Published:Updated:

கொண்டாட்ட கோலி... ராஜஸ்தானைக் கலைத்துப்போட்ட படிக்கல்... டேபிள் டாப்பரான பெங்களூரு! #RCBvRR

#RCBvRR
#RCBvRR

எளிதில் அடிக்கக்கூடிய டார்கெட்தான் என்றாலும் ஆர்சிபியின் வரலாறு கோலிக்குத் தெரியும் என்பதால் கொஞ்சம் பதற்றமாகவே இருந்தார்.

11 ஐபிஎல் சீசன்களுக்குப்பிறகு பெங்களூருவுக்குத் தரமான டீம் செட் ஆகியிருக்கிறது. பெளலிங் ரொட்டேஷன், பேட்டிங் ஆர்டர், ஃபீல்டிங் ப்ளேஸ்மென்ட்ஸ் என எல்லாவற்றிலும் கோலி பக்குவம் காட்ட தொடர் வெற்றிகளைப் பெற ஆரம்பித்திருக்கிறது பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ். இந்த சீசனில் பஞ்சாபுக்கு எதிராக மட்டும் தோல்வியடைந்து ஐதராபாத், மும்பை, ராஜஸ்தான் என மூன்று அணிகளைத் தோற்கடித்து 2020 ஐபிஎல்-ன் டேபிள் டாப்பராகியிருக்கிறது பெங்களூரு!

டாஸ்!

அபுதாபியில் அடிக்கும் வெயிலில் அந்நாட்டு நேரப்படி மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். ராஜஸ்தான் அணியில் அங்கித் ராஜ்புத்துக்கு பதிலாக 20 வயது இளம் வீரர் மஹிபால் லாம்ரோர் அணிக்குள் சேர்க்கப்பட்டிருந்தார். எந்த மாற்றமும் இல்லாமல் மும்பைக்கு எதிராக விளையாடிய அதே அணியோடு களமிறங்கினார் கோலி.

#RCBvRR
#RCBvRR

ஆட்டம் கண்ட டாப் ஆர்டர்!

ஆட்டத்தின் மூன்றாவது ஓவரிலேயே உடானாவின் பந்தை அடிக்க ஆசைப்பட்டு இன்சைட் எட்ஜாகி அவுட் ஆனார் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித். சைனியின் அடுத்த ஓவரிலேயே 22 ரன்களில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த பட்லர் அவுட். சஹாலின் அடுத்த ஓவரில் சாம்சன் அவுட் என பவர்ப்ளே ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது ராஜஸ்தான்.

சஹால் சுழல்!

சீனியர் வீரர் என்பதை வெளிப்படுத்த உத்தப்பாவுக்கு அருமையான வாய்ப்பு. ஆனால், இந்தப் போட்டியிலும் சொதப்பினார். சஹாலின் பந்தை சிக்ஸருக்கு அடிக்க ஆசைப்பட்டு லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து 17 ரன்களில் அவுட் ஆனார் உத்தப்பா. நான்கு விக்கெட்டுகள் விழுந்தததால் இனி விக்கெட்டுகள் விழுந்துவிடக்கூடாது என இளம் வீரர்கள் லாம்ரோரும், ரியான் பராகும் பொறுப்போடு ஆடினார்கள். இவர்களின் பார்ட்னர்ஷிப்தான் ராஜஸ்தானைக் காப்பாற்றியது. பராக் 16 ரன்களில் உடனாவின் பெளலிங்கில் அவுட் ஆகும்போது ராஜஸ்தானின் ஸ்கோர் 105. கடைசி நான்கு ஓவர்கள் கையில் இருந்தன.

கவனம் ஈர்த்த லாம்ரோர்!

ஒருபக்கம் விக்கெட்டுகள் போனாலும் நிலைத்து நின்று ஆடிய லாம்ரோர் 39 பந்துகளில் 47 ரன்கள் அடித்தார். சஹாலின் பந்தில் சிக்ஸர்கள் அடிக்க ஆசைப்பட்டு ஒரு சிக்ஸரும் அடித்தவர் அடுத்த சில பந்துகளிலேயே அவுட் ஆனார். அரை சதம் ஜஸ்ட் மிஸ்!

#RCBvRR
#RCBvRR

திவேதியா சிக்ஸர்ஸ்!

கடைசி மூன்று ஓவர்களில் திவேதியா சில பல சிக்ஸர்கள் அடிக்க கொஞ்சம் மதிக்கும்படியான ஸ்கோராக 154 ரன்கள் அடித்தது ராஜஸ்தான். திவேதியா 12 பந்துகளில் 24 ரன்கள் அடிக்க, ஆர்ச்சர் 10 பந்துகளில் 16 ரன்கள் அடித்திருந்தார்.

பெங்களூர் சேஸ்!

எளிதில் அடிக்கக்கூடிய டார்கெட்தான் என்றாலும் ஆர்சிபியின் வரலாறு கோலிக்குத் தெரியும் என்பதால் கொஞ்சம் பதற்றமாகவே இருந்தார். அவர் பதற்றம் சரிதான் என்பதுபோல 8 ரன்களில் அவுட் ஆனார் ஆரோன் ஃபின்ச். ஆனால், தொடர்ந்து கடுமையான வலைப்பயிற்சிகளில் ஈடுபட்ட வந்த கோலியின் பேட்டிங்கில் மாற்றம் தெரிந்தது. படிக்கலோடு சிறப்பான கூட்டணி போட்டார் கோலி.

#RCBvRR
#RCBvRR

படிக்கல் - கோலி கிளாஸிக்ஸ்!

தேவ்தத் படிக்கலும், கோலியும் எந்த அவசரமும் இல்லாமல் பொறுமையாக, ராஜஸ்தான் பெளலர்களின் லைன் அண்ட் லென்த்தைப் படித்து அதற்கேற்றபடி ஆடினார்கள். பவர்ப்ளேவின் முடிவில் 50 ரன்களை அடித்திருந்தது பெங்களூரு. ஒரு ஓவருக்கு ஒரு பவுண்டரி, சில பல சிங்கிள்ஸ் போதும் என்கிற தெளிவான முடிவோடு கோலியும் - படிக்கலும் ஆடினார்கள். மிஸ் டைம் ஷாட்களோடு, தேவையில்லாமல் தூக்கியடிக்கும் ஷாட்களோ இல்லை. 34 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார் படிக்கல். நான்கு போட்டிகளில் விளையாடியிருக்கும் தேவ்தத் அடித்திருக்கும் மூன்றாவது அரை சதம் இது.

ஃபார்முக்கு வந்த கோலி!

கடந்த மூன்று போட்டிகளாகத் திணறிக்கொண்டிருந்த கோலி, ராஜஸ்தானுக்கு எதிராக ஃபார்முக்கு வந்தார். கோலியை வீழ்த்த தொடர்ந்து ஸ்பின்னர்களைப் பயன்படுத்தினார் ஸ்டீவ் ஸ்மித். ஸ்லிப்பில் ஃபீல்டரை நிறுத்தினார். ஆனால், கோலி அவசரப்படவேயில்லை. ஆரம்பத்தில் படிக்கலை அடிக்கவிட்டு அமைதிகாத்தவர் 10வது ஓவருக்கு மேல் ஃபுல் ஃபார்முக்கு வந்தார். 41 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். கோலியின் முதல் அரை சதம் இது.

மீண்டும் மீண்டும் ஒரே தவறையே செய்யும் சிஎஸ்கே... கம்பேக் கொடுக்குமா தோனியின் படை? #CSKvSRH

ஆர்ச்சரின் பந்துவீச்சில் 16வது ஓவரில் படிக்கல் அவுட் ஆனாலும், கோலியின் ஆட்டம் தொடர்ந்தது. படிக்கல் 45 பந்துகளில் 63 ரன்கள் அடித்து அவுட் ஆக, கோலி கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரியோடு ஆட்டத்தை முடித்தார். 53 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 72 ரன்கள் அடித்திருந்தார் கோலி.

மிக மிக நீண்ட கால இடைவெளிக்குப்பிறகு டேபிள் டாப்பராக முதலிடம் பிடித்திருக்கிறது கோலியின் பெங்களூரு. வாழ்த்துகள் பாய்ஸ்!
அடுத்த கட்டுரைக்கு