Published:Updated:

IPL 2020: சேஸிங்கில் திணறிய ஐதராபாத்... மீண்டும் 2010 மேஜிக்கை நிகழ்த்துமா சென்னை? #SRHvCSK

கார்த்தி
#SRHvCSK
#SRHvCSK

2010 மேஜிக்கை மீண்டும் நிகழ்த்தியிருக்கிறது சென்னை. மீண்டும் அதிசயங்கள் நிகழுமா, அது தோனி கைகளில்தான் இருக்கிறது.

சென்னை அணியில் இத்தனை நாளாய் தேடிக்கொண்டிருந்த விஷயம், இறுதியாக கிடைத்துவிட்டது. ஆமாம், சூப்பர் சீனியர் பிளேயர்கள், ரன் அடிக்க அதிக பந்துகள் எடுத்து செட்டில் ஆவது, கேட்ச் டிராப், கேதர் ஜாதவ் என இந்த சீசனில் சென்னையை சுற்றி ஓராயிரம் பிரச்னை. ஆனால், அதையெல்லாம் தாண்டி ஒரு பிரச்னை இருந்தது. வெற்றி பெற வேண்டும் என்கிற நோக்கத்துடன் அதிரடியாக ஆடுவது. சிஎஸ்கேவில் எங்கு தேடினும் கிடைக்காத விஷயமாக இந்த சீசனில் இருந்தது அதுதான்.

கடந்த போட்டியில் அதனால், தோனியே கடுப்பாகி, விக்கெட்டுகளை கையில் வைத்து நாம் எதுவும் செய்யப்போவதுமில்லை. 17 ஓவர்களில் ஆல் அவுட் ஆனாலும், பராவாயில்லை, ரன்கள் அடிக்க வேண்டும். கப்பலில் ஒரு ஓட்டை என்றால், பரவாயில்லை, ஏகப்பட்ட ஓட்டைகள் என விரக்தியுடன் பேசினார். ஓட்டைகளைத் தற்காலிகமாக அடைப்பதற்கு முதலில் நம்மால் முடியும் என்கிற எண்ணம் சென்னை அணிக்கு உருவாக வேண்டும். டாஸில் இருந்தே, இந்தப் போட்டியில் அதற்கான மாற்றத்தை உணர முடிந்தது.

#SRHvCSK
#SRHvCSK

2010ம் ஆண்டு சிறப்பாக முடிந்தது. ஆனால், அதை மட்டுமே நம்பிருக்க முடியாது. துபாய் ஸ்டேடியத்தின், குறைந்த நீளம் கொண்ட பவுண்டரி லைனைப் பற்றி யோசிக்க வேண்டும் என்றார் தோனி. டாஸ் வென்று பேட்டிங் என்றார். 9 போட்டிகள் கழித்து, சென்னை அணி சேஸ் செய்யாமல் இருப்பது இப்போதுதான். ஜெகதீசனுக்குப் பதிலாக இன்னொரு லெக்கி இருப்பது சுகமே என நினைத்த தோனி, வழக்கம் போல ஜெகதீசனுக்கான வாய்ப்பை மறுத்தார்.

அடுத்த அதிரடி மாற்றமாக சாம் கர்ரனை டு பிளெஸ்ஸியுடன் ஓப்பனிங் இறக்கினார் தோனி. கொல்கத்தா நரைன் ஸ்டைலில் உள்ளே வந்தார் சாம். சந்தீப் ஷர்மா வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் சிங்கில் தட்டி அடுத்த ஓவரிலும் ஆடினார் சாம். கலீல் அஹமதின் ஓவரிலும் டு பிளெஸ்ஸி பேட்டிங் செய்யவில்லை. ஆட்டத்தின் 13வது பந்தை பிடித்த டு பிளெஸ்ஸி, சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக். சந்தீப்பின் ஸ்விங்கில் அடிக்க முயல அது கீப்பர் கேட்சில் முடிந்தது. சாம் கர்ரனை நம்பியதற்கு, சிறப்பான கைமாறு செய்தார் சாம். கலீல் அஹமது வீசிய அடுத்த ஓவரில், இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸ். கிட்டத்தட்ட சமீப காலங்களில் சென்னை கையாண்ட சிறப்பான பேட்டிங் ஓவர் என்றால் இதுதான். 22 ரன்கள் கிடைத்தது.

#SRHvCSK
#SRHvCSK

சந்தீப் வீசிய அடுத்த ஓவரில், சாம் போல்ட். நாம இவ்ளோ ஸ்டிராங்கா இல்ல சென்னை இவ்ளோ வீக்கா என நினைத்திருப்பார் சந்தீப். ரவுண்ட் தி விக்கெட்டில் சந்தீப் வீசிய பந்து லெக் ஸ்டம்பை தகர்த்தது. 16 பந்துகள் வீசியிருந்த சந்தீப், வெறும் ஆறு ரன்கள் கொடுத்து, இரண்டு ஓப்பனர்களையும் அவுட் ஆக்கியிருந்தார். சென்னை ரசிகர்கள், இந்த முறை ஈ சாலா கப் நம்தேவை நாம சொல்லணும் போல என நினைத்திருப்பார்கள். ராயுடு வந்த வேகத்தில் ஒரு பவுண்டரி அடித்தார். பவர்பிளே இறுதியில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், இந்த பவர் பிளேவிலும் 20 டாட் பால்கள்.

ரஷீத் வீசிய முதல் ஓவரில் 3 ரன்கள். வாட்டோவும், ராயுடுவும் சிங்கிள்ஸ் ரொட்டேட் செய்து, தேவைப்படும் போது அடித்து ஆடினார்கள். இதைத்தான இத்தனை நாளா எதிர்ப்பாத்தோம் என வீட்டிலேயே பாப்கார்ன் ரெடிசெய்து அமர்ந்தார்கள் சென்னை ரசிகர்கள். ரஷீத்தின் இரண்டாவது ஓவரில் 5 ரன்கள். ஒரு போட்டியில் சாஃப்ட் சிக்னல் என்பது அவ்வளவு முக்கியம். நதீம் வீசிய பந்தை வாட்டோ விரட்ட லாங் ஆனில் அதை கேட்ச் பிடித்தார் மணீஷ் பாண்டே. என்ன நினைத்தாரோ, அம்பயர் நாட் அவுட் என சொல்லிவிட்டார். மூன்றாவது அம்பயரும் ஜூம் செய்து பார்த்துவிட்டு, பந்து தரைல பட்டுச்சுப்பா என ஒத்துகொண்டார். ஆனால், பக்கத்தில் நடக்கும் விஷயங்களுக்கு இப்போதெல்லாம் சாஃப்ட் சிக்னலில் அவுட் கொடுக்கும் நடுவர்கள், லாங் ஆனில்பிடிக்கப்பட்ட கேட்சுக்கு நாட் அவுட் என சரியாக கணித்து சொல்வதெல்லாம்... ஒருவேளை நன்றாக கவனித்தார் என்றும் அதை எடுத்துக் கொள்ளலாம். சரி அடுத்த ஓவருக்குப் போவோம்.

#SRHvCSK
#SRHvCSK

ரஷீத் கானின் மூன்றாவது ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டினார் வாட்டோ. கூக்ளி பந்தை டீப் மிட் விக்கெட் திசையில் ஸ்லாக் ஷாட்டாக சிக்ஸ் அடித்தார். அடுத்த ஓவரில் வாட்டோ அடித்த சிக்ஸ் இன்னும் அருமை. பந்து வந்த வேகத்தில், நேராக சிக்ஸுக்கு விளாசினார். முந்தைய ஓவரில் வாட்டோ அடித்த சிக்ஸ் ஸ்டைலில், இம்முறை ராயுடு ஒரு சிக்ஸ். ரஷீத்தின் நான்காவது ஓவர் 14 ரன்களுக்கு போனது. எப்போதும் ஒரு அணியின் டாப் ஸ்பின்னரின் பந்துவீச்சை அணி வீரர்கள் விளாசுகிறார்களோ, அப்போதுதான் அந்த அணி, எல்லாத்துக்கும் தயார் என அர்த்தம். கடந்த போட்டியில், ரஷீத்தின் பந்துவீச்சில் திவாதியா இப்படித்தான் ஹாட் ரிக் பவுண்டரி அடித்தார். இது வாட்டோ, ராயுடு முறை.

கலீல் வீசிய ஓவரில், மீண்டும் ஒரு சிக்ஸ் அடிக்க ராயுடு ஆசைப்பட, லாங்க் ஆஃபில் கேட்ச் பிடித்து டாட்டா பை பை சொன்னார் வார்னர். அதற்கு சில பந்துகளுக்கு முன்பிருந்தே, பாக்ஸிங் வீரர் போல, மூஞ்சியைக் குத்திக்கொண்டிருந்த ராயிடு, அவுட் ஆனதும், என்ன சரவணன் இது, என்பது போல, கடுப்புடன் கிளம்பினார். ஆனால், 41 முக்கியமான ரன்கள் அணிக்குக் கொடுத்திருந்தார் ராயுடு. அடுத்து தல தோனி எண்ட்ரி. நானும் 40 ரன் அடிச்சுட்டேன் கிளம்பறேன் என்பது போல், லாங் ஆஃபில் நின்றிருந்த மனிஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் வாட்டோ. வாட்டோவை அவுட் ஆக்கிய மகிழ்ச்சியில் தோனிக்கு இரண்டு ஃபுல் டாஸ் வீசினார் நடராஜன். இரண்டுமே பவுண்டரி.

#SRHvCSK
#SRHvCSK

இந்தப் போட்டியில் முதல் ஓவரைத் வீசப்பட்ட ஒரு பந்தைத் தவிர, நிறையப் பந்துகளில் நடராஜன் யார்க்கர் லைனை மிஸ் செய்தார். ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே, யார்கர் லைன் மிஸ் ஆகும் ஒவ்வொரு பந்தும் அடி வெளுக்கப்படும் என கெவின் பீட்டர்சன் பேசியது நினைவுக்கு வந்தது. லாங் ஆனில் ஒரு இமாலய சிக்ஸ் அடித்தார் தோனி. அனைத்து பந்துகளையும் அடித்து ஆடவெண்டும் என்கிற வெறியில் இருந்தார் தோனி, ஒய்டு லைனில் இன்னொரு லோ ஃபுல் டாஸ் வீசினார் நடராஜன். அதை அடிக்க முயன்று, வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

ஜடேஜாவின் கடைசிகட்ட அதிரடிகளால், சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. இதிலேயே சென்னை வென்றுவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், ஐதராபாத்தின் சேஸிங் எல்லாம் இதைவிட குறைவாகத்தான் செய்ய முடியும். அதுவும் பேட்டிங் கடினமாக மாறிக்கொண்டு இருக்கும் துபாய் மைதானத்தில் இந்த ரன்களை சேஸ் செய்வது என்பது கடினமான காரியம்.

#SRHvCSK
#SRHvCSK

வழக்கம்போல பேர்ஸ்டோவும், வார்னரும் ஓப்பனிங் இறங்கினார்கள். வார்னரால், இந்தப் போட்டியில் சுத்தமாக அடிக்க முடியவில்லை. சிறிது நேரம் போராடிய வார்னர், சாம் வீசிய பந்தை அடிக்க முயன்று, அது இன்சைட் எட்ஜாகி, வார்னரின் பேடில் பட்டு, சாமின் கைகளிலேயே திவ்யமாய் வந்து அமர்ந்தது. ஒன் டவுன் வந்த மனிஷ் பாண்டே, எக்ஸ்டிரா கவர் பக்கம் அடித்துவிட்டு வேகமாக ஓட, யாருகிட்ட எனப் பிடித்த வேகத்தில் பந்தை direct hit முறையில் அடித்து ரன் அவுட்டாக்கினார் பிரேவோ. விக்கெட் விழுந்த மகிழ்ச்சியில், கத்தி ஊரைக்கூட்டினார் சாம் கர்ரன். அது ரன் அவுட் குட்டிப் பையா! பவர்பிளே முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் அடித்தது ஐதராபாத். வில்லியம்சனும், பேர்ஸ்டோவும் இறுதி வரை ஆடினால் மட்டுமே செவுத்தைத் தாண்ட முடியும் என்கிற நிலை.

ஸ்டிரைக் ரொட்டேட் செய்து சிங்கிள்ஸ் ஆடிக்கொண்டிருந்த ஜோடியில், பேர்ஸ்டோவை போல்டாக்கி ஆட்டத்தின் சரிவை ஆரம்பித்து வைத்தார் ஜடேஜா. வில்லியம்சன் அடித்து ஆடினாலும், பிரியம் கார்கோ, விஜய் ஷங்கரோ அவருக்குப் பக்கபலமாக நிற்கவில்லை. ஒருபக்கம் பேட்ஸ்மேன்கள் நின்றிருந்தாலே, வில்லியம்சன் இன்னும் சரியாக அடித்து ஆடியிருப்பார். வில்லியம்சன் ரன் அவுட் ஆன போட்டியைத் தவிர எதிலேயேயும் பிரியன் கார்க் சரியாக ஸ்கோர் செய்யவில்லை. விரைவில் அந்த இளைஞர், தனக்கான சரியான பேட்டிங் ஸ்டைலைத் தேர்வு செய்வது நல்லது. அரைசதம் கடந்த வில்லியம்சன்னும், 18வது ஓவரில் கரன் ஷர்மா பந்துவீச்சில் அவுட் ஆனார். மிகச்சிறப்பான வில்லியம்சனின் ஆட்டம், லாங் ஆன் கேட்ச்சுடன் முடிவுக்கு வந்தது. விக்கெட் விழுந்து கொண்டே இருந்ததுதான், இந்தப் பந்தை அவருக்கு லாங் ஆனுக்கு அடிக்க வைத்தது. மற்றபடி, சாவ்லா போல்தான் கரண் ஷர்மா. பேட்ஸ்மேனை திக்குமுக்காடச் செய்யும் அளவுக்கு எல்லாம் ஒரு நாளும் அவர்கள் பந்துவீசியதில்லை.

#SRHvCSK
#SRHvCSK

அடுத்த பந்தை ரஷீத் கான் தூக்கியடிக்க, தாக்கூர் மீண்டும் கேட்ச் பிடிக்க முயன்று, சிக்ஸுக்குப் பறந்தது பந்து. அடுத்த பந்து பவுண்டரி. வில்லியம்சனின் விக்கெட்டை எடுத்தும், அந்த ஓவரில் 19 ரன்கள் அடித்தது ஐதராபாத். கடைசி இரண்டு ஓவர்களில் 25 ரன்கள் தேவை எளிதான இலக்குத்தான். ஆனால், அடிக்கத்தான் ஆள் இல்லை. தாக்கூர் வீசிய இரண்டாவது பந்தை, லைனை தாண்டி யார்க்கர் ஆனதால், ஒய்டு கொடுத்தார் அம்பயர். அடுத்த பந்தும் கிட்டத்தட்ட அதே லைன் தான். ஒய்டுக்கு அம்பயர் கையை விரிக்க, தோனி கடுப்பாகி முறைக்க, நமக்கு ஏன் வம்பு என ஒய்டு இல்லை மணி பார்த்தேன் என்பது போல் நின்றுகொண்டார் அம்பயர். அப்பட்டமான ஒய்டை மறுத்தார் அம்பயர். அதற்கு அவருக்கான அனைத்து உரிமைகளும் கிரிக்கெட் விதிமுறைப்படி உண்டு என்றாலும், எதிரணி கேப்டனின் கோபத்துக்குக் கட்டுப்பட்டு ஒய்டு கொடுத்தாரா இல்லை இரண்டாவது முறை யோசித்து முடிவை மாற்றிக்கொண்டாரா என்பதெல்லாம் அவருக்கே வெளிச்சம். ஆனால், தப்பு சாரே!

நோபால் கொடுக்க அம்பயர் தவறினாலும், இப்போதெல்லாம் விசில் அடித்து, தேர்ட் அம்பயரே அந்த வேலையை சரியாக செய்கிறார். இப்படி கத்துவதற்கும் முறைப்பதற்கும் எல்லாம், ஸ்டீவ் பக்னர் பாண்டிங் ஸ்டைலில் அம்பயர்கள் நடந்து கொள்ள ஆரம்பித்தால், ஒய்டையும் மூன்றாவது அம்பயர்களே தீர்மானிப்பது நல்லது. ஆட்டுக்கு தாடி எதற்கு, என்கிற பழமொழியில் ஆட்டத்துக்கு ஆன் ஃபீல்டு அம்பயர் எதற்கு என்னும் நிலை உருவாகிவிடும். அதுவும் இந்த சீசனில் இந்திய அம்பயர்கள் தொடர்ந்து சொதப்பி வருகிறார்கள். இன்னொரு போட்டியில், சரியாக அடிக்கப்பட்ட ஒரு சிங்கிலை கேன்சல் செய்தார்கள். இந்தியன் அம்பயர்கள்தான் சொதப்புகிறார்கள் என்றால், அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு அம்பயர்கள் கூட கேப்டன்களின் கூச்சலுக்கு கட்டுப்படுவது அபாயகரமானது. தாகூர் வீசிய கடைசி பந்தில் சிக்ஸுக்கு அடித்து, பந்து செல்வதற்குள், ஸ்டம்பில் தடுமாறி ஹிட் விக்கெட் முறையில் வெளியேறினார். இந்த சீசனில், பாண்டியாவுக்கு அடுத்து இரண்டாவது ஹிட் விக்கெட்டை பதிவு செய்தார் ரஷீத் கான்.

#SRHvCSK
#SRHvCSK

கடைசி ஓவரில் 23 ரன்கள் தேவை. நதீமும், நட்டியும் பேட்டிங், எப்படியும் அடிக்கப்போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஆச்சர்யம் நிகழ்த்தினார் பிராவோ. மலிங்கா, ஸ்டைலில், கிட்டத்தட்ட எல்லா பந்தையும் யார்க்கர் லைனில் வீசினார். நதீம் விக்கெட் தவிர, அந்த ஓவரில் நான்கு யார்க்கர்கள் வீசினார் பிராவோ. இந்தக் குழந்தைகளுக்கு எதுக்குப்பா நீயி இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க என்பது போல் இருந்தது. 20 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபத்தை வென்று மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை.

ஜெகதீசனுக்குப் பதிலாக பவுலிங்கில் பலம் தேவை என சொல்லப்பட்டு சேர்க்கப்பட்ட சாவ்லாவுக்கு தோனி கொடுத்தது ஒரு ஓவர். அதிலும் 8 ரன்களுடன் விக்கெட்டுகள் எதுவுமில்லை. வெற்றி பெற்ற போட்டிகளில், நாம் போஸ்ட் மார்ட்டம் செய்ய எதுவுமில்லை என்றாலும், 22 வயதான சாம் கர்ரனின் மீது நம்பிக்கை வைத்து ஓப்பனிங் இறக்கி ரிஸ்க் எடுக்கும் தோனி, ஒரு நாளும் பெஞ்ச்சை தேய்க்கும் தமிழக இளம் வீரர்களுக்கு அந்த ரிஸ்க்கை எடுக்கப்போவதில்லை என்பது மீண்டும் தெளிவானது. கடந்த போட்டியில்கூட ஓப்பனர் ஜெகதீசனுக்கு, மிடில் ஆர்டரில்தான் இடம் கொடுத்தார். அதிலும் 3 ஆண்டுகளாக ஒரு முறை மட்டுமே 30 ரன்களைக் கடந்திருக்கும் ஜாதவின் ஸ்கோரை அடித்தார் ஜெகதீசன். ஆனாலும், பவுலிங் பலத்தின் பெயரால் அமர வைக்கப்பட்டுள்ளார். இளைஞர்களுக்கு வாய்ப்புக்கொடுக்க நாங்கள் டீம் நடத்தவில்லை, நாங்கள் வெற்றி பெற ஆடுகிறோம் என சில மாதங்களுக்கு முன்பு வெளிப்படையாகவே பேசியிருந்தார் ஸ்டீஃபன் ஃபிளெமிங். அதே நிலைதான் இந்த ஆண்டு என்றால், இனியும் இவர்களை எடுத்து, தண்ணீர் கொண்டு வர மட்டுமே பயன்படுத்த வேண்டாம் என்பதுதான் தாழ்மையான கருத்து.

#SRHvCSK
#SRHvCSK

"சாம் கர்ரன் மூலம் எப்படியும் 15-45 ரன்கள் வரும் என்றுதான் அவரை ஓப்பனிங் இறக்கினோம். அதே போல், ரொம்பவும் கீழாகவும், ஜெகதீசனை ஆட சொல்ல முடியாது. லெக்கியும் இன்றைய ஆட்டத்துக்கு தேவைப்பட்டார்" என்று பிளேயிங் லெவனுக்காக காரணத்தை மீண்டும் தெளிவுபடுத்தினார் தோனி.

பேட்டிங் பவுலிங் இரண்டிலும் கலக்கிய ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஈ சாலா கப் பெங்களூருக்குத்தான் போல... கூட்டுழைப்பால் கொல்கத்தாவை காலி செய்த கோலி அண்ட் கோ! #RCBvKKR

2010 மேஜிக்கை மீண்டும் நிகழ்த்தியிருக்கிறது சென்னை.

ஒரு சுவாரஸ்யப் புள்ளி விவரம். ஏழாம் இடத்தில், இரண்டு வெற்றிகளுடன், இதே நிலையில் இருந்த சென்னைதான், அந்த ஆண்டு அடுத்து அடுத்து வென்று, கோப்பையைக் கைப்பற்றியதுடன், சாம்பியன் லீகையும் வென்றது. மீண்டும் அதிசயங்கள் நிகழுமா, அது தோனி கைகளில்தான் இருக்கிறது.

2010 மேஜிக் திரும்பி நிகழ, சென்னை என்ன செய்ய வேண்டும்? உங்கள் கருத்துகளை கமெண்டில் சொல்லுங்கள்...
அடுத்த கட்டுரைக்கு