Election bannerElection banner
Published:Updated:

IPL 2020: `ரகிட ரகிட' கெயில்; கோலி எடுத்த தவறான முடிவுகளால் பஞ்சாபிடம் வீழ்ந்த ஆர்சிபி! #RCBvKXIP

கார்த்தி
#RCBvKXIP
#RCBvKXIP

சினங்கொண்ட சிங்கத்த இதுக்கு மேலயும் செல்லில் அடைத்திருந்தால், அது செல்லை சிதைத்துவிடும் என்பதால், கெயிலுக்கு ஒரு வழியாக வாய்ப்பு வழங்கினார். #RCBvKXIP

இந்த ஐபிஎல் சீசன் ஆரம்பித்தபோது இருந்த ஷார்ஜா இப்போதில்லை. முதல் ஏழு இன்னிங்ஸில் மட்டும்தான் 200+ ரன்கள் அடிக்கப்பட்டன. அதன் பிறகு ஒரு போட்டிகூட க்ளோஸ் ஃபினிஷ் இல்லை. 18, 34, 46, 82 என ரன்களின் வித்தியாசம் ஆடும் இரு அணிகளுக்கிடையே அதிகரித்து வருவதைப் பார்த்து வருகிறோம். அதிலும், ஷார்ஜாவில் ராஜஸ்தானைத் தவிர யாரும் இரண்டாம் பேட்டிங் பிடித்து வென்றதில்லை. டாஸ் வென்று பேட்டிங் என்றதுமே கோலி இன்னொரு வின் என நினைத்திருப்பார். ஆனால், இந்த சீசனில் பஞ்சாபிடம் ஒரே தோற்ற அணி பெங்களூருதான். ஒரு வெற்றிதான் என்ற அவலத்தை இந்தப் போட்டியாவது மாற்றி அமைக்குமா? முடியும் என்றது பஞ்சாப்.

#RCBvKXIP
#RCBvKXIP
பஞ்சாபைப் பொறுத்தவரையில், பிளேயிங் லெவனில் மூன்று மாற்றங்களையேனும் செய்யாமல் இருந்தால், அணியின் பயிற்சியாளர் அணில் கும்ப்ளேவுக்கு தூக்கம் வராது. இந்தப் போட்டியிலும் மூன்று மாற்றங்கள்.

சினங்கொண்ட சிங்கத்த இதுக்கு மேலயும் செல்லில் அடைத்திருந்தால், அது செல்லை சிதைத்துவிடும் என்பதால், கெயிலுக்கு ஒரு வழியாக வாய்ப்பு வழங்கினார். குறிஞ்சி மலர் கூட பூத்துவிடும், ஆனால், முருகன் அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம். சில போட்டிகள் கழித்து மீண்டும் வாய்ப்புப் பெற்றார் அஷ்வின்.

ஃபிஞ்சும் படிக்கலும் இறங்க, முதல் ஓவரை மேக்ஸிக்கு கொடுத்தார். ஒரு சிக்ஸ் தவிர பெரிய சேதாரம் இல்லை. அந்த பந்து இன்ஃபீல்டைத்தான் தாண்டியது, அவ்வளவுதான். ஆனால், 60+ மீட்டர் உயர சிக்ஸ் அது. இதெல்லாம் சிக்ஸ்னு சொன்னா, கொல்கத்தா சிரிக்கும்டா என நினைத்திருப்பார் கங்குலி. இந்த சீசனில் பெங்களூருவின் வெற்றிகளுக்குப் பின்னால் இருக்கும் முதல் காரணம் சிறுவன் படிக்கல்லின் பேட்டிங். ஆனால், அந்த அனுபவமின்மைதான் அவரை சில போட்டிகளில் அவுட்டாக்கி விடுகிறது. பவர்பிளே இறுதியில் ஒரு விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்திருந்தது பெங்களூரு. முருகன் அஷ்வின் வீசிய முதல் ஓவரிலேயே போல்டானார் ஃபிஞ்ச். பெங்களூருக்கு எதிராக 3 விக்கெட்டுகள், ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 9 பந்துகள் வீசி 1 விக்கெட் எடுத்த அஷ்வினுக்கு மனது வந்து அடுத்த வாய்ப்பை கொடுத்திருக்கிறார்கள் கும்ப்ளேவும், ராகுலும். சென்னை டீம் மாதிரியே நீங்களும் ஏன் பாஸ் தமிழ்ப் பையனுக்கு வாய்ப்பு கொடுக்க இப்படி யோசிக்கறீங்க?!

#RCBvKXIP
#RCBvKXIP

டூ டவுனாக இடது கை ஆட்டக்காரர் வாஷிங்டன் சுந்தர் களமிறக்கப்பட்டார். கூக்ளி பந்தில் சுந்தரையும் போல்டாக்கினார் அஷ்வின். அப்பாடா ஏபிடி வருவார் மழை பொழியும் என காத்திருந்தால், அடுத்த இடது கை ஆட்டக்காரரான ஷிவம் டூபேவை களமிறக்கினார்கள். ரைட் லெஃப்ட் காம்பினேசன் அவசியம்தான் என்றாலும், 60 மீட்டர் தாண்டினால் சிக்ஸ் என இருக்கும் ஒரு கிரவுண்டில் காமெடியாக ஆட்களை இறக்கிக்கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட பெங்களூரு இதற்கு முந்தையை சீசன்களில் செய்யும் கோமாளித்தனங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன. அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்தார் டூபே. இந்த சீசனில் கிறிஸ் ஜோர்டானுக்கான முதல் விக்கெட்டாக மாறி அவுட்டானார் டூபே.

அடுத்த எந்த இடது கை ஆட்டக்காரரை இறக்கலாம் என பிளேயிங் 11ஐ பார்த்திருப்பார்கள். சஹால், சிராஜ் வரை எல்லோருமே வலது கை ஆட்டக்காரர்கள். இன்னும் கொஞ்சம் டீமுக்கு அப்பால் சென்று கெயிலைத்தான் கூட்டி வர வேண்டும்.̀ 'நான் வேணும்னா லெப்ஃட் பிடிச்சுக்கறண்டா டேய்' என சொல்லி, டி வில்லியர்ஸே ஆட வந்தார். என்ன வச்சு காமெடியாடா பண்றீங்க என வந்த வேகத்தில் அவுட்டானார் ஏபிடி. அதே ஓவரில், ஷமி பந்துவீச்சில் கோலியும் அவுட். பெங்களூரு தன் இரண்டு தூண்களையும் ஒரே ஓவரில் இழந்தது. ஷமி வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் உடானாவும், மோரிஸும் இணைந்து 3 சிக்ஸ் உட்பட 24 ரன்கள் எடுத்தனர்.

ஏம்பா சும்மா அடிச்சாலே சிக்ஸ் போகுதே, நீ ஏன்ப்பா 39 பால் பிடிச்சு 48 ரன் அடிச்ச என கோலியிடம் நிச்சயம் கேட்டிருப்பார் கிறிஸ் மோரிஸ். 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் அடுத்தது பெங்களூரு.
#RCBvKXIP
#RCBvKXIP

கெயிலுக்காக யார் தன்னுடைய ஓப்பனிங் இடத்தை தியாகம் செய்வார்கள் என யோசித்துக்கொண்டிருந்தால், வழக்கம்போல மயாங்க் அகர்வாலும், ராகுலுமே இறங்கினார்கள். பவர் பிளே இறுதியில் 56 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் ஆடிய எட்டு ஆட்டங்களில், பவர்பிளேயில் விக்கெட் விழாமல் இருப்பது இது ஐந்தாவது முறை. இதுதான் பஞ்சாபின் ஆகப்பெறும் பலம். பலவீனம், மற்ற எல்லோரும் வரிசையாக அவுட் ஆகிவிடுவது. 3 சிக்ஸ், நான்கு பவுண்டரி என 25 பந்துகளில் கெயில் ஸ்டைலில் 45 ரன்கள் எடுத்த மயாங்க் சஹால் பந்துவீச்சில் போல்டானார். 'ரகிட ரகிட ரகிட' என கெயில் உள்ளே நுழைந்தார்.

மத்தவங்க சும்மா அடிச்சாலே சிக்ஸ் போகிற கிரவுண்டில், கெயில் அடித்தால் என்ன ஆவது என, முழு கவனத்தையும் கெயிலின் பக்கம் திருப்பினார்கள் பௌலர்கள். அதன் காரணமாக அவுட்சைட் ஆஃபில், அடிச்சுடு என ராகுலுக்கு ஒரு பந்தைப் போட்டார் சிராஜ். லெக் சைடில், 90+ மீட்டரில் கிரவுண்டுக்கு வெளியே பந்தை அனுப்பினார் ராகுல். அடுத்தும் அதே பந்து, அதே ரிசல்ட். "யாரேனும் 100 மீட்டர்களுக்கு மேல் சிக்ஸ் அடித்தால், அதற்கு அதிக ரன்கள் கொடுக்க வேண்டும்" என நேற்று ஜாலியாக பேசினார் ராகுல். அந்த டோனில் சிக்ஸ் அடித்தார் ராகுல்.

#RCBvKXIP
#RCBvKXIP

சற்றே கள்ள மவுனியாக அமைதி காத்த கெயில், சுந்தரின் ஓவரில் ̀கெயில்' மோடுக்கு மாறினார். இரண்டு சிக்ஸ், அதிலும் அந்த இரண்டாவது டிரேட்மார்க் கெயில் ஸ்டைல். காலம் காலமாக கெயில் ஆடும் அதே அசுர ஆட்டம்! எப்போதெல்லாம் கெயில் கொஞ்சம் கடினமாக ஃபீல் செய்கிறாரோ, அப்போதெல்லாம் இரண்டு அடிகள் முன் வந்து கெத்து காட்டுவார். ஆத்தி, வெளுக்கப்போறாரோ என பந்துவீச்சாளரைக் குழப்பி, பந்தை ரிலீஸ் செய்ய வைப்பது கெயிலின் ஆதி கால டெக்னிக். டீப் மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்ஸ்.

ஆட்டத்தின் 14வது ஓவரை வீசினார் மோரிஸ். வழக்கம்போல கெயில் அப்பட்டமாக எல்பிடபிள்யூவில் அவுட் என அறிவித்தார் அம்பயர். ராகுலிடம் 'ஏம்பா நான் பேட்டை வச்சேன்' என்பது போல் பேசினார் கெயில். ரிவ்யூ செய்ய, தப்பித்தது கெயிலின் விக்கெட். ஆம், கெயில் பேட்டை வைத்திருக்கிறார்.

5 ஓவர்களில் 46 ரன்கள் எடுக்க வேண்டும். 9 விக்கெட்டுகள் இருக்கின்றன. உடானா, சஹால், சுந்தர், மோரிஸ் என எல்லோருக்கும் ஓவர்கள் இருந்தன. But Kohli had other ideas. சிராஜைக் கொண்டு வந்தார். அளவாக இரண்டு சிக்ஸுடன் 20 ரன்கள். முதலிரண்டு ஓவர்களில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்த சிராஜுக்கு மூன்றாவது ஓவரைக் கொடுத்து 20 ரன்கள் விட்டுக்கொடுக்கச் சொல்லி அழகு பார்ப்பதெல்லாம் கோலியின் கேப்டன்ஸிக்கே உரித்தான மகுடங்கள். அடுத்த சுந்தரின் ஓவரிலும் இரண்டு சிக்ஸ் அடித்து இந்த ஐபிஎல் சீசனில் தன் முதல் அரை சதத்தை பதிவு செய்தார் கெயில். பேட்டிலிருக்கும் BOSS லோகோவைக் காட்டி கெத்துக் காட்டினார் கெயில்.

#RCBvKXIP
#RCBvKXIP

இந்த மனுஷனுக்கு 41 வயதாகிறது. பணம், புகழ் எல்லாவற்றையும் கடந்து இந்த விளையாட்டின் மீது கெயிலுக்கு இருக்கும் ஆர்வம்தான் அவரை இன்னும் இதில் விளையாட வைக்கிறது. விளம்பர இடைவேளியில், அதே 41 வயதில் ஷேவாக் ஏதோ விளம்பரத்தில் வந்துகொண்டிருந்தார். சில தினங்களுக்கு முன்னர், இர்ஃபான் பதானும், ஹர்பஜனும், வயதைக் காரணம் காட்டி அவர்களை ஒதுக்கிவிட்டனர், ஆனால், தோனி இன்னும் விளையாடுகிறார் என மறைமுகமாக ட்விட்டரில் நக்கல் செய்து கொண்டிருந்தனர். கெயிலின் இந்த அரைசதம் அவர்களுக்கானது.

பட்லரைக் குறிபார்த்த 156.2 கிமீ பந்து... வேகத்தால் அச்சுறுத்தும் ஆன்ரிச் நார்க்கியா யார்?! #Nortje

கடைசி ஓவரில் 2 ரன்கள் தேவை. பந்து வீச வந்தார் சஹால். சஹால் வீசிய இரண்டாவது பந்தை கெயிலே ஆச்சர்யமாகப் பார்த்தார். முழுவதுமாக அவுட்சைட் ஆஃபில் வெளியே சென்ற பந்து, சட்டென உள்ளே திரும்பியது. மூன்றாவது பந்தில் ஒரு ரன். அடுத்த மூன்று பந்துகளில் ஒரு ரன் தேவை. வாஷிங்டன் சுந்தர் பிடித்துவிட, அந்த பாலிலும் ரன் இல்லை. இரண்டு பந்துகளில் ஒரு ரன் தேவை. முதல் போட்டியில் இப்படித்தான் கோமாளித்தனம் செய்து, டெல்லியிடம் சூப்பர் ஓவர் வரை போய் தோற்றது பஞ்சாப். சிங்கிளே இல்லாத ஐந்தாவது பந்தில், டெயில் எண்டர் பேட்ஸ்மேன் போல, சிங்கிள் ஓட முயன்று, ரன் அவுட்டானார் கெயில். லாஸ்ட் பால் ஒரு ரன் தேவை. உச்சக் கடுப்பாகி இருப்பார்கள் பஞ்சாப் ரசிகர்கள். பூரன் வந்த வேகத்தில், இதைத்தான் இம்புட்டு நேரமா உருட்டினீங்களா என லாங்க் ஆனில் ஒரு சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.

#RCBvKXIP
#RCBvKXIP

Left - Right காம்பினேஷனுக்காக ஆறாவது வீரராக வில்லியை இறக்கியது; ஷார்ஜா போன்ற குட்டி மைதானத்திலும் பவர்பிளேவுக்குப் பிறகு பிடித்த 12 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் காலம் தாழ்த்தியது; எல்லோருக்கும் ஓவர் இருக்க சிராஜை பந்துவீச அழைத்தது என இன்று கோலியிடம் அத்தனை தவறுகள். ராஜஸ்தான் எப்படி இந்த சீசனில் இருமுறையும் டெல்லியிடம் தோற்றதோ, அதே போல் பெங்களூருவும் இரண்டு முறை பஞ்சாபிடம் தோற்று இருக்கிறது.

50 அடிச்சுட்டேன். 2021க்கும் நான் தயார் என்றார் கெயில். THE REAL ENTERTAINER & UNIVERSAL BOSS!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு