Published:Updated:

விக்கெட் சக்ரவர்த்தி... வருணின் மாயாஜாலத்தில் வீழ்ந்த டெல்லி! #KKRvDC

#KKRvDC

பேட்டிங்கில் ராணா கலக்க, சர்ப்ரைஸ் பேக்கேஜாக நரைன் சூடு பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்த, பவர் ப்ளேவில் கம்மின்ஸ் பரபரப்பை ஏற்படுத்த, இறுதியில் வருண் சக்கரவர்த்தி விக்கெட் சக்கரவர்த்தியாக மாறி விந்தைகள் நிகழ்த்த, போட்டியை அற்புதமாய் ஜெயித்துக் காட்டியிருக்கிறது கொல்கத்தா.

விக்கெட் சக்ரவர்த்தி... வருணின் மாயாஜாலத்தில் வீழ்ந்த டெல்லி! #KKRvDC

பேட்டிங்கில் ராணா கலக்க, சர்ப்ரைஸ் பேக்கேஜாக நரைன் சூடு பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்த, பவர் ப்ளேவில் கம்மின்ஸ் பரபரப்பை ஏற்படுத்த, இறுதியில் வருண் சக்கரவர்த்தி விக்கெட் சக்கரவர்த்தியாக மாறி விந்தைகள் நிகழ்த்த, போட்டியை அற்புதமாய் ஜெயித்துக் காட்டியிருக்கிறது கொல்கத்தா.

Published:Updated:
#KKRvDC
சிங்கம் மானைத் துரத்தும் போராட்டத்தில், சில சமயம் சிங்கம் தோற்று விடும். ஏனென்றால் சிங்கத்தின் ஓட்டம் உணவுக்காய், மானின் ஓட்டம் உயிருக்காய்! இதைத்தான் நினைவூட்டியது இன்றைய போட்டி. இந்தப் போட்டியில் ஜெயித்தால் முதலிடம் என்ற கனவுடன் டெல்லியும், தோற்றால் உதைத்துக் கீழே டாப் 4-ஐ விட்டு நழுவி விழுவோம் என்ற பயத்துடன் கொல்கத்தாவும் மோத இறுதியில் பயமே வென்றது... கொண்டாட்டமான வெற்றியோடு இடத்தை தக்கவைத்திருக்கிறது கொல்கத்தா.

டாஸ் வென்ற ஷ்ரேயாஸ் ஐயர், அபுதாபியில் கடைசியாக ஐந்து போட்டிகளில் சேஸிங் செய்த அணி வெற்றி வாகை சூடியதை மனதில் கொண்டோ என்னவோ, முதலில் பந்து வீசத் தீர்மானித்தார். டெல்லி அணியில் தொடர்ந்து ஓப்பனிங்கில் ஒற்றை இலக்கங்களுடன் சொதப்பிக் கொண்டிருந்த ப்ரித்வி ஷா ஓரங்கட்டப்பட்டு, ரஹானேவும், டேனியல் சாம்ஸுக்கு பதிலாக நார்க்கியாவும் உள்ளே வர, கொல்கத்தாவிலோ நாகர்கோட்டியுடன் அணிக்கு வலு சேரக்கும் வகையில் கரீபியன் சூறாவளி சுனில் நரைனும் அணியில் இணைந்தார்.

#KKRvDC
#KKRvDC

ராணாவுடன் ஓப்பனிங் இறங்கிய கில், வழக்கம் போல இரண்டு பந்துகளை பவுண்டரிகளுக்குத் துரத்தியதுடன் என் பணி முடிந்தது என்பது போல, நார்க்கியாவின் வேகத்தில் சிக்கி, இரண்டாவது ஓவரிலேயே நடையைக் கட்ட, திரிபாதி ஒன்டவுனுக்கு உள்ளே வந்தார். வழக்கம் போல டெல்லியின் மிரட்டும் பெளலிங் யூனிட் ரன் குவிப்புக்கு தடுப்பணை கட்ட, திணறிய திரிபாதியை "போதும் கிளம்புங்கள்!" என்பதைப் போல போல்ட் ஆக்கி, ஸ்டம்ப்புடன் கொல்கத்தாவின் கோட்டையையும் தகர்த்தார் நார்க்கியா. பவர் ப்ளேவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து, வெறும் 36 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது கொல்கத்தா. இதனைத் தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக்கும் ரபாடாவிடம் மூன்றே ரன்களில் சரணடைய, 42/3 என அணி திணறத் தொடங்கியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு பக்கமாய் ஆட்டம் போகிறதே என நினைக்கும் தருணத்திலேயே, உள்ளே வந்த நரைன் பாகுபலியாய் ராணாவுடன் கை கோத்து, ஓவருக்கொரு பவுண்டரியும் சிக்ஸருமாய் எல்லாத் திசையிலும் பந்துகளைச் சிதறச் செய்ய, டெல்லியின் பெளலர்களை பந்தாடியது இந்தக் கூட்டணி. 35 பந்துகளில் ராணா அரை சதம் கடக்க, வெறும் 24 பந்துகளில் நரைனும் அரைச்சதத்தைத் தொட, டெல்லிக்கு மரண பீதியைக் கிளப்பினர் இந்த இரட்டையர்கள். பார்ட்னர்ஷிப்பில், 100 ரன்களை 45 பந்துகளில் இவர்கள் கடக்க, அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

#KKRvDC
#KKRvDC

உடைக்க முடியாத இந்தக் கூட்டணியை, இறுதியில் 17-வது ஓவரில் ரபாடா, நரைனை ஆட்டமிழக்கச் செய்து உடைத்தார். ஆனால் அதற்குள் செய்ய வேண்டிய அத்தனையையும் சிறப்பாகச் செய்து விட்டார் நரைன். ரஸலின் இன்னொரு வெர்ஷனாக இருந்தது அவரது ஆட்டம். 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன், 32 பந்துகளில் 64 ரன்களைக் குவித்த நரைன், டெல்லிக்கு போதுமான அளவுக்கு பேரிடரை ஏற்படுத்தி விட்டார். டெல்லியுடன், இந்த சீசனில் நடந்த முந்தைய போட்டியில் ஃபினிஷிங்கில் மார்கனும் திரிபாதியும் நிகழ்த்திக் காட்டிய மாயா ஜாலத்தை, இன்று மிடில் ஆர்டரில் ஆடிய இந்தக் கூட்டணி மறுபடி ஒருமுறை நிகழ்த்தியது. அசாத்தியமாக ஆடி 115 ரன்களை வெறும் 56 பந்துகளில் எட்டினர்.

இதற்கடுத்து உள்ளே வந்த மார்கனும் ராணாவும் அதகளமாய் ஆடினர். 37 ரன்களை 18 பந்துகளில் விளாசிய இந்த அதிரடி மன்னர்கள், அணியின் ஸ்கோரை 194 க்கு எடுத்துச் சென்றனர். போட்டியின் கடைசி இரண்டு பந்துகளில் ராணாவும் மார்கனும் ஸ்டோய்னிஸின் பந்தில் ஆட்டமிழந்தாலும், அபுதாபியில் இரண்டாவது அதிகபட்சமான ஸ்கோரை டெல்லிக்கு இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா.

முதலில் அற்புதமாகப் பந்து வீசி, 7.2 ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டிய டெல்லி, தொடர்ந்து அந்த மொமன்டத்தைத் தக்க வைத்துக் கொள்ளத் தவறியது. ராணா - நரைன் கூட்டணியிடம் மொத்தமாய் அவர்கள் சரணடைந்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். 53 பந்துகளில் 81 ரன்களை விளாசிய ராணா, ஓப்பனர் எப்படி ஆட வேண்டும் என்பதற்கு இலக்கணம் எழுதிச் சென்று விட்டார். அஷ்வின், தேஷ்பாண்டே பந்துகள் மிகவும் அடி வாங்க, ஸ்டோய்னிஸையும், கொல்கத்தா சுற்றலில் விட, ரபாடாவால் கூட வழக்கம் போல ரணகளப்படுத்த முடியாமல் போக நார்க்கியாவுக்கு மட்டும்தான் கொஞ்சம் மட்டுப்பட்டார்கள் என்று சொல்ல வேண்டும். இதில் குறைவான ரன்களையே கொடுத்திருந்தும் அக்ஸர் பட்டேலை ஏன் ஒரு ஓவருக்கு மேல் பயன்படுத்தவில்லை என்பது ஷ்ரேயாஸுக்கே வெளிச்சம்.

அடுத்தடுத்த இரண்டு சதங்களை அடித்து மரண ஃபார்மில் இருக்கும் தவானும், இந்த சீசனில் இதற்கு முந்தைய கொல்கத்தாவுடனான போட்டியில், 38 பந்துகளில் 88 ரன்களைக் குவித்த ஷ்ரேயாஸும் டெல்லியில் இருந்து நம்பிக்கை அளித்தாலும், 195 என்பது கடினமான இலக்காகவே பார்க்கப்பட்டது.

#KKRvDC
#KKRvDC

போட்டியில் வென்று புள்ளிப் பட்டியலின் முதல் இடத்திற்கு முன்னேறும் முனைப்புடன் களமிறங்கிய டெல்லிக்கு, ஓப்பனிங் இடத்திற்கு வாஸ்து சரியில்லை போலும். பிரித்விக்குப் பதிலாக களமிறக்கப்பட்ட ரஹானே முதல் பந்திலேயே, கமின்சால் வீழ்த்தப்பட்டு, கோல்டன் டக் ஆக, டெல்லியின் கோட்டையில் முதல் கீறல் விழுந்தது. தொடரின் முதல் பாதியில் ரஹானேவுக்கான வாய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்பட, எழுந்த விமர்சனங்களுக்குப் பணிந்து டெல்லி ரஹானேக்கு வாய்ப்பளித்தது. ஆனால் அதைப் பயன்படுத்திக் கொள்ளாத ரஹானே நான்கு போட்டிகளில் வெறும் 25 ரன்களை மட்டுமே எடுத்து தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். வாழ்ந்து கெட்ட மனிதரான அவரது ஃபார்ம் மகா கவலைக்கிடமாக உள்ளது. ரஹானேவுக்கு அடுத்து உள்ளே வந்த ஷ்ரேயாஸ், தவானுடன் கை கோக்க, "இவர்கள் போதும், எட்ட முடியாத இலக்கு என்று எதுவுமே இல்லை!" என டெல்லி ரசிகர்கள் நிமிர்ந்து உட்கார்ந்த அடுத்த நிமிடமே, மூன்றாவது ஓவரில் மறுபடியும் கமின்சின் ஒரு அற்புதமான பந்தில் தவான் ஆட்டமிழந்து, ரசிகர்களின் இதயத்தில் இன்னொரு ஈட்டியைப் பாய்ச்சினார்.

அடுத்ததாய் உள்ளே வந்து ஷ்ரேயாஸிடம் கை கோத்தார் ரிஷப் பன்ட். பவர் ப்ளேயில் 36 ரன்களை மட்டுமே எடுத்து மிக மந்தமான தொடக்கத்தையே கொடுத்தது டெல்லி. ஆனாலும் ஷ்ரேயாஸ், பன்ட் கூட்டணி ராணா நரைன் ஆடியதைப் போல ஒரு இன்னிங்ஸை ஆட முயன்றது. மிக நிதானமாக ஆடிய இவர்கள் வாய்ப்புக் கிடைக்கையில் மோசமான பந்துகளை பவுண்டரி சிக்ஸர்களாய் மாற்றி பெளலர்களை தண்டித்தனர். இந்தக் கூட்டணியை வீழ்த்த மார்கன், வருண் சக்கரவர்த்தியைக் கொண்டு வர, வீசிய இரண்டாவது பந்திலேயே பன்டைப் பெட்டியைக் கட்டி அனுப்பி வைத்தார். எடுத்தால் 35 ரன்களுக்கு கீழ்தான் எடுப்பேன் என சத்தியப் பிரமாணம் செய்ததைப் போல இந்தப் போட்டியிலும் 33 பந்துகளில் 27 ரன்களை எடுத்திருந்தார் பன்ட்‌. 53 பந்துகளில் 63 ரன்களை இந்தக் கூட்டணி எடுத்திருந்தாலும், இன்னும் ஓட வேண்டிய தூரம் நிறையவே இருந்தது. கிட்டத்தட்ட ஓவருக்கு 13 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டிய நிலையில் ஹெட்மயர் உள்ளே வந்தார்.

#KKRvDC
#KKRvDC

பன்ட்டின் விக்கெட்டை வீழ்த்தி வர்ண ஜாலம் காட்டிய வருணின் இரண்டாவது ஓவர்தான் போட்டியை ஒட்டுமொத்தமாய் கொல்கத்தாவின் பக்கமாய் கொண்டு சென்றது. இந்த ஓவரின் முதல் பந்தை ஷ்ரேயாஸ் தூக்கி அடிக்க அதைப் பிடிக்க வருண் முயல அவருக்கு முன்பே பந்து தரையைத் தொட்டு அவரைக் கலங்கடித்தது‌. ஆனால் அடுத்த இரண்டு பந்திலும் ஹெட்மயரையும் அபாயகரமான ஷ்ரேயாஸையும் ஆட்டமிழக்கச் செய்த வருண் டெல்லியின் டாப் ஆஃப் த டேபிள் கனவை மொத்தமாய்த் தகர்த்தெறிந்தார்.

முற்றிலும் புதிய பேட்ஸ்மேன்களாய் உள்ளே இறங்கிய அக்ஸர் மற்றும் ஸ்டாய்னிஸால் ஏதாவது மேஜிக் நடந்து விடாதா எனப் பார்த்திருந்த ரசிகர்களின் கண்களைக் கலங்கச் செய்வதைப் போல, "வந்தா விக்கெட் எடுக்கத்தான் வருவேன்!" என்பதைப் போல் வருண் ஸ்டாய்னிஸின் விக்கெட்டையும் வீழ்த்த, ரபாடா உள்ளே வர, அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் வருணே அக்ஸரையும் அனுப்பி வைத்து டெல்லிக்கு மொத்தமாய் மூடுவிழா நடத்தி வைத்தார். பத்தொன்பதாம் ஓவரில் ரபாடாவை வீழ்த்திய கம்மின்ஸ் தனது மூன்றாவது விக்கெட்டையும் வீழ்த்த, கடைசி ஓவரில் ஃபெர்கூசனையும் வெறும் கையுடன் அனுப்பாமல் தன் விக்கெட்டைக் கொடுத்து அனுப்பினார் தேஷ்பாண்டே. கொஞ்சம் கூடப் போராடாமல், ஒரு சராசரி அணி போல 59 ரன்கள் வித்தியாசத்தில் மொத்தமாய் அடி பணிந்தது டெல்லி.

#KKRvDC
#KKRvDC

பேட்டிங்கில் ராணா கலக்க, சர்ப்ரைஸ் பேக்கேஜாக நரைன் சூடு பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்த, பவர் ப்ளேவில் கம்மின்ஸ் பரபரப்பை ஏற்படுத்த, இறுதியில் வருண் சக்கரவர்த்தி விக்கெட் சக்கரவர்த்தியாக மாறி விந்தைகள் நிகழ்த்த, போட்டியை அற்புதமாய் ஜெயித்துக் காட்டியிருக்கிறது கொல்கத்தா. ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அற்புதம் நிகழ்த்திய வருண் இந்த ஐபிஎல்-ன் முதல் ஐந்து விக்கெட் ஹாலை எடுத்ததுடன் 5/20 என பெஸ்ட் பெளலிங்கையும் பதிவு செய்துள்ளார்.

நல்ல கம்பேக்கே கொல்கத்தா கொடுத்துள்ள நிலையில், பெளலிங்கில் வலிமையானதாய்க் கருதப்படும் டெல்லியோ, அதில் சொதப்பியதுடன் பேட்டிங்கிலும் தங்களிடம் உள்ள ஓட்டைகளை அடையாளம் காட்டியுள்ளது. தவான், ஷ்ரேயாஸை மட்டுமே இந்த அணி நம்பியுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது‌. தொடர்ந்து இரண்டு தோல்விகளைப் பதிவு செய்துள்ள டெல்லி இதனிலிருந்து மீண்டு வராவிட்டால், ப்ளே ஆஃபிற்கே முன்னேறினாலும் இறுதிப் போட்டிக்குள் நுழைவது சிரமம்தான்.