Published:Updated:

பேர்ஸ்ட்டோ, வார்னர், வில்லியம்சன் பக்குவம், கிங் கான் சூழல்... டெல்லியைத் தள்ளிய ஐதராபாத்! #DCvSRH

#DCvSRH
#DCvSRH ( twitter.com/IPL )

பேர்ஸ்டோவும், வார்னரும் ப்வர் ப்ளே ஓவர்களில் எந்தப் பதற்றமும் இல்லாமல் பக்குவமாக ஆடினார்கள். இந்த வலது, இடது பேட்ஸ்மேன் கூட்டணி இஷாந்த் ஷர்மா, ரபாடா, நார்ட்டே, ஸ்டாய்னிஸ் என பவர்ப்ளே பெளலர்களை அடித்தும், தடுத்தும் ஆடியது. மூச்சு வாங்க ஓடி, ஓடி சிங்கள், டபுள்களும் சேர்த்தது.

தொடர்ந்து இரண்டு தோல்விகளைப்பெற்று எட்டாவது இடத்துக்குப்போன ஐதராபாத், தோல்வியையே சந்திக்காத டெல்லியைத் தோற்கடித்து 2020 ஐபிஎல்-ன் முதல் வெற்றியைப் பெற்றிருக்கிறது. பேர்ஸ்டோ, வார்னர், கேன் வில்லியம்சன் என இங்கிலாந்து, ஆஸி, நியூஸி பேட்ஸ்மேன்கள் பேட்டிங் ஏரியாவைப் பலப்படுத்த, ரஷித் கானின் சுழலும், புவனேஷ்வரின் துல்லியமும் ஐதராபாத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்துவந்திருக்கிறது.

1. டாஸ் வென்றால் பெளலிங்கைத் தேர்ந்தெடுத்துவிடவேண்டும் என்கிற லாஜிக் இல்லா அதே ஃபார்முலாவைத்தான் ஷ்ரேயாஸ் ஐயரும் பயன்படுத்தினார். முதலில் பேட்டிங் செய்து 150 - 160 ரன்கள் அடித்து, அதை டிஃபெண்ட் செய்வதுதான் வார்னரின் பிளானாக இருந்ததால் ஷ்ரேயாஸ் ஐயரின் முடிவைக் கேட்டதும் உற்சாகமானார் வார்னர்.

#DCvSRH
#DCvSRH
twitter.com/IPL

2. டெல்லியில் ஒரே மாற்றமாக ஆவேஷ் கானுக்கு பதிலாக இஷாந்த் ஷர்மா ப்ளேயிங் லெவனுக்குள் இடம்பிடித்தார். ஐதராபாத் சன் ரைசர்ஸ் இரண்டு மாற்றங்களை செய்திருந்தது. ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது நபிக்கு பதிலாக கேன் வில்லியம்சனும், விருத்மான் சஹாவுக்கு பதிலாக காஷ்மீரைச் சேர்ந்த இளம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அப்துல் சமதும் அணிக்குள் இடம்பிடித்திருந்தார்கள்.

3. செம ஸிங்க்கில் இருக்கும் பேர்ஸ்டோவும், வார்னரும் ப்வர் ப்ளே ஓவர்களில் எந்தப் பதற்றமும் இல்லாமல் பக்குவமாக ஆடினார்கள். இந்த வலது, இடது பேட்ஸ்மேன் கூட்டணி இஷாந்த் ஷர்மா, ரபாடா, நார்ட்டே, ஸ்டாய்னிஸ் என பவர்ப்ளே பெளலர்களை அடித்தும், தடுத்தும் ஆடியது. மூச்சு வாங்க ஓடி, ஓடி சிங்கள், டபுள்களும் சேர்த்தது. பவர்ப்ளேவின் முடிவில் விக்கெட் இல்லாமல் 38 ரன்கள் அடித்திருந்தது. ஐதராபாத் அவசரப்படாமல், விக்கெட்டை இழக்காமல் ஆடவேண்டும் என்கிற முடிவில் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு பெளலர்களை மாற்றிக்கொண்டேயிருந்தார் ஷ்ரேயாஸ் ஐயர்.

4. மணிஷ் பாண்டேவைத் தவிர வார்னர், பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன் என மூவருமே அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். வார்னர் 33 பந்துகளில் 45 ரன்கள் அடிக்க, பேர்ஸ்ட்டோ 48 பந்துகளில் 53 ரன்கள் அடித்தார். இரண்டு போட்டிகளாக பென்ச்சில் உட்காரவைக்கப்பட்ட நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், டெல்லி பெளலர்களை பவுண்டரிகளால் டீல் செய்தார். 26 பந்துகளில் 41 ரன்கள் அடித்தார் வில்லியம்சன். காஷ்மீரின் இளம் பேட்ஸ்மேன் அப்துல் சமத், நார்ட்டேவின் 140 கிமீட்டர் வேகப்பந்துகளை சிக்ஸர், பவுண்டரி என அடித்து முதல் போட்டியிலேயே நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

5. ஐதராபாத் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 162 ரன்களை அடித்தது. கடந்த சில போட்டிகளாக 200 ரன்களுக்கு மேல் போய்க்கொண்டிருந்த ஐபிஎல் ஸ்கோர் கார்டோடு ஒப்பிடும்போது இது குறைவுதான் என்றாலும், டெல்லியை சமாளிக்கும் கேம் பிளான் இருந்ததால் தில்லாகவே பெளலிங்கைத் தொடங்கியது ஐதராபாத்.

Bhuvneshwar Kumar
Bhuvneshwar Kumar
twitter.com/IPL

6. டெல்லியின் அமுல் பேபி ப்ரித்வி ஷா கடந்த போட்டியைப் போலவே, ஐதராபாத்துக்கு எதிராகவும் ரன் வேட்டையைத் தொடங்க நினைக்க, புவனேஷ்வர் குமாரின் அவுட் ஸ்விங்கர், ப்ரித்வியின் பேட்டில் எட்ஜாகி பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆனது. முதல் ஓவரிலேயே ப்ரித்வியின் விக்கெட்டைத் தூக்கிய புவனேஷ்வர் குமாருக்கு இதுதான் இந்த ஐபிஎல்-ன் முதல் விக்கெட்.

7. தவான் தன்னுடைய வழக்கமான பேட்டிங்கை இன்னும் ஆடவே ஆரம்பிக்கவில்லை. தொடர்ந்து டிஃபென்ஸ் ஆடும் தவான், 31 பந்துகளில் 34 ரன்கள் அடித்து ரஷித் கானின் சுழலில் விழுந்தார். தவானுக்கு முன்பாகவே கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ரஷித் கானுக்கு தன்னுடைய விக்கெட்டை கொடுத்துவிட்டார். எப்போதுமே ஸ்பின்னுக்கு எதிராக சிறப்பாக ஆடும் பன்ட்டும், ஏனோ பொறுமையாகவே ஆடினார். அடித்து ஆடவேண்டிய கட்டம் வந்தபோது ரஷித் கானின் பெளலிங்கில் ஸ்வீப் சிக்ஸர் அடிக்கமுயன்று டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆனார்.

சூப்பர் ஓவரில் மும்பையை சம்பவம் செய்த சைனி யாரின் வளர்ப்பு தெரியுமா?! #NavdeepSaini #IPL

8. புவனேஷ்வர் குமார் 2 விக்கெட், ரஷித் கான் 3 விக்கெட் என இந்த இரண்டு சர்வதேச ஸ்டார்களுக்கு இடையே மிகச்சிறப்பாக பந்துவீசிய இன்னொரு பெளலர் தமிழ்நாட்டின் நடராஜன். இவரின் துல்லியமான யார்க்கர்கள் டெல்லி பேட்ஸ்மேன்களைத் திணறடித்தது. தனது ஸ்பெல்லின் கடைசிப்பந்தில் ஸ்டாய்னிஸின் விக்கெட்டை இன்னொரு அற்புதமான யார்க்கர் மூலம் எடுத்தார் நடராஜன்.

Rashid Khan, Kane Williamson, Bairstow
Rashid Khan, Kane Williamson, Bairstow
twitter.com/IPL

9. தனது பெளலர்களை மிகச்சிறப்பாகப் பயன்படுத்தினார் கேப்டன் வார்னே. அபிஷேக் ஷர்மா ஃபுல் டைம் ஸ்பின்னர் இல்லை. ஆனால், பேட்டிங்கில் கைகொடுக்க கேன் தேவைப்படுகிறார் என்பதால் நபியைத் தூக்கிவிட்டு, அவர் இடத்தில் அபிஷேக் ஷர்மாவைப் பந்துவீசவைத்தார் வார்னர். 4 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்த அபிஷேக் விக்கெட் எடுக்கவில்லையென்றாலும் முழு நம்பிக்கையோடு பந்துவீசினார். அடுத்தடுத்தப் போட்டிகளில் அபிஷேக் ஐதரபாத் அணிக்காக பேர் சொல்லும் பர்ஃபாமென்ஸ்களைத் தரக்கூடும். புவனேஷ்வர், கலீல், நடராஜன், ரஷித் என மெயின் பெளலர்கள் நால்வருமே விக்கெட்டுகளை எடுக்க 162 ரன்களை சிறப்பாக டிஃபெண்ட் செய்துவிட்டது ஐதராபாத்.

10. ஐபிஎல்-லில் ஐதராபாத்தின் பலமே குறைந்த ரன்களையும் டிஃபெண்ட் செய்வதுதான் என்பதை மீண்டும் ஓருமுறை நிரூபித்திருக்கிறார்கள். ஐதராபாத்தின் வெற்றி, புள்ளிகள் பட்டியலில் சென்னையை கட்டக் கடைசி இடத்துக்குக் கொண்டுபோயிருக்கிறது. களம் இனி களைகட்டும்!

அடுத்த கட்டுரைக்கு