அகமதாபாத்தில் வைத்து, முன்னதாக நடைபெற்றிருந்த மோதலில் ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை ஆர்சிபி வீழ்த்தி இருந்தது. எனினும் அப்போதைய வெற்றியை விட, தற்போது கிட்டியிருக்கும் வெற்றி ஆர்சிபிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. காரணம், டேபிள் டாப்பராக வலம் வந்த அணியையே வீழ்த்தி இருப்பது ஆர்சிபிக்கு நாக்அவுட் சுற்றை அணுகுவதற்குத் தேவையான நம்பிக்கை உள்ளிட்ட அத்தனை இத்தியாதிகளையும் அளித்துள்ளது. இந்த வெற்றி விலாசத்திற்கு ஆர்சிபியைப் பார்சல் செய்தது, பட்டையைக் கிளப்பிய பரத்தான்.
நடப்பு சீசனின் இந்தியப் பதிப்பில், ஆர்சிபிக்கு இந்த ஒன்டவுன் பொசிஷனுக்கு வாஸ்து சரியில்லாமல் போக, பல வீரர்களை அந்த இடத்தில் இறக்கி, சோதனை ஓட்டம் என்னும் பெயரில், பல்லாங்குழி ஆடினார்கள். யாருமே பொருந்திவராமல் போக, இரண்டாவது சுற்றில் கேகேஆருக்கு எதிரான போட்டியில், ஒன்டவுனுக்கு பேட்ஸ்மேன் கம் விக்கெட் கீப்பரான கேஎஸ் பரத்தினை அறிமுகம் செய்திருந்தது ஆர்சிபி.

ஆந்திராவைச் சேர்ந்தவரான பரத், பல ஆண்டுகளாக, ரஞ்சித் தொடரில் ஆடி வருபவர்தான்; 2014/15 சீசனில், கோவாவுக்கு எதிரான போட்டியில், முச்சதத்தை பதிவேற்றி உள்ளுர்க் கிரிக்கெட்டைக் கலங்கடித்தவர்தான்; இந்திய வரலாற்றின் முதல் பிங்க் பால் டெஸ்டான, பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில், சப்ஸ்டிடீயூடாக ஹோல்டில் போடப்பட்டவர்தான்; ஜனவரி 2020-ல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், பண்டுக்கு கன்கசன் காயம் ஏற்பட, அவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டவர்தான்; 3900 ரன்களுக்கும் மேலாக ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டிலும், 1200 ரன்களுக்கும் மேலாக லிஸ்ட் ஏ போட்டிகளிலும் குவித்தவர்தான்; அக்ரஷிவ் அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடக் கூடியவர்தான். எனினும், டி20 போட்டிகளில், பரத்தின் ஆட்டம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லாமலே இருந்தது.
அவரது டி20 சராசரி, 14.74 மட்டுமே என்பதால், அவ்வப்போது ஆர்சிபி அறிமுகம் செய்து பின்னர் பெஞ்சில் அமர்த்தி அடுத்த சீசனில் வெளியே கடாசிவிடும் சில இந்திய முகங்களில் இன்னுமொன்று என்றே பரத்தும் கருதப்பட்டார். இரண்டாவது பாதியில் பிராக்டிஸ் மேட்ச்சில் சிறப்பாகச் செயல்பட்டதாலும் டி வில்லியர்ஸ் கீப்பிங் செய்யவில்லை என்பதால் அணிக்கு ஒரு கீப்பர் தேவைபட்டதாலும் பரத் உள்ளே கொண்டு வரப்பட்டார். அவரது அறிமுகப் போட்டியிலேயே ஆர்சிபியும் 92 ரன்களுக்கு ஆல்அவுட் ஆன சோகம் ஒருபுறமெனில், அப்போட்டியில் கேகேஆர் அணியின் வெங்கடேஷின் மீது மொத்த கவனமும் திரும்பியதும் பரத்தின் அறிமுகத்தில் பனிபடரச் செய்துவிட்டது.
வீரர்களின் பேட்டிங் பொஷிசனோடு கண்ணாம்பூச்சி ஆடிப் பழக்கப்பட்ட ஆர்சிபி, சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியிலேயே பரத்தை பின்வரிசை வீரராக்கியது. இறுதிவரை களமிறங்கும் வாய்ப்பு அவருக்கு வரவேயில்லை. அந்தப் போட்டியில் தோல்வி தலையில் தட்ட அதற்கடுத்த போட்டிகளில் ஏகமனதோடு மூன்றாவது வீரராக இறங்கும் வாய்ப்பு அவருக்கு அளிக்கப்பட்டது.
மும்பை மற்றும் ராஜஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும், முறையே 32 மற்றும் 44 ரன்களைச் சேர்த்து, சில கண்கவரும் சிக்ஸர்களை அடித்து சற்றே நம்பிக்கை அளிப்பவராக அவதாரம் எடுத்தார் பரத். ஆனாலும், தவறுகளைத் தவறாது செய்வது ஆர்சிபிக்குக் கைவந்த கலைதானே?! டேன் கிரிஸ்டியனுக்கு அந்த இடம் அடுத்த இரு போட்டிகளில் கொடுக்கப்பட்டு, பரத் ஃப்ளோட்டராகப் பந்தாடப்பட்டார். இது அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தடைபோட, விளைவு, அந்த இரு போட்டிகளிலுமே பேட்டிங்கில் பரத் பெரிய சம்பவம் எதையும் அரங்கேற்றவில்லை.
இந்தச் சமயத்தில்தான், தாமதமாகக் கிடைத்த ஞானோதயமாக டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான போட்டியில் பரத்தை மறுபடியும் ஒன்டவுனில் இறக்க ஆர்சிபி முடிவெடுத்தது. அதுதான் அவர்களது சமீபத்திய முடிவுகளில் சாமர்த்தியமான ஒன்று.

இந்தப் போட்டியின் முடிவு, எந்த மாற்றத்தையும் புள்ளிப் பட்டியலிலோ, ப்ளேஆஃப் நுழைவிலோ நிகழ்த்தாது என்பதால், ஏறக்குறைய டெட் ரப்பராக மாறி கவனத்தைக் கவராததாக முடித்திருக்கலாம். ஆனால், டாப் 3-ல் உள்ள இரண்டு அணிகளுக்கு இடையேயான போட்டி என்பதாலும், ப்ளே ஆஃப்பின் ஏதோ ஒரு நிலையில், இந்த இரு அணிகளும் மோதிக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளதாலும், அதற்குரிய ஒத்திகையாக இப்போட்டியும் முக்கியத்துவம் பெற்றது.
அதிசய நிகழ்வாக கோலி டாஸை வெல்லும் வைபவமும் நடந்தேறி, பந்தோடு ஆர்சிபி களமும் இறங்கியது. பவர்பிளே ஓவர்கள், போட்டி டெல்லிக்குச் சாதகமாக ஓட்டமெடுப்பதையே விளக்கிக் காட்டின. 10 ஓவர்கள் முடிவில்கூட, விக்கெட்டை விட்டுவிடாது 88 ரன்களோடு உறுதிபூண்டு நின்றது டெல்லி. முதல் அடியை ஹர்சல் அடித்தார். 'பர்ப்பிள் படேல்' என்னும் பெயருக்குத் தகுந்தாற் போல் தவானை வெளியேற்றி, தொடரில் தன்னுடைய 30-வது விக்கெட்டைப் பெற்றார் ஹர்சல். ஆர்சிபிக்கான முதல் பிரேக் த்ரூ, அந்தப் புள்ளியில்தான் கிடைத்தது.
அங்கிருந்து அதிவேக விக்கெட்டுகள், ஆர்சிபிக்குச் சாதகமாக போட்டியின் போக்கைக் கொண்டு போக, இறுதி பத்து ஓவர்களில் வெறும் 76 ரன்களை மட்டுமே சேர்த்து 165 என்பதனை டார்கெட் ஆக வைத்து முடித்தது டெல்லி. ப்ரித்வி ஷா மற்றும் தவான் இருவருமே 40-களில் ஆட்டமிழந்திருந்தனர். டெல்லியின் பேட்டிங் பலவீனம் பற்றி கடந்த சில போட்டிகளின் முடிவில் பேசப்பட்டு வந்த நிலையில் அதற்கு இன்னுமொரு சான்றானது இப்போட்டி.
166-தான் இலக்கு என்றாலும் ஆர்சிபி ரசிகர்களாக இருப்பவர்களால் ஆற அமர இருக்க முடியவில்லை. காரணம் முதல் 3 ஓவர்களுக்குளயே 2 விக்கெட் விழுந்து 6/2 என வந்து நின்ற ஸ்கோர் கார்டுதான். கோலி சதமடித்து இத்தனை இன்னிங்ஸுகள் ஆகிவிட்டன என்ற கணக்கெல்லாம், டிராக் செய்யக்கூட ஆளின்றி அதைக் கடந்து விட்டனர் ரசிகர்கள். இந்த சீசன், மறுபடியும் ப்ளே பொத்தானை அழுத்தித் தொடங்கப்பட்ட பிறகு இரண்டு அரைசதங்களை அடித்தவர், அதற்குப் பிந்தைய நான்கு போட்டிகளிலும் 25, 25, 5, 4 என்றே முடித்துள்ளார். இரட்டை இலக்கங்களிலிருந்து, ஒற்றை இலக்கங்களுக்கு அவர் இறங்கி அது தற்போது நியூ நார்மல் எனுமளவு ரசிகர்களுக்கு மாறிவிட்டது.

இரண்டு விக்கெட்டுகளோடு திணறிக் கொண்டிருந்த அணியை மேடேற்ற பரத்தோடு ஏபிடி இணைந்தார். அக்ஸர் படேலின் ஓவரில்தான் தனது அதிரடிக்கான அச்சாரத்தினை இடத் தொடங்கினார் பரத். அந்த ஓவரில் தான் சந்தித்த மூன்றே பந்துகளில் 11 ரன்களைச் சேர்த்துவிட்டார் பரத்.
எனினும், அதன்பின் இக்கூட்டணி கூடுதல் கவனத்தோடே ரன்களைச் சேர்த்தது. ஏபிடி ஆட்டமிழந்த போதுகூட 22 பந்துகளில் 22 ரன்கள் என ரன் எ பால் கணக்கில்தான் பரத் ரன்களைச் சேர்த்திருந்தார். பொதுவாக, இந்த சீசனில் சிஸ்கே கெய்க்வாட்டின் வெற்றிப்ப்யணத்துக்கான முக்கிய காரணம், தனது இன்னிங்ஸை அவர் கட்டமைக்கும் விதமும், அதற்கு அவர் எடுத்துக் கொள்ளும் கால அவகாசமும்தான். ஸ்பின்னர்களுக்காகக் காத்திருந்து, பின் அவர்களைச் சிறப்பாக கவனிப்பார். அதே பாணியைத்தான் பரத்தும் நேற்று பின்பற்றினார். களத்தில் செட்டில் ஆனபிறகு, அதிரடியாக ஆடத் தொடங்கினார். ஸ்பின்னர்களான அக்ஸர் படேல் மற்றும் அஷ்வினின் ஓவர்களை மட்டும் டார்கெட் செய்து, அதில் மட்டுமே 10 பந்துகளில் 26 ரன்களை பரத் சேர்த்திருந்தார்.
குறிப்பாக, 37 பந்துகளில் அரைசதத்தை எட்டிய பின் நேரம் நெருங்குவதை உணர்ந்த அவர், வேகமாக ரன்சேர்க்க அதிரடியைக் கையிலெடுத்தார். ஆங்கர் ரோலில் இருந்து ஹிட்டராக அரிதாரம் பூசத் தொடங்கி சிறந்த ஷாட்களை வகைக்கொன்றாக ஆடத் தொடங்கினார். ரபாடா பந்தில் ஓவர் த டீப் மிட் விக்கெட்டில் தூக்கி அவரடித்த சிக்ஸர் எல்லாம் டாப் கிளாஸ்! அது டெல்லியை கிட்டத்தட்ட தோல்வியை ஏற்றுக் கொள்ளும் நிலைவரை அழைத்துச் சென்றுவிட்டது.

ஆனாலும், ஐபிஎல்லின் சிறந்த பௌலிங் யூனிட்டுகளில் ஒன்றைக் கொண்டுள்ள டெல்லி, அவ்வளவு சுலபமாகப் பணிந்து விடுமா என்ன? கட்டுக்கோப்பாகப் பந்துவீசி விட்டதைப் பிடிக்கப் போராடியது. ஆனால், பரத் இம்மியளவு இடத்தைக்கூட தர தயாராக இல்லை. ஓவருக்கொரு பெரிய ஷாட், அவர்களது மேல் படிந்த அழுத்தத்தை கார் வைப்பர் போல க்ளீயர் செய்துகொண்டே இருந்தது. மறுபுறம், சத்தமின்றி இன்னொரு அரை சதம், மேக்ஸ்வெல்லின் வசம் சேர்ந்தது. கடைசியாக ஆடிய ஐந்து போட்டிகளில், நான்கு அரைசதங்களை அடித்துள்ளார் மேக்ஸ்வெல்.
19வது ஓவரை நார்க்கியா சிறப்பாக வீச, கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுக்கவேண்டும் என்றபோது, பவுண்டரியோடு தொடங்கி, மேக்ஸ்வெல் சுற்றும் காற்றில் சூழ்ந்த பதற்றத்தைச் சற்றே குறைத்தார். எனினும், அடுத்த நான்கு பந்துகளில் அவேஷ் கான் 3 யார்க்கர்களை வீச ஆர்சிபியால் ஐந்து ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதிபந்தில் 6 ரன் எடுக்க வேண்டும் என வந்து நின்றபோது, 6வது பந்தை அவேஷ் கான் வொய்ட்டாக வீச, அடுத்த பந்தில் பவுண்டரி அடித்தால் சூப்பர் ஒவர் என சூப்பர் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
"ஆன் ஸ்ட்ரைக்கில், மேக்ஸ்வெல் இருந்திருக்கலாமே?!" என்பதே சராசரி ரசிகனின் மனதுக்குள் கேட்கும் குரலாக இருந்தது. பரத் அதனை பவுண்டரியாக்கினால் கூடப் பரவாயில்லை என்ற எதிர்பார்ப்பு, தோல்வியை ஏற்றுக் கொள்வதற்கான ஆறுதல்களுக்கான ஆயத்தப்பணிகள், இதோடேதான் கடைசிப் பந்தை பரத்தோடும், சற்று பயத்தோடும் ரசிகர்கள் எதிர் கொண்டனர். சந்தித்த அந்தப் பந்து புல் டாஷ்ஷாக பரத்தை நோக்கிவர அது பரத்தால் தூக்கி அடிக்கப்பட்டு லாங் ஆனை நோக்கி உயரத்தில் பறந்தது. மிக மிக அதிக உயரத்தை அது எட்டியதால் அது கேட்ச் ஆகத்தான் முடியுமென பதைபதைப்போடு கேமராவைத் தொடர்ந்தன ரசிகர்களின் கண்கள். அவர்களை ஆனந்தக் கூத்தாட வைத்தது, பவுண்டரிக்கு அப்பால் தரையைத் தொட்ட பந்தும், தலைக்கு மேலே தூக்கப்பட்ட அம்பயரின் இரண்டு கைகளும். ஆர்சிபி, ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அட்டகாசமான வெற்றியைப் பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பரத், 78 ரன்களைச் சேர்த்திருந்தார்.

முதல் 17 பந்துகளுக்கு, 111 ஆக இருந்த அவரது ஸ்ட்ரைக்ரேட், அடுத்த 17 பந்துகளின் முடிவில், 130-களைத் தொட்டு, இறுதியில் 150-க்கு வந்து நின்றது. தனது ரன்னெடுக்கும் வேகத்தை அவர் முடுக்கிய விதமும், சூழலுக்குத் தகுந்தாற் போல் தன்னை அவர் தகவமைத்த விதமும்தான், அணியின் வெற்றியை உறுதி செய்தது.
ஒன்டவுனில் இறங்க ஒரு சிறந்த வீரரை ஒருவழியாக சீசனின் முடிவில் 14-வது போட்டியில் ஆர்சிபி கண்டறிந்துள்ளது. தற்சமயம், நாக் அவுட் போட்டிகளில் அவரை அதே ஒன்டவுன் இடத்திற்கு உரித்தாக்கி அவரை மெருகேற்றுவதை நிகழ் காலத்திலும், அவரை ஏலத்தில் தக்கவைப்பதற்கான வழியை எதிர்காலத்திலும் ஆர்சிபி செய்யவேண்டும்.
இதே அணுகுமுறையோடும் உத்வேகத்தோடும், கேகேஆரை ஆர்சிபி எலிமினேட்டரில் எதிர்கொண்டால், வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. டெல்லியோ, இந்தச் சின்னச் சறுக்கலை சாய்ஸில் விட்டு, சிஎஸ்கேவுடனான குவாலிஃபயருக்கு முழுமூச்சாகத் தயாராகலாம்.