Published:Updated:

IPL 2016: கையிலிருந்த `ஈ சாலா கப் நம்தே' வாய்ப்பைக் கோட்டைவிட்ட ஆர்.சி.பி! | On This Day

Virat Kohli, David Warner

கெயில், கோலி, வாட்சன், டி வில்லியர்ஸ், கே.எல்.ராகுல் மிகச் சிறந்த வீரர்கள் அந்த அணியில் இருந்தார்கள். எல்லாவற்றையும்விட விராட் கோலி மிக உக்கிரமான ஃபார்மில் இருந்தார்.

IPL 2016: கையிலிருந்த `ஈ சாலா கப் நம்தே' வாய்ப்பைக் கோட்டைவிட்ட ஆர்.சி.பி! | On This Day

கெயில், கோலி, வாட்சன், டி வில்லியர்ஸ், கே.எல்.ராகுல் மிகச் சிறந்த வீரர்கள் அந்த அணியில் இருந்தார்கள். எல்லாவற்றையும்விட விராட் கோலி மிக உக்கிரமான ஃபார்மில் இருந்தார்.

Published:Updated:
Virat Kohli, David Warner
"நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது... ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்" என்று பல காலமாகச் சொல்லிக் கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட வரவே மாட்டேன் என்று ஒரு முடிவை எடுத்துவிட்டார். ஆனால் ஐ.பி.எல் களத்தில் 'ஈ சாலா கப்பு நம்தே' என மார்தட்டிக் கொண்டிருக்கும் பெங்களூரு அணிக்கு ஒரு முறையாவது கோப்பை கிடைக்குமா கிடைக்காதா என்பது இப்போது வரை புரியவில்லை.

ஒவ்வொரு முறையும் பல மாஸ் வீரர்களை அள்ளிப் போட்டு தொடரை ஆரம்பிக்கும் ஆர்.சி.பி, ஆனால் ரிசல்ட் என்னவோ சமீபத்தில் வெளியான மாஸ் ஹீரோக்களின் திரைப்படங்களை போலத்தான் கடந்த 15 வருடங்களாக இருந்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டாம் குவாலிஃபயர் போட்டியில் கூட கையில் இருந்த ஆட்டத்தைத் தொலைத்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். ஆனால் இதைவிட ஒரு மோசமான அதிர்ச்சி சம்பவத்தை கடந்த 2016-ல், இதே நாளில் தங்களது ரசிகர்களுக்கு விருந்தாகக் கொடுத்தது பெங்களூரு அணி.

IPL 2016
IPL 2016
இந்த வருடத்தைவிட பெங்களூரு அணிக்குச் சிறப்பாக அமைந்த மற்றொரு ஆண்டு 2016. கெயில், கோலி, வாட்சன், டி வில்லியர்ஸ், கே.எல்.ராகுல் மிகச் சிறந்த வீரர்கள் அந்த அணியில் இருந்தார்கள். எல்லாவற்றையும்விட விராட் கோலி மிக உக்கிரமான ஃபார்மில் இருந்தார். அத்தொடரில் மட்டும் 4 சதங்கள் அடித்த சுமார் 973 ரன்களை குவித்திருந்தார் அவர். அதுவே இன்று வரையிலான சாதனையாக இருக்கிறது.

டி வில்லியர்ஸும் 600 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தார். ஆரம்பத்தில் ஃபார்ம் இல்லாமல் இருந்த கெயில் கடைசி கட்ட ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி அணிக்கு பலம் சேர்த்தார். பந்து வீச்சிலும் வாட்சன், சஹால், ஜோர்டன் என்று சொல்லிக்கொள்ளும் படியான வீரர்கள் இருந்தனர். இவ்வளவு இருந்தும் எப்படி ஒரு அணி தோற்கும் என்று கேட்கிறீர்களா? தோற்கும். அதான் பெங்களூரு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிளேஆஃப்ஸ் போட்டிகளுக்கு பெங்களூரு தகுதி பெற வேண்டும் என்றால் கடைசி நான்கு லீக் போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. ஆனால் அவ்வளவு பெரிய தடைக்கல்லை மிகவும் எளிதாக புரட்டிப்போட்டு புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது அந்த அணி. முதல் குவாலிஃபையர் போட்டியில் டாப் ஆர்டர் சரிந்தாலும் தனியாளாக நின்று அணியை ஃபைனலுக்கு அழைத்துச் சென்றார் டி வில்லியர்ஸ். மறுபுறம் ஹைதராபாத் அணி, வார்னர் என்ற ஒரே ஒரு குதிரையின் மேல் மட்டும் பந்தயம் கட்டி ஃபைனல் வரை வந்தது.

SRH
SRH

ஹைதராபாத் அணிக்கு வார்னர்தான் மிகப்பெரிய பலம். அந்தத் தொடரில் 848 ரன்களை எடுத்திருந்தார் வார்னர். அவரை விரைவாக அவுட்டாக்கினால் போதும் என்பதுதான் ஆர்.சி.பி அணியின் ஒரே குறிக்கோளாக அப்போது இருந்திருக்கும். சின்னசாமி மைதானத்தில் ஆட்டம் தொடங்க, டாஸ் வென்ற ஹைதராபாத் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

சற்று மெதுவாக இன்னிங்சை தொடங்கிய ஹைதராபாத் அணியினர், வாட்சன் வீசிய 5வது ஓவரில் 19 ரன்களும், கெயில் வீசிய ஆறாவது ஓவரில் 13 ரன்களும் எடுத்து தங்களது அதிரடியை ஆரம்பித்தனர். தவான் சற்று மெதுவாக ஆடினாலும் வார்னர் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். 14-வது ஓவரில் வார்னர் அவுட் ஆன பிறகுதான் பெங்களூர் அணியினரின் முகத்தில் உற்சாகமே பிறந்தது. ஆனால் அந்த உற்சாகத்தை அடக்க ஹைதராபாத் வீரர் யாராவது வருவார் என்று நீங்கள் நினைத்தால், ஆர்.சி.பி யின் வரலாறு உங்களுக்குத் தெரியவில்லை என்றே அர்த்தம். இதுபோன்ற முக்கியமான போட்டிகளில் பெங்களூர் அணி விளையாடும் போதெல்லாம் அவர்களின் வீரர் ஒருவரே அந்த அணியின் கதையை முடித்து விடுவார். அந்த உன்னதமான பொறுப்பை அன்று எடுத்துக்கொண்வர் வாட்சன். தான் வீசிய 4 ஓவர்களில் 61 ரன்களை வாரி வழங்கி ஹைதராபாத் அணியை 208 ரன்கள் எடுக்கவிட்டு ஆனந்தக் கண்ணீருடன் அழகு பார்த்தார் வாட்சன்.

இருந்தாலும் பெங்களூரு அன்றைக்கு மனம் தளரவில்லை. கெயில், கோலி இருவரும் துவக்கம் தர போட்டி போட்டுக்கொண்டு ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். கெயில் நான்கு பவுண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்களுடன் 38 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். 11 ஓவர்களில் பெங்களூரு 120 ரன்கள் எடுத்திருந்தது. எந்த ஒரு சாமானிய கிரிக்கெட் ரசிகனும் நிச்சயம் இந்த ஆட்டத்தை பெங்களூர் வென்றுவிடும் என்றுதான் கணித்திருப்பான். ஆனால் அப்படிப்பட்ட கணிப்புகளை எல்லாம் பொய்யாக்குவதில் பெங்களூரு டாக்டர் பட்டம் வாங்கிய அணி.

13-வது ஓவரில் கோலி 54 ரன்களில் அவுட் ஆனார். அதன்பிறகு ஆரம்பித்தது சோகமான கிளைமாக்ஸ். டி வில்லியர்ஸ், ராகுல், வாட்சன், பின்னி என அனைவரும் சொல்லி வைத்தது போல வரிசையாக வெளியேறினர். பொதுவாக நான்கு ஓவர்கள் முழுதாக வீசாத பௌலரான பென் கட்டிங் கூட அன்று இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.

Virat Kohli
Virat Kohli

கடைசி ஓவரில் வெற்றிக்குத் தேவை 18 ரன்கள் என்றிருந்த நிலையில் பெங்களூரு அணியால் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. நான்காவது பந்தை புவனேஸ்வர் குமார் வீசி முடித்ததும் ஹைதராபாத் கேப்டன் வார்னர், 'Come on' என்று கத்திய சத்தம் அத்தனை ஆர்ப்பரிப்புகளையும் மீறி மைதானத்தில் ஒலித்தது. ஐ.பி.எல் வரலாற்றில் முதல்முறையாக கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது ஹைதராபாத் அணி. மறுபக்கம் மூன்று முறை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றிருந்த பெங்களூரு அணியால் ஒருமுறை கூட கோப்பையைக் கைப்பற்றியிருக்க முடியவில்லை.

2013-ம் ஆண்டிற்கு முன்னர் வரை மும்பை இந்தியன்ஸும் சாதாரண அணியாகத்தான் இருந்தது. ஆனால் 2013-ம் ஆண்டில் அவர்கள் பெற்ற உத்வேகமும் வென்ற கோப்பையும், அவர்கள் மீண்டும் மீண்டும் கோப்பைகளை அடுக்கக் காரணமாக அமைந்தன. அப்படி ஓர் உத்வேகம் தரும் வெற்றியைத்தான் பெங்களூரு அணி இன்று வரை தேடி வருகிறது. ஆனால், 15 ஆண்டுகள் கடந்தும், இன்று வரை அப்படி ஒரு வெற்றி பெங்களூர் அணிக்குக் கிடைக்கவே இல்லை.