Published:Updated:

ரஷீத்கான் பந்துகளை ஃபார்மில் இல்லாத போதும் எப்படி அடித்தார் ஷேன் வாட்சன்? பேட்டிங் டெக்னிக்ஸ்!

ரஷீத்கானுக்கு எதிராக சிறப்பான ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பவர்கள் என ஒரு கார்ட் போடப்பட்டது. அதில், முதலிடத்தில் இருந்தவர் ஷேன் வாட்சன். ரஷீத்கானுக்கு எதிராக அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 171. இடக்கை பேட்ஸ்மேனான கிறிஸ் கெய்லை விட அதிகம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த சில சீசன்களாக ஐபிஎல்-ல் பேட்ஸ்மேன்களை பதறவைத்து கொண்டிருப்பவர் ரஷீத்கான். வீசும் அத்தனை பந்துகளும் கூக்ளிதான். அத்தனை பந்துகளும் 90 கி.மீ வேகத்தில்தான் வந்து மோதும். லென்த்தில் மட்டுமே வேறுபாடுகள் இருக்கும். மற்றபடி எந்த சர்ப்ரைஸும் இருக்காது. டிவியில் மேட்ச் பார்ப்பவர் கூட கணித்துவிட கூடிய பந்துவீச்சு. வேடிக்கை பார்ப்பவரே கணித்துவிட முடிகிறதெனில், பேட்ஸ்மேன்கள் சொல்லவா வேண்டும். பேட்ஸ்மேன்களுக்கும் ரஷீத் கானை பற்றி முழுமையாக தெரியும். ஆனாலும், இன்று வரை பெரிதாக அவரை யாரும் சீண்டுவதில்லை.

ரஷீத்கானின் நான்கு ஓவர்களை பார்த்து ஆடிவிட்டு மீதமிருக்கும் 16 ஓவர்களில் ஸ்கோரை உயர்த்திக் கொள்ளலாம் என்ற அணுகுமுறையையே கடைபிடிக்கின்றனர். பேட்ஸ்மேன்கள் அதிகபட்சமாக ரஷீத்கானின் ஓவரில் செய்ய நினைப்பது விக்கெட் விடாமல் சிங்கிள் தட்ட வேண்டும் என்பதே. ஆனால், எல்லாவற்றுக்கும் விதிவிலக்கு இருப்பது போல இதற்கும் ஒரு விதிவிலக்கு இருக்கிறது. அந்த விதிவிலக்கின் பெயர் ஷேன் வாட்சன்.

மற்ற பேட்ஸ்மேன்கள் ரிஸ்க் எடுக்கத் தயங்கும் ரஷீத் கானுக்கு எதிராக காட்டடி அடித்தவர். 2019 ஐபிஎல் சீசனின் லீக் போட்டியில் ரஷீத்கான் ஷேன் வாட்சனை முறைத்து விட்டார்.

Rashid Khan
Rashid Khan
'என் அனுபவம்தான் உங்க வயசு தம்பி...' என ரஷீத் கானின் பந்துகளை வெளுத்தெடுத்தார் வாட்சன். அந்த போட்டியில் வாட்சன் 96 ரன்களை அடித்ததெல்லாம் தாண்டி, ரஷீத்கானை அவர் எப்படி அடித்தார் என்பதுதான் பெரும் விவாதமாக மாறியிருந்தது.

பயங்கர சொதப்பலான ஃபார்மில் இருக்கும் போதும் வாட்சனால் மட்டும் எப்படி ரஷீத் கானின் பந்துகளை அடிக்க முடிந்தது? இந்த கேள்விக்கான விடையை நேற்று முன்தினம் நடந்த ராஜஸ்தான் vs சன்ரைசர்ஸ் போட்டியின்போது டக் அவுட் கமென்ட்ரியில் வாட்சன் பகிர்ந்துகொண்டார்.

ரஷீத்கானுக்கு எதிராக சிறப்பான ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பவர்கள் என ஒரு கார்ட் போடப்பட்டது. அதில், முதலிடத்தில் இருந்தவர் ஷேன் வாட்சன். ரஷீத்கானுக்கு எதிராக அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 171. இடக்கை பேட்ஸ்மேனான கிறிஸ் கெய்லை விட அதிகம். இந்த புள்ளிவிவரத்துக்குப் பிறகே அந்த ரகசியத்தை வாட்சன் பகிர்ந்து கொண்டார்.

 வாட்சன்! #CSKvSRH
வாட்சன்! #CSKvSRH

''எப்போதுமே ஸ்பின்னர்களை க்ரீஸை விட்டு இறங்கி வந்து ஆட நான் விரும்பமாட்டேன். ஃபுல் லென்த்தில் வீசினால் என்னுடைய பவர் மூலம் நேராகவோ அல்லது மிட்விக்கெட்டிலோ அடித்துவிடுவேன். கொஞ்சம் ஷார்ட்டாக வீசினால் பேக்ஃபுட்டில் சென்று ஷாட் ஆடுவேன். ரஷீத் கானுக்கு எதிராகவும் இதே அணுகுமுறைதான்.

ஆனால், ரஷீத் வீசும்போது மட்டும் ஆஃப் ஸ்டம்ப்பில் ஸ்டாண்ட்ஸ் எடுத்துக் கொள்வேன்.

ரஷீத் எல்லா பந்துகளையும் கூக்ளியாகத்தான் வீசுவார் என்பதால் பந்தின் லைனில் சரியாக நின்று ஷாட் ஆட உதவியாக இருக்கும். அதேநேரத்தில், மிஸ் ஆகி lbw ஆனால் கூட பந்து லைனுக்கு வெளியே சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் தப்பித்துவிடலாம். மேலும், ரஷீத்கானின் பந்துகளை அடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் நான் முதல் பந்திலிருந்தே அதற்கு முயற்சி செய்ய மாட்டேன். அடிக்க வேண்டும் என்கிற இன்டென்ட்டை மட்டும் வைத்துக் கொண்டு இரண்டு அல்லது இரண்டரை ஓவருக்கு ஸ்ட்ரைக்கை மட்டுமே ரொட்டேட் செய்வேன். ரஷீத்கான் எப்போதும் விக்கெட்டுக்காக தீவிரமாக முயற்சிப்பவர். அவருடைய ஸ்பெல் முடியப்போகிறதெனில் இன்னும் காத்திரமாக விக்கெட்டுக்கு முயற்சிப்பார்.

அப்போது கடைசி ஒன்றரை, இரண்டு ஓவர்களில் ரிஸ்க் எடுத்து ஃபுல் லென்த்தில் அதிகப் பந்துகளை வீசுவார். அதைத்தான் நான் டார்கெட் செய்வேன்.

ஃபுல் லென்த் பந்துகளை என்னுடைய வலுவை பயன்படுத்தி நேராக தூக்கியடிக்க முடியும். அப்படியில்லையெனினும் முட்டி போட்டு ஷாட் ஆடிவிடுவேன்'' என்றார்.

இப்படித்தான் வாட்சன் ரஷீத்கானின் பந்துகளை சிதறடித்திருக்கிறார். இதில், ரஷீத்கானை எதிர்கொள்ள இன்டென்ட்டோடு காத்திருக்கும் அந்த முதல் இரண்டு ஓவர்களே ரொம்ப முக்கியம் என வாட்சன் கூறியதை அடிக்கோடிட்டு இப்போதைய பேட்ஸ்மேன்கள் வாசிக்க வேண்டும். ஏனெனில், ரஷீத்கானுக்கு எதிராக ரொம்பவே தற்காப்பாகவோ அல்லது ரொம்பவே அவசரப்பட்டு அட்டாக் செய்ய நினைத்தோ விக்கெட் விடுபவர்களே அதிகம் இருக்கின்றனர்.

பௌலரை தான் நினைக்கும் லைன் & லென்த்தில் வீச வைப்பதென்பது ஒரு கலை. அது எல்லா பேட்ஸ்மேன்களுக்கும் வாய்த்துவிடுவதில்லை. வாட்சனுக்கு அது அமையப்பெற்றதாலயே ரிட்டையர்ட் ஆகும் வயதில் ஃபார்ம் அவுட்டில் இருந்த போதும் ரஷீத்கானை சிக்சர் அடிக்க முடிந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு