Published:Updated:

விசிலை உடைச்சுதான் போடணுமோ... அடம்பிடிக்கும் தோனி, அடிவாங்கும் சென்னை! #KKRvCSK

#KKRvCSK
#KKRvCSK

தோனி எப்போதும் சொல்லும் ஹார்ஸஸ் ஃபார் கோர்சஸ் தியரியை அவரே பின்பற்ற மாட்டேன் என அடம்பிடிப்பதில்தான் தோல்விகள் சென்னையை துரத்துகின்றன. கேதர் ஜாதவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுவது ஏன் என்பதை நியாயப்படுத்தும் ஒரு காரணம்கூட தோனியிடம் இல்லை.

நான்காவது தோல்வியை சென்னைக்குப் பரிசளித்திருக்கிறார் தோனி. எளிதில் வெற்றிபெற்றிருக்கவேண்டிய போட்டியை அலட்சிய மிடில் ஓவர் ஆட்டத்தால் கோட்டைவிட்டிருக்கிறார்கள். தோல்விகள் தொடர்ந்தாலும், மாற்றங்கள் எதுவும் செய்யமாட்டோம் என்கிற சென்னையின் போக்கே தோல்விகள் தொடர காரணமாகயிருக்கிறது. அபுதாபியில் கொல்கத்தாவை சென்னை எப்படி குதூகலப்படுத்தியது?!

டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் முதல் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், சென்னையில் மிகமிக முக்கியமான மாற்றமாக(!!!) பியுஷ் சாவ்லாவுக்கு பதிலாக இன்னொரு லெக் ஸ்பின்னரான கரன் ஷர்மாவுக்கு இடம் கொடுத்திருந்தார் தோனி. வழக்கம்போல கேதர் ஜாதவின் இடத்துக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்.

#KKRvCSK
#KKRvCSK

தொடர்ந்து ஓப்பனிங்கில் சொதப்பி வந்த சுனில் நரைனுக்கு பதிலாக ராகுல் திரிபாதியை ஷுப்மான் கில்லோடு இறக்கியது கொல்கத்தா. பிரண்டன் மெக்கல்லம் - தினேஷ் கார்த்திக் கூட்டணியின் இந்த முடிவு மிகச்சரியானது என்பதை நிரூபித்தார் திரிபாதி. டெல்லிக்கு எதிரான கடைசிப்போட்டியில் 16 பந்துகளில் 36 ரன்கள் அடித்து மிரட்டிய திரிபாதி சென்னையின் பெளலர்களையும் துன்புறுத்த ஆரம்பித்தார். ஆட்டம் தொடங்கிய நான்காவது ஓவரில், தாக்கூரின் பெளலிங்கில் ஷுப்மான் கில் வீழ்ந்தார். ஆனால், இன்னொருபக்கம் திரிபாதியின் தாக்குதல் தொடர்ந்தது. பவர்ப்ளேவின் முடிவில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 52 ரன்கள் அடித்தது கொல்கத்தா.

பவர்ப்ளே முடிந்ததும் கரன் ஷர்மாவை கொண்டுவந்தார் தோனி. முதல் ஓவரில் 12 ரன்கள் கொடுத்தாலும், அடுத்த ஓவரிலேயே நல்ல ஃபார்மில் இருக்கும் பேட்ஸ்மேனான நித்திஷ் ராணாவை அவுட் ஆக்கினார் ஷர்மா. சுனில் நரைன் 2 டவுன் பேட்ஸ்மேனாக வந்தார். பிராவோவின் ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என விளாசினார். ஆனால், அடுத்த கரன் ஷர்மாவின் ஓவரில் வீழ்ந்தார் நரைன். 9 பந்துகளில் 17 ரன்கள் அடித்திருந்தார் நரைன். அடுத்துவந்த மார்கனும் 7 ரன்னில் சாம் கரணின் பெளலிங்கில் எட்ஜாகி அவுட். அடுத்து அதிரடி இன்னிங்ஸ் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரி ரஸலும் வெறும் 2 ரன்களில் தாக்கூரின் பெளலிங்கில் அவுட்.

ஆனால், விக்கெட்டுகள் விழுந்துகொண்டேயிருந்தபோதும் ஓப்பனிங் வந்த திரிபாதி தனியாளாக சண்டை செய்துகொண்டிருந்தார். 31 பந்துகளில் 50 ரன்களை அடித்த திரிபாதி 51 பந்துகளில் 81 ரன்கள் அடித்து பிராவோவின் பெளலிங்கில் அவுட் ஆனார். பிராவோ தனது கடைசி ஓவரில் நாகர்கோட்டி, மவி என இரண்டு டெய்ல் எண்டர்களை டக் அவுட்டுக்கு அனுப்ப கடைசி பந்தில் வருண் சக்ரவர்த்தி ரன் அவுட் ஆக 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது கொல்கத்தா.

#KKRvCSK
#KKRvCSK

இந்த ஐபிஎல் சீசனின் முதல் நான்கு போட்டிகளிலும் மார்கன், ரஸலுக்கு முன்பாகவெல்லாம் இறங்கி சொதப்பிக்கொண்ருந்த கேப்டன் தினேஷ் கார்த்திக், சென்னைக்கு எதிராக 7வது பேட்ஸ்மேனாகத்தான் வந்தார். நல்ல முடிவு! தோனி, ஸ்பின்னர்களில் கரன் ஷர்மாவை மட்டுமே பயன்படுத்தினார். இன்னொரு ஸ்பின்னரான ரவீந்திர ஜடேஜாவுக்கு ஒரு ஓவர்கூட இல்லை. சஹார் தொடர்ந்து இரண்டாவது போட்டியாக ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. தாக்கூர் தனது முதல் மூன்று ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

168 ரன் டார்கெட்டோடு சேஸிங்கைத்தொடங்கியது வாட்சன் - டுப்ளெஸ்ஸி கூட்டணி. கடந்தப்போட்டியில் இந்த ஜோடியே பஞ்சாபின் கதையை முடித்தநிலையில் இன்றும் இருவரும் வானவேடிக்கைகளை நிகழ்த்துவார்கள் என எதிர்பார்க்க நான்காவது ஓவரில், ஷிவம் மவியின் பெளலிங்கில் 17 ரன்களில் அவுட் ஆனார் டுப்ளெஸ்ஸி. ஆனால், வாட்சனின் நல்ல ஃபார்ம் தொடர்ந்தது. வாட்சன் தொடர்ந்து பவுண்டரிகள் அடிக்க பவர்ப்ளேவின் முடிவில் 54 ரன்கள் அடித்திருந்தது சென்னை. வாட்சன் - ராயுடு பார்ட்னர்ஷிப் எந்த அவசரமும் இல்லாமல் சிறப்பாக ஆடிகொண்டேபோக 13-வது ஓவரில் நாகர்கோட்டி ராயுடுவின் விக்கெட்டைத் தூக்கினார்.

#KKRvCSK
#KKRvCSK

5-வது பேட்ஸ்மேனாக இறங்கவே முன்னர் தயங்கிக்கொண்டிருந்த கேப்டன் தோனி, வாட்சன் இருக்கும் தைரியத்தில் 2 டவுன் பேட்ஸ்மேனாகவே வந்தார். ஆனால், தோனி வந்த அடுத்த ஓவரிலேயே சுனில் நரைன் பெளலிங்கில் எல்பிடபிள்யுவானார் வாட்சன். 40 பந்துகளில் 50 ரன்கள் அடித்திருந்தார் வாட்சன். இந்த விக்கெட்டுக்குப் பிறகுதான் சென்னையின் சரிவு தொடங்கியது. 13 ஓவர்கள் வரை வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 101 ரன்கள் அடித்திருந்த சென்னையின் டார்கெட் வெறும் 42 பந்துகளில் 67 ரன்கள்தான். ஆனால், தோனி களத்தில் இருக்க சொதப்பல்களை ஆரம்பித்தது சிஎஸ்கே.

டாட் பால் ஸ்பெஷலிஸ்ட் தோனி நான்கு டாட் பால்கள் ஆடிவிட்டு 12 பந்துகளில் 11 ரன்னில் வருண் பந்துவீச்சில் போல்ட் ஆனார். தோனி அவுட் ஆகும்போது 21 பந்துகளில் 39 ரன்கள் அடிக்கவேண்டும். தோனியின் செல்லப்பிள்ளை கேதர் ஜாதவ் வருண் சக்ரவர்த்தியின் அந்த ஓவரின் மீதி மூன்று பந்துகளையுமே டாட் பாலாக்கி சென்னையின் தோல்வியை உறுதியாக்கும் முயற்சிகளில் இறங்கினார். சிக்ஸர், பவுண்டரி அடித்து நம்பிக்கை தந்த சாம் கரணும் ரஸலின் முதல் ஓவரின் முதல் பந்தில் அவுட் ஆக எல்லாம் முடிந்தது.

#KKRvCSK
#KKRvCSK

ஆட்டத்தின் மிக முக்கிய ஓவரான 18வது ஓவரை வீசிய ரஸல் வெறும் 3 ரன்களை மட்டுமே கொடுத்து சாம் கரணின் விக்கெட்டையும் வீழ்த்தி கொல்கத்தாவின் வெற்றியை எளிதாக்கினார். நரைன் மற்றும் ரஸலின் கடைசி இரண்டு ஓவர்களில் பவுண்டரி அடிக்கமுடியாமல் திணறியது கேதர் ஜாதவ் - ஜடேஜா கூட்டணி. கடைசி ஓவரில் 26 ரன்கள் டார்கெட். தோல்வி உறுதியானதும் கடைசி மூன்று பந்துகளில் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகள் அடித்து தனக்குள் திருப்திபட்டுக்கொண்டார் ஜடேஜா.

முரட்டு ஃபார்மில் மும்பை... பும்ராவின் வேரியஷன்களில் வீழ்ந்த ராஜஸ்தான்! #MIvRR #Bumrah
திரிபாதி கொடுத்த லட்டு போன்ற ரன் அவுட் வாய்ப்புகளை தவறவிட்டதும், மிடில் ஓவர்களில் அசால்ட்டாக ஆடி பல பால்களை சாப்பிட்டதுமே சென்னையின் தோல்விக்குக் காரணம். எளிதாக வெற்றிபெற்றிருக்கவேண்டிய போட்டியை தோல்வியில் முடித்திருக்கிறது சென்னை. 6 போட்டிகளில் விளையாடி சென்னை அடைந்திருக்கும் 4-வது தோல்வி இது.
#KKRvCSK
#KKRvCSK

தோனி எப்போதும் சொல்லும் ஹார்ஸஸ் ஃபார் கோர்சஸ் தியரியை அவரே பின்பற்ற மாட்டேன் என அடம்பிடிப்பதில்தான் தோல்விகள் சென்னையை துரத்துகின்றன. இம்ரான் தாஹிருக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுவதும், கேதர் ஜாதவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுவதும் ஏன் என்பதை நியாயப்படுத்தும் ஒரு காரணம்கூட தோனியிடம் இல்லை. சீனியர் வீரர்கள் தொடர்ந்து சொதப்பிக்கொண்டிருக்கும்போது பரிட்சார்த்த முயற்சிகளில் இறங்கி ஜூனியர் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க தோனியின் மனம் மறுக்கிறது.

சென்னைக்கு இன்னும் 8 போட்டிகள்தான் மீதமிருக்கின்றன. இந்த 8 போட்டிகளில் குறைந்தது 6 போட்டிகளில் வென்றால்தான் ப்ளே ஆஃப்க்குத் தகுதிபெறமுடியும். அதற்கு தோனி தனது ப்ளேயிங் லெவனில் சின்னசின்ன மாற்றங்களை செய்யத் தயாராகவேண்டும். இல்லையென்றால் ஐபிஎல் 2020, சென்னை ப்ளேஆஃப்க்குக் கூடத் தகுதிபெறாத முதல் ஐபிஎல் தொடராக இருக்கும்.
அடுத்த கட்டுரைக்கு