Published:Updated:

IPL 2020: ஏலியன் ஏபிடி... இந்த அடி போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா?! #RRvRCB

42 பந்துகளில் 76 ரன்கள் எடுக்க வேண்டும். உள்ளே நிற்கும் இருவரும் புதிய பேட்ஸ்மேன்கள். நிலைத்து நின்று ஆட நேரம் எடுக்குமே என ரசிகர்கள் பயந்தாலும், உள்ளே வந்திருப்பது ஏபிடி என்பதால் தைரியமும் இருந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கெய்லின் சூறாவளியால் பஞ்சாபிடம், கடந்த போட்டியில் தோற்ற ஆர்சிபி இந்த முறை வெல்லும் முனைப்போடு களம் காண, சென்ற போட்டியில் டெல்லியிடம் நூலிழையில் வெற்றியைப் பறிகொடுத்த ராஜஸ்தானோ கொஞ்சம் நஞ்சம் மிச்சம் இருக்கும் ஃபிளே ஆஃப் வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் உத்வேகத்துடன் இறங்க, இரண்டு ராயல்ஸ்களும் மோதிக் கொண்ட போட்டியில், ஏபிடியின் இறுதி நிமிட அசுர ஆட்டத்தால் வெற்றி பெற்றுள்ளது ஆர்சிபி.

வெல்வது போல் வெற்றியின் அருகில் வரை சென்று தோல்விக்குரிய கோட்டினைத் தொட்டு விடும் தங்கள் வழக்கமான பாணியைத்தான் இந்தப் போட்டியிலும் மீண்டும் ஒருமுறை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது, ராஜஸ்தான். ஆர்சிபியோ கம்பீரமாய் தங்கள் ஆறாவது வெற்றியைப் பதிவு செய்து அதகளப்படுத்துகிறது.

ராஜஸ்தான், ப்ளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இல்லாமல் விளையாட, பெங்களூரோ, குர்கீரத் சிங்கை சிராஜ்க்கு பதிலாகவும், சபாஷ் அஹமதை ஷிவம் துபேக்குப் பதிலாகவும் களமிறக்கியது.

கேப்டன் மாறினாலும் கொல்கத்தாவின் காட்சிகள் மாறவில்லை... ப்ளே ஆஃபை நெருங்கிய மும்பை! #MIvKKR

பேட்டிங் ஆர்டரில் கடைசி போட்டி வரை கூட, ஒரு முடிவுக்கு வராமல் இருக்கப் போகும் ராஜஸ்தான், தங்களின் குறைபாடுகளில் ஒன்றான ஓப்பனிங்கை வலுப்படுத்துவதாக நினைத்து மேலும் சொதப்பியது. ஓப்பனிங்கில் உத்தப்பாவை இறக்கியவர்கள், ஓப்பனிங்கில் நன்றாக ஆடிக் கொண்டிருந்த பட்லரை மிடில் ஆர்டரிலும், மிடில் ஆர்டரின் கில்லி ஸ்டோக்ஸை ஓப்பனிங்கிலும் இறக்கினார்கள். ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்த்தால் உத்தப்பா அதிரடியை கையில் எடுத்தார். உத்தப்பாவின் அதிரடியை சற்றும் எதிர்பாராத ஆர்சிபி சற்று நிலைகுலைந்துதான் போனது. மூன்றாவது மட்டும் நான்காவது ஓவரில் 16 மற்றும் 17 ரன்கள் எடுக்க ரன்ரேட் வருவிறுவென மேலே ஏறியது. அதுவும் சுந்தர் ஓவரில் 4 பவுண்டரிகள் அடித்து மிரட்டினார் உத்தப்பா. இந்த வேகத்தில் உத்தப்பா ஆடினால் இலக்கு 200ஐ எட்டி விடுமோ என்று எண்ணியபோது பார்ட்னர்ஷிப் உடைந்தது. கிறிஸ் மாரிஸ் ஓவரில் ஸ்டோக்ஸ், ஏபிடியின் கையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

#RRvRCB
#RRvRCB

பஞ்சாபிற்கு எதிரானப் போட்டியில், கடைசி ஓவரில் மிரட்டிய சஹால் பந்து வீச, புதிதாய் உள்ளே வந்திருந்த சாம்சன், சஹாலின் பந்தை சிக்ஸருக்கு அனுப்ப, கொஞ்சம் கூட கலங்காமல், அடுத்த இரண்டு பந்துகளில் சஹால் சகலத்தையும் மாற்றி விட்டார். அதே ஓவரில் இன்னொரு பந்தையும் சிக்ஸருக்கு அனுப்ப ஆசைப்பட்ட உத்தப்பா, ஃபின்ச்சிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 22 பந்துகளைச் சந்தித்து, 41 ரன்களுடன் வெளியேறினார். அடுத்து உள்ளே வந்த கேப்டன் ஸ்மித்துக்கு அதிர்ச்சி அளிப்பது போல் அதற்கு அடுத்த பந்திலேயே, அடித்த ஒரு சிக்ஸ் போதும் என்பது போல் சாம்சன் மோரிஸிடம் கேட்ச் கொடுத்து, வழக்கம் போல இன்னொரு ஏமாற்றத்தைக் கொடுத்தார். 5 ஓவரில் 47 ஆக இருந்த அணியின் ஸ்கோர், 7.5 ஓவரில் 69/3 என மாற, ஆட்டம், ஆர்சிபியின் பக்கம் போனது. வழக்கம்போல நிலைத்தன்மை இல்லாத ராஜஸ்தானின் பேட்டிங் இந்த இடத்தில் வெளிப்படையாகவே தெரிந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனைத் தொடர்ந்து கைகோர்த்த பட்லர் ஸ்மித் கூட்டணி, வெகு நிதானமாக ரன்கள் சேர்த்தது. ஓப்பனிங்கில் ஜொலிக்கும் பட்லராலோ மூன்று விக்கெட்டுகள் விழுந்த நிலையில் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை ஆட முடியவில்லை. ஆனால், இந்தத் தொடரில் சிஎஸ்கே போட்டிக்குப்பிறகு காணாமல் போயிருந்த ஸ்மித், முதலில் மந்தமாக ஆடினாலும் உடானா வீசிய 15-வது ஓவரில் இருந்து அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்து ரன்களை மளமளவென உயர்த்தத் தொடங்கினார்.

இந்த அபாயகரமான கூட்டணியை உடைக்க மோரிஸை கோலி உள்ளே கொண்டு வர, கைமேல் பலனாய், பட்லர் அவுட். அப்போது அணியின் ஸ்கோர் 15.3 ஓவர்களில் 127/4 ஆக இருந்தது.

#RCBvRR
#RCBvRR

அடுத்ததாய் உள்ளே வந்தது இந்த சீசனில், இரண்டு போட்டிகளில் தன்னுடைய அணியை நங்கூரமாய் வெற்றிக் கரை சேர்த்த திவேதியா. அடுத்தடுத்த ஓவர்களில் விஸ்வரூபம் காட்டிய ஸ்மித் 30 பந்துகளில் அரைச் சதத்தைக் கடந்தார். முதல் மூன்று ஓவர்களில், 15 ரன்களை மட்டுமே கொடுத்திருந்த சஹால், தன்னுடைய கடைசி ஓவரில், இரண்டு நோ பால்களைக் கொடுத்து சொதப்ப, அந்த ஓவரை ஒட்டுமொத்தமாய் தங்கள் வசம் எடுத்துக் கொண்ட இந்தக் கூட்டணி, அந்த ஓவரில் மட்டுமே 19 ரன்களைக் குவித்து, அதற்கடுத்த உடானாவின் ஓவரிலும் 15 ரன்களைச் சேர்த்தது.

உடைக்க முடியாத கூட்டணியை உடைக்க "அதற்கு அவன்தான் கிளம்பி வரணும்", என்பது போல் கடைசி ஓவரை மோரிஸ் வீச, ஸ்மித் அடித்தப் பந்தை அஹமது அருமையாக பவுண்டரி லைனுக்கு அருகில் பிடிக்க, 36 பந்துகளில் 57 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார் ஸ்மித். அடுத்து வந்த ஆர்ச்சரையும் ஆட்டமிழக்கச் செய்த மோரிஸ் இந்த ஓவரில் மொத்தமே 4 ரன்களை மட்டுமே கொடுத்தார். இது போட்டியை மாற்றிய தருணம் என்றே சொல்ல வேண்டும். இல்லையெனில் 185+ என்ற கணக்கில் இலக்க நிர்ணயிக்கப்பட்டு ஆர்சிபிக்கு கூடுதல் நெருக்கடி தரப்பட்டிருக்கும். இறுதியில், ராஜஸ்தான் 178 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

#RRvRCB
#RRvRCB

இறுதி ஓவர்களில் 23 பந்துகளில் 46 ரன்களைக் குவித்த ஸ்மித் - திவேதியா கூட்டணி, சவாலான இலக்கை ஆர்சிபி எதிர்கொள்ள காரணமாக இருந்தது. அதே நேரத்தில், 200ஐ எட்ட வேண்டிய ஸ்கோரை, 26 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய மோரிஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். கடந்த சில போட்டிகளாய் அணியின் தூணாய் மோரிஸ் இருக்கிறார்.

178 ரன்களை வெற்றி இலக்காய் கொண்டு ஆடிய ஆர்சிபிக்கு, தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கொல்கத்தா மற்றும் மும்பைக்கு எதிரான போட்டி தவிர வேறு எந்தப் போட்டியிலும் திறம்பட விளையாடாத ஃபின்ச் இந்தப் போட்டியிலும் வழக்கம் போல் சொதப்பி, 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதற்கு பிறகு கை கோர்த்த கோலி - படிக்கல் கூட்டணியை உடைக்க ஸ்மித் வகுத்த வியூகங்கள் எதுவுமே எடுபடவில்லை. அதே நேரத்தில் கோலி படிக்கல்லிடம் இருந்த வழக்கமான அதிரடி ஆட்டமும் காணப்படவில்லை. குறிப்பாக திவேதியா ஒரு ஓவரில் 3 வொய்டுகளையும், ஒரு நோ பாலையும் கொடுத்துமே, ஒன்பது ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. சிஎஸ்கேக்கு எதிராக சிங்கிள்ஸை டபுளாக மாற்றி, கோலி நிகழ்த்திய மாயாஜாலம் இங்கே எடுபடவில்லை. 37 பந்துகளில் 35 ரன்களைச் சேர்ந்திருந்தபோது படிக்கல் திவேதியாவுடைய பந்தில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, அதற்கு அடுத்த ஓவரிலேயே தியாகியின் பந்தை கோலி தூக்கி அடிக்க, அற்புதமாக அதைக் கேட்ச் பிடித்த திவேதியா ஃபீல்டிங்கிலும் தானொரு கேம் சேஞ்சர் என நிரூபிக்க, கோலி 32 பந்துகளில் 43 ரன்களுடன் வெளியேற, ஆர்சிபி இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது.

#RRvRCB
#RRvRCB

42 பந்துகளில் 76 ரன்கள் எடுக்க வேண்டும். உள்ளே நிற்கும் இருவரும் புதிய பேட்ஸ்மேன்கள். நிலைத்து நின்று ஆட நேரம் எடுக்குமே என ரசிகர்கள் பயந்தாலும், உள்ளே வந்திருப்பது ஏபிடி என்பதால் தைரியமும் இருந்தது. பல மாதங்களாய் கிரிக்கெட்டே விளையாடாத போதிலும், எப்படி இப்படி எல்லாப் போட்டிகளிலும் வெளுக்கிறார் என இந்த மனிதர் நம்மை ஆச்சர்யப்பட வைத்துக் கொண்டே இருக்கிறார். 17-வது ஓவரில் உனத்கட் வீசிய பந்தை ஏபிடி அடிக்க, அது கேட்ச் டிராப்பும் செய்யப்பட்டு ரன் அவுட் வாய்ப்பும் நூலிழையில் தவறியது. இதுதான் ராஜஸ்தான் கோட்டைவிட்ட இடம். 18-வது ஓவரை வீசிய தியாகி, வெறும் 10 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார்.

12 பந்துகளில் 35 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. எல்லாமே நன்றாகச் சென்று கொண்டிருக்கிறதே, ராஜஸ்தான் அணி அப்படி எல்லாம் வெற்றி பெறாதே என நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அதற்கு அடுத்ததாய் வந்த உனத்கட்டின் ஓவர், போட்டியை மொத்தமாய் ஆர்சிபியின் பக்கம் கொண்டு சென்றது. ஹாட்ரிக் சிக்ஸர் விளாசிய ஏபிடி, வெற்றியை மொத்தமாய் தங்கள் பக்கம் எடுத்துச் சென்று விட்டார். அந்த ஓவரில் மட்டும் 25 ரன்களை எடுத்து ஆர்சிபி.

#RRvRCB
#RRvRCB

10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி ஓவரை எதிர்பார்த்தபடி ஆர்ச்சர் வீச, முதல் பந்தில் 2 ரன்களை எடுத்த குர்கீரத், இரண்டாவது பந்தில் ஒரு ரன் மட்டும் எடுத்து ஸ்ட்ரைக்கை ஏபிடிக்கு கொடுக்க, அடுத்தப்பந்தில் இரண்டு ரன்களை அடித்த ஏபிடி, மூன்று ரன்களில் ஐந்து ரன்கள் எடுக்க வேண்டும் என்ற பரபரப்பான நிலையில் எனக்கு அவ்வளவு பொறுமை இல்லை என்பது போல் நான்காவது பந்தை சிக்ஸருக்குத் தூக்கி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அணியை வெல்ல வைத்தார். 22 பந்துகளில் 55 ரன்களைக் குவித்த ஏலியன் ஏபிடி மறுபடியும் தான் ஒரு ஆபத்பாந்தவன் என அழுத்தமாய் நிருபித்திருக்கிறார்.

இந்த வெற்றியின் முலம் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது ஆர்சிபி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு