Published:Updated:

வார்னர் & சஹா கூட்டணியின் அன்லிமிடெட் ஆந்திரா மீல்ஸ்... கொல்கத்தாவின் கனவு கலைந்தது எப்படி? #SRHvMI

டாஸை வென்றால் மேட்ச்சை வென்ற கதைதான் இன்றும். டியூ எனும் அற்புதமான ஆட்டக்காரன் இன்றும் சிறப்பாக அடித்து ஆடுவார் என்கிற மகிழ்ச்சியில் டாஸ் வென்றதும் மகிழ்ச்சியில் கொண்டாடித்தள்ளிவிட்டார் டேவிட் வார்னர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இரண்டு மாதகால 2020 ஐபிஎல் கிரிக்கெட்டின் லீக் சுற்றுகள் இன்றோடு முடிவடைந்திருக்கிறது. மும்பையும், டெல்லியும் முதல் ப்ளே ஆஃபில் விளையாடுவது உறுதி செய்யப்பட்ட நிலையில் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூருவுடன் மோதப்போவது யார் என்கிற கேள்வியோடு 56-வது ஐபிஎல் போட்டி இன்று ஷார்ஜாவில் நடந்தது. இன்றைய மும்பை வெர்ஸஸ் ஹைதராபாத் போட்டியில், ஹைதராபாத் வென்றால் ப்ளே ஆஃபுக்குத் தகுதிபெறுவார்கள், மும்பை வென்றால் கொல்கத்தா தகுதிபெறுவார்கள் என்கிற கணக்குகளோடு போட்டி தொடங்கியது.

டாஸை வென்றால் மேட்ச்சை வென்ற கதைதான் இன்றும். டியூ எனும் அற்புதமான ஆட்டக்காரன் இன்றும் சிறப்பாக அடித்து ஆடுவார் என்கிற மகிழ்ச்சியில் டாஸ் வென்றதும் மகிழ்ச்சியில் கொண்டாடித்தள்ளிவிட்டார் டேவிட் வார்னர். எந்த யோசனையும் இல்லாமல் ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். பிரியம் கார்குக்கு பதிலாக அபிஷேக் ஷர்மா உள்ளே வர, மும்பையில் மிக முக்கியமான மாற்றம். ஆமாம், வார்னருடன் டாஸ் போட வந்தவர் ரோஹித் ஷர்மா!

காயத்தைப் பற்றி எந்தத்தகவலும் சொல்லாமல் டாஸுக்கு ரோஹித் வந்ததைப் பார்த்து பிசிசிஐ-யே அதிர்ச்சியாகியிருக்கும். குணமடைந்துவிட்டீர்களா என கமன்டேட்டர் கேட்க, "அப்படித்தான் நினைக்கிறேன்" என கேஷுவலாக பதில் சொன்னார் ரோஹித். மும்பையில் பும்ரா, போல்ட், ஹர்திக் என மூவருக்கும் ஓய்வுகொடுக்கப்பட்டு, குல்கர்னி, கூல்ட்டர் நைல், பேட்டின்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.

#SRHvMI
#SRHvMI

யாருக்கோ மெசேஜ் சொல்ல களம் இறங்கிய ரோஹித் ஷர்மாவின் கதையை 3வது ஓவரிலேயே முடித்து வைத்தார் சந்தீப் ஷர்மா. 7 பந்துகளில் 4 ரன்களோடு பெவிலியன் போனார் ஹிட்மேன். டிகாக் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் என 13 பந்துகளில் 25 ரன்கள் அடித்துவிட்டு மீண்டும் சந்தீப்பின் பெளலிங்கிலேயே அவுட் ஆனார். அடுத்து வந்த இஷான் கிஷனும், சூர்யகுமார் யாதவும் பக்குவமான ஆட்டம் ஆட மும்பையின் ரன்கள் உயர ஆரம்பித்தது. சூர்யகுமார் 29 பந்துகளில் 36 ரன்கள் அடிக்க, இஷான் கிஷன் 30 பந்துகளில் 33 ரன்கள் அடித்து அவுட் ஆனார். பொலார்ட் வழக்கம்போல கடைசிகட்ட ஓவர்களில் ஸ்ட்ரெய்ட் சிக்ஸர்கள், பவுண்டரிகள் அடிக்க 150 ரன்களை நெருங்கியது மும்பை. பொலார்ட் 41 ரன்களில் ஜேசன் ஹோல்டரின் பெளலிங்கில் அவுட் ஆனார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

150 ரன் டார்கெட்டோடு வார்னரும், சாஹாவும் களமிறங்க, பனியும் கூட்டணிபோட மும்பையின் பெளலர்களும், ஃபீல்டர்களும் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தார்கள். பேட்ஸ்மேன்கள் தவறு செய்தால் ஓழிய விக்கெட்கள் பனியால் விழாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆனது. வார்னரும், சாஹாவுமே 150 ரன் டார்கெட்டை 18-வது ஓவரில் அடித்துமுடித்தார்கள்.

#SRHvMI
#SRHvMI

விருத்மான் சாஹா 45 பந்துகளில் 58 ரன்கள் அடிக்க, வார்னர் 58 பந்துகளில் 85 ரன்கள் அடித்து பவுண்டரியோடு மேட்ச்சை முடித்தார்.

நாளை மறுநாள் (05-11-2020) துபாயில் முதல் குவாலிஃபையரில் டெல்லியுடன் மோதயிருக்கிறது மும்பை. டாஸ் ராசி யாருக்கு இருக்கிறதோ அவர்கள் நேராக இறுதிப்போட்டிக்கு சென்றுவிடுவார்கள் என்றே எதிர்பார்க்கலாம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு