Published:Updated:

கப்பலில் விழுந்த ஓட்டைகள் அடைக்கப்படுமா... சென்னையின் ப்ளேயிங் லெவன் என்ன?! #SRHvCSK #Preview

#SRHvCSK
#SRHvCSK

வாட்சன், ருத்துராஜ், ராயுடு, டுப்ளெஸ்ஸிக்கு அடுத்து ஜெகதீசனை இறக்கலாம். இதனால் மிடில் ஓவர்களில் சென்னையின் ஸ்டெபிளிட்டி கூடும். தோனி ஆறாவது பேட்ஸ்மேனாகவும், சாம் கரண், சான்ட்னர் என ஆல்ரவுண்டர்கள் கடைசிகட்ட ஓவர்களில் இறங்குவதும் சென்னையின் பேட்டிங் பிரச்னைகளைத் தீர்க்க உதவும்.

2020 ஐபிஎல்-ன் முதல் சுற்றுப்போட்டிகளை தொடங்கிவைத்த சென்னை இன்று இரண்டாம் கட்ட லீக் போட்டிகளைத் தொடங்குகிறது. இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனின் சென்னை சூப்பர் கிங்ஸுடன் இன்று மோதப்போவது சன் டிவி கலாநிதிமாறனின் ஹைதரபாத் சன் ரைஸர்ஸ்.

ஏற்கெனவே நடந்த முதல் சுற்று லீக் போட்டியில் சென்னையை வீழ்த்திய ஹைதராபாத் இன்றும் அந்த ரிசல்ட்டையே ரிப்பீட் அடிக்கும் ஆர்வத்தில் இருக்கிறது. பல ஓட்டைகளுடன் மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் தோனி. இந்த ஐபிஎல் அவரது 13 ஆண்டுகால கேப்டன்ஸிக்கு விடப்பட்டிருக்கும் சவால் என்பதால் தோனியின் வியூகங்கள் இன்று வேறு மாதிரி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இடம் என்ன?!

IPL 2020 Points Table
IPL 2020 Points Table

ஹைதராபாத்தும், சென்னையும் புள்ளிகள் பட்டியலில் ஐந்து மற்றும் ஏழாவது இடத்தில் இருக்கின்றன. இன்று சென்னை மிக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் மட்டுமே ரன்ரேட் அடிப்படையால் ஹைதரபாத்தைப்போலவே 6 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறமுடியும். அதேபோல் ஹைதராபாத் வெற்றிபெற்றால் 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கும் கொல்கத்தாவை ரன்ரேட் அடிப்படையில் முந்தமுடியும்.

ஹைதராபாத் என்ன செய்யும்?!

வார்னர் - பேர்ஸ்ட்டோ எனும் உலகத்தரமான ஓப்பனர்களைக் கொண்டிருக்கிறது ஹைதராபாத். மணிஷ் பாண்டே 1 டவுனில் சொதப்பினாலும் 2 டவுனில் வந்து அணியின் சரிவைத் தடுக்க கேன் வில்லியம்சன் இருக்கிறார். இவர்கள் நால்வருமே சொதப்பினாலும் தடுத்து, காத்து நிற்க பிரியம் கார்க், அபிஷேக் ஷர்மா என இளம் வீரர்கள் இருக்கிறார்கள் என ஹைதராபாத், சென்னையுடன் ஒப்பிடும்போது மிகவும் பலம்வாய்ந்த அணியாக இருக்கிறது. ஆனால், ஹைதராபாத்தின் பிரச்னையாக இருப்பது ஸ்லோ ரன்ரேட். ஓப்பனிங்கில் பேர்ஸ்டோ அதிரடி ஆட்டம் ஆடினால் மட்டுமே ரன்ரேட் உயரும். வார்னர் தொடர்ந்து நல்ல ஃபார்மில் இருந்தாலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் முன்புபோல இல்லை. ஓப்பனிங்கில் மிக மெதுவான ஆட்டம் ஆடுகிறார் வார்னர். இந்த ஸ்லோ ரன் ரேட் பிரச்னை மட்டுமே ஹைதராபாத்தில் சரிசெய்யப்படவேண்டியது.

David Warner
David Warner

பெளலிங்கைப் பொருத்தவரை ரஷித் கான் பேராயுதமாக இருக்கிறார். விக்கெட்கள் எடுக்கிறாரோ இல்லையோ இவர் பெளலிங்கில் சிங்கிள் அடிக்கவே எதிரணி பேட்ஸ்மேன்கள் பயப்படும் அளவுக்கு இவரின் பெளலிங் தரம் மிகவும் உயர்ந்ததாக இருக்கிறது. நடராஜன் நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்பதோடு, கலீல் அஹமது, சந்தீப் ஷர்மா என இருவரும் பார்ட்னர்ஷிப்களை உடைக்க உதவுகிறார்கள் என்பதால் ஹைதராபாத்துக்கு பெளலிங்கில் பெரிய பிரச்னை இல்லை. முதலில் ஆடி சரியான ஸ்கோரை செட் செய்யவும், இரண்டாவதாக ஆடி சேஸ் செய்யவும் ஹைதராபாத் சிறந்த அணியாகவே இருப்பதால் சென்னைக்கு வெற்றி என்பது எளிதானதல்ல.

சென்னை என்ன செய்யும்?!

இன்று சென்னையில் முக்கியமான சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம். துபாய் பிட்ச் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் ஸ்லோ பெளலர்களுக்கு ஒத்துழைப்பதால் இன்று இம்ரான் தாஹிர் அல்லது மிட்செல் சான்ட்னரை சென்னையின் ப்ளேயிங் லெவனில் எதிர்பார்க்கலாம். இம்ரான் தாஹிர்- கார்ன் ஷர்மா என இரண்டு லெக் ஸ்பின்னர்கள் அணியில் இருப்பார்கள். சான்ட்னர் இடது கை ஸ்பின்னர் என்பதோடு, பேட்டிங்கிலும் அதிரடி காட்டக்கூடியவர் என்பதால் இன்றையப் போட்டியில் தாஹிரைவிடவும், சான்ட்னரை தோனி உள்ளே கொண்டுவரலாம்.

இம்ரான் தாஹிர் அல்லது சான்ட்னர் உள்ளேவருவதால் பிராவோ அல்லது சாம் கரணை வெளியே எடுக்கவேண்டியிருக்கும். இதில் பிராவோ வெளியேபோகவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார், சாம் கரண் வேகப்பந்து வீச்சாளர்களாகவும், இம்ரான்/சான்ட்னர், கார்ன் ஷர்மா ஸ்பின்னர்களாகவும் இருப்பார்கள்.
Du Plessis | Watson #CSK
Du Plessis | Watson #CSK

சென்னையின் முக்கிய கவலையாக இருப்பது பேட்டிங்தான். இதில் பெரிய பிரச்னையாக இருந்த கேதர் ஜாதவை வெளியே எடுத்து ஜெகதீசனை கடந்த மேட்ச்சிலேயே உள்ளே கொண்டுவந்துவிட்டார் தோனி. இப்போது சரிசெய்யப்படவேண்டிய இன்னொரு இடம் ரவீந்திர ஜடேஜாவுடையது. ஒருவேளை சான்ட்னர் அணிக்குள் இடம்பிடித்தால் ஜடேஜாவுக்கு பதிலாக ஒருமுழுமையான பேட்ஸ்மேனை தோனி தேர்வுசெய்யலாம். ருத்துராஜ் கெய்க்வாடுக்கு தோனி மீண்டும் ஒரு வாய்ப்பு தரலாம்.

வாட்சன் - டுப்ளெஸ்ஸி ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் சிறப்பாக இருந்தாலும், டுப்ளெஸ்ஸி பவர்ப்ளே ஓவர்களிலேயே வீழ்ந்தால் அது சென்னையின் சுமையை அதிகரிக்கிறது. அதனால் இன்றைய போட்டியில் வாட்சனோடு, ருத்துராஜ் கெய்க்வாடை ஓப்பனிங் இறக்கி, டுப்ளெஸ்ஸியை ஒன்டவுன் அல்லது 2 டவுனில் இறக்கலாம். இதனால் 6-14 ஓவர்களில் சென்னை சந்திக்கும் ஸ்லோ ரன் ரேட் பிரச்னையை ஓரளவுக்கு சரிசெய்ய முடியும்.
தோனி வியூகங்களில் தொடங்கி தொடர் தோல்விகளில் முடிந்த CSK-வின் முதல் சுற்று... நடந்தது என்ன?!

ஹைதராபாத்துக்கு எதிரான முதல் சுற்று லீக் போட்டியின் மிடில் ஓவர்களில் ரஷித் கான் மற்றும் அபிஷேக் ஷர்மாவின் ஸ்பின்னை சமாளிக்க தோனி, ஜடேஜா என இருவருமே தடுமாறினார்கள். அதனால் தோனி 14 அல்லது 15 ஓவருக்கு மேல் பேட்டிங் ஆடவருவதே சரியாக இருக்கும். ஜெகதீசன் சேப்பாக்கம் மைதானத்திலேயே விளையாடிப் பழக்கப்பட்டவர். ஸ்பின்னர்களை சரியாக சமாளித்து விளையாடக்கூடியவர். அதனால் வாட்சன், ருத்துராஜ், ராயுடு, டுப்ளெஸ்ஸிக்கு அடுத்து ஜெகதீசனை இறக்கலாம். இதனால் மிடில் ஓவர்களில் சென்னையின் ஸ்டெபிளிட்டி கூடும். தோனி ஆறாவது பேட்ஸ்மேனாகவும், சாம் கரண், சான்ட்னர் என ஆல்ரவுண்டர்கள் கடைசிகட்ட ஓவர்களில் இறங்குவதும் சென்னையின் பேட்டிங் பிரச்னைகளைத் தீர்க்க உதவும். ஒருவேளை பவர்ப்ளே ஓவர்களிலேயே அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தால் சாம் கரணை பின்ச் ஹிட்டராக டாப் ஆர்டரில் இறக்கலாம்.

Rashid Khan
Rashid Khan

கொல்கத்தாவுக்கு எதிரானப் போட்டியில் கோலியின் எக்ஸ்ட்ரா பெளலர் பிளான் சரியாக வொர்க் அவுட் ஆனது. ரஸலை சமாளிக்க இன்னொரு பெளலர் வேண்டுமென்பதால் குர்கீரத் சிங்கைத்தூக்கிவிட்டு கூடுதல் பெளலராக சிராஜைக் கொண்டுவந்தார். அதேபோல் சென்னையின் இந்த இரண்டாம் கட்டப்போட்டிகளில் பேட்டிங் பிரச்னையைத் தீர்க்க சென்னைக்கு கூடுதல் பேட்ஸ்மேன் தேவை. அதற்கு இளம் வீரர்கள் ருத்துராஜ், ஜெததீசன் என இருவரையுமே அணிக்குள் கொண்டுவருவது சென்னைக்கு வெற்றிகளைத்தர உதவும்.

துபாயில் டாஸ் வென்றால் தோனியே இன்று முதல் பேட்டிங்கைத்தான் இன்று தேர்வுசெய்வார் என எதிர்பார்க்கலாம். இதுவரை இந்த ஐபிஎல்-ல் சென்னை முதல் பேட்டிங் ஆடவில்லை என்பது குறிப்படத்தக்கது.
அடுத்த கட்டுரைக்கு