Election bannerElection banner
Published:Updated:

ப்ளேஆஃப்க்குள் போய்விட்டதா மும்பை? பெங்களூருவின் வெற்றியைத் தள்ளிப்போட்டது எது?! #MIvRCB

#MIvRCB
#MIvRCB

12 போட்டிகளின் முடிவில் 8 போட்டிகளில் வெற்றி, நான்கில் தோல்வி என 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது மும்பை. பெங்களூரு அணி அதே 12 போட்டிகளில் 7 வெற்றி, 5 தோல்வி என 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

மீண்டும் ஒருமுறை முதல் அணியாக ப்ளேஆஃபுக்குத் தகுதிபெறுவதற்கான கட்டத்தை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது மும்பை இந்தியன்ஸ். அணியில் தேவையில்லாத பல மாற்றங்களை செய்து மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்திருக்கிறது விராட் கோலியின் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்.

அபுதாபியில் நடைபெற்ற 2020 ஐபிஎல் லீக் போட்டியில் கோலியின் பெங்களூருவும், பொலார்டின் மும்பையும் மோதின. டாஸ் வென்ற பொலார்ட் ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். மும்பையில் ரோஹித் இன்னும் குணமடையாததால் அணியில் எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்கியது மும்பை. கடைசியாக சென்னைக்கு எதிராக விளையாடிய போட்டியில் தோல்வியடைந்ததால் பெங்களூருவில் மூன்று மாற்றங்களை செய்திருந்தார் விராட் கோலி. மும்பை இந்தியன்ஸ் அணியில் டாப் ஆர்டர் முழுக்கவே இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்தும் ஆஃப் பிரேக் போடக்கூடிய பேட்டிங் ஆல்ரவுண்டரான மொயின் அலியைத் தூக்கிவிட்டு அவருக்குப் பதிலாக மிதவேகப்பந்து வீசக்கூடிய பேட்டிங் ஆல்ரவுண்டர் ஷிவம் துபேவையும், ஆரோன் ஃபின்ச்சுக்கு பதிலாக மற்றொரு ஆஸ்திரேலிய இளம் வீரர் ஜோஜி ஃபிலிப்பையும் அணிக்குள் கொண்டுவந்திருந்தார் கோலி. நவ்தீப் சைனி காயமடைந்துவிட்டதால் அவருக்குப் பதிலாக டேல் ஸ்டெய்ன் மீண்டும் அணிக்குள் வந்தார்.

#MIvRCB
#MIvRCB

செம ஃபார்மில் இருக்கும் கர்நாடக பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கலும், இளம் வீரர் ஃபிலிப்பும் பெங்களூருவுக்கு சரியான ஓப்பனிங்கைக் கொடுத்தார்கள். பவர்ப்ளே வரை விக்கெட் எதையும் இழக்காமல் இந்தக் கூட்டணி 54 ரன்கள் அடித்திருந்தது. முதல் விக்கெட்டாக ராகுல் சஹாரின் பந்துவீச்சில் ஃபிலிப் அவுட் ஆனார். 24 பந்துகளில் 33 ரன்கள் அடித்திருந்தார் ஃபிலிப். அடுத்து கேப்டன் கோலி. பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என எதிர்பார்க்க கோலியின் டாட் பால்கள் அதிகரித்துக்கொண்டேயிருக்க ஒரு கட்டத்தில் பும்ராவின் பெளலிங்கில் 14 பந்துகளில் 9 ரன்கள் அடித்து அவுட் ஆனார் கோலி. தேவ்தத் படிக்கல் இந்த 2020 ஐபிஎல் சீசனில் தனது நான்காவது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.

14 ஓவர் வரை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 113 ரன்கள் எடுத்திருந்தது பெங்களூரு. மிஸ்டர் 360 ஏபிடி-யும், 36 பந்துகளில் 57 ரன்கள் அடித்து படிக்கல்லும் களத்தில் நின்றிருந்தார்கள். ஆனால், திடீர் சொதப்பல்களுக்குப் புகழ்பெற்ற பெங்களூரு அணி டெத் ஓவர்களில் சொதப்பியது. பொலார்டின் பந்துவீச்சில் டிவில்லியர்ஸ் 15 ரன்களில் அவுட் ஆக, பும்ராவின் மூன்றாவது ஓவரும், பெங்களூரு இன்னிங்ஸின் 17வது ஓவருமான அடித்து ஆட வேண்டிய ஓவரில் துபே, படிக்கல் என அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது பெங்களூரு. அடுத்த போல்ட்டின் ஓவரில் கிறிஸ் மோரிஸும் 4 ரன்களில் அவுட் ஆக, 134 ரன்களில் இருந்து 138 ரன்கள் என ஸ்கோர் கார்ட் காட்டுவதற்குள் மூன்று விக்கெட்களை இழந்துவிட்டது பெங்களூரு. குர்கீரத் மான் கடைசி ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடிக்க பெங்களூரு 20 ஓவர்களில் 164 ரன்களை அடித்தது. கடைசி 6 ஓவர்களில் 51 ரன்களை மட்டுமே எடுத்தது. 180 ரன்களைக் கடந்திருக்கவேண்டிய பெங்களூரு அணி கடைசிகட்ட ஓவர்களில் ரன் எடுக்கமுடியாமல் திணறியது மும்பைக்கு சாதகமானது.

#MIvRCB
#MIvRCB

165 ரன்கள் என்பது அபுதாபி பிட்ச்சில் அடிக்கக்கூடிய ஸ்கோர் என்பதால் பயங்கர பாசிட்டிவாக இன்னிங்ஸைத் தொடங்கியது மும்பை. இஷான் கிஷனும், டிகாக்கும் ஓப்பனிங் இறங்கினார்கள். பவர்ப்ளேவின் கடைசி ஓவரில் முதல் விக்கெட்டாக சிராஜின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து 18 ரன்களில் ஆட்டம் இழந்தார் டிகாக். மும்பை இன்னிங்ஸின் எட்டாவது மற்றும் சஹாலின் முதல் ஓவரில் இஷான் கிஷன் அவுட். 19 பந்துகளில் 25 ரன்கள் அடித்திருந்தார் கிஷன். அடுத்துவந்த திவாரியும், மீண்டும் சிராஜின் பெளலிங்கில் 5 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். ஆனால், ஒருபக்கம் விக்கெட்கள் போனாலும், சூர்யகுமார் யாதவ் நின்று நிலைத்து ஆடிக்கொண்டிருந்தார். சஹாலின் பெளலிங்கில் சிக்ஸர், டேல் ஸ்டெய்னின் 13-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகள் என சூர்யகுமார் யாதவ் இறங்கியடிக்க ஆரம்பித்தார். யாதவின் பவுண்டரிகளுக்கு இடையே க்ருணால் பாண்டியா 10 ரன்கள் அடித்து அவுட் ஆனார். 14 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 107 ரன்கள் அடித்திருந்தது மும்பை.

ஒரு நாள்... ஒரு வார்னர்... ஒரு சாஹா... பல ஆஹா... தேன் எப்படி கிடைச்சதுன்னா..?! #SRHvDC

கடைசி 36 பந்துகளில் 58 ரன்கள் அடிக்கவேண்டும் என்கிற சூழல். கிறிஸ் மோரிஸின் 15வது ஓவரில் 10 ரன்கள் போனாலும், சிராஜின் அடுத்த ஓவரில்தான் சூர்யகுமார் யாதவின் அதிரடிகள் தொடர்ந்தன. ஒரே ஓவரில் மூன்று பவுண்டரிகள் எல்லாம் அடித்து உற்சாகப்படுத்தினார் சூர்யகுமார். சிராஜ், மோரிஸ், டேல் ஸ்டெய்ன் என பெளலர்களை கோலி மாற்றிக்கொண்டே இருந்தபோதும் சூர்யகுமாரை யாராலும் தடுக்கமுடியவில்லை. 29 பந்துகளில் அரைசதம் அடித்த சூர்யகுமார், இறுதிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்து, 43 பந்துகளில் 79 ரன்கள் அடித்து பவுண்டரியோடு மும்பையின் சேஸிங்கை வெற்றிகரமாக முடித்துவைத்தார்.

#MIvRCB
#MIvRCB

2020 ஐபிஎல் போட்டிகளின் லீக் சுற்று கடைசி வாரத்தை எட்டியிருக்கும் நிலையில் ப்ளே ஆஃபுக்குள் நுழைவதற்கான இடத்தைக் கிட்டத்தட்டப் பிடித்துவிட்டது மும்பை. 12 போட்டிகளின் முடிவில் 8 போட்டிகளில் வெற்றி, நான்கில் தோல்வி என 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது மும்பை. பெங்களூரு அணி அதே 12 போட்டிகளில் 7 வெற்றி, 5 தோல்வி என 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இனிவரப்போகும் போட்டிகள்தான் யார் யாரெல்லாம் ப்ளேஆஃபுக்குள் போகப்போகிறார்கள் என்கிற ரகசியத்தை உடைக்கும். காத்திருப்போம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு