Published:Updated:

அதிரடி காட்டிய பிரித்வி, ஷ்ரேயாஸ்; போராடிய மார்கன், திரிபாதி... மீண்டும் டெல்லி நம்பர் ஒன்! #DCvKKR

கார்த்தி
#DCvKKR
#DCvKKR

18 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த மார்கன், நோர்ட்டீ பந்தில் பவுண்டரியில் நின்றுகொண்டிருந்த ஹிட்மெயரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவை. #DCvKKR

சார்ஜாவில் இந்த ஐபிஎல் சீசனில் நடக்கும் மூன்றாவது போட்டி. முதலிரண்டு போட்டியைப் பார்த்த யாரும், 200 ரன்களுக்கு குறைந்து இந்த மைதானத்தில் எடுத்துவிட்டால், அந்த அணியை நிரந்தர தடை செய்துவிடலாம் என்னும் அளவுக்கு சின்ன மைதானம். பௌலர்களுக்குப் பதிலாக மெஷின்களைப் பயன்படுத்துவதுகூட சாலப் பொருத்தமாக இருக்கும். அந்த அளவுக்கு ராஜஸ்தான் வெர்சஸ் சென்னை போட்டியில் 416 ரன்களும், பஞ்சாப் வெர்சஸ் ராஜஸ்தான் போட்டியில் 449 ரன்களும் அடித்து நொறுக்கப்பட்டன. அதிலும் பஞ்சாபின் 223 ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்தது ராஜஸ்தான். தற்போது அதே மைதானத்தில் டெல்லிக்கும், கொல்கத்தாவுக்கு போட்டி. யார் வென்றாலும் டேபிள் டாப்பராக மாறிவிடலாம். என்ன நடந்தது, ஒரு ஜாலி ரீவைண்ட்!
#DCvKKR
#DCvKKR

இந்த மைதானத்தில் எவ்வளவு அடித்தாலும் பத்தாது, யார்க்கர்கள் வேண்டுமாயின் காப்பாற்றலாம், மற்றபடி சேஸ் செய்வது நல்லது என்னும் பிட்ச் ரிப்போர்ட்டுக்கு ஏற்ப, டாஸ் வென்றதும் சேஸிங் என்றார் டிகே. சுனில் நரைனின் மோசமான ஃபார்மை மனதில் வைத்து, அவருக்குப் பதிலாக அதிரடி ஆட்டக்காரர் டாம் பேண்டனை இறக்குவார் என எல்லோரும் எதிர்பார்த்திருக்க, குல்தீப் யாதவை அமர வைத்துவிட்டு ராகுல் திரிபாதியை எடுத்தார். சரி, இந்த சீசன்லதான் எல்லா ராகுலும் அடிக்கறாங்கள்ல, இந்த ராகுலும் அடிப்பார்ல. 20 ஓவர்களை வீச, கொல்கத்தாவில் பௌலர்களுக்குப் பஞ்சமே இல்லை. ஆனால், டெல்லி அடிக்கப்போகும் 200+ ரன்களை சேஸ் செய்ய வேண்டும். அதற்காகத்தான் ராகுலை எடுத்திருந்தார் டிகே. காயம் காரணமாக ஓய்வில் இருந்த அஷ்வின், அக்‌ஷருக்குப் பதிலாக களமிறங்கினார். இஷாந்துக்குப் பதிலாக ஹர்ஷல் பட்டேல் பந்துவீச தேர்வானார்.

கம்மின்ஸ், மவி, வருண் சக்ரவர்த்தி ஓவர்களில் அமைதி காத்து சிங்கிள்ஸ் எடுத்து வந்த ப்ரித்வி ஷா, தவான் ஜோடி, நரைன் என்றதும் ஆரவாரமானார்கள். ஒரு காலத்தில் நரைன் பந்துவீச்சு என்றால், தொடவே யோசிப்பார்கள். இப்படித்தான் அதற்கு முன், அஜந்தா மெண்டிஸின் சுழல் பெரிதாய் பேசப்பட்டது. எல்லோரும் முத்தையா முரளீதரன், ஷேன் வார்னே ஆகிட முடியாதே! நரைனின் பந்தில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து, 'வெல்கம் டு ஷார்ஜா' என நரைனுக்கு பொக்கே கொடுத்தார் தவான். வருணின் ஓவரில் மீண்டும் சிக்ஸுக்கு ஆசைப்பட்டு அடிக்க, மார்கனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் தவான். பவர்பிளே முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்திருந்தது டெல்லி.

#DCvKKR
#DCvKKR

ஒன் டவுன் ஸ்ரேயாஸ் ஐயர். இதற்கு முன்னர் ஸ்ரேயாஸை நாலு முறை அவுட்டாக்கியிருக்கிறார் ரஸல். அந்த நம்பிக்கையில் ரஸலை பந்துவீச அழைத்தார் டிகே. அந்த ஓவரில் வெறும் நான்கு ரன்கள். ரஸலின் அடுத்த ஓவரிலும் 3 ரன்கள் மட்டுமே அடித்தது டெல்லி. நாலு பவுண்டரி, நாலு சிக்ஸருடன் 66 ரன்கள் அடித்த பிரித்வி ஷா, டெல்லிக்கு வலுவான தொடக்கம் கொடுத்த திருப்தியில் நாகர்கோட்டியின் பந்துவீச்சில் அவுட்டானார். 26 பந்துகளில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகவேக அரைசதத்தை பதிவு செய்தார். கடைசி ஐந்து ஓவர்கள்தான் எல்லாமே என்பதால், அதில் இன்னும் உக்கிரமாக ஆடியது டெல்லி.

ஓவருக்கு 15 ரன்கள் எளிதாக வந்துகொண்டிருந்தன. ரஸல் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 7 ரன். அட, அப்ப நான்தான் இங்க பெஸ்ட் பௌலரா என்பது போல் 'என் ஆர்மஸ பாத்தியாடா' எனக் கெத்தாக இருந்தார் ரஸல். ஆம், அவரின் நான்கு ஓவர்கள் மட்டும் தான் 29 ரன்கள். கம்மின்ஸ் 4 ஓவரில் 49 ரன்கள் (5*4, 2*6), ஷிவம் மவி 3 ஓவரில் 40 ரன்கள் (6*4, 1*6), வருண் 4 ஓவரில் 49 ரன்கள் (5*4, 3*6) நரைன் 2 ஓவரில் 26 ரன்கள் என பாட்ஷா படத்தில் ரஜினியிடம் அடி வாங்கிய அடியாள்கள் போல், பரிதாபமாக இருந்தது கொல்கத்தாவின் பௌலிங். ஆனால், இந்த மைதானத்தில் இதெல்லாம் எதிர்பார்த்ததுதான் என்பதால், அடிச்சு ஓட்டு அடிச்சு ஓட்டு என அடுத்த இன்னிங்ஸுக்கு தயாரானது கொல்கத்தா. 228 ரன்களை சேஸ் செய்தால் வெற்றி.

#DCvKKR
#DCvKKR

நோர்ட்டீ ஓவரில் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே தன் விக்கெட்டைப் பரிதாபமாக இழந்தார் நரைன். ஒன் டவுனில் வந்த கீப்பர் கில்லையும், ஓப்பனர் ராணாவையும் அதிகம் நம்பியிருந்தது டெல்லி. பவர் பிளே முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்தது கொல்கத்தா. ஓவருக்கு பத்து ரன் வந்திருச்சு. இன்னும் கொஞ்சம் அடிச்சா, டார்கெட்ட பிடிச்சுடலாம் என பருத்திவீரன் கஞ்சா கருப்புவாய் அடுத்தடுத்து ஓவர்களுக்கு தயாரானார்கள். மிஸ்ராவின் முதல் ஓவரில் வெறும் இரண்டு ரன்கள். 37 வயதான சூப்பர் சீனியர் மிஸ்ரா அந்த ஏரியா சிறுவனான 21 வயது சுப்மான் கில்லை அவுட்டாக்கி பார்ட்னர்ஷிப்பை பிரேக் செய்தார்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரஸல் வெர்சஸ் ரபாடா போட்டி நடைபெற்றது. இரண்டாவ்து பந்தில் மிட் ஆன் திசையில் ஒரு பவுண்டரி, நான்காவது பந்தில் லெக் சைடில் ஒரு சிக்ஸ் என அடித்து அமர்க்களப்படுத்தினார் ரஸல். அட, என எழுந்து உட்காருவதற்குள் அடுத்த பந்திலேயே அவுட். அதான் ரஸல். அடுத்ததாக வந்தார் கேப்டன் டிகே. இந்த சீசனில் இதுவரை பெரிதாக ஒன்றும் அடிக்கவில்லை. டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அளவுக்கு 200 ஸ்டிரைக் ரேட்டில் 80 ரன்கள் எல்லாம் டிகேயிடம் எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்ப்பதெல்லாம், குறைந்தபட்சம் ஒரு கேப்டன் இன்னிங்ஸ். அதுவும் குட்டி மைதானமான சார்ஜாவில் அடிக்க முடியவில்லை என்றால், வேறென்ன செய்வது! ஒன்றும் சொல்வதற்கில்லை. அரைசதம் கடந்த ரானா, ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் அவுட்டாக, அடுத்த பந்திலேயே, தன் விக்கெட்டையும் ஹர்ஷலுக்கு படையல் வைத்தார் டிகே. 8 பந்துகள் பிடித்து 6 ரன்கள். நோர்டியின் ஓவரில் கம்மின்ஸும் அவுட். மீதி மார்கனும், ராகுல் திரிபாதியும்தான்.

#DCvKKR
#DCvKKR

6 ஓவர்களில் 98 ரன்கள் எடுக்க வேண்டும். 15வது ஓவரில் வெறும் 6 ரன்கள். ரபாடா ஓவரில் 14 ரன்கள். ஸ்டாய்னிஸ் ஓவரில் ராகுல் திரிபாதி அடி வெளுத்தார். 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி என அந்த ஓவர் களைகட்டியது. கே எல் ராகுல், ராகுல் சஹார், ராகுல் திவேதியா வரிசையில் இந்த ஐபிஎல் சீசனில் ராகுல் திரிபாதியும் ஸ்கோர் செய்கிறார். ராகுல்களின் காலம்போல! டெத் ஓவர்களில் ரபாடாவின் எக்கானமி 8.31 தான் (2019ல் இருந்து). அந்த நம்பிக்கையில் மார்கனுக்கு வீச வந்தார். ஃபைன் லெக்கில், மைதானத்துக்கு வெளியே முதல் பந்தை அனுப்பினார். அடுத்து டீப் ஸ்குயர் திசையில் இன்னொரு சிக்ஸ். அடுத்த பந்தும் சிக்ஸ். ஆக்ஸிஜன் தீர்ந்து போயிருந்த கொல்கத்தா ரசிகர்களை சுவாசிக்க வைத்தனர் ராகுலும், இங்கிலாந்து கேப்டன் மார்கனும்.

கொண்டாட்ட கோலி... ராஜஸ்தானைக் கலைத்துப்போட்ட படிக்கல்... டேபிள் டாப்பரான பெங்களூரு! #RCBvRR

18 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த மார்கன், நோர்ட்டீ பந்தில் பவுண்டரி லைனில் நின்றுகொண்டிருந்த ஹிட்மெயரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவை. ஸ்டாய்னிஸின் யார்க்கரில் போல்டானார் ராகுல். வெறுத்துப் போய் வெளியேறினார். டாப் ஆர்டரும், மிடில் ஆர்டரும் கொஞ்சமேனும் பொறுப்புணர்ந்து ஆடியிருந்தால், மார்கனும் ராகுலும் இவ்வளவு தீவிரமாக ரேஷ் ஷாட் ஆட முயன்று அவுட் ஆகி இருக்க மாட்டார்கள். இறுதியாக கொல்கத்தாவால் 8 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

#DCvKKR
#DCvKKR

"நாங்கள் இன்னும் நரைனின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். பேட்டிங் ஆர்டரை மாற்றுவது குறித்து பயிற்சியாளர்களுடன் இந்தப் போட்டி முடிந்ததும், நிச்சயம் பேசுவேன்" என்றார் டிகே. கேப்டன் இன்னிங்ஸ் ஆடி, டெல்லியின் வெற்றிக்கு வித்திட்ட, ஸ்ரேயாஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று மாலை மும்பைக்கும், சன்ரைசர்ஸுக்கும் எதிரான போட்டி ஷார்ஜாவில்தான் என்பதால், அடுத்த 400 ரன்களை எதிர்பார்க்கலாம். பௌலர்களைத் தவிர அனைவரும் மகிழும் போட்டியாக அதுவும் இருக்கும் என நம்புவோம்.
அடுத்த கட்டுரைக்கு