Published:Updated:

ஈ சாலா கப் பெங்களூருக்குத்தான் போல... கூட்டுழைப்பால் கொல்கத்தாவை காலி செய்த கோலி அண்ட் கோ! #RCBvKKR

2020-யில் இதுவரை நடக்காத விஷயங்கள் எல்லாம் நடப்பதால் ஈ சாலா கப்பும் நம்தாகிவிடும் என்றே தோன்றுகிறது. அதற்கான எல்லா தகுதிகளோடும் இந்த முறை களமிறங்கியிருக்கிறது ஆர்சிபி!

2020 ஐபிஎல்-ல் கெத்துகாட்டுகிறது கோலி அண்ட் கோ. 7 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியைச் சந்தித்து 10 புள்ளிகளுடன் டேபிள் டாப்பர்களோடு ரன்ரேட்டில் மோதிக்கொண்டிருக்கிறது. சிக்ஸர்கள் பறக்கும் ஷார்ஜா மைதானத்தில் ஏபிடி அடிப்பொலி ஆட்டம் ஆட, பெங்களூருவின் ஸ்பின்னர்கள் கொல்கத்தாவை மடக்கி முடக்க, 82 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பெங்களூரு.
#RCBvKKR
#RCBvKKR

டாஸ் வென்ற கோலி முதல் பேட்டிங்கை தேர்வுசெய்தார். இரண்டு அணிகளும் ஷார்ஜாவை மனதில்கொண்டு மாற்றங்களை செய்திருந்தன. பெங்களூரு கூடுதலாக ஒரு பெளலர் வேண்டும் என்கிற திட்டமிடலுடன் குர்கீரத் மானுக்கு பதிலாக முகமது சிராஜை மீண்டும் அணிக்குள் கொண்டுவந்தது. கொல்கத்தாவோ பெளலிங் பிரச்னையால் வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்டிருக்கும் சுனில் நரைனுக்கு பதிலாக பவர்ஃபுல் பேட்ஸ்மேன் வேண்டும் என இங்கிலாந்து பேட்ஸ்மேன் டாம் பேன்ட்டனை அணிக்குள் சேர்த்தது.

மீண்டும் ஒருமுறை தேவ்தத் படிக்கலும், ஆரோன் ஃபின்ச்சும் பெங்களூருவுக்குப் பிரமாதமான ஓப்பனிங்கைக் கொடுத்தார்கள். பவர்ப்ளே ஓவர்களில் விக்கெட்டை இழக்காமல் 47 ரன்கள் அடித்து சரியான அடித்தளத்தை அமைத்தார்கள். 23 பந்துகளில் 32 ரன்கள் அடித்த தேவ்தத் படிக்கல் ரஸலின் பெளலிங்கில் க்ளீன் போல்டானார். அடுத்து ஆரோன் ஃபின்ச் 37 பந்துகளில் 47 ரன்கள் அடித்து அவுட் ஆக, பெங்களூருவின் வெற்றிகரமான கூட்டணியான கோலி - டிவில்லியர்ஸ் ஒன்றுசேர்ந்தார்கள். கோலி கொஞ்சம் தடுமாற, ஆட்டத்தை தன் கன்ட்ரோலுக்குள் கொண்டுவந்தார் டிவில்லியர்ஸ். தொடர்ந்து கோலியை நான் ஸ்ட்ரைக்கராகவே வைத்துக்கொண்டு டிவில்லியர்ஸ் ராக்கெட்களைப் பறக்கவிட பெங்களூருவின் ரன்கள் உயர்ந்துகொண்டே போனது. 5 பவுண்டரி 6 சிக்ஸருடன் டிவில்லியர்ஸ் 33 பந்துகளில் 73 ரன்கள் அடிக்க, கோலி 28 பந்துகளில் 33 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார். பெங்களூரு 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 194 ரன்கள் அடித்தது.

#RCBvKKR
#RCBvKKR
ஷார்ஜாவைப் பொருத்தவரை 200-க்கு குறைவான எந்த ஸ்கோருமே சேஸ் செய்யக்கூடியதுதான் என்பதால் கொல்கத்தா நம்பிக்கையுடனேயே சேஸிங்கைத் தொடங்கியது. கடந்த இரண்டு போட்டிகளில் ஓப்பனராக நம்பிக்கைக் கொடுத்த திரிபாதியை மீண்டும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேனாக்கிவிட்டு, டாம் பேன்ட்டனை ஷுப்மான் கில்லோடு ஓப்பனிங் இறக்கினார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடிய பேன்ட்டனால் பிரஷரை சமாளிக்கமுடியவில்லை. டாட் பால்கள் அதிகரித்ததால் கவனத்தை இழக்க, சைனியின் பெளலிங்கில் 8 ரன்களுக்கு போல்டானார். அடுத்து வாஷிங்டன் சுந்தரின் சர்ப்ரைஸ் ஸ்பின் பெளன்சர்களால் தடுமாறியது கொல்கத்தா. நித்திஷ் ரானாவை 9 ரன்களில் அவுட் ஆக்கியவர், அடுத்து இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கனுக்கும் டாட் பால் பிரஷரைக்கூட்டி, அவரை பொறுமையிழக்கவைத்து அவுட் ஆக்கினார். இதற்கு முன்பாக தேவையில்லாமல் ஒரு சிங்கிளுக்கு அவசரப்பட்டு தன் விக்கெட்டை இலவசமாகக் கொடுத்துவிட்டுப்போனார் ஷூப்மான்.

#RCBvKKR
#RCBvKKR

இவர் அடித்த 34 ரன்கள்தான் கொல்கத்தாவின் டாப் ஸ்கோர். கில்லுக்கு அடுத்து வந்த கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் 1 ரன்னில் சஹால் பந்துவீச்சில் அவுட் ஆக, 66 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது கொல்கத்தா. இப்போது அதிசயங்களை நிகழ்த்தியே ஆகவேண்டிய கட்டாயத்துக்குப்போனார் ஆண்ட்ரி ரஸல். ஆனால், சஹால் அவருக்குப் பெரிய தடையாக இருந்தார். சஹால், மோரிஸ் என இருவரும் மிகச்சிறப்பாகப் பந்துவீச, உடானாவின் பெளலிங்கில் அடித்து ஆட ஆசைப்பட்டார் ரஸல். ஆட்டத்தின் 14-வது ஓவரான உடனாவின் ஓவரில் முதல் மூன்று பந்துகளில் பவுண்டரி, சிக்ஸர், பவுண்டரி என ரஸல் அற்புதங்களை நிகழ்த்தத் தயாராகயிருந்த நிலையில், ஐந்தாவது பந்தில் ரஸலை அவுட் ஆக்கினார் உடனா. ரஸல் எடுத்தது மொத்தம் 16 ரன்கள் மட்டுமே. மேட்ச் ரஸலின் விக்கெட்டோடு கிட்டத்தட்ட முடிந்தது.

IPL 2020: கேப்டன்ஸியைத் துறப்பாரா தோனி... சென்னையின் அடுத்த கட்டம் என்ன?! #Dhoni #CSK

பேட்டிங் பிட்ச்சில், அதுவும் பேட்ஸ்மேன்கள் தொட்டாலே சிக்ஸர் பறக்கும் சிறிய மைதானமான ஷார்ஜாவில் 4 ஓவர்களில் வெறும் 12 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் எடுத்தார் சஹால். அதேபோல் வாஷிங்டன் சுந்தரும் 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து ரானா, மார்கன் என முக்கியமான இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். மோரிஸ் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார்... என பெங்களூருவின் கூட்டுழைப்பு கொல்கத்தாவை முழுவதுமாக காலி செய்தது.

#RCBvKKR
#RCBvKKR

10 புள்ளிகளுடன் மும்பை, டெல்லி அணிகளோடு சமமாக இருக்கிறது பெங்களூரு. ரன்ரேட் மட்டும்தான் இந்த மூன்று அணிகளுக்கும் இடையிலான வித்தியாசம். பெங்களூருவின் ஸ்பின்னர்களும், பெங்களூருவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஃபின்ச், படிக்கல், டிவில்லியர்ஸ், கோலி என எல்லோருமே சூப்பர் ஃபார்மில் இருப்பது பெங்களூருவை இந்த முறை மிகச்சிறப்பான அணியாக உருவாக்கியிருக்கிறது. மும்பை, டெல்லி அணிகளுடன் ஒப்பிடும்போது வேகப்பந்து வீச்சில் மட்டுமே பெங்களூரு பின்தங்கியிருக்கிறது. அதுவும் இப்போது கிரிஸ் மோரிஸ் வந்ததும் ஓரளவுக்கு சரியாகியிருக்கிறது. ஆனால், ஸ்பின்னர்கள் துணைகொண்டு பெளலிங் ஏரியாவை பெங்களூரு சமாளித்துவிடுவதற்கான எல்லா சாத்தியங்களும் தெரிகின்றன.

2020-யில் இதுவரை நடக்காத விஷயங்கள் எல்லாம் நடப்பதால் ஈ சாலா கப்பும் நம்தாகிவிடும் என்றே தோன்றுகிறது. அதற்கான எல்லா தகுதிகளோடும் இந்த முறை களமிறங்கியிருக்கிறது ஆர்சிபி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு