Published:Updated:

பும்ராவின் மூளைக்குள் ருத்துராஜ் எழுதிய புரோகிராம்… கடைசிப் பந்தை சிக்ஸர் ஆக்கியது யார்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பும்ரா - ருத்துராஜ் கெயிக்வாட்
பும்ரா - ருத்துராஜ் கெயிக்வாட்

ருத்துராஜ் பும்ராவின் பெளலிங்கில் கடைசி ஓவரின், கடைசிப் பந்தில் அடித்த சிக்ஸரை கிரிக்கெட் மொழியில் சொல்லவேண்டும் என்றால் அது ஒரு ப்ரிமெடிட்டேட் ஷாட். பும்ராவை டெத் ஓவர்களில் எதிர்கொள்வது எவ்வளவு கடினம் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால், ருத்துராஜ்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

Premeditated short & Neuro linguistic program...

நம் எதிரில் உட்கார்ந்திருப்பவரின் மனம் என்ன நினைக்கிறது, அடுத்து அவர் எடுக்கப்போகும் முடிவு என்னவாக இருக்கும், அவர் என்ன செய்வார், என்ன செய்யமாட்டார் என்பதைக் கணித்துவிட்டாலே எல்லா பிரச்னைகளில் இருந்தும் நாம் நம்மை தற்காத்துக்கொள்ளலாம். மேற்கொண்டு பல பிரச்னைகளில் சிக்காமலும் தப்பிக்கலாம்.

இதை Neuro linguistic program என்கிறார்கள். தமிழில் நரம்பியல் மொழி செயல்திட்டம் என்று சொல்லலாம். இதைக் கற்றுக்கொடுக்க பல நிபுணர்கள் இருக்கிறார்கள். NLP பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் & ஆஃப்லைன் எனப் பல இடங்களில் நடக்கின்றன. ஆனால், இந்த Neuro linguistic program-ஐ பணம்கட்டிப் போய் படிக்கவேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. நம் எல்லோருக்குக்குள்ளேயுமே இந்த ப்ரோகிராம் இருக்கும், நன்றாகவே வேலை செய்யும்.

தீபக் சஹார், கிருஷ்ணப்ப கெளதம்
தீபக் சஹார், கிருஷ்ணப்ப கெளதம்

விளையாட்டு, வேலை, பர்சனல் வாழ்க்கை என எதிலும் அதிக ஈடுபாட்டோடு இருக்கும்போது இந்த Neuro linguistic program நம் மூளைக்குள் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். செய்யும் விஷயத்தை எந்த கவனச்சிதறலும் இல்லாமல் செய்தாலே நமக்குள் என்ன நடக்கிறது, நம்மை சுற்றி என்ன நடக்கிறது, அடுத்து என்ன நடக்கும் என்பதைக் கண்டுபிடித்து அதற்கு ஏற்றபடி செயல்படலாம்.

நேற்றிரவு சென்னைக்கும், மும்பைக்கும் இடையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இந்த Neuro linguistic program-ஐ கண்முன் நிகழ்த்திக்காட்டியவர் ருத்துராஜ் கெயிக்வாட்.
தோனி எதிர்பார்த்த ஸ்பார்க் - ஒவ்வொரு போட்டியையும் தீப்பிழம்பால் தெறிக்கவிடும் ருத்துராஜ் கெய்க்வாட்!

ருத்துராஜ் பும்ராவின் பெளலிங்கில் கடைசி ஓவரின், கடைசிப் பந்தில் அடித்த சிக்ஸரை கிரிக்கெட் மொழியில் சொல்லவேண்டும் என்றால் அது ஒரு ப்ரிமெடிட்டேட் ஷாட். பும்ராவை டெத் ஓவர்களில் எதிர்கொள்வது எவ்வளவு கடினம் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால், ருத்துராஜ் பும்ராவை மிக மிக அசால்ட்டாக எதிர்கொண்டார். காரணம், பும்ராவின் மனதை முழுவதுமாகப் படித்துவிட்டார் ருத்துராஜ். கடைசி ஓவருக்கு முந்தைய சில ஓவர்களிலேயே பும்ராவின் பந்தில் இறங்கிவந்து ஆடியது, சிக்ஸர் அடித்தது, போல்ட்டின் பந்தை கவர் திசையில் சிக்ஸருக்குப் பறக்கவிட்டது என பும்ராவின் மனதுக்குள், அவருடைய மூளைக்குள் தன்னுடைய புரோகிராமை எழுத ஆரம்பித்துவிட்டார் ருத்துராஜ்.

கடைசி ஓவரை வீசவரும்போது பும்ரா, கிட்டத்தட்ட ருத்துராஜின் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக வந்துவிட்டார். முதலில் ஒரு கிளாஸிக்கல் கவர் டிரைவ் ஆடி பவுண்டரி அடித்து அந்த ஓவரைத் தொடங்கிய ருத்துராஜ், கடைசிப்பந்து பும்ராவிடம் இருந்து லோ ஃபுல்டாஸாகவோ, யார்க்கராகவோதான் வரப்போகிறது என்பதை கணித்துவிட்டார். இதை கணித்துவிட்டார் என்றும் சொல்லலாம் அல்லது பும்ராவின் மூளைக்குள் இறங்கி இந்தப் பந்தை இப்படித்தான் வீசவேண்டும் என ருத்துராஜ் ப்ரோகிராம் செய்துவிட்டார் என்றும் சொல்லலாம்.

ருத்துராஜ் கெயிக்வாட்
ருத்துராஜ் கெயிக்வாட்

பும்ராவின் கைகளில் இருந்து பந்து ரிலீஸாவதற்கு முன்பாகவே ஸ்கொயர் லெக் திசையில் ஸ்வீப் ஆட வேண்டும் என்பதை முடிவெடுத்து கால்களை மடக்கி, பேட்டை தரையை நோக்கி கொண்டுபோய்விட்டார் ருத்துராஜ். அவர் எதிர்பார்த்ததுபோலவே பும்ராவிடம் இருந்து லோ ஃபுல் டாஸ்தான் வந்தது. பந்து சிக்ஸர். நரம்பியல் மொழி செயல்திட்டத்தில் பும்ரா தோற்றார். ருத்துராஜ் வென்றார்.

ருத்துராஜ் இதுவரை 14 ஐபிஎல் போட்டிகளில்தான் விளையாடியிருக்கிறார். ஆனால் நேற்றைய போட்டி ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஐபிஎல்-ல் 100வது போட்டி.

ஒரு பெரிய இடைவெளிக்குப்பிறகு மீண்டும் ஐபிஎல் நடக்கிறது. அதில் முதல் போட்டி நடப்பு சாம்பியன்ஸ் மும்பை அணியுடன்... 24 ரன்களுக்கு கிட்டத்தட்ட 5 விக்கெட்கள் இழந்த ஒரு அணியில் எதிர்முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் எவ்வளவு பதற்றத்தில் இருந்திருக்கவேண்டும்?!

சூர்யகுமார் யாதவ், ருத்துராஜ்
சூர்யகுமார் யாதவ், ருத்துராஜ்

அதுவும் வெறும் 14 போட்டிகளே விளையாடியிருக்கும் 24 வயது வீரர் நிச்சயம் பயந்திருப்பார் என்றுதானே எதிர் அணி வீரர்கள் நினைத்திருப்பார்கள்! ஆனால், ருத்துராஜுக்கு அப்படி எதுவும் ஏற்படாததற்கு காரணம் அவர் மனதின் பக்குவமும், எதிரில் ஆடும் வீரர்களின் மனதைப் படித்த அனுபவமும்தான். அதனால்தான் களத்தின் சூழல் எப்படியிருந்தாலும் தன்னுடைய கேம் பிளானில் தெளிவாக இருந்து, எதிரில் ஆடும் வீரர்களையும் தன் கேம் பிளானுக்குள் கொண்டுவந்து வெற்றிகரமான ஆட்டம் ஆடினார் ருத்துராஜ்.

ஒரு துறவி போல, பல நூறு ஆட்டங்கள் ஆடியிருக்கும் பக்குவமான பேட்ஸ்மேன்போல ருத்துராஜ் ஆடும் ஆட்டத்தைப் பார்க்கவே அவ்வளவு உற்சாகமாக, உத்வேகமாக இருக்கிறது. ருத்துராஜின் கிளாஸிக்கல் இன்னிங்ஸ்கள்தான் இனி ஐபிஎல்-ன் ஹைலைட்ஸாக இருக்கப்போகிறது. திகட்ட திகட்ட ரசிப்போம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு