Published:Updated:

வார்னர், பேர்ஸ்டோ, ரஷீத், நபி... இம்போர்ட்டட் வீரர்கள் மட்டுமே போதுமா?! LEAGUE லீக்ஸ் - 3 #SRH

கேப்டன், பயிற்சியாளர்கள் என மூவருமே ஆஸ்திரேலியர்களாக இருப்பது அணிக்கு பலம் சேர்க்கும் என நினைக்கிறது சன் ரைஸர்ஸ் நிர்வாகம். ஆனால், டேவிட் வார்னர் தற்போது நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளிலும் சிறப்பாக ஆடவில்லை.

சன்ரைசர்ஸ் - சிறு வரலாறு!

ஐபிஎல்-ன் முதல் ஐந்து ஆண்டுகள் டெக்கான் சார்ஜர்ஸாக இருந்த அணி, சன் டிவி கைப்பட்டு 2013-ல் சன்ரைஸர்ஸ் ஐதராபாத்தாக மாறியது. 2009-ல் டெக்கான் சார்ஜர்ஸாக கோப்பையை வென்றவர்கள், அதன்பிறகு பெரிதாக கவன்ம் ஈர்க்கவில்லை. ஆனால், 2016-ல் டேவிட் வார்னர் ஐதராபாத்தின் கேப்டன் ஆனதும் உண்மையிலேயே சூரியன் உதித்தது. வார்னரின் தலைமையில் முதல் ஆண்டே ஐபிஎல் சாம்பியன் ஆனது ஐதராபாத். அதில் இருந்து தொடர்ந்து கன்சிஸ்டென்ட்டாக பர்ஃபார்ம் செய்துகொண்டேயிருக்கிறது சன் ரைஸர்ஸ். தென்னாப்பிரிக்காவில் சேண்ட்பேப்பர் பிரச்னையில் சிக்கியதால் ஓராண்டு தடை விதிக்கப்பட்ட வார்னர் வெளியேபோனது சன் ரைஸர்ஸின் பலத்தைக் குறைத்தது.

David Warner
David Warner

இருந்தும் கேன் வில்லியம்சன் அணியை மீட்டு இறுதிப்போட்டி வரைக்கும் கொண்டுபோனார். இப்போது மீண்டும் கேன் வில்லியம்சனிடம் இருந்து வார்னரிடம் கேப்டன்ஸியைக் கொடுத்திருக்கிறது ஐதரபாத் நிர்வாகம்.

ரஸல், நரேன், மார்கன் என மேட்ச் வின்னர்கள் அதிகம்... ஆனால், தினேஷ் கார்த்திக்?! LEAGUE லீக்ஸ் -2 #KKR
2016-ல் வென்ற அணி கடந்த மூன்றாண்டுகளாக கோப்பையை மிஸ் செய்ய என்ன காரணம், பிரச்னை எங்கே?!

பிரச்னை ஒன்று - தனித்தனி மேட்ச் வின்னர்ஸ்!

ஐதராபாத் அணியில் ஏகப்பட்ட மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். கடந்த ஐபிஎல்-லில்அதிக ரன் அடித்தவர் டேவிட் வார்னர். டாப் ஆர்டரில் கேன் வில்லியம்சன், துல்லியமான வேகப்பந்து வீச்சுக்கு புவனேஷ்வர் குமார், ஸ்பின்னுக்கு ரஷீத்கான், ஆல் ரவுண்டராக முகமது நபி என ஏகப்பட்ட மேட்ச் வின்னர்கள். ஆனால், இவர்கள் யாரும் தொடர்ந்து தரமான பர்ஃபாமென்ஸை எல்லா மேட்சிலும் கொடுப்பதில்லை என்பதுதான் முதல் பிரச்னை. வார்னர் முதலிலேயே அவுட் ஆகிவிட்டால், கேன் வில்லியம்சனை மட்டுமே நம்பியிருக்கும் ஐதராபாத். இவர்கள் இருவரும் சொதப்பினால் அணியைக் காப்பாற்ற யாரும் இல்லை.

பிரச்னை இரண்டு - புவனேஷ்வர் குமாரின் ஃபார்ம்

புவனேஷ்குமாரின் ஃபார்ம் சன்ரைசர்ஸின் பெரும் கவலை. 2017 வரை இருந்த புவனேஷ்குமார் வேறு இப்போதில்லை. தொடர் காயங்களால் அவதிப்பட்டு வரும் புவியால், 2016, 17-ல் கொடுத்த பர்ஃபாமென்ஸ்களை, கடந்த இரண்டு வருடங்களாகக் கொடுக்க முடியவில்லை. 2016-ல் 23 விக்கெட்டுகள், 2017-ல் 26 விக்கெட்டுகள் எடுத்து தனி ஆளாக சன் ரைஸர்ஸை தூக்கி சுமந்தவர் இப்போது சிரமப்படுகிறார். டெத் ஓவர்களில் இவரின் நக்குல் பந்துகள், பேட்ஸ்மேன்களை திணறடித்தது வரலாறு. புவனேஷ்குமார் பழைய பன்னீர்செல்வமாக வந்தால்தான் சன் ரைஸர்ஸ் தப்பிக்கும்.

Kane Williamson, VVS Laxman
Kane Williamson, VVS Laxman
Sunrisers Hyderabad

பிரச்னை மூன்று - உள்ளூர் வீரர்கள் இல்லை!

ஐபிஎல்-ல் வெளிநாட்டு வீரர்களையே அதிகம் நம்பியிருக்கும் அணிகளில் முக்கியமானது சன்ரைஸர்ஸ். டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், பேர்ஸ்டோ, ரஷீத் கான், முகமது நபி என பவர் பர்ஃபாமெர்ஸ் எல்லோருமே இம்போர்ட்டட். உள்ளூர் பேட்ஸ்மேன்களில் மணீஷ் பாண்டே மட்டுமே ஓரளவு விளையாடிய அனுபவம் உள்ளவர். விஜய் ஷங்கர் இன்னும் ஐபிஎல் போட்டிகளில் பெரிய இன்னிங்ஸ்கள் ஆடவில்லை என்பதோடு அவர் பவர் ஹிட்டரும் இல்லை. உள்ளூர் வீரர்களை வளர்த்தெடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது சன் ரைஸர்ஸ். அதேசமயம் ஏகப்பட்ட உள்ளூர் பெளலர்களை வைத்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இந்த ஆண்டு பெரிய பர்ஃபாமென்ஸைக் கொடுத்தே ஆகவேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2020 சவால்கள்! புது பயிற்சியாளர்... பழைய கேப்டன்!

டாம் மூடியைவிட்டுவிட்டு ட்ரெவர் பெய்லியுடன் புது கூட்டணி போட்டிருக்கிறது சன்ரைஸர்ஸ். துணை பயிற்சியாளராக பிராட் ஹேடின் சேர்க்கப்பட்டுள்ளார். கேப்டன், பயிற்சியாளர்கள் என மூவருமே ஆஸ்திரேலியர்களாக இருப்பது அணிக்கு பலம் சேர்க்கும் என நினைக்கிறது சன் ரைஸர்ஸ் நிர்வாகம். ஆனால், டேவிட் வார்னர் தற்போது நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளிலும் சிறப்பாக ஆடவில்லை. ஒருபோட்டியில் அரை சதம் அடித்திருந்தாலும் அது வார்னரின் ஆட்டமாக இல்லை. இந்திய மைதானங்கள் போல அரபு பிட்ச்கள் பேட்டிங் விக்கெட்டுகள் இல்லை என்பதும் வார்னருக்கு பெரும் சவாலாக இருக்கும். வார்னரும், பேர்ஸ்டோவும் ஓப்பனிங் இறங்கி முதல் 8-10 ஓவர்களுக்கு சிறப்பான இன்னிங்ஸ் ஆடினால் மட்டுமே ஐதரபாத்தால் சேஸ் செய்யவோம், பெரிய ஸ்கோரை செட் செய்யவோ முடியும்.

Sunrisers Hyderabad
Sunrisers Hyderabad

ப்ளேயிங் லெவன் என்ன?!

வார்னர், பேர்ஸ்டோ என இருவரும் இறங்கினால், கேன் வில்லியம்சனை அணிக்குள் கொண்டுவருவதில் சிக்கல் வரும். ஏனென்றால் ரஷீத் கான், முகமது நபி என இரண்டு ஸ்பின்னர்களும் ஐதராபாத்துக்கு மிக மிக அவசியம். அதுவும் முகமது நபி நல்ல ஃபார்மில் இருப்பதோடு, அரபு பிட்ச்களுக்கு அவர் மிகச்சரியான தேர்வு என்பதால் அவரை பென்ச்சில் உட்காரவைக்க முடியாது. அதனால் கேன் வில்லியம்சன் இல்லையென்றால் நம்பர் 3 பொசிஷனில் யாரைக்கொண்டுவருவது என்பது வார்னருக்கு சவாலாக இருக்கும். விராட் சிங் எனும் 22 வயது இளம் வீரரை இந்த ஆண்டு ஏலத்தில் எடுத்திருக்கிறார்கள். அநேகமாக அவரை வைத்துத்தான் ஐபிஎல்-ன் முதல் கட்டப்போட்டிகளை ஐதராபாத் விளையாடும் என எதிர்பார்க்கலாம். மிடில் ஆர்டரில் மணீஷ் பாண்டே, விஜய் ஷங்கரைக் கொண்டுதான் ஐதராபாத் சமாளிக்கவேண்டும்.

பெளலிங்கைப் பொருத்தவரை இன்னொரு ஸ்பின்னராக சபாஷ் நதீம் ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்படலாம். புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், பசில் தம்பி, கலீல் அஹமது என இந்த நால்வரில் இருவர் அணிக்குள் இருப்பார்கள். ப்ளேயிங் லெவன் குழப்பங்களை எப்படி சமாளிக்கப்போகிறார் என்பதுதான் வார்னருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சவால்.

2020-யில் ஈ சாலா கப் நம்தாகுமா?! - கோலிக்கும், பெங்களூருக்கும் என்னதான் பிரச்னை? LEAGUE லீக்ஸ் - 1
முழுக்க முழுக்க வார்னர், பேர்ஸ்டோ பேட்டிங் பவரையும், ரஷீத் கான், முகமது நபி ஸ்பின் பலத்தையும் கொண்டுமட்டுமே களம் இறங்குகிறது ஐதராபாத். டாப் ஆர்டர் சொதப்பினால் சன்ரைஸர்ஸ் மீள்வது சிரமம். சவால்களை சமாளிக்க வார்னரும் ஃபார்முக்கு வரவேண்டும். ஐதராபாத் எதுவும் ஆச்சர்யங்கள் தருமா என பொருத்திருந்து பார்ப்போம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு