டினார் ரானா. தீபக் சஹாருக்கு இரண்டாவது விக்கெட். அடுத்த ஓவர் இங்கிடி. வெறும் ஐந்து ரன்கள்.

KKR v CSK
KKR v CSK

ஐந்தாவது ஓவர் மீண்டும் தீபக் என்னும் தெய்வத்துக்கு. இறங்கி வந்து பவுண்டரி அடித்தார் கேப்டன் மோர்கன். பின்னர், தீபக் விசீய அவுட் ஸ்விங்கரை தொட்டு, தோனியிடமே அவுட்டானார் மோர்கன். மோர்கன் அடித்தது 7 ரன்கள். டூ டவுனில் வந்தார் நரைன். 27 ரன்களுக்கு மூன்று விக்கெட் அவுட், நரைன் வந்த வேகத்தில் ஒரு பவுண்டரி. அடுத்த பந்தை அதே வேகத்தில் அடிக்க, அதே வேகத்தில் அதை பறந்து பிடித்து அவுட் செய்தார் ஜட்டு. ஐந்து ஓவர் இறுதியில் 31 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தத்தளித்தது கொல்கத்தா.

KKR v CSK
KKR v CSK

நான்கு விக்கெட்களுமே தீபக் சஹார். பவர் பிளேயில் இதற்கு மேல் விக்கெட் விழுந்தால், அது மரணத்தைக் குறிக்கும் என்றது ஸ்கோர்போர்டு. சரி, சமாளிப்போம் என்பது போல் உள்ளே நுழைந்தார் தினேஷ் கார்த்திக். இங்கிடி விசிய பந்தில் திரிபாதியும் அவுட். தோனி மூன்றாவது கேட்ச். ஐபிஎல் வரலாற்றில் தன் 150வது டிஸ்மிஸ்ஸல் சாதனை படைத்தார் தோனி. ஏழாவது வீரராக களமிறங்கினார் ரஸல்.

ரஸல் மேல் எல்லாம் இப்போது யாருக்கும் பெரிதாய் நம்பிக்கையில்லை. தினேஷ் கார்த்திக்கின் இந்த சீசன் பேட்டிங் பார்த்தவர்களுக்கு டிகே மீதும் நம்பிக்கையில்லை. கொல்கத்தாவின் வெற்றி வாய்ப்பு 5% என்றது இணைய கருத்துக்கணிப்புகள். எப்படியும் நெட் ரன்ரேட் ஒரு 4 வரும்ல என மனக் கணக்கு போட்டு வேறு வேலைகளில் மூழ்கினர் சென்னையன்ஸ். கொல்கத்தா பாய்ஸ் டிவியை அதற்கு முன்பே ஆஃப் செய்திருப்பார்கள்.

KKR v CSK
KKR v CSK

மங்காத்தாடா என ஆட்டம் மாறத்தொடங்கியது. இங்கிடியின் மீதமிருக்கும் நான்கு பந்துகளில் 14 ரன்களை விளாசினார் ரஸல். இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ். ஜட்டு வீசிய பந்தை, தினேஷ் கார்த்திக் தடுக்க, அது ஃப்ர்ஸ்ட் ஸ்லிப்புக்கும் தோனிக்கும் இடையே சென்று பவுண்டரிக்குச் சென்றது. ஜஸ்ட் மிஸ் ஆனார் டிகே.

ஆட்டத்தின் எட்டாவது ஓவர் தீபக் சஹாரின் கடைசி ஓவர். இன்னும் ஒரு விக்கெட் எடுத்தால் பர்ப்பிள் கேப். முதல் பந்தையே வெறித்தனமாக சிக்ஸுக்கு விளாசினார் ரஸல். கார்த்திக்கும் டீப் ஸ்குயர் பக்கம் ஒரு சிக்ஸ் விளாச, தீபக் சஹார் ஓவரிலேயே இரண்டு சிக்ஸர்கள். மீண்டும் ஜட்டு ஓவரில் கார்த்திக் ஒரு பவுண்டரி.

பத்தாவது ஓவரை வீச வந்தார் தாகூர். முதல் பந்து சிக்ஸ். அடிக்க முடியாத மாதிரி ஒய்டு லைனில் போடும் டெக்னிக்கை கையில் எடுத்தார் தாகூர். யார் செய்த பாவமோ, அது தொடர்ந்து ஒய்டாகவே சென்றது. மீண்டும் அப்படியே வீச, அதை நோக்கி பேட்டை ஓங்கி அடித்தார் ரஸல். ஒரு பவுண்டரி. அடுத்த பந்தை அப்பர் கட்டாக சிக்ஸுக்கு வீளாசினார். ஆட்டத்தின் கடைசி பந்திலும் டீப் விக்கெட் திசையில் சிக்ஸ். இந்த ஓவரில் மட்டும் 24 ரன்கள். டிவியை ஆஃப் செய்த கொல்கத்தா பாய்ஸ், மீண்டும் ஆன் செய்தனர். 'இன்னிக்காவது நிம்மதியாக தூங்கலாம்' என்றிருந்த சென்னை ரசிகர்கள் மீண்டும் ஹாட்ஸ்டார் முன் ஆஜரானார்கள். அடுத்த 60 பந்துகளில் 124 ரன்கள் அடிக்க வேண்டும். 'எதற்கும் தயார், ஜெய் சுல்தான்!' என்பதுபோல் ஆஜானுபாகுவாக நின்றுகொண்டிருந்தார் ரஸல்.

ஜட்டு ஓவரில் மீண்டும் பவுண்டரி அடித்தார் டிகே. ரஸஸுக்கு நோ பால் போட்டு ஃப்ரீ ஹிட் எல்லாம் போட்டார் ஜட்டூ. தன் அரை சதத்தை சிக்ஸர் மூலம் 21 பந்துகளில் கடந்து பீதியைக் கிளப்பிக்கொண்டிருந்தார் ரஸல். சென்ற போட்டியில் ஜட்டுவும், மொயின் அலியும் பேட்ஸ்மேன்களை தொடர்ந்து அவுட் ஆக்கிக்கொண்டிருந்தார்கள். தினேஷ் கார்த்திக் அதில்தான் தன் அனுபவத்தைக் காட்டினார். பந்து பிட்ச் ஆகும் போதே, அதற்கேற்ப முன்வந்து ஆடத் தொடங்கினார். இதுமாதிரியான சப்போர்ட்டிங் இன்னிங்ஸ் ஆடினாலே போதும் டிகே!

KKR v CSK
KKR v CSK

சுட்டிப் பையன் சாம் கர்ரனின் வஞ்சம் என்னும் சூழ்ச்சியில்தான் ரஸலின் விக்கெட் விழப்போகிறது என யாரும் யூகித்திருக்க மாட்டார்கள். லெக் சைடு ஒய்டாக பந்துவர, ஒய்டு என நினைத்து நகர்ந்து நின்று போலாம் ரைட் என போஸ் கொடுத்தார் ரஸல். ஆனால், பந்து லெக் ஸ்டம்பை பதம் பார்த்தது. விக்கெட் போனபின்பும், பெவிலியன் படிகளிலேயே அமர்ந்துவிட்டார் ரஸல். அப்படியானதொரு அடியை ரஸல் அடித்துவிட்டுத்தான் சென்றிருந்தார். சாம் கர்ரனின் அதே ஓவரில் டிகே லாங்கில் ஒரு சிக்ஸ், அடுத்து ஒரு பவுண்டரி என விளாசி கொல்கத்தாவின் கனவில் கொஞ்சம் உயிர் ஊட்டினார். அடுத்த ஜட்டு ஓவரில் வெறும் நான்கு ரன்கள்.

கம்மின்ஸ் தாகூர் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடிக்க, ஏதோ மிஸ்டேக் எனக் கடந்து சென்றது சென்னை. ஆனால், அது வெறும் ஆரம்பம் என பின்னர்தான் தெரிய வந்தது. அடுத்த இங்கிடி ஓவரில் டீப் விக்கெட் திசையில் ஒரு சிக்ஸ் அடித்தார் கம்மின்ஸ். தினேஷ் கார்த்திக்குக்கு மெதுவாக பந்து வீச, அதை மிஸ் செய்து எல்பிடபிள்யூ முறையில் 40 ரன்களுக்கு அவுட்டானார் தினேஷ் கார்த்திக்.

KKR v CSK
KKR v CSK

அடுத்து மீண்டும் சாம் கர்ரன் ஓவர். ஒரு சிறுவன் என்றும் பாராமல், அந்த ஓவரில் 30 ரன்கள் விளாசித்தள்ளினார் கம்மின்ஸ். ஹாட்ரிக் சிக்ஸர், பின் ஒரு பவுண்டரி, பின் மீண்டும் ஒரு சிக்ஸ். எந்தப் பந்தையும் யாராலும் பிடிக்கவில்லை. யார்றா நீ என இதை கிரெகிக்க முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தனர் சென்னை ரசிகர்கள். எல்லா அடியையும் வாங்கிவிட்டு இன்னும் பொறுமையாகக் காத்திருக்கும் புதுப்பேட்டை தனுஷ் போல் நின்றுகொண்டிருந்தார் கம்மின்ஸ். 24 பந்துகளில் 45 ரன்கள் என்னும் கணக்கு மட்டும் கம்மின்ஸிடம் இருந்தது. நான்கு ஓவர்களில் 58 ரன்கள் வாரிக்கொடுத்த கம்மின்ஸ் அதற்கு பிராயச்சித்தம் தேடிக்கொண்டிருந்தார்.

KKR v CSK
KKR v CSK

அடுத்த இங்கிடி ஓவரில் நாகர்கோட்டி செய்ய வேண்டியதெல்லாம் சிங்கிள் எடுப்பது. என்னமோ 10 விக்கெட் கைவசம் இருப்பது போல், தூக்கி அடித்து அவுட்டானார் நாகர்கோட்டி. இங்கிடி ஓவரில் வெறும் ஐந்து ரன்கள். 23 பந்துகளில் அரைசதம் கடந்தார் கம்மின்ஸ். அடுத்து தாகூர் ஓவர். மீண்டும் ஒய்டுகள் வீசத் தொடங்கினார். கடைசி பந்தில் சிங்கிள் எடுத்து அடுத்த ஓவர் பிடிக்க ஆயுத்தமானார் கம்மின்ஸ். சாம் கர்ரன் ஓவரில் மீண்டும் சிக்ஸர் மழைக்கான தூரலை விதைத்தார் கம்மின்ஸ். கம்மின்ஸ் அடுத்த பந்தை நேராக அடிக்க, அதில் ஒரு ரன் மட்டுமே அடிக்க முடிந்தது. ஆனாலும், கம்மின்ஸ் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதால், வருண் தன் விக்கெட்டை தியாகம் செய்தார். கொல்கத்தாவுக்கு ஒன்பது விக்கெட் ஓவர்.

கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை. கம்மின்ஸ் ஆடிய இந்தப் பந்தில் ப்ரசீத் கிருஷ்ணாவும் ரன் அவுட். 31 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்த ஒரு அணியால் இவ்வளவு அடிக்க முடியும் என்பதே டி20 போட்டியின் ஆகப்பெரும் சாதனைதான். கம்மின்ஸ் 66 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மூன்று போட்டிகளில் நல்ல ரன் ரேட்டுடன் தொடர்ந்து வென்ற சென்னை அணி, கோலியின் பெங்களூரை பின்னுக்குத்தள்ளிவிட்டு முதல் இடத்தைப் பிடித்தது. ஆட்டநாயகனாக டுப்ளெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டார்.