Published:Updated:

மயாங்க் மயக்கும் இன்னிங்ஸ், ராகுல் கிளாசிக்ஸ்; ஆனாலும் பஞ்சாபைப் பிரித்துமேய்ந்த ராஜஸ்தான்! #RRvKXIP

ராஜஸ்தான், ஸ்டீவ் ஸ்மித்
ராஜஸ்தான், ஸ்டீவ் ஸ்மித் ( BCCI )

ரன் மழையால் நனைந்திருக்கிறது ஷார்ஜா. பஞ்சாபின் 224 ரன் டார்கெட்டை அசால்ட்டாக அடித்துமுடித்திருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். எப்படி நடந்தது இந்த ரன் சேஸ்?! #RRvKXIP

1. வழக்கம்போல டாஸ் வென்றதும் ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார் ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். ஷார்ஜாவில் ஸ்ட்ரெய்ட் பவுண்டரி லைன் சிறியது என்பதால் டார்கெட் எவ்வளவாக இருந்தாலும் அடித்துமுடிக்கலாம் என்பது ஸ்டீவின் நம்பிக்கை. இந்த முறை பேட்டிங்கில் கைகொடுக்க பட்லரும் இருக்கிறார் என்பதால கெத்தாக இருந்தார் ஸ்டீவ் மித்.

2. பஞ்சாபின் கர்நாடக ஜோடி செம ஃபார்மில் அதிரடி ரன் வேட்டை நடத்தியது. ஒருபக்கம் மயாங்க் அகர்வால் ராஜஸ்தான் பெளலர்களை பாரபட்சம் பார்க்காமல் போட்டு வெளுக்க, இன்னொருபக்கம் கிளாஸிக்கல் ஷாட்கள் ஆடி பவுண்டரிகளை அள்ளிக்கொண்டிருந்தார் கே.எல்.ராகுல்.

#RRvKXIP
#RRvKXIP

3. முதல் மேட்ச்சில் டெல்லிக்கு எதிராக 89 ரன்கள் அடித்து சென்சுரியை தவறவிட்ட மயாங்க் அகர்வால் ராஜஸ்தானுக்கு எதிராக சதம் அடித்தார். 26 பந்துகளில் 50 ரன்களை அடித்திருந்தவர், அடுத்த 50 ரன்களை அடிக்க 19 பந்துகள்தான் எடுத்துக்கொண்டார். மொத்தம் 45 பந்துகளில் 100 ரன்கள். 9 பவுண்டரி 7 சிக்ஸர். முதல் விக்கெட்டே விழாதுபோல என ராஜஸ்தான் ரசிகர்கள் நம்பிக்கை இழந்திருந்த நேரத்தில் அகர்வாலின் விக்கெட்டை எடுத்தார் டாம் கரண்.

4. மீண்டும் ஒருமுறை கேப்டன்ஸ் இன்னிங்ஸ் ஆடிய கே.எல்.ராகுல் 54 பந்துகளில் 69 ரன்கள் அடித்து அவுட் ஆனார். பூரானும், மேக்ஸ்வெல்லும் கடைசி கட்ட கேமியோ சிக்ஸர்கள் அடிக்க 20 ஓவர்களில் 223 ரன்கள் அடித்தது பஞ்சாப்.

5. பஞ்சாபின் டார்கெட்டை ராஜஸ்தான் அடிக்குமா? ஷமி, காட்ரெல், பிஷ்னாய், முருகன் அஷ்வின், நீஷம், மேக்ஸ்வெல் எனப் பெரும் பெளலிங் படையையே வைத்திருக்கும் பஞ்சாப் ராஜஸ்தானை முடக்குமா என்கிற சஸ்பென்ஸுகளுக்கு இடையே தொடங்கியது ராஜஸ்தானின் சேஸிங்.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

6. பட்லரோடு ஓப்பனிங் இறங்கியவர் ஸ்டீவ் ஸ்மித். பட்லர் கொளுத்துவார் என எதிர்பார்க்க, மூன்றாவது ஓவரிலேயே காட்ரெல் பெளலிங்கில் விக்கெட்டைக்கொடுத்தார் பட்லர். ஆனால், ஸ்மித்தும், சாம்சனும் நின்று அடி பஞ்சாபுக்கு கிலி கிளப்பினார்கள். 8-வது ஓவரின் முடிவில் அணியின் ஸ்கோர் 100-ஐத் தொடும்போது கேப்டன் ஸ்மித் அவுட். இந்த 100 ரன்களில் 50 ரன்களை அடித்திருந்தார் ஸ்மித்.

7. சாம்சனின் சூப்பர் ஃபார்ம் பஞ்சாபுக்கு எதிராகவும் தொடர்ந்தது. சென்னைக்கு எதிராக எப்படி ஸ்ட்ரெய்ட் பவுண்டரி லைனைக் குறிவைத்து அடித்தாரோ அதேபோல் பஞ்சாபையும் அடித்து நொறுக்கினார். 7 சிக்ஸர், 4 பவுண்டரிகள் உள்பட 42 பந்துகளில் 85 ரன்கள் அடித்தார் சாம்சன்.

முப்போக சாவடி வாங்கிய ஐதராபாத்... கொல்கத்தாவுக்காக சொல்லி அடித்த `கில்'லு! #KKRvSRH

8. சாம்சன் அவுட் ஆகும்போது ராஜஸ்தானின் ஸ்கோர் 161. 23 பந்துகளில் 63 ரன்கள் அடிக்கவேண்டும். அப்போது நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கியிருந்த திவேதியா 21 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே அடித்து திணறிக்கொண்டிருந்தார். ராஜஸ்தானின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியான நேரத்தில்தான் திவேதியா கையில் காட்ரெல் சிக்கினார். 18வது ஓவரை காட்ரெல் போடவரும்போது ராஜஸ்தான் 18 பந்துகளில் 51 ரன்கள் அடிக்கவேண்டும். திவேதியா ஆன் ஸ்ட்ரைக்.

திவேதியா
திவேதியா

9. காட்ரெலின் 18வது ஓவரில் மட்டும் முதல் நான்கு பந்துகளில் 4 சிக்ஸர்கள் அடித்தார் திவேதியா. 5வது பந்து டாட் பால். ஆனால், 6வது பந்து மீண்டும் சிக்ஸர். ஒரே ஓவரில் 30 ரன்களை சேர்த்துவிட்டார் திவேதியா. ஷமியின் அடுத்த ஓவரில் உத்தப்பா அவுட். ஆனால், ராஜஸ்தான் கலங்கவில்லை. ஜோஃப்ரா ஆர்ச்சரை இறக்கிவிட்டது. சென்னைக்கு எதிராக ஆடியதுபோன்ற அதே ஆட்டம். அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை ஆர்ச்சர் அடிக்க, இதே ஓவரின் 5வது பந்தை மீண்டும் சிக்ஸருக்கு விளாசினார் திவேதியா. கடைசி 11 பந்துகளில் மட்டும் 49 ரன்களை அடித்துவிட்டது ராஜஸ்தான். சிக்ஸரோடு 31 பந்துகளில் 53 ரன்கள் அடித்து அசத்திய திவேதியா ஷமியின் கடைசிப்பந்தில் அவுட் ஆனார். கடைசி ஓவரில் வெறும் 2 ரன்கள்தான் ராஜஸ்தானுக்குத் தேவை. முருகன் அஷ்வின் பெளலிங். பராக்கின் விக்கெட்டை எடுத்தார் அஷ்வின். ஆனால், மூன்றாவது பந்தில் ஸ்ட்ரைக்குக்கு வந்த டாம் கரண் பவுண்டரியோடு 224 ரன் டார்கெட்டை சேஸ் செய்து முடித்தார்.

10. 2020 ஐபிஎல்-லின் டாப் பர்ஃபாமர்களாக நாங்கள் இருப்போம் என்பதை உணர்த்தியிருக்கிறது ராஜஸ்தான். ஏற்கனவே சென்னையைத் தோற்கடித்திருக்கும் ராஜஸ்தான், பார்மில் இருந்த பஞ்சாபையும் இப்போது தோற்கடித்திருக்கிறது. பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே பல டாப் பர்ஃபாமெர்களை வைத்திருக்கும் ராஜஸ்தான் டேபிள் டாப்பர்களாக இந்த சீசனை முடிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு