Published:Updated:

IPL 2019 Final: பொல்லார்ட் அதிரடி, வாட்டோ சரவெடி, தோனி சந்தித்த பேரிடி... மும்பை படைத்த வரலாறு!

IPL 2019 | MI v CSK

பொல்லார்ட்டின் அதிரடி, வாட்சனின் சரவெடி, தோனி ரன்அவுட்டின் பேரிடி, மலிங்காவின் இறுதிஒவர் இடி என த்ரில்லிங்க்கின் உச்சமாய் முடிந்த போட்டி, ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி!

IPL 2019 Final: பொல்லார்ட் அதிரடி, வாட்டோ சரவெடி, தோனி சந்தித்த பேரிடி... மும்பை படைத்த வரலாறு!

பொல்லார்ட்டின் அதிரடி, வாட்சனின் சரவெடி, தோனி ரன்அவுட்டின் பேரிடி, மலிங்காவின் இறுதிஒவர் இடி என த்ரில்லிங்க்கின் உச்சமாய் முடிந்த போட்டி, ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி!

Published:Updated:
IPL 2019 | MI v CSK
சிஎஸ்கே வெர்சஸ் மும்பை இந்தியன்ஸ் மேட்ச் என்றாலே, டிஆர்பி எகிறும், இதயங்கள் படபடக்கும், நொடிக்கு நொடி விறுவிறுப்பும், எண்ணிலடங்கா ட்விஸ்ட்டுகளும் இருக்கும், அவ்வளவு சீக்கிரம் யார் ஜெயிப்பார்கள், யார் தோற்பார்கள் என்று முடிவே எடுக்க முடியாது. ஒரே ஒரு பந்தில் போட்டியின் ஒட்டுமொத்த தலையெழுத்தே மாறிவிடும். அதனால்தான், இந்த மோதலை, El Clasico என்று வர்ணிக்கிறார்கள்.

ஐபிஎல் 2019 இறுதிப்போட்டியை, அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட மாட்டார்கள். பத்தோடு பதினொன்றாகக் கடந்து போகக்கூடிய ஃபைனல் போட்டியல்ல இது. சிஎஸ்கே ரசிகர்களுக்கு, ஆறாத வடுவை விட்டுச் சென்ற போட்டி இது. வெற்றி பெற்றுவிடுவோம் என்று இறுதிப்பந்துவரை நம்பி ஏமாந்த போட்டி இது. ஏன், டென்ஷனே ஆகாத கேப்டன் கூல் தோனியே, போட்டி முடிவின்போது பயங்கர டென்ஷன் ஆனார் என்று ஷேன் வாட்சனால் கூறப்பட்ட போட்டி இது.

IPL 2019 | MI v CSK
IPL 2019 | MI v CSK

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த இறுதிப்போட்டிக்கு முன், இரு அணிகளும் மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றிருந்தன. இறுதிப்போட்டியில் ஜெயிப்பவர்கள், 4-வது முறையாக, ஐபிஎல் கோப்பையைத் தட்டிச் செல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்பதால், இரண்டு அணி ரசிகர்களுக்கும், பெரும் கௌரவப் பிரச்னையாகவே இது, பார்க்கப்பட்டது; எப்படியாவது நமது அணி கோப்பையை வென்றுவிடும் என்று சோசியல் மீடியா முழுவதும் சூளுரைத்துக் கொண்டிருந்தார்கள்.

இரு அணிகளும், 14 போட்டிகளில் விளையாடி, 9-ல் வெற்றிபெற்று, சமபுள்ளிகள் பெற்று, கம்பீரமாக பிளே ஆஃப்பிற்குள் நுழைந்து, இறுதிப் போட்டிக்கும் தகுதிபெற்றிருந்தன. அந்த ஆண்டு நடைபெற்ற இரண்டு லீக் போட்டிகளிலும், பிளே ஆஃப் போட்டியிலும், மும்பை இந்தியன்ஸ் சிஎஸ்கேவை வெற்றிபெற்று, தங்கள் பலத்தை பலமாக நிரூபித்திருந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிஎஸ்கே எட்டாவது முறையாக இறுதிப்போட்டியை எட்டியிருந்தது. மும்பை இந்தியன்ஸோ, தங்களின் ஜந்தாவது இறுதிப்போட்டியை ஆடத் தயாராகிக் கொண்டிருந்தது. இறுதிப்போட்டியில் அதிக அனுபவம் வாய்ந்த சிஎஸ்கே அணி, தங்களின் ஆதிக்கத்தைச் செலுத்தும் என்று கருதியிருந்த ரசிகர்களுக்கு, கனவிலும் நினைக்காத போட்டியாக மாறிப் போனது இது.

ஹைதராபாத் ராஜீவ் காந்தி இண்டர்நேஷனல் மைதானத்தில் வைத்து நடைபெற்ற போட்டியில், டாஸை வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. மும்பை சார்பாக ரோஹித் ஷர்மாவும் , டீ காக்கும் களமிறங்க, ஓப்பனிங்கே அதிரடியுடன் ஆரம்பித்தது. தீபக் சாஹர் வீசிய 3-வது ஓவரில், 3 சிக்ஸர்களுடன் 20 ரன்கள் எடுக்க, ஹை ஸ்கோரிங் போட்டியாகத்தான் இருக்கப்போகிறது என்று ரசிகர்கள் நினைக்க, அதற்கடுத்த சில ஓவர்களிலேயே, காட்சிகள் மாறத் தொடங்கின. தாக்கூர் பந்தில் டீ காக்கும், தீபக் சாஹரின் பந்தில் ரோஹித் ஷர்மாவும், அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஆட்டம் காண ஆரம்பித்தது மும்பை.

IPL 2019 | MI v CSK
IPL 2019 | MI v CSK

5 ஓவர்களில், 45 ரன்கள் என ஸ்டிராங்காக இருந்த மும்பை, அடுத்தடுத்து விழுந்த 2 விக்கெட்டுகளால், அடுத்த 5 ஓவர்களில் வெறும் 25 ரன்கள் மட்டுமே சேர்த்து, 10 ஓவர்கள் முடிவில், 70 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என இருந்தது.

இப்படியே ஆடிக்கொண்டிருந்தால் ஸ்கோர் வராது, 'தடுத்து ஆடியது போதும், இனிமேல் அடித்து ஆடுவோம்!', என்று மும்பை வீரர்கள் அதிரடியில் இறங்க முயல, முயற்சிகள் அனைத்தும் கானல் நீர் போல் வீண் ஆனது. சூர்யக்குமார், க்ருணால் பாண்டியா, இஷான் கிஷன் என அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, 101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற பரிதாப நிலைமைக்குச் சென்றது.

எப்போதெல்லாம் மும்பை அணிக்கு ஆபத்து வருகிறதோ, அப்போதெல்லாம் கட்டப்பாவாக முன்வந்து நின்று, மும்பை அணியை மீட்கும் ரட்சகன் பொல்லார்ட், மற்றுமொரு முறை, அணியை மீட்டார். ஒரு பக்கம் விக்கெட் போய்க்கொண்டே இருந்தாலும், அவர் மட்டும் தனியாக ஆடி 25 பந்தில் 41 ரன்கள் எடுத்து, அணியின் ஸ்கோரை, 149 ரன்கள் எனக் கொண்டு வந்து சேர்த்தார்.

2017 ஃபைனலில், ஏற்கனவே 129 ரன்களை, டிஃபெண்ட் செய்து காட்டியிருந்ததால், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள், இந்தப் போட்டியையும் டிஃபெண்ட் செய்து விடலாம் என்று நம்பிக்கையுடன் ஃபீல்டிங் செய்ய வர, அந்த நம்பிக்கையைத் தகர்க்கும் அளவுக்கு, சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் வீரர்களின் பேட்டிங் அதிரடியாக இருந்தது.

க்ருணால் பாண்டியா வீசிய 4-வது ஓவரில், டூ ப்ளஸ்ஸிஸ், 14 ரன்கள் எடுக்க, மேட்சை எளிதாக முடித்து விடுவார்களோ என்று தோன்றியது. அதிரடியாக ஆடும் முடிவில் இருந்த டூ ப்ளஸ்ஸிஸை, தந்திரமாக மற்றொரு பந்தை அடிக்கப் போகுமாறு செய்து, ஸ்டம்பிங்கில் அவர் விக்கெட்டைத் தூக்கினார் க்ருணால்.

IPL 2019 | MI v CSK
IPL 2019 | MI v CSK

டூ ப்ளஸ்ஸிஸ் ஆட்டமிழந்தாலும், ரன் ரேட்டைக் குறைக்கும் எண்ணம், வாட்சனுக்கு இல்லை. மலிங்கா வீசிய 6-வது ஓவரில், 15 ரன்கள் அடிக்க, 53 ரன்கள் என வந்து நின்றது. 150 ரன்கள் சேஸிங் போட்டியில், பவர்பிளே ஓவர்களில், 53 ரன்கள் 1 விக்கெட் என்பது, போட்டியின் பாதிக் கடலைத் தாண்டிவிட்டது போல் ஆகும். மீதமிருக்கும் 14 ஓவர்களில், 100 ரன்களுக்குக் கீழ் சேஸிங் என்பது எந்தவொரு அணிக்கும் அல்வா சாப்பிடுவது போன்றது. ஆனால், சிஎஸ்கே விஷயத்தில் நடந்தது வேறு.

மேக் க்ளீனகன் வீசிய ஷார்ட் பாலில், கீப்பிங் கேட்சில் அவுட் கொடுக்க, ரெய்னா ரிவ்யூ எடுத்துத் தப்பிப் பிழைத்தார். ஆனாலும், அவரால் பெரியதாக ஸ்கோர் செய்ய முடியவில்லை. ராகுல் சாஹர் வீசிய லெக் ஸ்பின்னில், பிளம்ப் முறையில் எல்பிடபுள்யூ ஆனார். மறுமுனையில் வாட்சன் கொடுத்த கேட்சை, மலிங்கா தவறவிட, மும்பை அணி கோப்பையைத் தவறவிட்டு விட்டார்களோ என்று தோன்றியது. மும்பை போல் சிஎஸ்கேவும், 10 ஓவர்கள் முடிவில் 72 ரன்கள் என வந்து நின்றது.

விக்கெட் டேக்கர் பும்ரா கைகளுக்குப் பந்து செல்ல, அவர் வந்த வேகத்தில் அம்பதி ராயுடுவை அனுப்பி வைத்தார். ராயுடுவுக்கு அடுத்து தோனி உள்ளே வர, அணியைக் கரை சேர்த்து விடுவார் என நம்பிய ரசிகர்களுக்கு, பெரிய இடியை இறக்கினார், இஷான் கிஷன். ஓவர் த்ரோவுக்காக, இரண்டாவது ரன் ஓட முற்படும்போது, கிஷன் அடித்த த்ரோ, ஸ்டம்ப்பைப் பதம்பார்க்க, பதறித்தான் போனார்கள், சிஎஸ்கே ரசிகர்கள். ஆம்! அன்று வீழ்ந்தது, தோனியின் விக்கெட் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஐபிஎல் கோப்பைக் கனவும்தான்.

தோனியின் விக்கெட் போன அதிர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற பொறுப்பை உணர்ந்திருந்த வாட்சன், அடுத்தடுத்து வந்த ஓவர்களில், அதிரடி காட்டினார். அதுவும், மலிங்கா வீசிய ஓவரில் 20 ரன்கள் எடுக்க, போட்டி, சிஎஸ்கேவுக்குச் சாதகமாக மாறத் தொடங்கியது.

IPL 2019 | MI v CSK
IPL 2019 | MI v CSK

ஒருபுறம் சிஎஸ்கே வீரர்கள் அதிரடி, மறுபுறம் கேட்ச் டிராப்கள் என மத்தளத்துக்கு இருபக்கமும் அடி என்ற கூற்று போல் அடி மேல் அடி வாங்கியது மும்பை. 18-வது ஓவரை, எந்த பாண்டியாவுக்குக் கொடுக்கலாம் என்று யோசித்த ரோஹித், க்ருணால் பாண்டியாவுக்குக் கொடுக்க, அது எவ்வளவு பெரிய தவறு என்று சிறிது நேரத்தில் உணர்த்தினார், வாட்சன். ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து, 4-வது கோப்பையை, தாங்கள் தட்டிச் செல்லப் போகிறோம் என்று சொல்லாமல் சொல்லி, ரத்தம் வழிந்த கால்களோடு ஆடிக்கொண்டிருந்தார். 12 பந்துகளுக்கு, 18 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், பும்ரா, பிரோவா விக்கெட்டை வீழ்த்த, அதே ஓவரில், டீகாக் விட்ட பைஸின் மூலம் பவுண்டரி போக, கடைசி ஓவரில், மொத்தம், 9 ரன்கள் தேவை என வந்து நின்றது, சிஎஸ்கே.

வாட்சன் இருந்த உத்வேகத்திற்கு, கோப்பையை வாங்காமல் ஓய மாட்டார் போலிருந்தது. நெருக்கடி மும்பைக்கே என்றுதான் தோற்றம் உருவானது. பும்ரா மற்றும் மேக் க்ளீனகனின் ஓவர்கள் முடிந்துவிட்ட நிலையில், இறுதிப் போட்டியின், இறுதி ஓவரை வீச யார் வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, ஆச்சர்யம் அளிக்கும் வகையில், மலிங்காவிடம் பந்து போனது. பல போட்டிகளில் மேட்ச் வின்னராகத் திகழ்ந்த அவருக்கு அன்றைய தினம் சரியாக அமையவில்லை. மூன்று ஓவர்களில், 42 ரன்களை அள்ளிக் கொடுத்திருந்தார். அப்படியிருந்த சூழ்நிலையில், அவர் எப்படிச் சரியான தேர்வாய் இருப்பார் என்ற சந்தேகம் எழ, பந்தை முத்தமிட்டுக் கொண்டே வீசிய அந்தக் கைகள், மும்பை இந்தியன்ஸுக்கு, நான்காவது ஐபிஎல் கோப்பையை, இறுதிப் பந்தில் தாக்கூரை ஆட்டமிழக்கச் செய்து, பெற்றுக் கொடுத்தது.

IPL 2019 | MI v CSK
IPL 2019 | MI v CSK

மலிங்கா யார்க்கர்களாக வீச, பந்தை பவுண்டரிக்கு அனுப்ப முடியாமல் சிஎஸ்கே வீரர்கள் திணற, 3 பந்தில் 5 ரன்கள் எடுக்க வேண்டும் என வந்து நிற்க, அடுத்த பந்தில் வாட்சன் ரன்அவுட் செய்யப்பட்டார். ரத்தம் தோய்ந்த கால்களுடன் போராடிய அந்த மாவீரன், பெவிலியனை நோக்கி நடக்க, ரசிகர்களின் கண்கள் கலங்கித்தான் போயின. அடுத்து வந்த தாக்கூர், 5-வது பந்தில் 2 ரன்கள் எடுக்க, இறுதிப்பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை. 1 ரன் எடுத்தால் சூப்பர் ஓவர், 2 ரன்கள் எடுத்தால் கோப்பை என்று ஆடிய சிஎஸ்கேவின் கனவை, தவிடு பொடியாக்கினார், மலிங்கா. தனது பிரம்மாஸ்திரமான ஸ்லோ பந்தின் மூலம், மற்றுமொரு யார்க்கரை வீச, தாக்கூர் எல்பிடபுள்யூ ஆக, மும்பை இந்தியன்ஸ், 1 ரன் வித்தியாசத்தில் த்ரில்லிங் வெற்றியைப் பெற்று, 4-வது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது.

கோப்பையை வெல்ல இரு அணிகளுக்கும் சம வாய்ப்புகள் அமைந்தபோதும், இரு அணிகளும், ரங்க ராட்டினம் சுற்றுவது போல், மாறி மாறி மேலேயும் கிழேயும் ஏறி இறங்கி, ரசிகர்களின் பிரஷரை பலமடங்கு கூட்டின. எனினும், இப்போட்டியைப் பொறுத்தவரை, இருபுறமும் தவறுகள் இருப்பினும், போட்டியின் இறுதியில் தவறுகள் கம்மியாகச் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, வெற்றிவாகை சூடியது!