Published:Updated:

IPL 2018: ரசிகர்களின் ஏக்கம், தோனியின் கண்ணீர்... அது ஓர் அடையாள மீட்பு யுத்தம்!

IPL 2018
IPL 2018 ( iplt20.com )

சூதாட்ட அணி... அங்கிள்ஸ் ஆர்மி... போன்ற விமர்சனங்களெல்லாம் தோனி கோப்பையை கையில் ஏந்திய அந்த நொடியில் சென்னை ரசிகர்களின் ஆராவாரத்தில் காணாமல் கரைந்து போனது. இன்று சென்னை மீண்டு வந்து ஐபிஎல் கோப்பையை முத்தமிட்ட நாள். சிஎஸ்கே 2.0 பிறந்த நாள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தோனி எப்போதுமே தன்னுடைய உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார். உலகக்கோப்பையையே வென்ற போதும் கூட லிமிட்டெட் ரியாக்ஷன்களையே வெளிப்படுத்தியிருப்பார். வெற்றியின் போது மட்டுமல்ல, பல மோசமான தோல்விகளின் போதுமே அப்படித்தான் இருப்பார். அவரின் உள்ளுணர்வுகளை உணர்ந்துக் கொள்வது அவ்வளவு கடினம். ஆனால், அப்பேற்பட்ட தோனியே ஒரு கூட்டத்தில் குரல் உடைந்து போய் நா தழுதழுக்க கண்ணீர்விட்ட சம்பவமும் நடந்திருக்கிறது. தோனி ஏன் அழுதார்?

2018 ஐபிஎல்-க்கு முன்பாக சென்னை அணி வீரர்களுடன் நடந்த ஒரு கூட்டத்தில்தான் தோனி மனமுடைந்து கண்ணீர் சிந்தியிருந்தார். காரணம், சென்னை அணி. ஆம், இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு சென்னை அணி மீண்டு வந்ததை நினைவுகூர்ந்துதான் தோனி கண்ணீர் சிந்தியிருந்தார். இந்தக் கண்ணீருக்கு பின்னால் பல வலிகளும் வேதனைகளும் ஒளிந்திருந்தது.

ஐபிஎல்-லின் ஆகச்சிறந்த அணியாக சென்னை அணி வலம் வந்துக்கொண்டிருந்தது. உலகின் தலைசிறந்த கேப்டன் தோனி வழிநடத்தியதால் ஆடிய அத்தனை சீசன்களிலும் ப்ளே ஆஃப்ஸை எட்டிய ஒரே அணி. மற்ற அணிகள் கோப்பையை வெல்ல வேண்டுமாயின் சென்னை அணியை தாண்டிதான் வென்றாக வேண்டும். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல. 'ஐபிஎல் - இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் மோத மீதமுள்ள 7 அணிகளும் அடித்துக்கொள்ளும் தொடர்' என சென்னை ரசிகர்கள் பயங்கர பெருமிதத்தோடு இருந்தார்கள். 2015 வரைக்குமே இவைதான் சென்னை அணியின் அடையாளங்கள்.

IPL 2018
IPL 2018
iplt20.com

ஆனால், அதன்பிறகு நிலைமை தலைகீழானது. சூதாட்ட சர்ச்சை வழக்கு பூகம்பமாக வெடித்து சென்னை அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. இரண்டு முறை சாம்பியன்கள், ஐபிஎல்-லின் சிறந்த அணி என்கிற அடையாளமெல்லாம் தூள்தூளாக நொறுங்கி 'சூதாட்ட சர்ச்சையில் தண்டனை பெற்ற அணி' என்கிற அடையாளமே பிரதானப்படுத்தப்பட்டது. ஒரே ஆலமரத்தில் ஒரே குடும்பமாக வாழும் பறவைகள் போன்றிருந்த சிஎஸ்கே வீரர்கள் சிதறுண்டு வெவ்வேறு அணிகளுக்காக ஆட வேண்டிய இக்கட்டான சூழல் உருவானது. ஆனால், அந்த அணிகளில் சிஎஸ்கேவின் சாம்பியன் வீரர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதை சரியாகக் கொடுக்கப்படவில்லை. தோனியையே கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கும் அளவுக்கு சென்றது புனே அணியின் நிர்வாகம். ரசிகர்களை போன்றே எல்லாவற்றையும் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக் கொண்டார் தோனி.

2018 பிறந்தது. சென்னை அணியின் மீதான தடைகளும் தகர்ந்தன. மீண்டும் சென்னை அணி மறுபிறப்பெடுத்தது. ஆனால், 'சூதாட்ட சர்ச்சையில் தண்டனை பெற்ற அணி' என்கிற முத்திரை மட்டும் இன்னும் அழியவில்லை. அதை அழித்து தங்களின் அடையாளத்தை மீட்டெடுக்க சென்னை அணிக்கும் தோனிக்கும் சாம்பியன் ஆவதை தவிர வேறு வழியில்லை.

மீண்டும் சாம்பியனாகி, நாங்கள் எப்போதும் ஒரு சாம்பியன் அணிதான் அதுதான் எங்களின் அடையாளம் என்பதை உரக்க சொல்லும் நாளே சென்னை அணியின் மீதான கறைகள் அனைத்தையும் துடைத்தெறியும் நாளாக இருக்கும். ரசிகர்களும் அந்த நாள் எப்போது வரப்போகிறது என்ற ஏக்கத்துடனேயே 2018 சீசனை எதிர்நோக்க தொடங்கினர்.

முதல் போட்டியே சென்னை அணியின் பரமவைரியான மும்பைக்கு எதிராக, அதுவும் வான்கடேவில். தரமான கம்பேக் கொடுப்பதற்கு சரியான இடம். எதிர்பார்த்ததை போலவே போட்டி கடைசி நொடி வரை பரபரப்பாக சென்றது. சென்னை அணி பல இடங்களிலும் தடுமாறியது. ஆனாலும் ஒரு அசாத்திய நம்பிக்கை சென்னை அணியின் மீதிருந்தது. காரணம், சென்னை வெறும் வெற்றிக்காக மட்டும் ஆடவில்லை. கோடானு கோடி ரசிகர்களின் ஏக்கத்தைத் தீர்ப்பதற்காக ஆடிக்கொண்டிருந்தது. இந்த உணர்வு ப்ளேயிங் லெவனில் இருந்த அத்தனை வீரர்களுக்கும் இருந்தது. அதனாலேயே தங்கள் சக்திக்கு மீறியும் எதாவது மேஜிக் செய்து எதாவது ஒரு வீரர் சென்னை அணியை வெல்ல வைத்துவிடுவார் என்கிற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருந்தது.

IPL 2018
IPL 2018
iplt20.com

அதற்கேற்றவாறே ப்ராவோ தனது வாழ்நாளின் ஆகச்சிறந்த அசாத்திய இன்னிங்ஸை அன்று ஆடினார். பும்ராவை அடித்த அடியெல்லாம் சென்னை ரசிகர்களே எதிர்பார்க்காதது. கடைசி கட்டத்தில் ப்ராவோ அவுட் ஆகியிருந்தாலும், காயம்பட்ட சிங்கமாக கேதார் ஜாதவ் க்ரீஸுக்குள் வந்து வின்னிங் ஷாட்டை அடித்து சென்னையின் கம்பேக் போட்டியை வெற்றிகரமாக முடித்தார்.

மும்பையை அதுவும் வான்கடேவில் வைத்து வீழ்த்துவதென்பது ஒரு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை நடத்துவது போன்றதுதான். அதை வெற்றிகரமாக சென்னை அணி செய்தும் காட்டிவிட்டது. ஆனாலும், இந்த வெற்றி மட்டுமே தங்கள் மீதான கலங்கத்தை போக்கிவிடாது கோப்பையை வெல்வதுதான் ஒரே இலக்கு என்பதில் சென்னை அணி தெளிவாக இருந்தது. மும்பையை வீழ்த்திய கையோடு தனது அடையாள மீட்பு யுத்தத்தை அத்தனை அணிகளின் மீதும் தொடுத்தது. விளைவு, 9 போட்டிகளில் வென்று முதல் ஆளாக ப்ளே ஆஃப்ஸ்க்கு தகுதிபெற்றது சென்னை அணி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்னொரு பக்கம் சன்ரைசர்ஸ் அணி பற்றியும் பேசியாக வேண்டும். கேப்டன் வார்னர் இல்லாததால் இக்கட்டான சூழலில் வில்லியம்சன் அந்த அணியின் கேப்டனாகப் பதவியேற்றிருந்தார். மற்ற அணிகளை ஒப்பிடும்போது கொஞ்சம் சுமாரான அணி போல சன்ரைசர்ஸ் தெரியும். ஆனால், அவர்களின் ஆட்டம் வேறுமாதிரியாக இருக்கும். எல்லா அணிகளும் 200-220 என அடித்து நொறுக்க, சன்ரைசர்ஸ் மட்டும் சைலண்டாக 130 ரன்களை மட்டுமே எடுத்து எதிரணியை அதற்குள்ளாகவே காலி செய்துவிடும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கே 119 ரன்களை மட்டுமே டார்கெட்டாக கொடுத்து 89 ரன்களுக்குள் அந்த அணியை சுருட்டியிருக்கும். புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, ரஷித்கான், முகமது நபி என ஒரு வெறித்தனமான பௌலிங் லைன் அப் அந்த அணியிடமிருந்தது. பேட்டிங்கில் வில்லியம்சன் நங்கூரமாய் நிலைத்து நிற்க, 9 வெற்றிகளோடு ப்ளே ஆஃப்ஸ்க்கு தகுதிப்பெற்றிருந்தது சன்ரைசர்ஸ் அணி.

IPL 2018
IPL 2018
iplt20.com

ப்ளே ஆஃப்ஸில் முதல் தகுதிச்சுற்று போட்டியிலேயே சென்னையும் சன்ரைசர்ஸும் மோத வேண்டிய சூழல் உண்டானது. லீக் போட்டிகளில் சென்னை அணி சன்ரைசர்ஸை இரண்டு முறையும் தோற்கடித்திருந்ததால் சென்னை ரசிகர்கள் பெரும் நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால், சென்னை அணிக்கு சன்ரைசர்ஸ் இந்தப் போட்டியில் மரண பயத்தை காட்டிவிட்டது. வெறும் 140 ரன்களையே சென்னை அணிக்கு டார்கெட்டாக கொடுத்தது சன்ரைசர்ஸ். வாட்சன், அம்பத்தி ராயுடு இருவரும் ஃபுல் ஃபார்மில் இருந்தார்கள். தோனி தனது பெஸ்ட் சீசனை ஆடிக்கொண்டிருக்கிறார் என்பதால் சென்னை அணி சுலபமாகவே இந்தப் போட்டியை வென்றுவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சன்ரைசர்ஸின் அசாத்தியமான பௌலிங் அத்தனை நம்பிக்கைகளையும் சிதறடித்தது.

புவனேஷ்வர் வீசிய முதல் ஓவரிலேயே வாட்சன் டக் அவுட் ஆக, அம்பத்தி ராயுடும் டக் அவுட் ஆனார். தோனி, ரெய்னாவும் ஏமாற்ற சென்னை ரசிகர்கள் தலையில் துண்டு போட வேண்டிய நிலைமை உண்டானது. ஆனால், முன்பு சொன்னது போலவே எந்த வீரரும் அணியின் வெற்றிக்காக மட்டுமே ஆடவில்லை அதன் அடையாளத்தை மீட்பதற்காக ஆடிக்கொண்டிருக்கின்றது. அதனால், அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுத்து விடமாட்டார்கள். மும்பைக்கு எதிராக ப்ராவோ மேஜிக் செய்ததை போல இந்த போட்டியில் டூப்ளெஸ்சிஸ் மேஜிக் செய்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 42 பந்துகளில் 67 ரன்களை எடுத்து சென்னை அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார்.

மீண்டும் சென்னை அணி தன்னுடைய 'சாம்பியன் அணி' என்கிற அடையாளத்தை மீட்டெடுக்க இப்போது இறுதிப்போட்டி என்கிற ஒற்றை தடை மட்டுமே இருக்கிறது. இங்கேயும் விடாகண்டனாக சென்னையை தொடர்ந்து வந்தது சன்ரைசர்ஸ். மீண்டும் ஒரு முறை சென்னையும் சன்ரைசர்ஸும் இறுதிப்போட்டியில் மல்லுக்கட்ட தயாராகினர்.

சன்ரைசர்ஸ் முதல் பேட்டிங். தவானும் வில்லியம்சனும் நல்ல பார்ட்னர்ஷிப் கொடுக்க, மிடில் ஓவரில் யூசுப் பதான் அதிரடி காட்ட, ப்ராத்வேட் மூன்று சிக்சர்களை அடித்து அட்டகாசமான ஃபினிஷிங் கொடுத்திருந்தார். சன்ரைசர்ஸ் அணி வழக்கத்தை விட அதிகமாக 178 ரன்களைச் சேர்த்துவிட்டது.

ஒரு 120-130 என்றாலே சன்ரைசர்ஸ் பௌலர்கள் புகுந்து விளையாடி விடுவார்கள். 179 டார்கெட். அதுவும் இறுதிப்போட்டி என்பதால் சென்னை ரசிகர்களுக்கு சிறிய கவலை இருக்கவே செய்தது. அதற்கேற்றார் போலவே புவனேஷ்வர் குமார் முதல் ஓவரில் மிரட்டிவிட்டார். புவி ஸ்விங்கில் வித்தை காட்ட வாட்சனால் பந்தைத் தொடக்கூட முடியவில்லை. முதல் ஓவர் மெய்டன். புவியின் அடுத்த ஓவரிலும் வாட்சன் திணறவே செய்தார். வாட்சன் சந்தித்த அந்த முதல் 10 பந்துகள் சென்னை ரசிகர்களை வெடவெடக்க செய்தது. பவர்ப்ளேயில் ஒரு விக்கெட்டை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது சென்னை அணி.

IPL 2018
IPL 2018
iplt20.com

எஞ்சின் சூடுபிடிக்க சூடுபிடிக்க வேகமேறுவதை போன்று வாட்சனும் சூடுபிடிக்கத் தொடங்கினார். பவர்ப்ளேக்கு பிறகு, சன்ரைசர்ஸ் பௌலர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை வாட்சன். ஸ்டாண்ட் & டெலிவராக ஒரே பவுண்டரி சிக்சர்கள்தான். முரட்டு வேகத்தில் பாயத் தொடங்கிய வாட்சனை சன்ரைசர்ஸால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. சந்தீப் சர்மாவின் ஓவரிலெல்லாம் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்டார். ஒரே ஆளாக ஆட்டத்தை சென்னை பக்கமாக திருப்பி சதமும் அடித்து அசத்தினார். ரெய்னா நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்து அவுட் ஆக, அம்பத்தி ராயுடு வந்து ஃபினிஷிங் கொடுத்து சென்னை அணியை சாம்பியனாக்கினார்.

இழந்த பெருமையை... இழந்த அடையாளத்தை சென்னை அணி மீண்டும் பற்றிக்கொண்டது. தொடருக்கு முன்பாக வேதனையில் கண்ணீர் விட்ட கேப்டன் தோனி கம்பீரமாக நடந்து வந்து கோப்பையை கையில் ஏந்தினார். சூதாட்ட அணி... அங்கிள்ஸ் ஆர்மி... போன்ற விமர்சனங்களெல்லாம் தோனி கோப்பையை கையில் ஏந்திய அந்த நொடியில் சென்னை ரசிகர்களின் ஆராவாரத்தில் காணாமல் கரைந்து போனது. சென்னை அணி தன்னுடைய அடையாள மீட்பு யுத்தத்தை வெற்றிகரமாக அரங்கேற்றி முடித்தது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு