Published:Updated:

கம்பீர் பற்றவைத்த நெருப்பு... சுனில் நரைன் எனும் பிரம்மாஸ்திரம் டெல்லியை வீழ்த்தியது எப்படி?!

சுனில் நரைன் | IPL 2021

சுனில் நரைன்: முன்பு அடிக்கடி ஷார்ட் பாலில் தூக்கியடித்து அவுட்டாகும் வீக்னெஸும் இப்போது அவரிடமில்லை. இந்த ஆட்டத்தின் இரண்டு இன்னிங்ஸிலுமே முடிவைத் தீர்மானித்தது நரைன்தான்.

கம்பீர் பற்றவைத்த நெருப்பு... சுனில் நரைன் எனும் பிரம்மாஸ்திரம் டெல்லியை வீழ்த்தியது எப்படி?!

சுனில் நரைன்: முன்பு அடிக்கடி ஷார்ட் பாலில் தூக்கியடித்து அவுட்டாகும் வீக்னெஸும் இப்போது அவரிடமில்லை. இந்த ஆட்டத்தின் இரண்டு இன்னிங்ஸிலுமே முடிவைத் தீர்மானித்தது நரைன்தான்.

Published:Updated:
சுனில் நரைன் | IPL 2021
டி20-ஐ பொறுத்தவரை ஆல்ரவுண்டர்கள்தான் அணியின் பேலன்ஸுக்கு பெரும்பங்கு வகிப்பார்கள். முக்கியமாக வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர்கள். மும்பைக்கு பொல்லார்ட் (இதை எழுதிக்கொண்டிருக்கும் நிமிடத்தில்கூட பஞ்சாபின் அடுத்தடுத்த விக்கெட்களை சாய்த்துக்கொண்டிருக்கிறார் பொல்லார்ட்). கொல்கத்தாவிற்கு ரஸல், சென்னைக்கு பிராவோ என டி20யின் முக்கிய அணிகளில் எல்லாம் வெஸ்ட் இண்டீஸின் சிறந்த ஆல்ரவுண்டர்கள் முக்கிய இடம் பிடித்திருப்பது இதனால்தான்.

மற்ற பார்மட்களுக்கு அவர்களின் கிரிக்கெட் போர்டே அதிக முக்கியத்துவம் தராதது, இந்தியாவைப் போலல்லாமல் உலகெங்கும் ஆடப்படும் டி20 தொடர்களில் விளையாட வீரர்களுக்கு வாய்ப்பிருப்பது என இதற்கு ஏகப்பட்ட காரணங்கள். ஆல்ரவுண்டர்களுக்குத் தரப்படும் இந்த முக்கியத்துவம் முழுநேர பௌலர்களையும் சிலநேரங்களில் பவர்ஹிட்டர்களாக மாற்றும். அப்படி மாறியவர்களில் முக்கியமானவர் சுனில் நரைன். ஐபிஎல்லில் கம்பீர் பற்ற வைத்த நெருப்பு!

KKRvDC | IPL 2021
KKRvDC | IPL 2021

ஆனால் அவருக்கு வாய்ப்புகள் அதிகம் கொடுக்கப்பட்ட கொல்கத்தா அணியிலேயே சமீப காலமாக அவரின் இடம் சந்தேகத்துக்குரியதாக மாறிவந்தது. ஆனால் ரஸல் போலவே தானும் ஒரு மேட்ச் வின்னிங் ஆல்ரவுண்டர் என்பதை பலம் வாய்ந்த டெல்லி அணியுடனேயே நிரூபித்திருக்கிறார் நரைன். இன்று நடந்த ஆட்டத்தில் காயம் காரணமாக ரஸல் வெளியேற அவருக்கு பதில் அணியில் டிம் சவுதி. பௌலிங்கில் ரஸலின் இடத்தை அவர் நிரப்பிவிடுவார். ஆனால் பேட்டிங்கில்..? இரண்டாம் பாதியில் பெரிதும் சோபித்திடாத நரைனின் மீதுதான் இப்போது மொத்தக் கண்களும்.

கொல்கத்தா தான் பீல்டிங் தேர்வு செய்தது. பிரஷித் கிருஷ்ணாவிற்கு பதில் அணியில் எடுக்கப்பட்ட சந்தீப் வாரியர் எதிர்பார்த்த ரிசல்ட்டை தரவில்லை. ஏன் பொல்லார்டுக்கு பதிலாக எடுக்கப்பட்ட சவுதியும்கூட. டெல்லி அணியில் முரட்டு பார்மில் இருக்கும் இரு பேட்ஸ்மேன்களில் ஒருவரான தவான் இருவரையும் வெளுத்து வாங்கினார். அவ்வளவு ஏன்? கிட்டத்தட்ட டி20க்கே செட்டாக மாட்டார் என அணி நிர்வாகங்கள் கண்டுகொள்ளாத ஸ்டீவ் ஸ்மித்துமே இவர்களை நன்றாகத்தான் எதிர்கொண்டார். பெர்குசன் அணி எதிர்பார்த்த மாதிரி தவானை அவுட்டாக்கினாலும் அடுத்து களத்தில் வந்து நின்றது மற்றொரு இன் - பார்ம் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நான்கு அணிகள் எட்டு புள்ளிகளோடு. இப்போதே டேபிளில் ஓரளவு லீட் எடுத்தால்தான் கடைசி ஆட்டங்களை பிரஷரில்லாமல் ஆடமுடியும். அதனால் இந்த வெற்றி கொல்கத்தாவிற்கு மிக முக்கியம்.

பந்தை வாங்கினார் நரைன். ஸ்ரேயாஸுக்கு வீசிய முதல் பந்திலேயே க்ளீன் போல்ட். இந்த லெக்கில் ஸ்ரேயாஸின் முதுகில் ஏறித்தான் சவாரி செய்துகொண்டிருந்தது டெல்லி அணி. அவரை வீழ்த்தியதன் மூலம் கொல்கத்தாவின் ப்ளே ஆப் கனவுகளை இன்னும் கொஞ்சம் அருகில் இழுத்துவந்தார் நரைன்.

சுனில் நரைன் | IPL 2021
சுனில் நரைன் | IPL 2021

சுனில் நரைன் | IPL 2021அடுத்த ஐந்து ஓவர்களுக்கு விக்கெட்டே இல்லை. 13வது ஓவரில் மீண்டும் பெர்குசன் நன்றாக செட்டிலாகியிருந்த ஸ்மித்தை வெளியேற்ற, அதன்பின் வந்த லலித் யாதவை எல்.பி.டபிள்யூ ஆக்கினார் நரைன். முதல் இரண்டு விக்கெட்களைப் போலவே லூப்பில் நடந்தது இதுவும். அப்போதே கிட்டத்தட்ட லோ ஸ்கோரிங் ஆட்டம் என முடிவாகிவிட்டது. கடைசி நேர பவுண்டரிகள் மட்டும் ஒன்றிரண்டு வர டெல்லியின் ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 127/9. கடைசிவரை ஒரு சிக்ஸர் கூட இல்லை.

2வது முறையாக நோ சிக்ஸர்ஸ்!
டெல்லி அணி ஐபிஎல்லில் ஒரு சிக்ஸ்கூட அடிக்காமல் 20 ஓவர்கள் ஆடுவது இது இரண்டாவது முறை. முதல்முறையும் இந்த சீசனில்தான் நடந்தது.

நரைன், வருண் ஆகிய ஸ்பின்னர்களின் வெற்றியைப் பார்த்து டெல்லியும் பவர்ப்ளே ஸ்பெல்லை ஸ்பின்னர்களோடு தொடங்கியது. அஷ்வின், அக்‌ஷர் படேல், லலித் யாதவ் என மூவரும் பவர்ப்ளேவிற்குள்ளேயே பந்துவீசினார்கள். அதில் முதல் வெற்றி லலித்திற்கு. அதிரடியாய் ஆடிவரும் வெங்கடேஷை சாய்த்தார். அதன்பின் விக்கெட்கள் எடுக்காவிட்டாலும் ஸ்பின்னர்கள் சேர்ந்து ரன்ரேட்டை வெகுவாக கட்டுப்படுத்தினார்கள். லோ ஸ்கோரிங் ஆட்டங்களில் விக்கெட்கள் எடுக்கமுடியாவிட்டால் ரன்ரேட்டை முடிந்தவரை கட்டுப்படுத்துவதுதானே ஒரே வழி!

கில், மார்கன், கார்த்திக் என மூவரும் அடுத்தடுத்து வெளியேற பிரஷர் ஏறியது கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் மீது. களத்தில் இருந்தது ராணாவும், அப்போதுதான் இறங்கியிருந்த நரைனும். தேவை 32 பந்துகளில் 32 ரன்கள். பாலுக்கு ஒரு ரன் என்பது கேட்க சுலபமாக இருக்கலாம். ஆனால், ஸ்லோ பிட்ச்சான இங்கே எதுவும் நடக்கலாம். பஞ்சாப் இதற்கு முன்பு பலமுறை அந்த வெற்றிகரமான தோல்வியை நடத்திக் காட்டியிருக்கிறது.
KKRvDC | IPL 2021
KKRvDC | IPL 2021

16 ஓவரை வீச வந்தது ரபாடா. உலகின் முன்னணி டி20 பௌலர். டெல்லி அணியின் துருப்புச் சீட்டு. அவரைச் சந்திக்கப்போவது சுனில் நரைன். அவரின் பார்ம் எப்படி என்பது அவருக்கே தெரியாது. திடீர் திடீரென அடித்து வெளுப்பது அவரின் ஸ்டைல். அதுவும் பீல்டிங் கட்டுப்பாடுகள் பெரிதாக இல்லாத பவர்ப்ளேயில் ஓபனிங் இறங்கி அடிப்பதுதான். மிடில் ஓவர்களில் அடிக்க பந்தை சரியாக ப்ளேஸ் செய்வது மிக முக்கியம், பினிஷர்கள் கொண்டாடப்படுவது இதனால்தான். சுனில் நரைன் ஐபிஎல்லில் ஏழாவது இடத்தில் இதற்கு முன்பு ஒரே ஒருமுறைதான் களமிறங்கியிருக்கிறார். அதிலும் ஐந்து ரன்கள்தான்.

எப்படிப் பார்த்தாலும் இங்கே அப்பர் ஹேண்ட் ரபாடாவிற்குத்தான். முதல் பந்துவரைக்குமே நிலைமை அப்படித்தான் இருந்தது. இரண்டாவது பந்து நோ பால். ப்ரீ ஹிட். அந்த ப்ரீ ஹிட்டையே தன் லைசென்ஸ் போல எடுத்துக்கொண்டு அந்த ஓவரில் தாண்டவமாடினார் நரைன். மூன்றாவது பந்து டாப் எட்ஜில் பட்டு கேட்ச் போலவே பறந்து பண்ட்டுக்கு ஆசை காட்டி ஷார்ட் பைன் லெக் திசையில் சிக்ஸரானது. அடுத்த பந்து டீப் மிட்விக்கெட்டில் பவுண்டரி. லெக் சைட் பீல்ட் செட் செய்து ரபாடா போட்ட அடுத்தப் பந்தும் அதே திசையில் பறந்து சிக்ஸரானது. அந்த ஓவரில் மட்டும் 21 ரன்கள்.

சுனில் நரைன் | IPL 2021
சுனில் நரைன் | IPL 2021
இப்போது தேவை ஒன்பதே ரன்கள். அதை தடவித் தடவி எடுத்து வெற்றிக்கோட்டைத் தொட்டது கொல்கத்தா. போன சீசனில் இந்த அணிகள் மோதிய இரண்டாவது முறையும் ஆட்டத்தைத் தீர்மானித்தது நரைன்தான். ஐந்தாவதாகக் களமிறங்கி 32 பந்துகளில் 64 ரன்கள் நொறுக்கி டெல்லியை பணிய வைத்தார்.

முன்பு அடிக்கடி ஷார்ட் பாலில் தூக்கியடித்து அவுட்டாகும் வீக்னெஸும் இப்போது அவரிடமில்லை. இந்த ஆட்டத்தின் இரண்டு இன்னிங்ஸிலுமே முடிவைத் தீர்மானித்தது நரைன்தான். நான்கு ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்கள், முக்கியமான நேரத்தில் களமிறங்கி பத்தே பந்துகளில் 21 ரன்கள் என கொல்கத்தாவிற்கு இரண்டு புள்ளிகள் வர காரணமாய் இருந்த அவரே ஆட்டநாயகனும்கூட!