Published:Updated:

முரட்டு ஃபார்மில் மும்பை... பும்ராவின் வேரியஷன்களில் வீழ்ந்த ராஜஸ்தான்! #MIvRR #Bumrah

பும்ரா
பும்ரா

இந்த நாள் ஹிட் மேனின் நாளாக இருக்கும் என எல்லோரும் எதிர்பார்க்க மீண்டும் ஒருமுறை லெக் ஸ்பின்னரான ஷ்ரேயாஸ் கோபாலின் பந்துவீச்சில் வீழ்ந்தார் ரோஹித் ஷர்மா.

ஹாட்ரிக் வெற்றியோடு மும்பை மீண்டும் முதலிடம் பிடிக்க, ஹாட்ரிக் தோல்வியோடு பாயின்ட்ஸ் டேபிளில் பின்னோக்கி போய்க்கொண்டிருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். பட்லர், ஸ்மித், ஜோஃப்ரா, ஆர்ச்சர், டாம் கரண் என மேட்ச் வின்னர்கள் இருந்தும் தொடர்ந்து மூன்றாவது தோல்வியைச் சந்தித்திருக்கிறது. அபுதாபியில் சென்னையிடம் தோற்ற அதே பிட்ச்சில் ராஜஸ்தானை எப்படி வென்றது மும்பை இந்தியன்ஸ்?!

டாஸ் வென்றதுமே தெள்ளத்தெளிவாக முதல் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்துவிட்டார் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா. குறைவான ரன்களே எடுத்தாலும் அதை டிஃபெண்ட் செய்யக்கூடிய பெளலர்கள் இருப்பதால் தைரியமாக முதல் பேட்டிங் முடிவை எடுத்தார் ரோஹித். மும்பை அணியில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர, ராஜஸ்தான் மூன்று மாற்றங்களை செய்திருந்தது. இளம் வேகப்பந்து வீச்சாளரான கார்த்திக் தியாகி, இளம் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால், அங்கித் ராஜ்புத் என மூன்றுபேர் உள்ளே வந்திருந்தனர்.

#MIvRR
#MIvRR

ஆட்டம் தொடங்கியதுமே குவின்டன் டி காக்கும், ரோஹித்தும் அதிரடியாக ரன்களைக் குவிக்க ஆரம்பித்தார்கள். ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்த இரண்டாவது ஓவரிலேயேலேயே லெக் ஸ்பின்னரான ஷ்ரேயாஸ் கோபலை கொண்டுவந்தார் ஸ்டீவன் ஸ்மித். நன்றாக செட் ஆகி ஆட ஆரம்பித்த நிலையில் புதுமுக வீரர் கார்த்திக் தியாகியின் பெளலிங்கில் 23 ரன்களில் அவுட் ஆனார் குவின்டன் டி காக். பவர்ப்ளேவின் முடிவில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்தது 57 ரன்கள் அடித்திருந்தது மும்பை.

இந்த நாள் ஹிட் மேனின் நாளாக இருக்கும் என எல்லோரும் எதிர்பார்க்க மீண்டும் ஒருமுறை லெக் ஸ்பின்னரான ஷ்ரேயாஸ் கோபாலின் பந்துவீச்சில் வீழ்ந்தார் ரோஹித் ஷர்மா. 23 பந்துகளில் 35 ரன்கள் அடித்திருந்தார் ரோஹித். அடுத்தபந்திலேயே இஷான் கிஷன் டக் அவுட். ஆனால், சூர்யகுமார் யாதவ் தெறி ஃபார்மில் இருந்ததால் ரன்கள் ஒருபக்கம் குவிந்துகொண்டேயிருந்தன. இஷானுக்கு அடுத்துவந்த க்ருணால் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லையென்றாலும், அவரது சகோதரர் ஹர்திக் சூர்யகுமாரோடு சேர்ந்து ராஜஸ்தான் பெளலர்களை நொறுக்க ஆரம்பித்தார். 33 பந்துகளில் சூர்யகுமார் 50 ரன்கள் அடித்தார். கடைசி 5 ஓவர்களில் மட்டும் சூர்யகுமாரும், ஹர்திக்கும் சேர்ந்து 68 ரன்கள் அடித்தார்கள். மும்பை ராஜஸ்தானுக்கு டார்கெட்டாக 194 ரன்களைக் கொடுத்தது.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

பட்லருடன் ஓப்பனிங் ஆடவந்தார் இந்தியாவின் அண்டர் 19 வீரர் ஜெய்ஸ்வால். முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ஜெய்ஸ்வால் போல்ட்டின் பந்துவீச்சில் அவுட். அடுத்த பும்ராவின் ஓவரில் ஸ்மித் 6 ரன்களில் அவுட். அதற்கு அடுத்த போல்ட்டின் ஓவரில் சஞ்சு சாம்சன் டக் அவுட். மூன்று ஓவர்களில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்ததுமே மும்பையின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. ஜோஸ் பட்லர் ஒருபக்கம் சிறப்பான இன்னிங்ஸ் ஆடினாலும், அவருக்குத் துணை நிற்க இன்னொரு பேட்ஸ்மேன் இல்லை. ஜோஸ் பட்லர் மட்டும் 14வது ஓவர் வரை நிலைத்து நின்று ஆடி 44 பந்துகளில் 70 ரன்கள் அடித்து அவுட் ஆனார். பட்லர் அவுட் ஆனப்பிறகு, பும்ரா தனது கணக்கைத் தொடர்ந்தார்.

ராக்கெட் ரபாடா... பேட்ஸ்மேன்களைத் திணறடிக்கும் ரபாடாவின் கதை தெரியுமா?! #KagisoRabada #IPL2020

ஏற்கெனவே சஞ்சுவின் விக்கெட்டை வீழ்ந்தியிருந்த பும்ரா, திவேதியா, ஆர்ச்சர், கோபால் என நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். யார்க்கர், பெளன்சர், பீமர், ஷாட் பிட்ச் என எல்லா வேரியன்ஷகளிலுமே பந்துவீசிய பும்ராவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 136 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது ராஜஸ்தான். பட்லருக்கு அடுத்தபடியாக ஆர்ச்சர் அடித்திருந்த 24 ரன்கள்தான் இரண்டாவது டாப் ஸ்கோர்.

ஜோஸ் பட்லர்
ஜோஸ் பட்லர்
முரட்டு ஃபார்முக்குத் திரும்பியிருக்கிறது மும்பை இந்தியன்ஸ். தொடர் வெற்றிகளைப் பெற்றுவரும் மும்பை, இந்த ஐபிஎல்-ன் கன்சிஸ்டன்ட் அணிகளில் ஒன்றாக இருக்கும் டெல்லி கேபிடல்ஸுடன் அடுத்த ஞாயிறு மோதயிருக்கிறது. இதற்கு முன்பாக ராஜஸ்தானும் டெல்லி கேபிடல்ஸுடன்தான் மோதயிருக்கிறது. பரபர பாயின்ட்ஸ் டேபிள் திருப்பங்களுடன் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது 2020 ஐபிஎல்.
அடுத்த கட்டுரைக்கு