Published:Updated:

CSK v SRH: என்னதான் ஆச்சு வார்னருக்கு... டூப்ளெஸ்ஸி, ருத்துராஜின் ருத்ரதாண்டவம், சிஎஸ்கே ஆன் டாப்!

கார்த்தி

"180 எதிர்பார்த்தோம். முடியவில்லை. டியூ வேறு வருகிறது. கடினம் என நினைக்கிறேன். ஆனால், எங்களிடம் ஆப்ஷன்கள் இருக்கின்றன" என்று 'வலி அது வேறு டிப்பார்ட்மெண்ட்' மோடுக்கு அப்போதே வந்திருந்தார் மணிஷ் பாண்டே.

தென் இந்தியாவில் ஒரு செட் ஆட்டங்களை முடித்துவிட்டு, வட இந்தியா பக்கம் ஒதுங்கியிருக்கிறது ஐபிஎல். சென்னை வென்றால் முதலிடம். ஐதராபாத் வென்றால், ஜாதகக் கட்டம் எட்டாம் இடத்திலிருந்து எந்தக் கட்டத்துக்கு வேண்டுமானாலும் வரலாம் என்கிற நிலை.

டாஸ் வென்றதும் பேட்டிங் என்றார் வார்னர். இதுவரைக்கும் ஃபர்ஸ்ட் பேட்டிங் பண்ணவே இல்லை, அதான் என்றார். அஞ்சுல நாலு மேட்ச் தோத்தும் இந்தக் குசும்புக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை என்றது மைண்டு வாய்ஸ். அபிஷேக் ஷர்மா, விராத் சிங் பதிலாக, மணிஷ் பாண்டேவையும், சந்தீப் ஷர்மாவையும் அணியில் சேர்த்தார். "அட, நாங்க சேஸிங் பண்ணலாம்னுதான் இருந்தோம்" என்றார் தோனி. தாஹீர், பிராவோவுக்குப் பதிலாக மொயின் அலியையும், இங்கிடியையும் சேர்த்திருந்தார்.

டெல்லி மைதானத்தில் 170, 180 ரன்கள் அடித்தாக வேண்டும். அதை நினைத்துத்தான் வார்னரும், பேர்ஸ்டோவும் உள்ளே நுழைந்தார்களா எனத் தெரியவில்லை. ரன்னே அடித்திருக்காத நிலையில், பேர்ஸ்டோ கொடுத்த கேட்ச்சை மிஸ் செய்தார் தோனி. சாம் கர்ரன் வீசிய ஷார்ட் பாலை, புல் ஷார்ட்டாக அடித்தார் பேர்ஸ்டோ. அது சஹாரின் கைகளில் சுலபமாக வந்து விழுந்தது. வார்னரின் நம்பிக்கை நாயகனான மணிஷ் பாண்டே ஒன் டவுன் இறங்கினார். சென்ற போட்டியிலேயே, அவரை அணியில் சேர்க்காதது பற்றிய அவரது மன வருத்ததைப் பதிவு செய்திருந்தார் வார்னர். வார்னர் இந்தப் போட்டியில் அதீத மனக்குழப்பத்தில் இருக்கிறாரா அல்லது என்ன ஆனது என்றே தெரியவில்லை. நிறைய எளிதான பவுண்டரி வாய்ப்புகளைக்கூட தவறவிட்டார். பவர்பிளே இறுதியில் ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்திருந்தது ஐதராபாத்.

CSK v SRH
CSK v SRH

சோபிக்காத மிடில் ஆர்டர், ஐந்தில் நான்கு தோல்வி, மணிஷ் பாண்டேவை அணியில் சேர்ப்பது, தன் பேட்டிங் பெர்பாமன்ஸ், நடராஜனின் காயம் என எல்லாம் சேர்த்து தன்னம்பிக்கை முற்றிலும் இழந்த ஒரு வார்னர்தான் நம் கண்ணில்பட்டார். அணியின் ஓனர்களுக்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்திருக்கிறேன் எனப் பல ஆண்டுகளுக்கு முன்னர் தாதா சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்தது. ஆனால், தன்னை எப்போதும் டிக் டாக் போன்றவற்றில் கூலாக வைத்துக்கொள்ளும் வார்னர் ஏன் இவ்வளவு சீரியஸாக இருக்கிறார் என்கிற கேள்வி எழாமல் இல்லை. தோனியின் கேப்டன்ஸியில் ஃபீல்டர்கள் சரியான இடத்தில்தான் நிற்பார்கள் என்றாலும், வார்னரால் ஒரு கேப் ஷாட் கூட ஆட முடியவில்லை. இங்கிடி வீசிய ஆட்டத்தின் பதினோறாவது ஓவரில் வார்னர் உச்சக்கட்ட கடுப்பில் காணப்பட்டார். அவரால் எந்தப் பந்தையும் பெரிதாக கனெக்ட் செய்ய முடியவில்லை. ஒன் டவுனாக வந்த மணிஷ் பாண்டே கூட 35 பந்தில் அரைசதம் கடந்துவிட்டார். அதே சமயம், வார்னரோ 44 பந்துகளில் 39 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

15வது ஓவரில் லாங்க் ஆஃப் திசையில் ஒரு சிக்ஸ் அடித்தார் வார்னர். 'அப்பாடா' என்றிருந்தது. ஐபிஎல் போட்டிகளில் வார்னரின் 200வது சிக்ஸ். டி20 போட்டிகளில் 10000 ரன்களைக் கடந்திருக்கிறார் வார்னர் என்றது இன்னொரு Stats. ஜடேஜாவின் ஓவரில் மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்து, ஐபிஎல் போட்டிகளில் 50வது அரைசதத்தை நிறைவு செய்தார் வார்னர். ஆனால், எந்தவித கொண்டாட்டமும் அதில் இல்லை. போட்டியை எதிரணிக்கு எளிமையாகக் கொடுத்துவிட்டோம் என்கிற எண்ணமே அவரிடத்தில் இருந்தது. 180 ரன்கள் அடிக்க வேண்டிய ஒரு போட்டியில் 150 ரன்கள் கடந்துவிட்டாலே பெரிது என்கிற நிலைக்கு வார்னர் ஐதராபாத்தை மாற்றியிருந்தார். இங்கிடி பந்துவீச்சில் அவுட்டானார்.

CSK v SRH
CSK v SRH

அதே ஓவரில் மணீஷும் அவுட். லாங் ஆன் திசையில் வந்த பந்தை, பறந்தே பிடித்தார் டூப்ளெஸ்ஸி. டூ டவுனில் களமிறங்கினார் வில்லியம்சன். வில்லியம்சன் ஃபர்ஸ்ட் பால் ஹிட்டர் அல்ல. ஆனால், இந்தப் போட்டியில் அவருக்கு வேறு வழியில்லை. ஷர்துல் பந்தில் மிட் விக்கெட் பவுண்டரி, டீப் எக்ஸ்டிரா கவரில் சிக்ஸ், அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி என 19வது ஓவரில் அணிக்கு 20 ரன்கள் சேர்த்தார்.

CSK v SRH
CSK v SRH

சாம் கர்ரன் வீசிய கடைசி ஓவரில் கடைசி இரண்டு பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு இமாலய சிக்ஸ். 'உங்களுக்கு சிக்ஸ் எல்லாம் அடிக்கத் தெரியும்னே இன்னிக்குத்தான் தெரியும்' என 'கன்னிராசி' கவுண்டமணி போல் ஷாக் ஆகி பார்த்தார்கள் சென்னை ரசிகர்கள். ஆம், அந்த இமாலய சிக்ஸர் அடித்தது வில்லியம்சன் அல்ல கேதார் ஜாதவ்! 172 ரன்கள் டார்கெட். சரி, 140க்கு இது மோசமில்லை என மனதை ஆறுதல் படுத்திக்கொண்டிருப்பார்கள் ஐதராபாத் ரசிகர்கள்.

"180 எதிர்பார்த்தோம். முடியவில்லை. டியூ வேறு வருகிறது. கடினம் என நினைக்கிறேன். ஆனால், எங்களிடம் ஆப்ஷன்கள் இருக்கின்றன" என்று 'வலி அது வேறு டிப்பார்ட்மெண்ட்' மோடுக்கு அப்போதே வந்திருந்தார் மணிஷ் பாண்டே.

CSK v SRH
CSK v SRH

வழக்கம் போல ஓப்பனிங் இறங்கினார்கள் ருத்துராஜும், டூப்ளெஸ்ஸியும். இதுவரையில் அடித்த மூன்று பவுண்டரிகளுமே டூப்ளெஸ்ஸிக்கு ஷார்ட் & ஒய்டாக வந்த பந்துகள்தான். மற்ற பந்துகளில் பெருமளவு டிபென்ஸ்தான் ஆடிக்கொண்டு இருந்தார். சித்தார்த் கவுல் அவரது முதல் ஓவரில் 'நான் மட்டும் என்ன தக்காளித் தொக்கா' என்பது போல் மீண்டும் ஷார்ட் & ஒய்டு லெந்த்தில் ஒரு பந்து வீசினார். அதுவும் பவுண்டரி. டெல்லிக்கு எதிரான முதல் போட்டியைத் தவிர, எல்லா போட்டியிலுமே டூப்ளெஸ்ஸி 30+ ரன்கள் அடித்திருக்கிறார். அயல்நாட்டு வீரர்களை சுழற்சி முறையில் அணியில் சேர்ப்பத்தைத் தவிர எந்த மாற்றமும் தேவையில்லாத அளவுக்கு முரட்டு ஃபார்மில் இருக்கிறது சென்னை என்பதையே இந்தப் போட்டியும் மெய்ப்பித்தது. பவர்பிளே இறுதியில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் எடுத்திருந்தது சென்னை.

சென்ற போட்டியில் சிக்ஸர் எல்லாம் அடித்து ஆச்சர்யப்படுத்திய ஜெகதீசா சுச்சீத் பந்துவீச வந்தார். 13 ரன்கள். இது ஆகறதுல்ல, என உள்ளே வந்தார் ரஷீத் கான். வெறும் நான்கு ரன்கள். அடுத்த சுச்சீத்தின் ஓவரிலும் ருத்துராஜின் ருத்ரதாண்டவம் தொடர்ந்தது. இந்த முறை 17 ரன்கள். சித்தார்த் கவுலின் பந்தில் இரண்டு ரன்கள் அடித்து, இந்தப் போட்டியிலும் அரைசதம் கடந்தார் டூப்ளெஸ்ஸி. சுச்சீத்தின் ஓவரில்தான் ரன்கள் கொட்டுகிறேதே, கேதார் ஜாதவுக்கோ, விஜய் ஷங்கருக்கோ கொடுக்கலாம் என்று கூட வார்னருக்குத் தோன்றவில்லை. 'சரி, இவங்க போட்டு மட்டும் ஐபிஎல் கோப்பையா வாங்கித்தர போறாங்க' என நினைத்திருக்கலாம் அவர். மீண்டும் ஜெகதீசா சுச்சீத்துக்கே வாய்ப்புக் கொடுத்தார்.

CSK v SRH
CSK v SRH

'ஹார்லிக்ஸா அப்படியே சாப்பிடுவேன்' என்பது போல் குஷியானார் ருத்துராஜ். ஹாட்ரிக் பவுண்டரி. ருத்துராஜ் முதல் கேதார் ஜாதவ் வரை அடித்து நொறுக்கிய மைதானத்தில்தான் வார்னர் தடவிக்கொண்டிருந்தாரா என்கிற கேள்வி மட்டும் மூளையைவிட்டு அகலவில்லை. சுச்சீத் பந்துகள்தான் டோட்டல் டேமேஜ் என்றால், அடுத்த ரஷீத்தின் ஓவரும் சேதாரத்தில் இருந்து தப்பவில்லை. மெனக்கெடிருந்தால் பேர்ஸ்டோ பிடித்திருக்கலாம் என்றுகூட சொல்லமுடியாத அளவுக்கு காலுக்குள் போய், பவுண்டரிக்கு போனது முதல் பந்து. அடுத்து வந்த கூக்ளியை மிட் விக்கெட் திசையில் பவுண்டரிக்கு விளாசினார் ருத்து. அடுத்தும் கூக்ளி, அடுத்தும் பவுண்டரி. என்னடா இது சூனாப்பானாவுக்கு வந்த சோதனை என்பது போல், அடுத்த பந்தில் போல்டானார் ருத்துராஜ். 44 பந்துகளில் 75 ரன்கள், அதில் 12 பவுண்டரிகள் என பக்காவாக வெற்றிக்கு வித்திட்டுவிட்டுச் சென்றார் ருத்ராஜ். ரஷீத் தன் அடுத்த ஓவரிலும் மொயின் அலியையும், டூப்ளெஸ்ஸியையும் காலி செய்தார். ஆனால், ஆட்டம் அதற்கு முன்பாகவே சென்னை பக்கமாய் மொத்தமாய் நகர்ந்துவிட்டது. 30 பந்துகளில் 22 ரன்கள் மட்டுமே தேவை!

'படையப்பா ரொம்ப லேட் பண்ணிடாத' என்பதாக உள்ளே வந்தனர் ரைனாவும், ஜட்டுவும். ரைனாவுக்கு ஷார்ட் பால் போட்டே ஒரு ஓவரை முடித்தார் கவுல். அடுத்த ஓவரில் கலீலும் ஷார்ட் பால் போட, அதை பவுண்டரிக்கு விளாசினார் ஜட்டு. இறுதியில் 19வது ஓவரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று மீண்டும் முதலிடத்துக்கு வந்தது சென்னை.

ஆட்டநாயகனாக ஐதராபாத்தை பவுண்டரிகளில் டீல் செய்த ருத்துராஜ் தேர்வானார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு