பரபர விறுவிறு சேஸிங்குகளோடு இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது ஐபிஎல் 2020. தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வெற்றிபெற்று டேபிள் டாப்பர்களை எல்லாம் அச்சுறுத்திவந்த பஞ்சாபின் வெற்றிப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துவைத்திருக்கிறது ராஜஸ்தான். கெய்ல் 99 ரன்கள் அடித்தபோதும், ஸ்டோக்ஸின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் வெற்றிபெற்றிருக்கிறது ராஜஸ்தான்.
டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பெளலிங்கைத் தேர்ந்தெடுத்தார். பஞ்சாபில் எந்த மாற்றங்களும் இல்லாமல் இருக்க, ராஜஸ்தான் அங்கித் ராஜ்புத்துக்குப் பதிலாக வருண் ஆரோனை அணிக்குள் கொண்டுவந்திருந்தது. ஜோஃப்ரா ஆர்ச்சரின் முதல் ஓவரிலேயெ விக்கெட். கடந்த போட்டியில் அரைசதம் அடித்து கவனம் ஈர்த்த மன்தீப் சிங் ஆர்ச்சரின் பவுன்சரைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தட்டுத்தடுமாறி பேட்டில் தட்ட, அதை தாவிப்பிடித்தார் சூப்பர் மேன் பென் ஸ்டோக்ஸ். மன்தீப்பின் விக்கெட் போனது நல்லதுதான் போல என உற்சாகமானார்கள் பஞ்சாப் ரசிகர்கள். கெய்ல் புயல் அபுதாபியில் ஆரம்பமானது. வருண் ஆரோனை எல்லாம் வைத்து செய்தார் கெய்ல்.

முதல் பந்தையே மிகப்பெரிய வைடோடு ஆரம்பித்த வருண் ஆரோனின் முதல் ஓவர் நீண்டுகொண்டேபோனது. ஒருவழியாக 9 பந்துகளோடு முதல் ஓவரை முடித்த வருணின் அடுத்த ஓவரில், முதல் சிக்ஸர் அடித்து கணக்கைத் தொடங்கினார் கிறிஸ் கெய்ல். மும்பைக்கு எதிராக கடைசியாக விளையாடியப் போட்டியில் செய்த அதே தவறை இந்தப் போட்டியிலும் செய்தார் ஸ்டீவன் ஸ்மித். பவர்ப்ளே ஓவர்களில் விக்கெட்டோடு தொடங்கிய ஆர்ச்சரை இரண்டு ஓவர்களோடு முடித்துவிட்டார். இன்னும் ஒரு ஓவரை பவர்ப்ளேவுக்குள் கொடுத்திருந்தால் கெயிலுக்கு அது சிரமத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், அதை செய்யத்தவறினார் ஸ்மித்.
இன்னொருபக்கம் 10 ரன்களில் இருக்கும்போது ரியான் பராக் கேட்சைத்தவறவிட உயிர்பிழைத்தார் கெய்ல். பவர்ப்ளேவின் முடிவில் 6 ஓவர்களுக்கு 53 ரன்கள் அடித்தது பஞ்சாப். பவர்ப்ளே முடிந்ததும் ஷ்ரேயாஸ் கோபாலுக்கு ஒரு ஓவர் மட்டுமே கொடுத்து, 10 ரன்கள் மட்டுமே கொடுத்த பெளலர் என கதையை முடித்துவிட்டார் ஸ்மித்.

இன்னிங்ஸை மெதுவாகத் தொடங்கி பின்னர் ராக்கெட் வேகம் எடுக்கும் கெய்ல், இந்த முறையும் அதே ஃபார்முலாவைப் பின்பற்றினார். 32 பந்துகளில் 50 ரன்கள் அடித்த கெய்ல், ஒருபக்கம் ரன் வேட்டையைத் தொடர்ந்து கொண்டிருக்க, அடித்தது போதும் என 46 ரன்களில் ஸ்டோக்ஸ் பெளலிங்கில் அவுட் ஆனார் கேப்டன் கே.எல்.ராகுல். அடுத்து வந்து பூரனும், வருண் ஆரோன் பெளலிங்கில் சிக்ஸர்கள் அடிக்க பஞ்சாபின் ரன்ரேட் எகிறியது. பூரன் 10 பந்துகளில் 22 ரன்கள் அடித்து அவுட் ஆக, எப்படியும் சென்சுரி அடித்துவிடும் முனைப்போடு ஆடிக்கொண்டிருந்த கெய்லின் இன்னிங்ஸை 99 ரன்களில் முடித்துவைத்தார் ஜோஃப்ரா ஆர்ச்சர். 63 பந்துகளில் 6 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் ஒரு ரன்னில் சென்சுரியைத்தவறவிட்டு அவுட் ஆனார். டி20 போட்டிகளில் இந்த இன்னிங்ஸோடு 1000 சிக்ஸர்களை அடித்துமுடித்தார் கெய்ல். பஞ்சாப் 20 ஓவர்களில் 185 ரன்கள் அடிக்க சேஸிங்கைத் தொடங்கியது ராஜஸ்தான்.
ராஜஸ்தானின் சேஸிங்கில் ஒரு சிறு பிசிறுகூட இல்லை. பென் ஸ்டோக்ஸ் ஆட்டத்தின் முதல் பந்தில் இருந்தே பஞ்சாப் பெளலர்களின் நம்பிக்கையை குலைக்கும் ஆட்டத்தில் இறங்க, கைமேல் பலன். ஷமி, அர்ஷ்திப், முருகன் அஷ்வின் என எல்லோருமே லைன் அண்ட் லென்த்தில் கோட்டைவிட, 24 பந்துகளில் 50 ரன்கள் அடித்துமுடித்துவிட்டார் பென் ஸ்டோக்ஸ். இதனால் டெத் ஓவர் பெளலரான கிறிஸ் ஜோர்டனை பவர்ப்ளேவின் கடைசி ஓவரிலேயே கொண்டுவந்தார் கே.எல்.ராகுல். பென் ஸ்டோக்ஸ் அவுட். பவர்ப்ளேவின் முடிவில் 66 ரன்கள் அடித்தது ராஜஸ்தான்.

ஸ்டோக்ஸின் அதிரடி ஆட்டத்தை அடுத்துவந்த சஞ்சு சாம்சன் தொடர்ந்தார். இந்த களேபரங்களுக்கு இடையே சப்போர்ட்டிங் ஆட்டம் ஆடிக்கொண்டிருந்த ராபின் உத்தப்பா, 23 பந்துகளில் 30 ரன்கள் அடித்து முருகன் அஷ்வின் பெளலிங்கில் அவுட் ஆனார். 25 பந்துகளில் 48 ரன்கள் அடித்து ராஜஸ்தானின் சேஸிங்கை வேகவேகமாக முடித்துக்கொண்டிருந்த சஞ்சு, தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி அரை சத வாய்ப்பை இழந்தார். பட்லர் வந்தார். 18-வது ஓவரிலேயே ஸ்மித்தும், பட்லரும் சேர்ந்து ராஜஸ்தானின் சேஸிங்கை வெற்றிகரமாக முடித்துவைத்தார்கள். ஸ்மித் 20 பந்துகளில் 31 ரன்கள் அடிக்க, பட்லர் 11 பந்துகளில் 22 ரன்கள் அடித்து ராஜஸ்தானுக்கு நம்பிக்கையைக் கொடுத்தார்.
ராஜஸ்தானின் இந்த வெற்றி கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளுக்கும் ப்ளேஆஃப் வாய்ப்பை இன்னும் உயிரோடு வைத்திருக்கிறது. மும்பை ப்ளே ஆஃபுக்குத் தகுதிபெற்றுவிட்ட நிலையில் பெங்களூரு, டெல்லி அணிகள் 14 புள்ளிகளுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருக்கின்றன. பஞ்சாப் 12 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்க, ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் அதே 12 புள்ளிகளுடன் ஐந்து மற்றும் ஆறாவது இடங்களில் இருக்கின்றன.

பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா அணிகளுக்கு இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டுமே மிச்சம் இருக்கும் நிலையில், ஹைதராபாத்துக்கு இன்னும் இரண்டு போட்டிகள் இருப்பது அந்த அணிக்கான பலம். ப்ளேஆஃபுக்கானப் போட்டா போட்டி இன்னும் கடுமையாகியிருக்கிறது.