Election bannerElection banner
Published:Updated:

IPL 2020: சொதப்பிய பஞ்சாபின் மிடில் ஆர்டர்... டேபிள் டாப்பர்ஸான மும்பை! #KXIPvMI

கார்த்தி
#KXIPvMI
#KXIPvMI ( twitter.com/IPL )

பவர்பிளே முடிவில் மும்பையைப் போலவே, பஞ்சாபும் இரண்டு விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்திருந்தது. ராகுல் சஹாரிடம் பஞ்சாப் கேப்டன் போல்டானதுமே, பஞ்சாபின் ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது.

புள்ளிவிவரங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், டாஸ் வென்றால் சேஸிங்தான் செய்ய வேண்டும் என ஆட்டு மந்தைத் தனமாக, ஐபிஎல் கேப்டன்கள் முடிவெடுக்கும் வரை, இந்த ஐபிஎல் முடிவுகள் பெரிதாக மாறப்போவதில்லை. மைதான அளவை கணித்து அதற்கேற்ப முடிவெடுக்கும் கேப்டன்களே இந்த ஐபிஎல்லில் ஜொலிக்க முடியும் என்பதற்கு இன்றைய போட்டியும் விதிவிலக்கல்ல. மும்பை தன் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளை, அபுதாபி ஷேக் சையது மைதானத்தில் விளையாடி இருந்தது. ஷார்ஜாவின் சின்ன கிரவுண்டில் அதிக ரன்கள் எடுத்த பஞ்சாப், முதல் முறையாக இந்த மைதானத்தில் விளையாடியது.

#KXIPvMI
#KXIPvMI
twitter.com/IPL

டாஸ் வென்றதும் ஃபீல்டிங் என்றார் ராகுல். நானே பேட்டிங்தான் செய்யலாம் என இருந்தேன் என்றார் ரோஹித். அஷ்வினுக்குப் பதிலாக கிருஷ்ணப்பா கௌதமை பிளேயிங் லெவனில் சேர்த்தார் ராகுல். மும்பை வீரர்கள் லெக் ஸ்பின்னர்களுக்குத்தான் சிரமப்படுவார்கள் என்னும் போது, ஏன் ராகுல் வேலை மெனக்கெட்டு லெக் ஸ்பின் போடும் டேலன்ட்டுள்ள அஷ்வினை வெளியே வைத்துவிட்டு ஆஃப் ஸ்பின்னரை பிளேயிங் லெவனில் கொண்டு வருகிறார் என்று தோன்றியது.

முந்தைய போட்டியில், திவேதியாவால் ஒரே ஓவரில் முப்பது ரன்களுக்கு விளாசப்பட்ட கார்டல் முதல் ஓவரை வீச வந்தார். விக்கெட் மெய்டன். 5 பந்துகள் பிடித்து போல்டானார் டி காக். ஷமியின் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி ரன் கணக்கைத் துவக்கிய ரோஹித், ஐபிஎல்லில் 5000 ரன்களைக் கடந்தார். ஒன் டவுனில் வந்த சூர்யகுமார் யாதவ், ஷமி எங்க ரன் அவுட் பண்ண போறார் என்கிற நம்பிக்கையில், சிங்கிளுக்கு ஓட, ரன் அவுட்டாகி வெளியேறினார். பவர் பிளே முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்திருந்தது மும்பை. சீரான இடைவெளியில் ரன்களை அடித்துக்கொண்டிருந்த மும்பை, 14 ஓவர் முடிவில் 87 ரன்கள் அடித்திருந்தது. ரோஹித்தும், பொல்லார்டும் ஆடிக்கொண்டிருந்தார்கள். அடுத்த ஆறு ஓவர்கள்தான் போட்டியை மொத்தமாய் பஞ்சாபிடம் இருந்து பறித்தது.

#KXIPvMI
#KXIPvMI
twitter.com/IPL

பிஷ்னாய் வீசிய ஒவரில் இரண்டு சிக்ஸர்கள், நீஷம் வீசிய ஓவரில் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர் என பீஸ்ட் மோடில் ஆடினார் ரோஹித். ஷமியின் பந்துவீச்சில் மேக்ஸி, நீஷம் கூட்டணியின் அபாரமான கேட்ச்சால் விக்கெட்டை இழந்தாலும், மும்பையை ரோஹித் அப்போதே கரையேற்றியிருந்தார். நீஷமின் நான்காவது ஓவரில், தன் பங்குக்கு இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தார் சீனியர் பாண்டியா. விக்கெட் ஏதும் இன்றி, நான்கு ஓவர்களுக்கு 52 ரன்கள் விட்டிருந்தார் நீஷம். ஷமியின் கடைசி ஓவரில் நான்கு பவுண்டரி, ஆட்டத்தின் கடைசி ஓவரில் நான்கு சிக்ஸர்கள் என வீடியோ கேம் ஆடினர் பொல்லார்டும், பாண்டியாவும்.

பிட்ச் ரிப்போர்ட்டில் பிரெட் லீ, இந்த மைதானத்தில் 165 ரன்கள் சராசரி என்றார். மும்பையின் ஸ்கோர் அதைவிட 30 ரன்கள் அதிகம் என்னும் போதே, கடைசி ஆறு ஓவர்களில், பஞ்சாப் செய்த தவறுகள் பல் இளித்தன. கடைசி ஐந்து ஓவர்களில் மும்பை 89 ரன்கள் அடித்திருந்தது. இந்த மைதானத்தில் இதை சேஸ் செய்வது அவ்வளவு சுலபம் அல்ல, என்பதை உணர்ந்தே பஞ்சாப் ஆட ஆரம்பித்தது.

#KXIPvMI
#KXIPvMI
twitter.com/IPL

இந்த சீசனில் அதிக ரன் அடித்த மயாங் அகர்வாலும், ராகுலும் ஓபனிங் இறங்கினர். பஞ்சாபின் பலம், பலவீனம் இரண்டுமே இவர்கள்தான்! இருவருமே அட்டகாசமாக அடிக்கிறார்கள். ஆனால், அடுத்து நிலையற்ற தன்மையில் இருக்கிறது பஞ்சாபின் மிடில் ஆர்டர். பெரிய ஸ்கோர் என்றால், இருவரில் ஒருவர் நிலைத்து நிற்க வேண்டும். மயாங்க்கை போல்டாக்கினார் பும்ரா. ஒன்டவுன் கருண் நாயரை, குருனால் பாண்டியா டக் அவுட் செய்தார். பவர்பிளே முடிவில் மும்பையைப் போலவே, பஞ்சாபும் இரண்டு விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்திருந்தது. ராகுல் சஹாரிடம் பஞ்சாப் கேப்டன் போல்டானதுமே, பஞ்சாபின் ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது.

``ஷார்ஜான்னு நினைச்சியா.... இது துபாய்டி மாப்ளே!'' - ராஜஸ்தானுக்கு ரஸத்தை ஊற்றிய கொல்கத்தா! #RRvKKR

பூரன் ஹிட்டர், அடுத்து வந்த மேக்ஸியும் ஹிட்டர் என்றாலும், அவர்களின் மேல் பெரிதாக எந்த நம்பிக்கையும் இல்லை. பூரனாவது கடந்த போட்டிகளில் அடித்தார். மேக்ஸியின் நிலைமை படு மோசம். 'பால போடுங்க, நான் சிக்ஸ் அடிக்கணும்' நிலைக்கு அவர் கை பரபரக்கிறது. ஆனால், டக் அவுட்டில் நூடுல்ஸ் வைத்துவிட்டு வந்திருப்பதுபோல வந்த வேகத்தில் கிளம்பிவிடுகிறார். இன்றும் அதே கதை. ஸ்விட்ச் ஹிட் எல்லாம் முயன்று, எதுவும் க்ளிக் ஆகாமல், கடுப்பாகி டீப் விக்கெட்டில் நின்றிருந்த போல்ட்டிடம் ஜாலி கேட்ச் கொடுத்து அவுட்டானார் மேக்ஸி.

#KXIPvMI
#KXIPvMI
twitter.com/IPL

இனி என்னப்பா, ரெண்டு பேர் மேட்ச் ஆடுங்க, மீதி பேர் அடுத்தப் போட்டிக்கு பயிற்சி எடுங்க என்பது போல், உருட்ட ஆரம்பித்தது பஞ்சாப். சர்பராஸ் கான், பெங்களூரில் விளையாடிய அதே ஃபார்மில்தான் பஞ்சாபுக்கும் ஆடுகிறார். ஆம், இங்கேயும் அவர் எதுவும் அடிப்பதில்லை. 8 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார்.

இறுதியாக 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை மட்டுமே பஞ்சாபால் எடுக்க முடிந்தது. 20 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து, ஆட்டத்தின் போக்கை மாற்றிய பொல்லார்டு ஆட்டநாயகனாக தேர்வானார்.
இதன் மூலம் மும்பை தன் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்து, புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறது.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு