Published:Updated:

தோனியை ஃபாலோ செய்த கோலி... பழைய ஃபார்முக்கு திரும்பிய ஆர்சிபி-யின் டாப் 10 தருணங்கள்! #KXIPvRCB

ஆர்சிபி | #KXIPvRCB
ஆர்சிபி | #KXIPvRCB ( twitter.com/IPL )

ஆச்சர்யமாக ஐதராபாத்தை வீழ்த்தி வெற்றியோடு தொடங்கிய ஆர்சிபி மீண்டும் தன் பழைய ஃபார்முக்கு வந்துவிட்டது.

முதல் போட்டியில் டெல்லியிடம் சூப்பர் ஓவரில் தோல்வியடைந்த பஞ்சாப், பெங்களூருவை 97 ரன்களில் தோற்கடித்திருக்கிறது. பெங்களூரு பையனான கே.எல்.ராகுலாலேயே வீழ்ந்திருக்கிறது பெங்களூரு டீம்.

கோலி சொதப்பல்ஸ்!

என்ன காரணத்துக்காக இந்த ஐபிஎல் டீம் கேப்டன்கள் டாஸ் வென்றதும் முதலில் பெளலிங்கைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது இன்னமும் புரியவில்லை. டியூவால் முதலில் பெளலிங்கைத் தேர்ந்தெடுக்கிறோம் என்கிறார்கள். ஆனால், முதல் போட்டியைத்தவிர மற்ற போட்டிகளில் முதலில் பேட் செய்த அணியே வெற்றிபெற்றிருக்கிறது. அதுவும் கடந்த மூன்று போட்டிகளாக முதலில் பேட்டிங் செய்யும் அணி 200 ரன்கள் வரை அடிக்கிறது. சேஸ் செய்யும் அணிகள் தோல்வியடைகின்றன. கோலியே ஐதராபாத்துக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடித்தான் வெற்றிபெற்றார். இந்தச் சூழலில் பஞ்சாபுக்கு எதிராக கோலி டாஸ் வென்ற வேகத்தில், சஹால் எனும் ஒரே பெளலரை மட்டுமே நம்பி முதலில் பெளலிங் என அறிவித்துவிட்டார்.

#KXIPvRCB
#KXIPvRCB
twitter.com/IPL

ராகுல் அசத்தல்கள்!

பெங்களூரு பையனான கே.எல்.ராகுல் அடித்த அடியில் கலங்கிப்போனது ஆர்சிபி. அகர்வாலோடு ஓப்பனிங் இறங்கிய கே.எல்.ராகுலை கடைசிவரை பெங்களூரு பெளலர்ஸால் வீழ்த்தவேமுடியவில்லை. கே.எல்.ராகுல் 80களில் விளையாடிக்கொண்டிருந்தபோது அவர் கொடுத்த 2 கேட்சுகளையுமே கேப்டன் கோலி தவறவிட்டார். இறுதியில் 69 பந்துகளில் 132 ரன்கள் அடித்தார் ராகுல்.

பதற்றப்படாத பஞ்சாப்!

அகர்வால், பூரான், மேக்ஸ்வெல் என ஒரு பக்கம் பேட்ஸ்மேன்கள் அவுட் ஆகிக்கொண்டேயிருந்தாலும் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் அடித்துக்கொண்டேயிருந்தது பஞ்சாப். பெங்களூருவை மிக மிக கூலாக டீல் செய்த பஞ்சாப் இந்த சீசனில் பல அப்செட்களைக் கொடுக்கக்கூடும். முழுக்க முழுக்க பதற்றம் இல்லாமல் ஆடிய ராகுலின் ஆட்டமும், டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து முற்றிலுமாக மாறியிருக்கிறது. சரியான வின்னிங் காம்போவையும் கேப்டன் ராகுல் கண்டுபிடித்துவிட்டார்.

ஸ்டெய்ன் பரிதாபங்கள்!

போன ஐபிஎல்-ல் 'டேல் ஸ்டெய்ன் மட்டும் இருந்திருந்தா கதையே வேறு' என சொல்லிக்கொண்டிருந்தது பெங்களூரு. ஆனால், இந்த சீசனில் ஸ்டெய்னின் கதையோ பரிதாபமாக இருக்கிறது. ஐதராபாத்துக்கு எதிராகவும் பெரிதாக எடுபடாத ஸ்டெய்னின் பந்துவீச்சு பஞ்சாபுக்கு எதிராக மொத்தமாக படுத்துவிட்டது. 4 ஓவர்களில் 57 ரன்கள் கொடுத்து விக்கெட் இல்லாமல் பரிதாபமாக நின்றார் ஸ்டெய்ன். இதில் மிஸ் ஃபீல்டில் சிங்கிள்களை பவுண்டரிகளாகவும் மாற்றி வித்தைகள் காட்டினார்.

#KXIPvRCB
#KXIPvRCB
twitter.com/IPL

சிவமே துணை!

ஷிவம் துபே மட்டுமே பெங்களுருவின் கன்சிஸ்டன்ட் பர்ஃபாமர். முதல் போட்டியிலும் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தவர், பஞ்சாபுக்கு எதிராகவும் 2 விக்கெட்டுகள் எடுத்தார். பேட்டிங்கிலும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறார் துபே. இவரோடு மற்ற பேட்ஸ்மேன், பெளலர்களும் துணை நின்றால் துபே டாப் பர்ஃபாமராகக்கூடும்.

கோலி பயம்!

கடந்த இரண்டு போட்டிகளாக தோனி தன்னுடைய பேட்டிங் பொசிஷனில் களமிறங்காமல் பின்வாங்கியதைப் பின்பற்றினார் கோலி. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாகத்தான் ஆடிக்கொண்டிருந்தார் கோலி. ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ஆடித்தான் பல ரன் வேட்டைகளை நடத்தியிருக்கிறார். ஆனால், இந்த முறை அணிக்குள் ஃபின்ச் வந்திருப்பதாலும், தேவ்தத் படிக்கல் எனும் இளம் வீரர் அணிக்குள் இருப்பதாலும் அவர்களை ஓப்பனிங் இறக்குகிறார் என்பதில் தவறில்லை. ஆனால், அவருடைய 1 டவுன் இடத்தை இன்றையப் போட்டியில் ஜோஜி ஃபிலிப் எனும் ஆஸ்திரேலிய வீரரிடம் கொடுத்தார். ஃபிலிப்புக்கு ஐபிஎல்-ல் இதுதான் இரண்டாவது போட்டி. 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்ய வேண்டிய போட்டியில் முதல் ஓவரிலேயே விக்கெட் விழும்போது அனுபவசாலியான கோலிதானே களத்தில் இறங்கியிருக்கவேண்டும்?!

#KXIPvRCB
#KXIPvRCB

பின்வாங்கல் பிரச்னைகள்!

கோலியின் பின்வாங்கலில் இருந்து ஆர்சிபிக்கு பிரச்னை தொடங்கியது. காட்ரல், படிக்கலையும், கோலியையும் தூக்க, லெக்பிரேக் கூக்ளி பெளலர்களான முருகன் அஷ்வின், ரவி பிஷ்னோயின் சுழலில் பெங்களூரு மொத்தமாக விழுந்தது. இருவரும் ஆளாக்கு தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்ற பெங்களூருவின் ஆட்டம் 100 ரன்களைத்தொட்ட வேகத்தில் முடிந்தது.

ரோஹித் செம்ம ஹிட்டு... ஆமா, கொல்கத்தாவுக்கு டார்கெட்னா என்னன்னு தெரியுமா? #KKRvMI

ஏபி டிவில்லியர்ஸுக்கு என்ன பிரச்னை?

முதல் போட்டியில் 2 டவுனில் இறங்கி 30 பந்துகளில் 51 ரன்கள் அடித்து ஃபார்மில் இருந்த ஏபிடியை பஞ்சாபுக்கு எதிராக ஐந்தாவது பேட்ஸ்மேனாக இறக்கினார் கோலி. ஃபின்ச்சோடு சேர்ந்து அவர் அணியை மீட்டிருக்கலாம். ஆனால், ப்ரஷர் கூடிக்கொண்டே போனதால் மிஸ் டைம் ஷாட்கள் ஆடினார் ஏபிடி. 'என்னால இவ்ளோதான் முடியும்' என்பதுபோல 18 பந்துகளில் 28 ரன்கள் அடித்துவிட்டுக் கிளம்பினார்.

வாஷிங்டன் சுந்தருக்கு என்னதான் ஆச்சு?!

#KXIPvRCB
#KXIPvRCB

வாஷிங்டன் சுந்தரை இந்தியாவுக்கான சர்வதேச டி20 போட்டிகளில் ஓப்பனிங் பெளலராக இறக்குவார் கோலி. ஆனால், ஆர்சிபியில் அவரைக் கட்டக் கடைசி பெளலராகத்தான் பயன்படுத்துகிறார். அவரும் விக்கெட்டுகள் எடுப்பதில்லை என்பதோடு, பேட்டிங்கிலும் பெரிதாக மெனக்கெடுவதில்லை. ஆனால், பஞ்சாபுக்கு எதிராக ஆச்சர்யமாக 30 ரன்கள் அடித்து அணியின் டாப் ஸ்கோரர் ஆனார்.

பழைய ஃபார்மில் ஆர்சிபி!

ஆர்சிபி-யின் பிரச்னையே கன்சிஸ்டென்ஸிதான். ஒரு போட்டியில் 200 ரன்கள் வரை அடிக்கும் அவர்கள் அடுத்தப்போட்டியிலேயே 100 ரன்களுக்கும் குறைவாக அடித்து ஆல் அவுட் ஆவார்கள். நேற்றும் அதுதான் நடந்தது. 109 ரன்களில் பெங்களூரு ஆல் அவுட். இந்த நிலையாமை தொடர்ந்தால் ஈ சாலா கப் 2020-யிலும் நம்தாகாது!

அடுத்த கட்டுரைக்கு