Election bannerElection banner
Published:Updated:

சிராஜின் அதிசயம், அற்புதம்... கோலியின் ஆரவாரம்... பெங்களூரு பாய்ஸா இது?! #KKRvRCB

#KKRvRCB
#KKRvRCB

சும்மாவே ஏகப்பட்ட எமோஷன்களோடு கிரவுண்டைச் சுற்றிவரும் கோலி, நம்பமுடியாத தன்னுடைய பெளலர்களின் பர்ஃபாமென்ஸால் இதுவரை கண்டுபிடிக்கப்படாத எமோஜிக்களில் எல்லாம் சிரித்து, சிலிர்த்து, சிலிப்பிக் கொண்டிருந்தார்.

இதெல்லாம் நடக்கவே நடக்காது, இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பேயில்லை, இப்படியெல்லாம் எப்படி நடக்கும்?! என நாம் கற்பனைக்கூட செய்துபார்த்திடாத விஷயங்களை எல்லாம் நிகழ்த்திக்காட்டும் 'அற்புத' ஆண்டுதான் 2020. தொடர் அற்புதங்கள் நடக்கும் 2020-யில் நம்பமுடியாத சமீபத்திய அற்புதம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸின் பர்ஃபாமென்ஸ்.

பெங்களூரு பெளலர்கள் எதிர் அணியை 100 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்வார்கள், அதுவும் முகமது சிராஜ் அவரின் முதல் 2 ஓவர்களை மெய்டனாக வீசி 3 விக்கெட்கள் எடுப்பார் என்பதெல்லாம் கோலியே கற்பனை செய்யாத ஒன்று. ஆனால், என்ன செய்ய... எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்லிவிட்டதே 2020... அதிசயம் அபுதாபியில் நடந்தது.

ஒவ்வொருமுறையும் 'ஈ சாலா கப் நம்தே' என ஐபிஎல் ஆரம்பிக்கும் வரை உற்சாக கோஷம்போடும் ஆர்சிபி, இந்த முறை தொடர் தொடங்கியப்பிறகும் அதே உற்சாகத்துடன் இருப்பதும், தொடர் வெற்றிகள் பெறுவதும், கோலி தொடர்ந்து புன்னகைப்பதும் எதிர் அணி ரசிகர்களுக்கு அல்ல, ஆர்சிபி ரசிகர்களுக்கே அதிசயம், அற்புதமாக இருக்கிறது.

#KKRvRCB
#KKRvRCB

2020 ஐபிஎல்-ன் முதல் சுற்று லீக் போட்டியில் கொல்கத்தாவை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு அணி, இரண்டாவது சுற்று ஆட்டத்தில் கொல்கத்தாவை 84 ரன்களுக்குள் சுருட்டி பெருவெற்றியைப் பெற்றிருக்கிறது.

டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மார்கன் முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். ரஸல் ஃபிட்டாக இல்லாததால் அவருக்குப் பதில் டாம் பேன்ட்டனும், ஷிவம் மவிக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணாவும் கொல்கத்தா அணியில் சேர்க்கப்பட, கோலி ஷபாஸ் அஹமதுக்குப் பதிலாக மீண்டும் முகமது சிராஜை ப்ளேயிங் லெவனுக்குள் கொண்டுவந்தார்.

ஆட்டத்தின் இரண்டாவது ஓவர்... முகமது சிராஜின் முதல் ஓவர்... அதிசயம் அரங்கேற ஆரம்பித்தது. முதல் இரண்டு பந்துகளை டாட் பால்களாக்கிய திரிபாதி மூன்றாவது பந்தில் அவுட். அடுத்த பந்திலேயே ரானா டக் அவுட் ஆக, முதல் ஓவரை மெய்டன் ஓவராக வீசியதோடு 2 விக்கெட்களையும் எடுத்து பெங்களூரு ரசிகர்களைப் பரவசப்படுத்தினார் சிராஜ். சைனியின் அடுத்த ஓவரில் ஷுப்மான் கில் அவுட்.

சிராஜின் அற்புதங்கள் முதல் ஓவரோடு முடியவில்லை. அடுத்த ஓவரிலும் தொடர்ந்தது. மூன்றாவது விக்கெட்டாக பேன்ட்டனின் விக்கெட்டைத் தூக்க, 14 ரன்களில் 4 விக்கெட்களை இழந்துவிட்டது கொல்கத்தா. பவர்ப்ளேவின் முடிவில் 17 ரன்களை எடுத்திருந்த கொல்கத்தாவுக்கு அதிர்ச்சிகள் தொடர்ந்தன. ஒன்பதாவது ஓவரை சஹால் போடவந்தார். தினேஷ் கார்த்திக் 4 ரன்களில் அவுட். அடுத்து பேட் கம்மின்ஸ் 4 ரன்களில் அவுட். 40 ரன்களில் ஆறாவது விக்கெட்டை இழந்துவிட்டது. ஓரளவுக்கு தாக்குப்பிடித்து ஆடிக்கொண்டிருந்த கேப்டன் இயான் மார்கன் 33 பந்துகளில் 30 ரன்கள் அடித்து அவுட் ஆனார். 20 ஓவர்களில் 84 ரன்களை மட்டுமே எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

#KKRvRCB
#KKRvRCB

ஐபிஎல்-ல் ஒரு இன்னிங்ஸில் இதுவரை 2 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டதே இதுவரையிலான வரலாறு. ஆனால், நேற்று சிராஜ் மட்டுமே 2 மெய்டன் ஓவர்கள் வீச, மோரிஸும், வாஷிங்டன் சுந்தரும் தலா ஒரு மெய்டன் ஓவர்கள் வீச மொத்தம் 4 மெய்டன் ஓவர்களைப்போட்டது பெங்களூரு. கோலி செம ஹேப்பி! சும்மாவே ஏகப்பட்ட எமோஷன்களோடு கிரவுண்டைச் சுற்றிவரும் கோலி, நம்பமுடியாத தன்னுடைய பெளலர்களின் பர்ஃபாமென்ஸால் இதுவரை கண்டுபிடிக்கப்படாத எமோஜிக்களில் எல்லாம் சிரித்து, சிலிர்த்து, சிலிப்பிக் கொண்டிருந்தார்.

வெறும் 85 ரன்கள் என்கிற டார்கெட்டோடு சேஸிங்கைத் தொடங்கியது பெங்களூரு. சென்னைக்கு ஒரு வாட்சன் போல, பெங்களூருவுக்கு ஆரோன் ஃபின்ச். அடிக்கிறாரோ இல்லையோ, ப்ளேயிங் லெவனில் இவருக்கான இடம் உறுதியென்பதால் பபுள்கம்மை மென்றபடியே உள்ளே வந்து 21 பந்துகளில் 16 ரன்களை அடித்துவிட்டு, மீதி பபுள்கம்மை மெள்ள பெவிலியன் போனார். அடுத்து வந்த குர்கீரத் சிங் ரன்னிங்கில் சொதப்ப, ரன் அவுட் ஆனவர் தேவ்தத் படிக்கல். 17 பந்துகளில் 25 ரன்கள் அடித்து நல்ல டச்சில் இருந்தார் படிக்கல். இரண்டு விக்கெட்கள் போனாலும் கொஞ்சமும் தடுமாறாத குர்கீரத்சிங்கும், கோலியும் பெங்களூருவின் சேஸிங்கை வெற்றகரமாக முடித்துவைத்தார்கள்.

2020 ஐபிஎல் தொடங்கியபோது கோலியின் கேப்டன்ஸி ரெகார்ட் என்ன தெரியுமா?! 110 போட்டிகளில் பெங்களூருவின் கேப்டனாகப் பொறுப்பேற்று ஆடியிருக்கிறார் கோலி. இதில் 49 போட்டிகளில் மட்டுமே வெற்றி. 55 போட்டிகளில் தோல்வி. ஆனால், இந்த 2020 சீசனில் இதுவரை விளையாடியிருக்கும் 10 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றிபெற்று, தன்னுடைய வெற்றி - தோல்விக் கணக்கில் கிட்டத்தட்ட சமநிலையை நோக்கி நெருங்கிவிட்டார் கோலி.

#KKRvRCB
#KKRvRCB

கொல்கத்தாவுடனான வெற்றிக்குப்பின், "எங்களிடம் பிளான் ஏ, பிளான் பி, பிளான் சி என எல்லாமே இருக்கிறது. ஆனால், என்ன பிளான் இருந்தாலும் உங்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கையிருக்க வேண்டும். சிராஜ் கடந்த ஆண்டு கஷ்டப்பட்டார். ஆனால், இந்த ஆண்டு கடுமையாக உழைத்து, நெட் பிராக்டீஸ்களில் சிறப்பாகப் பந்து வீசி முன்னேற்றம் காட்டியிருக்கிறார். இப்போது அவர் ரிசல்ட் காட்டியிருந்தாலும் அவர் தொடர்ந்து ப்ராஸஸை பின்பற்ற வேண்டும் என சொல்லியிருக்கிறோம்" என்றார்.

ப்ராஸஸ்... இந்த ப்ராஸஸ்ன்ற வார்த்தையை எங்கேயோ கேட்ட மாதிரியில்ல?!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு