Published:Updated:

IPL 2020: கேப்டன்ஸியைத் துறப்பாரா தோனி... சென்னையின் அடுத்த கட்டம் என்ன?! #Dhoni #CSK

#Dhoni #CSK

பான்ட்டிங்கும், கம்பீரும் தொடரின் பாதியில் தொடர் தோல்விகளுக்கும், பேட்ஸ்மேனாக தங்களுடைய மோசமான பர்ஃபாமென்ஸுக்கும் பொறுப்பேற்று பாதியில் விலகியவர்கள். இருவரின் முடிவுகளுமே மிகுந்த பாராட்டுக்குள்ளானது.

IPL 2020: கேப்டன்ஸியைத் துறப்பாரா தோனி... சென்னையின் அடுத்த கட்டம் என்ன?! #Dhoni #CSK

பான்ட்டிங்கும், கம்பீரும் தொடரின் பாதியில் தொடர் தோல்விகளுக்கும், பேட்ஸ்மேனாக தங்களுடைய மோசமான பர்ஃபாமென்ஸுக்கும் பொறுப்பேற்று பாதியில் விலகியவர்கள். இருவரின் முடிவுகளுமே மிகுந்த பாராட்டுக்குள்ளானது.

Published:Updated:
#Dhoni #CSK
தோனியின் கிரிக்கெட் கரியர் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. சென்னையின் தொடர் தோல்விகள், கப்பலில் வகைதொகையில்லாமல் விழுந்திருக்கும் ஓட்டைகள், அதை அடைக்கமுடியாமல் திணறும் தடுமாற்றங்கள் என தோனியின் சிஎஸ்கே கரியர் இந்தாண்டு முதல்முறையாக பெரும்பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

தோனி எப்போதுமே அதிரடி முடிவுகளை எடுப்பவர். 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடந்துகொண்டிருந்தபோதே, மெல்போர்ன் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் முடிந்த சில மணிநேரங்களில் பிசிசிஐ அறிக்கை மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டதாக அறிவித்தவர் தோனி. அந்த ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் கேப்டன் ஆனார் விராட் கோலி. அதேபோல் 2017-ல் இங்கிலாந்து தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக ஒருநாள் மற்றும் டி20 கேப்டன்ஷிப் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும், விராட் கோலி தலைமையில் விளையாடுவதில் ஆர்வமாக இருப்பதாகவும் அறிவித்தார்.

தோனி - கோலி
தோனி - கோலி

இந்நிலையில் 2019 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டிக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் தோனி விளையாடவே இல்லை. 2020 டி20 உலகக்கோப்பையோடு ஓய்வுபெறுவார் என எல்லோரும் எதிர்பார்க்க, கொரோனாவால் டி20 உலகக்கோப்பையும் தள்ளிப்போக, 2020 ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாக இந்தியாவின் சுதந்திரநாளின் மாலையில் 'நான் ஓய்வுபெற்றுவிட்டதாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்' என ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸோடு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.

40 வயதான தோனி இந்த ஆண்டு சிஎஸ்கே-வின் வெற்றியோடு ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னையின் தொடர் தோல்விகள் தோனிக்கு மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுத்திருக்கிறது. வெற்றிபெற்றால் தன் அணி வீரர்களைப் பாராட்டுவதும், தோல்வியடைந்தால் அணியாக நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்றும் பேசுவதுதான் தோனியின் வழக்கம். ஆனால், முதல்முறையாக, ''ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு பிளானோடு வருகிறார்கள். நான் அவர்களை பிராசஸில் கவனம் செலுத்த சொல்கிறேன். ஆனால், அவர்கள் முடிந்துபோன ஆட்டத்தின் வெற்றி/தோல்விகளில் கவனத்தைச் செலுத்துகிறார்கள்'' என்றார். தோனியே விரக்தியான மனநிலைக்கு வந்துவிட்ட நிலையில் அடுத்து சென்னை அணியில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற சூழல்தான் இப்போது நிலவுகிறது.

#Dhoni
#Dhoni

சச்சின், பான்ட்டிங், கெளதம் கம்பீர் வழியில்?!

2008 முதல் 2012 வரை தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் மும்பையால் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை. சச்சின்தான் அப்போது கேப்டன். 2008-ல் காயம் காரணமாக சச்சின் விளையாடமுடியாதபோது ஹர்பஜன் சிங் சில போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தார். இந்நிலையில்தான் 2012 ஐபிஎல் சீசனின் முதல் போட்டியாக மும்பையும், சென்னையும் மோத இருந்தபோது திடீரென கேப்டன்ஸியில் இருந்து விலகுவதாக சச்சின் அறிவித்தார். அந்த சீசனில் ஹர்பஜன் சிங் கேப்டன் ஆனார். சச்சின் தொடர்ந்து அணியில் வீரராக செயல்பட்டார். 2013-ல் கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் வந்தார் ரிக்கி பான்ட்டிங். ஆனால், பான்ட்டிங்கால் ஒரு பேட்ஸ்மேனாக சிறப்பாக விளையாடமுடியவில்லை. முதல் ஐந்து போட்டிகளில் மொத்தமாக 52 ரன்கள் மட்டுமே அடித்தவர், அடுத்தப்போட்டியில் ஓப்பனிங் இடத்தை விட்டுக்கொடுத்தார். அதற்கு அடுத்தப்போட்டியில் கேப்டன்ஸியில் இருந்து விலகி, ரோஹித் ஷர்மாவை கேப்டனாக்கி, ப்ளேயிங் லெவனில் இல்லாத கேப்டனாக இருந்தார் பான்ட்டிங். அந்த சீசனில் 6 போட்டிகளோடு கேப்டன்ஸியில் இருந்து விலகிய பான்ட்டிங்கின் முடிவு பாராட்டப்பட்டது. இத்தனைக்கும் ரிக்கி பான்ட்டிங் தலைமையில் மூன்று போட்டிகளில் வெற்றியும், மூன்று போட்டிகளில் தோல்வியும்தான் பெற்றிருந்தது மும்பை. பான்ட்டிங் விலகிய அந்தாண்டு முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை ரோஹித் ஷர்மா தலைமையில் மும்பை வென்றது.

பான்ட்டிங்கைப்போலவே, 2018- ஐபிஎல்-ல் டெல்லிக்குத் தலைமைதாங்க கொல்கத்தாவில் இருந்து வந்தார் கெளதம் கம்பீர். ஆனால், முதல் 6 போட்டிகளில் கம்பீர் தலைமையிலான அணி 5 போட்டிகளில் தோல்வியடைந்தது. இதனால், 7வது போட்டியில் இருந்து ப்ளேயிங் லெவனைவிட்டு விலகி, கேப்டன்ஸியை ஷ்ரேயாஸ் ஐயரிடம் கொடுத்தார் கெளதம் கம்பீர்.

சச்சின் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே கேப்டன்ஸியில் இருந்து விலகியவர். ஆனால், பான்ட்டிங்கும், கம்பீரும் தொடரின் பாதியில் தொடர் தோல்விகளுக்கும், பேட்ஸ்மேனாக தங்களுடைய மோசமான பர்ஃபாமென்ஸுக்கும் பொறுப்பேற்று விலகியவர்கள். இருவரின் முடிவுகளுமே மிகுந்த பாராட்டுக்குள்ளானது. காரணம் ரோஹித் ஷர்மா, ஷ்ரேயாஸ் என அடுத்த தலைமுறை கேப்டன்களுக்கு வழிவிட்டு இருவரும் வழிகாட்டியாக அந்தந்த சீசன் முழுக்கவே இருந்தார்கள்.

Du Plessis, Watson
Du Plessis, Watson

தோனி என்ன செய்வார்?!

2008 முதல் தொடர்ந்து 13 ஆண்டுகளாக சென்னைக்கு கேப்டனாக இருந்து, இதுவரையிலான எல்லா ஐபிஎல் தொடரிலும் ப்ளே ஆஃபுக்குள் அழைத்துச்சென்று, மூன்று முறை கோப்பையைப் பெற்றுத்தந்த தோனி, இப்போது பான்ட்டிங், கம்பீர் எதிர்கொண்ட கடுமையான சூழலில்தான் வந்து நின்றிருக்கிறார். சென்னை அணி இதுவரை விளையாடியிருக்கும் 7 போட்டிகளில் 5-ல் தோல்வியடைந்திருக்கிறது. ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னமும் இருக்கிறது என்றாலும், தோனி சொன்னதுபோல சிஎஸ்கே-வின் கப்பலில் பல ஓட்டைகள் இருக்கின்றன. இதனை அணிக்குள் கேப்டனாக, பேட்ஸ்மேனாக இருந்துகொண்டே சரிசெய்வது என்பது தோனிக்குப் பெரும் சவால். ஏனென்றால் தோனியே ஃபார்முக்கு வரமுடியாமல் தவிக்கிறார். ஆனால், பான்ட்டிங், கம்பீர் போல கேப்டன்ஸியை இன்னொருவரிடம் கொடுத்துவிட்டு தோனி சர்ப்ரைஸ் கொடுப்பாரா என்பது சந்தேகம்தான். ஆனால், எப்போதுமே ஓய்வு அறிவிப்புகளை அதிரடியாக அறிவிக்கும் தோனி, இந்த முறையும் அப்படி செய்யலாம்.

கேப்டன் யார்?!

பான்ட்டிங்கோ, கம்பீரோ கேப்டன்ஸியை ஒப்படைக்க அணிக்குள் இளம் தலைவர்கள் இருந்தார்கள். ஆனால், சென்னையில் அப்படி கேப்டன்ஸியை ஒப்படைக்கும் அளவுக்கு யாரும் இல்லை. இருக்கும் ஒரே சாய்ஸ் டுப்ளெஸ்ஸி மட்டுமே. ஆனால், அவருமே தென்னாப்பிரிக்காவின் கேப்டன்ஸியை டி காக்கிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கி நிற்பவர். அவர், இவ்வளவு நெருக்கடியான சூழலில் கேப்டன்ஸியை ஏற்பாரா என்பதும் சந்தேகமே. தோனியே இப்படி ஒரு முடிவை எடுத்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அதற்கு ஒப்புக்கொள்ளுமா என்பது சந்தேகமே.

Dhoni
Dhoni

சென்னையின் பிரச்னைகளை சரிசெய்யமுடியுமா?!

12 ஆண்டுகளாக தோனி சொல்லிக்கொடுத்த ஃபார்முலாதான் இந்தாண்டு சென்னைக்குப் பிரச்னையே. பவர்ப்ளேவில் கொஞ்சம் அதிரடியாக ஆடிவிட்டு, மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை இழக்காமல் அசால்ட்டாக இருந்துவிட்டு, கடைசி ஆறு ஓவர்களில் 70-80 ரன்கள் அடித்து வெற்றிபெறும் ஃபார்முலாவைத்தான் இவ்வளவு ஆண்டுகளாக சென்னைக்கு சொல்லிக்கொடுத்திருந்தார் தோனி. ஆனால், இந்தாண்டு பேட்ஸ்மேன்கள் ஃபார்மில் இல்லாததால் மிடில் ஓவர்களில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் முன்பைவிடவும் மந்தமாக ஆட, டெத் ஓவர்களில் ஏகப்பட்ட பிரஷர். சூப்பர் ஃபினிஷரான தோனியும் ஃபார்மில் இல்லாததால் பழையபடி வெற்றிகளைப் பெறமுடியாமல் திணறுகிறது சென்னை. இதுவரை விளையாடியிருக்கும் 7 போட்டிகளிலும் சென்னை சேஸ் மட்டுமே செய்திருக்கிறது. இதில் தோல்வியடைந்த 5 போட்டிகளிலும் முதல் 10 ஓவர்களை மிக மிக மந்தமாக ஆடியிருக்கிறது சென்னை. மூன்று போட்டிகளில் முதல் 10 ஓவர்களில் சென்னையின் ஸ்கோர் 50 ரன்களைக்கூடத் தாண்டவில்லை. இதுதான் சென்னையின் தோல்விக்கான அடிப்படைக் காரணமே.

தோனி கற்றுக்கொடுத்த இந்த ஃபார்முலாவை தோனியே மாற்றவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அடுத்தப்போட்டியிலும் சென்னை தோல்வியடைந்தால், சிஎஸ்கே அணிக்குள் சில கடினமான முடிவுகள் எடுக்கப்படும் என்றே தெரிகிறது.