Published:Updated:

நம்பமுடியவில்லை... இது எங்க #CSK-வே இல்லை... ஆடுவது எங்க கேப்டன் தோனியும் இல்லை! #CSKvMI

#CSKvMI
#CSKvMI

இந்த சீசனில் ஏற்கெனவே அடைந்த 7 தோல்விகளைவிடவும், மும்பைக்கு எதிரான இந்த 10 விக்கெட் வித்தியாசத் தோல்வி சென்னை ரசிகர்களால் காலத்துக்கும் மறக்கமுடியாததாக இருக்கும்.

இதுவரை வெற்றிகரமான தோல்விகளையே சந்தித்துவந்த சென்னை சூப்பர் கிங்ஸ் முதல்முறையாக அவமானகரமானத் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இந்த சீசனில் ஏற்கெனவே அடைந்த 7 தோல்விகளைவிடவும், மும்பைக்கு எதிரான இந்த 10 விக்கெட் வித்தியாசத் தோல்வி சென்னை ரசிகர்களால் காலத்துக்கும் மறக்கமுடியாததாக இருக்கும். சாம் கரண் மட்டும் இல்லையென்றால் இன்று சென்னை இதைவிடவும் மோசமானதொரு தோல்வியைச் சந்தித்திருக்கும். நம்ம சென்னைக்கு என்னதான் ஆச்சு?!

மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக விளையாடததால் கீரான் பொலார்ட் மும்பை கேப்டனாக களமிறங்கினார். டாஸ் வென்ற பொலார்ட் ஆச்சர்யமாக பெளலிங்கைத் தேர்ந்தெடுக்க, தோனியும் நாங்கள் டாஸ் வென்றிருந்தாலும் பெளலிங்கையே தேர்ந்தெடுத்திருப்போம் என்றார். ரோஹித்துக்குப் பதிலாக செளரப் திவாரி மும்பை அணிக்குள் வர, தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளான வாட்சன், கேதர், பியூஷ் சாவ்லாவுக்கு பதிலாக ருத்துராஜ், ஜெகதீசன், இம்ரான் தாஹிர் என மூன்று மாற்றங்களை செய்திருந்தார் சென்னை கேப்டன் தோனி.

#CSKvMI
#CSKvMI

ட்ரென்ட் போல்ட்டின் முதல் நான்கு பந்துகளை ருத்துராஜ் கெய்க்வாட் எதிர்கொண்ட விதமே சென்னையின் பேட்டிங் தடுமாறப்போகிறது என்பதை உணர்த்திவிட்டது. ஐந்தாவது பந்தில் ருத்துராஜ் எல்பிடபுள்யூ. நடுவர் அவுட் கொடுக்கவில்லையென்றாலும், ரிவ்யூ கேட்டு ருத்துராஜை வழியனுப்பிவைத்தார் போல்ட். பும்ராவின் அடுத்த ஓவரில் கொடூர தாக்குதல் நடந்தது. அம்பதி ராயுடு 2 ரன்களில் அவுட் ஆக, அடுத்த பந்திலேயே டக் அவுட் ஆனார் ஜெகதீசன். சென்னை மூன்று ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது.

சென்னை மீதான மும்பையின் கொடூர தாக்குதல்கள் தொடர்ந்தன. போல்ட்டின் அடுத்த ஓவரில் டுப்ளெஸ்ஸில் 1 ரன்னில் அவுட். 3 ரன்களுக்கு 4 விக்கெட்கள் காலி. சென்னையின் ஸ்கோர் போர்டைப் பார்க்கவே பரிதபமாக இருந்தது. தோனியோடு ஜடேஜா இணைந்தார்.

2019 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்தியாவை ஓரளவுக்கு மீட்டுக்கொண்டுவந்த இந்த ஜோடி, சென்னையையும் காப்பாற்றும் என்கிற எதிர்பார்ப்பு பும்ராவின் ஓவரில் எழுந்தது. ஆட்டத்தின் நான்காவது ஓவரும், பும்ராவின் இரண்டாவது ஓவருமான அதில் தோனியும், ஜடேஜாவும் மாறி மாறி பவுண்டரிகள் அடிக்க 13 ரன்கள் கிடைத்தது. ஆனால், அந்த மகிழ்ச்சியை போல்ட் நீடிக்கவிடவில்லை. ஜடேஜாவை 7 ரன்களில் அவுட் ஆக்கினார் போல்ட். பவர்ப்ளேவின் முடிவில் 24 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்திருந்தது சென்னை.

சாம் கரணும், தோனியும் களத்தில் நிற்க மீண்டும் நம்பிக்கை. சஹாரின் பெளலிங்கில் சிக்ஸர் அடித்து ''நான் இருக்கேன்... பயப்படாதீங்க'' என்ற தோனி அடுத்த பந்திலேயே மீண்டும் தூக்கியடிக்க ஆசைப்பட்டு, எட்ஜாகி அவுட் ஆனார். தோனியின் ஸ்கோர் 16 பந்துகளில் 16 ரன்கள். அடுத்து ராகுல் சஹாரின் பந்தில் தீபக் சஹார் ஸ்டம்ப்பிங் முறையில் அவுட் ஆனார்.

SAM CURRAN
SAM CURRAN
10 ஓவர்களில் 52 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்திருந்தது சென்னை. சாம் கரண் மட்டும் ஒரு பக்கம் தாக்குப்பிடித்து விளையாடிக்கொண்டிருக்க, 15-வது ஓவரில் ஷர்துல் தாக்கூர் அவுட். இம்ரான் தாஹிர் வந்தார்.

நான் பெளலர் மட்டுமல்ல, பேட்ஸ்மேனும்தான் என ஆச்சர்யப்படுத்தினார் இம்ரான் தாஹிர். பும்ராவின் யார்க்கர்களை அவர் எதிர்கொண்ட விதம் அவர் எவ்வளவு பேரார்வத்தோடு 41 வயதிலும் கிரிக்கெட் ஆடுகிறார் என்பதற்கான உதாரணம். இம்ரான் தாஹிருக்கு முதலில் ஸ்ட்ரைக் தரவே யோசித்த சாம் கரண், பின்னர் தாஹிரின் ஸ்மார்ட் பேட்டிங்கைப் பார்த்து கடைசி ஓவரில்கூட தாஹிருக்கு ஸ்ட்ரைக் கொடுத்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்து அரை சதத்தைக் கடந்தார் சென்னையின் கடைக்குட்டி சிங்கம் சாம் கரண். 46 பந்துகளில் 52 ரன்கள் அடித்தவர், கடைசிப்பந்தில் க்ளீன் போல்டானார். போல்ட் சென்னையின் 4 விக்கெட்களை எடுக்க, பும்ராவும், சஹாரும் ஆளுக்கு இரண்டு விக்கெட்கள் எடுத்தனர். கூல்ட்டர் நைல் 1 விக்கெட் எடுத்தார்.

115 ரன்கள் என்கிற டார்கெட் ஷார்ஜா பிட்ச்சுக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத டார்கெட் என்பதால் விக்கெட்டையே இழக்காமல் வெற்றிபெற்றுவிட்டது மும்பை. இஷான் கிஷன், 37 பந்துகளில் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகள் உள்பட 68 ரன்கள் அடித்தார். குவின்டன் டி காக் 37 பந்துகளில் 46 ரன்கள் அடித்து, 13-வது ஓவரில் சேஸிங்கை முடித்துவைத்தார். முதல்முறையாக சென்னையை ஓர் அணி விக்கெட் இழக்காமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறது. அதேபோல் 13 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ப்ளே ஆஃப்க்குத் தகுதிபெறாமல் வெளியேறியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். இன்றைய போட்டி சென்னையின் 200வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. தோனி, சென்னை என இரண்டு பேருமே தங்களது 200-வது போட்டிகளில் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள்.

#CSKvMI
#CSKvMI

போட்டி முடிந்ததும் பேசிய தோனி, "எல்லா நேரமும் முடிவுகள் நமக்கு சாதகமாக இருக்காது. கிரிக்கெட்டில் கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். இந்த ஆண்டு அது எங்களுக்கு இல்லை. முதலில் பேட்டிங் ஆடியிருக்கவேண்டிய போட்டிகளில் டாஸில் தோற்றோம். முதலில் டியூ பிரச்னைகள் இல்லாமல் இருந்தது. ஆனால், நாங்கள் முதலில் பேட்டிங் ஆடியப்பிறகு டியூ வந்துவிட்டது. இரண்டாவது போட்டியில் இருந்தே நாங்கள் குழுவாக சரியாக ஆடவில்லை. பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே பிரச்னைகள் இருந்தன" என்றார் தோனி. ப்ளேயிங் லெவனில் விளையாடாத கேப்டனாக தோனி இருக்கக்கூடும் என்கிற செய்திகளுக்கு அவரே முற்றிப்புள்ளியும் வைத்துவிட்டார். ''கேப்டன் எங்கேயும் ஒடி ஒளிய முடியாது. அனைத்துப் போட்டிகளிலும் நான் விளையாடுவேன்'' என்றவர் ''இன்னும் விளையாடாமல் பென்ச்சில் இருக்கும் வீரர்களுக்கு அடுத்த மூன்று போட்டிகளில் வாய்ப்புகள் அளிக்கப்படும்'' என வாக்குறுதி அளித்தார்.

#Raina: ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ் லீகில்  விளையாடுகிறாரா சுரேஷ் ரெய்னா?! #BBL10

மும்பைக்கு எதிரான இன்றைய தோல்விக்குப்பின் தோனியைப் பார்க்க பரிதாபமாக இருந்தாலும், தோனியின் தப்புக்கணக்குகளே இந்த ஆண்டு சென்னையின் தொடர் தோல்விகளுக்குக் காரணம். தோனியின் சில பிடிவாதமான முடிவுகள் சென்னையை மீண்டும் வெற்றிப்பாதைக்குள் கொண்டுவராமல் செய்துவிட்டது. முதல் 7 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வியடைந்திருந்தபோதும் சென்னைக்கு வாய்ப்பிருந்தது. ஹைதராபாத்தை தோற்கடித்து இரண்டாவது சுற்று லீக் போட்டிகளைத் தொடங்கிய சென்னையை மீண்டும் தோல்விப்பாதைக்குள் கொண்டுபோனது தோனியின் சில முடிவுகள்.

#CSKvMI
#CSKvMI

இம்ரான் தாஹிரை அணிக்குள் சேர்க்காமலேயே இருந்தது, ஃபிட்டாக இல்லாத ட்வெய்ன் பிராவோவைத் தொடர்ந்து ஆடவைத்தது, கேதர் ஜாதவ் என்பவருக்குத் தேவையே இல்லாமல் அத்தனை வாய்ப்புகள் கொடுத்தது, ஜெகதீசனை வீணடித்தது என காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். நம்பமுடியவில்லைதான்... ஆனால், சென்னைக்கும், தோனிக்கும் இப்படி ஒரு தோல்வி அவசியம் என்றே தோன்றுகிறது. இந்தமுறையும் தட்டுத்தடுமாறி ப்ளே ஆஃபுக்குள் நுழைந்திருந்தால் அடுத்த ஆண்டும் ஃபிட் இல்லாத சீனியர் வீரர்களோடே பயணித்திருக்கும் சிஎஸ்கே.

இந்த சீசனில் கிடைத்திருக்கும் அவமானகரமானத் தோல்விகளால் 2021-ல் புத்தம் புதிய சிஎஸ்கே உருவாகும். அப்போது மீண்டும் விசில் போடுவோம்!
அடுத்த கட்டுரைக்கு