Published:Updated:

IPL 2020: தோனி டு கோலி... கேன் வில்லியம்சனிடம் கற்றுக்கொள்ள வேண்டிய 5 பாடங்கள்!

Kane Williamson | கேன் வில்லியம்சன்
Kane Williamson | கேன் வில்லியம்சன்

கிரிக்கெட்டின் ஃபேப் ஃபோர் என்று புகழப்படும் லிஸ்ட்டில் இருக்கும் கேனுக்கே இந்த நிலைமைதான். 'எனக்கே இந்த நிலையா' என்றெல்லாம் கேன் எந்த ப்ரஷரையும் எடுத்துக்கொள்ளவில்லை.

8 அணிகளுமே வெற்றிக்கணக்கதைத் தொடங்கிவிட்டநிலையில் ஐபிஎல் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. எல்லா அணிகளுமே சமபலத்துடன் மோதுவதால் இந்த ஆண்டு நெட் ரன்ரேட்தான் ப்ளே ஆஃப்க்குள் நுழைவதற்கு மிக முக்கிய காரணியாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. முன்னாள் இந்திய கேப்டன் தோனி தலைமையேற்றிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது பாயிட்ன்ஸ் டேபிளில் கடைசி இடத்தில் இருக்கிறது.
CSK | சென்னை சூப்பர் கிங்ஸ்
CSK | சென்னை சூப்பர் கிங்ஸ்
twitter.com/IPL

ஐபிஎல் அட்டவணையில் கடைசி இடத்தில் இருந்து முதலிடத்துக்கு வருவது சென்னைக்கு வழக்கமான விளையாட்டுதான் என்றாலும் இந்தமுறை அந்த விளையாட்டு அவ்வளவு எளிமையாக இருக்காது. சரியான பேட்ஸ்மேன்கள் சென்னை அணியில் இல்லை என்பதோடு, பெளலிங் காம்பினேஷனும் இன்னும் செட் ஆகவில்லை. எல்லாவற்றுக்கும் மேல் தோனியே இன்னும் ஃபினிஷர் ரோலில் ஃபிட் ஆகவில்லை. அதேபோல் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியிருக்கும் கோலி, மொத்தமாகவே 18 ரன்கள்தான் அடித்திருக்கிறார். மும்பைக்கு எதிராக சூப்பர் ஓவரில் அடித்த பவுண்டரிதான் கோலியின் முதல் பவுண்டரி. கோலி அவுட் ஆஃப் ஃபார்ம். அதேபோல் ரோஹித் ஷர்மாவும் பந்துகளைச் சந்திக்க சிரமப்படுகிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக 80 ரன்கள் அடித்திருந்தாலுமே ரோஹித்தின் வழக்கமான இன்னிங்ஸாக அது இல்லை. சென்னை, பெங்களூருவுக்கு எதிரானப் போட்டிகளில் ரோஹித்தின் ஆட்டம் எடுபடவில்லை.

இந்தியாவின் டாப் 3 வீரர்கள் அவுட் ஆஃப் ஃபார்மில் இருப்பதற்கு முக்கியமான காரணமாக சொல்லப்படுவது கொரோனா காரணமாக பல மாதங்களாக விளையாடவோ, பயிற்சியோ செய்யவில்லை என்பதுதான். 'இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலிய அணிகள் இந்த கொரோனா சூழலில் சர்வதேசப் போட்டிகளில் விளையாடின. கரீபியின் லீகில் பல நாட்டு வீரர்கள் ஆடி பயிற்சிபெற்றார்கள். அதுபோல் இந்திய வீரர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை' என்கிற கருத்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாக முன்வைக்கப்படுகிறது. ஆனால், கேன் வில்லியம்சனும் இந்திய வீரர்களைப்போலவே நீண்ட நாள் பிரேக்கில் இருந்தவர். அவர் எந்த சர்வதேசபோட்டியிலும், கரீபியன் லீகிலும் விளையாடவில்லை. ஆனால், அவரால் மட்டும் எப்படி முதல் போட்டியிலேயே ஃபார்முக்கு வரமுடிகிறது?!

Kane Williamson, VVS Laxman
Kane Williamson, VVS Laxman
Sunrisers Hyderabad

1. ப்ரஷரைக் கையாள்வது எப்படி?!

பெங்களூரு, பஞ்சாப், டெல்லி என மூன்று அணிகளுக்கு எதிராக இப்போது ஐதராபாத் விளையாடி முடித்திருக்கிறது. இதில் பெங்களூரு, பஞ்சாப் அணிகளுக்கு எதிரானப் போட்டிகளில் கேன் வில்லியம்சன் ஐதராபாத்துக்காக விளையாடவில்லை. ஐதராபாத்தும் தோல்வியடைந்தது. டெல்லிக்கு எதிராக ஆடும் ப்ளேயிங் லெவனில் இடம்பிடித்தார் கேன். இவரை ரிஸ்க் எடுத்துதான் ப்ளேயிங் லெவனுக்குள் கொண்டுவந்தார் கேப்டன் வார்னர். ஏனென்றால் வில்லியம்சன் இடத்தில் முகமது நபிதான் விளையாடியிருக்கவேண்டும். அதிக இடது கை பேட்ஸ்மேன்களைக்கொண்ட டெல்லி அணிக்கு எதிராக விளையாடும்போது முகமது நபி போன்ற ஆஃப் ஸ்பின்னர் அவசியம். ஆனால், நபி மேல் நம்பிக்கை இருந்தாலும் கேன் மிடில் ஆர்டருக்கு மிகவும் அவசியம் என்பதால் ரிஸ்க் எடுத்தார் வார்னர். இப்போது கேன் வில்லியம்சனுக்கு கூடுதல் ப்ரஷர். தனக்காக நபியின் நீக்கம் சரியானதுதான் என்பதை அவர் நிரூபித்தேயாக வேண்டும் என்கிற சூழலில்தான் அவர் நேற்று டெல்லிக்கு எதிராக களமிறங்கினார். பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் சேர்த்து நபி பங்களிப்பதற்கும் மேல் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே இருந்து தான் பங்களிக்கவேண்டிய ப்ரஷர் சூழல். ஆனால், சவாலை ஈஸியாக சமாளித்தார் கேன் வில்லியம்சன். தலைக்குள் எதையும் ஏற்றிக்கொள்ளாமல் எப்போதும்போல் தான் ஆடும் கிளாஸிக்கல் இன்னிங்ஸ் ஆடினார்.

2. ஒரே ஒரு டாட் பால்!

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் 12வது ஓவரில் களத்துக்கு வந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 11.2 ஓவர்களில் 92 ரன்கள். வார்னர், மணிஷ் பாண்டே அவுட் ஆகிவிட பேர்ஸ்டோ அடிக்கவும் முடியாமல், அவுட் ஆகவும் முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். இப்போது கேனின் கையில் ஆங்கர் மற்றும் ஃபினிஷர் என இரண்டு ரோல்களுமே இருந்தன. 26 பந்துகளைச் சந்தித்து 41 ரன்கள் அடித்து கடைசி ஓவரில், அதுவும் அவர்கள் திட்டமிட்ட ஸ்கோரான 160 ரன்களைத் தொட்டதும்தான் அவுட் ஆனார் கேன் வில்லியம்சன். இந்த இன்னிங்ஸில் 5 பவுண்டரிகள் அடக்கம். கேனின் இன்னிங்ஸில் இந்தியாவின் பேட்ஸ்மேன்கள் கவனிக்க வேண்டியது அவர் விளையாடிய டாட் பால்ஸ். நேற்றைய இன்னிங்ஸில் கேன் வில்லியம்சன் ரன் அடிக்காமல் விட்டது ஒரே ஒரு பந்துதான். மற்றபடி தான் சந்தித்த 25 பந்துகளிலும் ரன் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்திக்கொண்டேயிருந்தார்.

#Dhoni
#Dhoni

3. ரோல் என்ன?!

ராஜஸ்தானுக்கு எதிராக சென்னை விளையாடிய போட்டியில் 7-வது பேட்ஸ்மேனாக உள்ளே வந்தார் தோனி. இவரின் வழக்கமான பேட்டிங் பொசிஷன் 5-வது இடம். அதேபோல் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ஐபிஎல் போட்டிகளில் ஆடி அதிக ரன்கள் அடித்தார். அவரின் ஐபிஎல் சதம் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக அடிக்கப்பட்டதுதான். ஆனால், தோனி - கோலி என இருவருக்குமே தாங்கள் ஃபார்மில் இருக்கிறோமா இல்லையா என்கிற கேள்வி இருப்பதால் தங்களுடைய பேட்டிங் பொசிஷனை இறக்கிக்கொண்டே வருகிறார்கள். பஞ்சாபுக்கு எதிரானப் போட்டியில் தன் இடத்தில் ஆஸ்திரேலியாவின் இளம் பேட்ஸ்மேன் பிலிப்பை எல்லாம் இறக்கிப் பின்வாங்கினார் கோலி. ஆனால், வில்லியம்சனுக்கு தன்னுடைய ஃபார்ம் குறித்தெல்லாம் கவலையில்லை. அணியில் தனக்கு என்ன ரோல் கொடுக்கப்பட்டிருக்கிறது, அதை எப்படி சரியாக முடிப்பது என்கிற தெளிவான கேம்பிளானோடு விளையாடுகிறார். தோனியும், கோலியும் கேப்டன்ஷிப் அவர்களுக்குக் கூடுதல் சுமை என்றால், 2018 ஐபிஎல்-ல் ஐதராபாத்தின் கேப்டனாக இருந்து இறுதிப்போட்டிவரை அழைத்துச்சென்றவர் வில்லியம்சன்தான். தான் டெலிவர் செய்யவேண்டிய கட்டம் வரும்போது அதை தான் செய்து முடிக்கவேண்டும் என்கிற தெளிவு கேனுக்கு இருப்பதால்தான் அவரால் தன் இயல்பான ஆட்டத்தை ஆடமுடிகிறது.

எங்களுக்கு பவுண்டரி வேணாம் சாரே... ஓடி, ஓடியே ரன் சேர்த்த ஐதராபாத்... பம்மிய டெல்லி! #DCvSRH

4. ஃபினிஷர்ஸ்?!

ஆங்கர், ஃபினிஷர் என எந்த ரோலில் விளையாடினாலும் ஸ்ட்ரைக் ரொட்டேஷன் அவசியம். சென்னை வெர்சஸ் ராஜஸ்தான் போட்டியில் தோனி களத்துக்குள் வரும்போது 39 பந்துகளில் 103 ரன்கள் அடிக்கவேண்டும். ஆனால், தோனி சந்தித்த முதல் பந்தே டாட் பால். இன்னொரு முனையில் டுப்ளெஸ்ஸி நல்ல ஃபார்மில் ஆடிக்கொண்டிருக்கிறார் எனும்போது ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யாமல் அவருக்கும் சேர்த்து ப்ரஷரை ஏற்றினார் தோனி. டுப்ளெஸ்ஸி இருக்கும்வரை 3 பந்துகளை டாட் பாலாக்கினார். கோலியும் தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் இதையேதான் செய்தார். ஏகப்பட்ட டாட் பால்ஸ். அதுவும் மும்பைக்கு எதிரான கடைசிப்போட்டியில் 11 பந்துகளில் 3 ரன்கள் அடித்திருந்தார் கோலி. ரோஹித் ஷர்மாவுக்கும் இதே கதைதான். பவுண்டரிகள் அடிப்பது எளிதாக இல்லாதபோது சிங்கிள், டபுள் என ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்துகொண்டேயிருக்கவேண்டும் என்பது கிரிக்கெட்டின் பாலபாடம். இதை சரியாகச் செய்வதில்தான் கேன் வில்லியம்சனின் வெற்றியிருக்கிறது.

Virat Kohli | RCB
Virat Kohli | RCB

5. சிம்ப்பிள் அண்ட் கூல்!

ஏற்கெனவே சொன்னதுபோல பயங்கர ப்ரஷரான கட்டத்தில்தான் கேன் வில்லியம்சன் விளையாடவந்தார். அவர் அணிக்குள் தொடர தன்னுடைய இருப்பைக் காட்டியே ஆகவேண்டும். கிரிக்கெட்டின் ஃபேப் ஃபோர் என்று புகழப்படும் லிஸ்ட்டில் இருக்கும் கேனுக்கே இந்த நிலைமைதான். 'எனக்கே இந்த நிலையா' என்றெல்லாம் கேன் எந்த ப்ரஷரையும் எடுத்துக்கொள்ளவில்லை. 1 டவுன் பேட்ஸ்மேனாக இறங்காதபோதும் வருத்தப்படவில்லை. 2 டவுன் பேட்ஸ்மேனாக கூலாக வந்தார். ரன்ரேட்டை குறைத்துவிடாமல் கூட்டிக்கொண்டே போனார். தோனியும் கோலியும் தவறவிடும் இடம் இதுதான். இந்த ஐபிஎல்-லில் இவர்கள் இருவரும் இன்னும் தங்கள் இயல்பான ஆட்டத்தை விளையாடவில்லை.

இன்னும் 11 போட்டிகள் தோனி, கோலி, ரோஹித் தங்கள் திறமைகளை நிரூபிக்க இருக்கிறது. கேன் எப்படி சூழல்களை சமாளித்து சிறப்பாக ஆட வேண்டும் என்று சொல்லித்தர தயாராக இருக்கிறார்... கேன் வில்லியம்சனின் இன்னிங்ஸ்களைக் கொண்டாடத் தயாராக இருப்போம்!
அடுத்த கட்டுரைக்கு