Published:Updated:

தோனி தலைமையில் ஹாட்ரிக் தோல்விகள்... தவறிழைக்கும் சிஎஸ்கே, வாய்ப்பை பயன்படுத்திய ஐதராபாத்! #CSKvSRH

#CSKvsSRH
#CSKvsSRH

அனுபவ வீரர்களை எல்லாம் அவுட் ஆக்கிவிட்டு பொடியன்களை வீழ்த்தமுடியாமல் தவித்ததில்தான் சிஎஸ்கேவின் வீழ்ச்சி ஆரம்பித்தது. ஜடேஜா, தாக்கூர் தவறவிட்ட இரண்டு கேட்ச்கள், மற்றும் தாக்கூரின் நோ பாலால் நழுவிப்போன கார்கின் விக்கெட் எனத் தொடர்ந்து தவறிழைத்துவருகிறது சிஎஸ்கே.

தொடர்ந்து மூன்றாவது லீக் போட்டியில் தோல்வியடைந்திருக்கிறது சிஎஸ்கே. தோனி தலைமையில் மும்பையை வென்று 2020 ஐபிஎல் தொடரைத் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான், டெல்லி, ஐதராபாத் எனத் தொடர்ந்து மூன்று அணிகளுக்கு எதிராகவும் தோல்வியடைந்திருக்கிறது.

நான்காவது போட்டியிலும் சரியான ப்ளேயிங் லெவனைத் தேர்ந்தெடுக்காதது, பேட்டிங் ஆர்டரில் மாற்றங்களை செய்யாதது, ஃபீல்டிங் சொதப்பல்கள்தான் தோல்விக்கான காரணங்களாக அமைந்திருக்கிறது. சென்னை வெர்சஸ் ஐதராபாத் போட்டியின் டாப் 10 தருணங்கள் இங்கே!

#CSKvSRH
#CSKvSRH

டீம் மாற்றங்கள்!

துபாயில் இதுவரை நடந்திருக்கும் 6 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வென்றிருப்பதால் டாஸ் வென்றதும் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார் ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர். டெல்லியைத் தோற்கடித்த அதே ப்ளேயிங் லெவனோடு ஐதராபாத் களமிறங்க, தோனி மூன்று மாற்றங்களை செய்திருந்தார். முரளி விஜய் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூர் அணியில் இடம்பிடித்தார். ருத்துராஜ் கெய்க்வாடுக்கு பதிலாக அம்பதி ராயுடுவும், ஜோஷ் ஹேஸில்வுட்டுக்கு பதிலாக ட்வெயின் பிராவோவும் அணிக்குள் இடம்பிடித்திருந்தார்கள்.

சிஎஸ்கேவின் பவர்ப்ளே!

தீபக் சஹாரின் முதல் ஓவரே இன்ஸ்விங்கர்களால் மிரட்டியது. ஆட்டத்தின் நான்காவது பந்திலேயே க்ளீன்போல்டானார் ஃபார்மில் இருந்த பேர்ஸ்டோ. பவர்ப்ளே ஓவர்களில் சஹாருக்கு மூன்று ஓவரும், சாம் கரணுக்கு 2 ஓவர்களும், தாக்கூருக்கு ஒரு ஓவரும் என முழுக்க வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தி ஐதராபாத்தை 42 ரன்களுக்குள் கட்டுப்படுத்திவைத்திருந்தார் தோனி.

#CSKvsSRH
#CSKvsSRH

அவசரப்பட்ட கேன் வில்லியம்சன்!

தாக்கூரின் இரண்டாவது ஓவரிலேயே மணிஷ் பாண்டே அவுட், சாவ்லாவின் இரண்டாவது ஓவரில் வார்னர் அவுட், அடுத்தப்பந்திலேயே கேன் வில்லியம்சன் ரன் அவுட் என 11 ஓவருக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து வெறும் 69 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது ஐதராபாத்.

பொடியன்கள் ஆடிய ஆட்டம்!

இந்தியாவின் அண்டர் 19 டீம் கேப்டனான பிரியம் கார்க், கேன் வில்லியம்சனின் அழைப்புக்கு ஓடாமல் இருந்ததே ரன் அவுட்டுக்குக் காரணம். கிளாஸிக்கல் பேட்ஸ்மேனான கேனை அவுட் ஆக்கியதும் கார்கின் மீது பிரஷர் கூடியது. ஆனால், சிஎஸ்கே பெளலிங்கை சிறப்பாக சமாளித்து ஆடினார் பிரியம். அவருக்குத் துணையாக 20 வயதேயான பஞ்சாப் வீரர் அபிஷேக் ஷர்மாவும் சேர்ந்துகொண்டு சென்னை பெளலர்களுக்கு ஆட்டம் காட்டினார்கள். 11-வது ஓவரில் இருந்து அடுத்த ஆறு ஓவர்களுக்கு விக்கெட்டே விழாமல் ரன்ரேட்டை கூட்டிக்கொண்டேபோனது இந்த பொடியன்ஸ் கூட்டணி. தீபக் சஹாரின் 18வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிட்டது சிஎஸ்கே. ஆனால், இதே ஓவரின் கடைசிப்பந்தில் அபிஷேக் ஷர்மா தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 24 பந்துகளில் 31 ரன்கள் அடித்திருந்தார் அபிஷேக்.

#CSKvSRH
#CSKvSRH

கலக்கிய கார்க்!

ஐதராபாத்தின் ஓட்டுமொத்த பேட்டிங் ப்ரஷரையும் தன் தோள்களில் சுமந்து சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார் பிரியம் கார்க். வெறும் 23 பந்துகளில் 50 ரன்கள் அடித்த கார்க், தாக்கூரின் பெளலிங்கில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனால், அது நோ பால் என டிவி நடுவர் அறிவிக்க கடைசிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாகவே களத்தில் நின்றார் கார்க். 11 ஓவர்களில் 69 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கேவிடம் சரண் அடைந்திருந்த ஐதராபாத், கார்க் மற்றும் அபிஷேக்கின் பார்ட்னர்ஷிப்பால் கடைசி 9 ஓவர்களில் 95 ரன்கள் சேர்த்தது.

வாட்சனின் தொடர் சொதப்பல்ஸ்!

165 ரன்களை சேஸ் செய்ய வாட்சனோடு இந்த முறை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக வந்தவர் டுப்ளெஸ்ஸி. வழக்கம்போல தடவிக்கொண்டிருந்த வாட்சன், ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் புவனேஷ்வர் குமார் பெளலிங்கில் 1 ரன்னில் அவுட் ஆனார். பவர்ப்ளேவின் கடைசி ஓவரில் நடராஜன் பெளலிங்கில் ராயுடு அவுட். அவர் அடித்தது 8 ரன்கள். விக்கெட் போனாலும் நான் இருக்கேன் என பவுண்டரிகள் அடித்து டுப்ளெஸ்ஸி நம்பிக்கை கொடுத்தார். ஆனால், பவர்ப்ளேவின் கடைசிப்பந்தில் அவரும் ரன் அவுட் ஆனார். தோனி ஐந்தாவது பேட்ஸ்மேனாகக் களத்துக்கு வந்தார்.

#CSKvsSRH
#CSKvsSRH

மச்சக்காரன் கேதர்!

கேதர் ஜாதவ் இருக்கும்வரை சென்னை அணிக்கு நல்லது நடக்காதுபோல! தொடர்ந்து நான்காவது போட்டியாக ஃபார்மில் இல்லாத கேதருக்கு வாய்ப்பு கொடுத்த தோனிக்கு மீண்டும் ஒரு சம்பவம் செய்துவிட்டுப் போனார் கேதர். காஷ்மீர் பொடியன் அப்துல் சமதுக்கு தனது விக்கெட்டை பரிசாகக் கொடுத்தவர் மிகப்பொறுமையாக 10 பந்துகளில் 3 ரன்கள் அடித்திருந்தார்.

வேகம் இல்லா ஜடேஜா - தோனி கூட்டணி!

தோனியும் - ஜடேஜாவும் பார்ட்னர்ஷிப் போட்டாலும் கடைசிவரை இவர்கள் ரன்ரேட்டை உயர்த்தவேயில்லை. ரஷித் கானின் பந்துகளைத் தொடவே பயந்தார்கள். ரஷித் கான் விக்கெட் எடுக்கவில்லையென்றாலும் 4 ஓவர்களில் வெறும் 14 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதுவும் அவரின் முதல் மூன்று ஓவர்களில் வெறும் 5 ரன்கள் மட்டுமே ஜடேஜாவும், தோனியும் அடித்திருந்தார்கள். ரஷீத் மட்டுமல்ல கலீல், நடராஜன் என யார் பெளலிங்கிலுமே இந்த இணை அடித்துஆடாததால் தேவையான ரன்ரேட் உயர்ந்துகொண்டேபோனது. ஜடேஜா 35 பந்துகளில் 50 ரன்கள் அடித்துவிட்டு அடுத்தப்பந்திலேயே அவுட் ஆனார். 16 மற்றும் 17 என இரண்டு ஓவர்களிலும் முழுக்க முழுக்க ஜடேஜாவே ஸ்ட்ரைக்கில் இருந்தார்.

#CSKvSRH
#CSKvSRH

தடுமாறும் தோனி!

இனிமேலும் தோனியிடம் ஃபினிஷிங் ஆட்டத்தை எதிர்பார்க்கமுடியாது என்பதற்கு இன்னுமொரு உதாரணம் இந்த இன்னிங்ஸ். கடைசி 2 ஓவர்களில் 44 ரன்கள் அடிக்கவேண்டும். முதல் பந்தை வீசிவிட்டு புவனேஷ் காயமடைய, அடுத்த 5 பந்துகளை வீச கலீல் வந்தார். தோனி ஸ்ட்ரைக். கலீலின் முதல் பந்து மிஸ் ஃபீல்டால் பவுண்டரிக்குப் போனது. அதற்கு அடுத்த இரண்டு பந்துகளையும் அடிக்கமுடியாமல் திணறிய தோனிக்கு தொடர்ந்து இரண்டு ரன்கள்தான் கிடைத்தன. இந்த ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார் தோனி. கடைசிப்பந்தில் சிங்கிள் அடித்து கடைசி ஓவருக்கு ஸ்ட்ரைக் எடுத்தார். அதிக அனுபவமில்லாத அப்துல் சமத்தான் கடைசி ஓவர் பந்து வீச்சாளர். முதல் பந்தையே வைடாக வீச அது பவுண்டரிக்குப்போக சென்னைக்கு போனஸாக 5 ரன்கள் கிடைத்தது. இப்போது 6 பந்துகளில் 23 ரன்கள் அடிக்கவேண்டும். முதல் பந்தில் டபுள், அடுத்தப்பந்தில் பவுண்டரி அடித்த தோனியால் மூன்றாவது பந்தில் 1 ரன் மட்டுமே அடிக்கமுடிந்தது. அடுத்தடுத்தப்பந்துகளை சமத் சிறப்பாக வீச சிங்கிள்கள் மட்டுமே தொடர, கடைசிப்பந்தில் ஆறுதல் சிக்ஸரோடு மேட்சை முடித்தார் சாம் கரண். ஐதராபாத் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

IPL 2020: மும்பை மேரி ஜான்... அரே ஓ சம்போ பஞ்சாப்! #KXIPvMI

தவறவிட்ட சிஎஸ்கே!

அனுபவ வீரர்களை எல்லாம் அவுட் ஆக்கிவிட்டு பொடியன்களை வீழ்த்தமுடியாமல் தவித்ததில்தான் சிஎஸ்கேவின் வீழ்ச்சி ஆரம்பித்தது. ஜடேஜா, தாக்கூர் தவறவிட்ட இரண்டு கேட்ச்கள், மற்றும் தாக்கூரின் நோ பாலால் நழுவிப்போன கார்கின் விக்கெட் எனத் தொடர்ந்து ஃபீல்டிங்கிலும், பெளலிங்கிலும் தவறிழைத்துவருகிறது சிஎஸ்கே. அணியின் நம்பர் 1 ஸ்பின்னரான இம்ரான் தாஹிர் இன்னமும் பென்ச்சில் இருக்கிறார். தொடர்ந்து சொதப்பும் கேதர் ஜாதவுக்கும், வாட்சனுக்கும் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருவது தோனியின் மீதான நம்பிக்கையைக் குறைக்கிறது. இனி ப்ளே ஆஃபுக்குள் நுழைய ஒவ்வொரு போட்டியுமே முக்கியம். சரியான ப்ளேயிங் லெவனோடு அடுத்தப்போட்டிக்கும் வரவில்லையென்றால் சென்னை தொடர்ந்து அவமானகரமானத் தோல்விகளையே சந்திக்கவேண்டியிருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு