Published:Updated:

ஐதராபாத்தை வீழ்த்திய சஹால் சுழல்... கோலி மட்டுமா... ஆர்சிபியன்ஸ் செம ஹேப்பி! #SRHvsRCB Review

கார்த்தி
கோலி | ஆர்சிபி
கோலி | ஆர்சிபி

2016-ம் ஆண்டுக்குப் பிறகு, மீண்டும் அதே சன்ரைசர்ஸை வென்று, முதல் போட்டியை வெற்றிகரமாக ஆரம்பித்திருக்கிறது ஆர்சிபி.

கோலி என்னும் சாம்பியன் எத்தனை தொடர்களை வென்றாலும், ஐபிஎல் என்று வந்துவிட்டால், அதிர்ஷ்டம் பல மைல் தூரம் தள்ளிச் சென்றுவிடும். அதுதான் கோலியின் ஆர்சிபிக்கும், ஐபிஎல்லுக்குமான தொடர்பு.

2016-ம் ஆண்டு சன்ரைசர்ஸை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதற்குப் பிறகு, ஆர்சிபி முதல் போட்டி என்றாலே அடி வாங்கும். அதுவும் கடந்த ஆண்டு, பஞ்சாபை வெல்வதற்கு முன்னர், ஆறு போட்டிகளில் தோற்றிருந்தது. சரி, பழைய பெருமைகளை எதற்குப் பேசிகொண்டு... ஒரு வழியாய் ஆர்சிபி முதல் போட்டியிலேயே இந்த முறை வென்றுவிட்டது. பெங்களூருவில் பட்டாஸ் வெடித்தெல்லாம் இந்த வெற்றியைக் கொண்டாடுகிறார்களாம்.

#SRHvsRCB
#SRHvsRCB

சன்ரைசர்ஸின் ஆகப்பெறும் பலமே, அதன் ஹோம்கிரவுண்டு அட்வான்டேஜ்தான். குறைவான ரன்களுக்கு எதிரணியை கட்டுப்படுத்திவிட்டு, அதை சேஸ் செய்து வெல்வார்கள். இந்த முறை அதற்கு வாய்ப்பே இல்லாமல் போனது. அதேபோல், அனுபவமில்லாத சன்ரைஸர்ஸின் மிடில் ஆர்டர் பேட்டிங் லைன் அப் தேவைப்பட்ட நேரத்தில் சோபிக்காமல் சோதனை செய்தது. நேற்றும் அதுதான் நடந்தது. 164 ரன்கள் சேஸிங் என்னும் போது, 2 விக்கெட் இழப்புக்கு 121-ல் இருந்து, 153-க்கு ஆல் அவுட் ஆவதெல்லாம் அப்படியானதொரு நிலைமைதான். பேர்ஸ்டோவின் விக்கெட் விழுந்த அடுத்த 27 பந்துகளில் 7 விக்கெட்டுகளை வெறும் 32 ரன்களுக்கு கொடுத்து ஆல் அவுட் நிலைக்குத் தள்ளப்பட்டது.

தோக்குறமோ, ஜெயிக்கறமோ, டாஸ் வென்றால் பெளலிங் தேர்வு செய்ய வேண்டும் என்பதால், வார்னரும் அதையே தேர்வு செய்தார். விடுடா விடுடா சூனாப்பானா என லைட்டாக ரிலாக்ஸ் மோடுக்கு வந்தனர் ஆர்சிபியன்ஸ்.

சன்ரைசர்ஸ் பிளேயேங் XI: வார்னர், பேர்ஸ்டோ, மணிஷ் பாண்டே, விஜய் ஷங்கர், மிட்ச் மார்ஷ், பிரியம் கார்க், அபிஷேக் ஷர்மா, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் ஷர்மா, நட்ராஜன்
ராயல் சாலஞ்சர்ஸ் பிளேயிங் XI: ஆரோன் ஃபிஞ்ச், தேவ்தத் படிக்கல், கோலி, ஏ பி டி, ஜோஷ் ஃபிலிப், ஷிவம் டூபே, வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ், சஹால், சைனி, டேல் ஸ்டெய்ன்.
#RRvsCSK தோனியின் சர்ப்ரைஸ் என்ன... ஸ்மித்தை டிரீம் லெவனில் எடுக்கலாமா?! #Preview #Prediction

கர்நாடகவின் தேவ்தத் படிக்கல்லும், ஃபிஞ்சும் ஓப்பனிங் இறங்கினார்கள். புவியின் முதல் ஓவரில் அடக்கிவாசித்த படிக்கல், சந்தீப் ஷர்மாவின் ஓவரில் அடித்து ஆட ஆரம்பித்தார். தன் முதல் இரண்டு ஓவர்களில் வெறும் 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார் புவி. தமிழக வீரரான நட்ராஜன் நான்காவது ஓவரை வீசினார். எப்படிப் போட்டாலும் அடிக்கறாண்டா என்பது போல் அடிக்க ஆரம்பித்தார் படிக்கல். மூன்று பவுண்டரிகளுடன் படிக்கல் அந்த ஓவரில் 12 ரன்கள். படிக்கல் ஒருபக்கம் பவுண்டரிகளாக அடிக்க, ஃபிஞ்ச் அடக்கியே வாசித்தார்.

மிட்ச் மார்ஷ், மூன்று பந்துகளில் காயம் காரணமாக வெளியேற, ஃபின்சுக்காவே அளவெடுத்து செய்தது பொல், ஓவரை முடித்து வைக்க வந்தார் விஜய் ஷங்கர். வந்த முதல் பாலே, நோ பால். ஃப்ரீஹிட்டில் ஜாலியாக ஒரு சிக்ஸ் அடித்தார் ஃபின்ச். ஆனால், அந்த ஃப்ரீ ஹிட்டையும், நோ பாலாக வீசினார். மொத்தம் அந்த ஓவரில் 16 ரன்கள் எடுத்தது ஆர்சிபி.

Dev Padikkal | #SRHvsRCB
Dev Padikkal | #SRHvsRCB

ரன்கள் சீரான இடைவெளியில் வந்துகொண்டிருக்க, ரஷீத்தை இறக்கினார் வார்னர். ஆனால், ரஷீத்தின் மாயாஜால பந்துவீச்சையெல்லாம் டீகோடு செய்துவிட்டனர் பேட்ஸ்மேன்கள். தடுமாறிக்கொண்டிருந்த ஃபின்ச் பவுண்டரி, சிக்ஸர் என ரஷீத் பந்தில் அடித்து நொறுக்கினார். மறுபக்கம், பவுண்டரிகளாக அடித்துக்கொண்டிருந்த படிக்கல், அபிஷேக் ஷர்மாவின் பந்துவீச்சில் அரைசதம் கடந்தார். பத்து ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 86 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட் இழப்பின்றி ஆர்சிபி என்பது கலக்கிட்ட காபி என்கிற கவிதை என்பதுபோல், ஆர்சிபி ரசிகர்களுக்கே அத்தனை ஆச்சர்யமாக இருந்தது.

விஜய் ஷங்கர் பந்துவீச்சில் அடித்து ஆட ஆசைப்பட்டு, பேட்டை வேகமாக சுழற்ற, இன்சைட் எட்ஜ் முறையில் அவுட்டானார் படிக்கல். டி20, லிஸ்ட் ஏ, ஃபர்ஸ்ட் கிளாஸ், ஐபிஎல் எனதான் விளையாடிய அனைத்து அறிமுக போட்டியிலும் அரைசதம் அடித்து சாதனை செய்திருக்கிறார் படிக்கல். அடிக்கல், படிக்கல் என யாரேனும் காமெடி செய்தால், அடுத்த போட்டியில் அவர்களை அடித்து நொறுக்குவதாக, பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் படிக்கல்.

#SRHvsRCB
#SRHvsRCB

ஒன் டவுன் ஏ பிடி. அப்ப கோலிதான கூட இருக்கணும் என தன்னைத்தானே டிஸ்மேன்ட்டில் செய்துகொண்டார் ஃபார்முக்கு வராத ஃபின்ச். 15 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்திருந்தது ஆர்சிபி. அடுத்து ரன்ரேட்டை உயர்த்த வேண்டும் என்பதால், நட்ராஜின் பந்தில் லாங் ஆனில், ரஷீத்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டானர் கோலி. சந்தீப் ஷர்மாவின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து, அரைசதத்தை நெருங்கினார் ஏபிடி. 20 ஓவர் முடிவில் 163 ரன்கள் எடுத்திருந்தது ஆர்சிபி.

வார்னரும், பேர்ஸ்டோவும் இறங்க முதல் ஓவரை வீச வந்தார் ஸ்டெய்ன். ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு விக் வைத்தது போல் காட்சியளித்தார் ஸ்டெய்ன். ஆர்சிபிக்கு எதிரான போட்டிகளில், ஆறு அரைசதம், ஒரு சதம் அடித்து குஷி மோடில்தான் உள்ளே நுழைந்திருப்பார் வார்னர். உமேஷ் யாதவின் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் எனப் பறக்கவிட்டார். எப்படியும் இன்னிக்கு ஒரு 50 என ஜாலியாக நின்றிருந்தார் வார்னர். ஆனால், பேர்ஸ்டோ அடித்த அடுத்த பந்து பெளலரின் கையில்பட்டு நேராக வந்து வார்னரின் ஸ்டம்பை பதம் பார்த்தது.

#Dhoni கேப்டனாக பெற்ற 100 வெற்றிகளில்  மறக்கமுடியாத மூன்று போட்டிகள்! #CSK

ரன் அவுட் முறையில் சிங்கிள் டிஜிட் ஸ்கோரில் வெளியேறினார் வார்னர். பவர் பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது சன்ரைசர்ஸ். உமேஷ் யாதவின் பந்துவீச்சில் பேர்ஸ்டோ, மனிஷ் பாண்டே இருவருமே அடித்து ஆடினார்கள். சஹாலின் பந்துவீச்சில் பாண்டே விக்கெட்டை இழக்க, இந்தியாவின் அண்டர் 19 கேப்டனான பிரியம் கார்க் அடுத்து வந்தார். எந்த அனுபவமும் இல்லாத மிடில் ஆர்டர் இங்குதான் சன்ரைசர்ஸுக்கு சோதனையாக அமைந்தது.

தேவைப்பட்ட ரன்ரேட் ஏறிக்கொண்டிருக்க, பேர்ஸ்டோ ரிஸ்க் எடுக்க ஆரம்பித்தார். ஏற்கனவே, இருமுறை லக்கில் தப்பித்த பேர்ஸ்டோ, சஹாலின் பந்தை, லெக் சைடில் விளாச முயல, ஸ்டம்ப் தெறித்தது. அடுத்து வந்த விஜய் ஷங்கரை கூக்ளியில் டக்அவுட் ஆக்கினார் சஹால். 3 ஓவர்களில் 30 ரன்கள் தேவை, விக்கெட்டுகளும் இல்லை என்னும்போது, அபிஷேக் ஷர்மாவும், ரஷித் கானும் நேருக்கு நேர் மோதி, அபிஷேக் ஷர்மாவின் விக்கெட்டை ரன் அவுட்டாக்கினர். தட்டுத் தடுமாறி வந்த மிட்ச் மார்ஷ், வந்த வேகத்தில் லாங் ஆனில் நின்றிருந்த கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 'வர்றான், அவுட் ஆகுறான், போறான்' எனும் பாலிசை கையிலெடுத்து ஆடிக்கொண்டிருந்தது சன்ரைசர்ஸ். கடைசி ஓவர் ஸ்டெய்ன். சந்தீப் ஷர்மாவும், நட்ராஜும் பேட்டிங். சந்தீப் ஷர்மாவின் ஆசைக்கு அவுட்சைட் எட்ஜில் ஒரு பவுண்டரி பறந்தது. அடுத்த பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆல் அவுட்டானது சன்ரைசர்ஸ்.

#SRHvsRCB
#SRHvsRCB
அதிக ரன்ரேட் அடிப்படையில், புள்ளிப்பட்டியலில் சென்னையை பின்னுக்குத் தள்ளி, முதலிடத்துக்கு வந்துள்ளது ராயல் சாலஞ்சர்ஸ். 2016-ம் ஆண்டுக்குப் பிறகு, மீண்டும் அதே சன்ரைசர்ஸை வென்று, முதல் போட்டியை வெற்றிகரமாக ஆரம்பித்திருக்கிறது ஆர்சிபி. வாழ்த்துகள் பாய்ஸ்!
அடுத்த கட்டுரைக்கு