Published:Updated:

"வர்றான், அவுட்டாறான், கிளம்பறான், ரிப்பீட்டு..." மார்கனின் மாஸ்டர்பிளானும், சரணடைந்த ராஜஸ்தானும்!

KKR v RR | IPL 2021

ராஜஸ்தானைப் புரட்டிப் போட்டு கேகேஆர் ஆடிய ருத்ரதாண்டவம், மும்பையின் பிளேஆஃப் கனவுக்கு, கிட்டத்தட்ட முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

"வர்றான், அவுட்டாறான், கிளம்பறான், ரிப்பீட்டு..." மார்கனின் மாஸ்டர்பிளானும், சரணடைந்த ராஜஸ்தானும்!

ராஜஸ்தானைப் புரட்டிப் போட்டு கேகேஆர் ஆடிய ருத்ரதாண்டவம், மும்பையின் பிளேஆஃப் கனவுக்கு, கிட்டத்தட்ட முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Published:Updated:
KKR v RR | IPL 2021
நான்காவது இடத்துக்கான நான்கு அணிகளின் நாற்காலிச் சண்டையில், எல்லோரையும் பின்னுக்குத் தள்ளி, தனது இடத்தை, 99.99 விழுக்காடு உறுதி செய்துள்ளது கேகேஆர். எஞ்சிய அந்த 0.01 சதவிகிதமும், ஏதோ அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே மும்பை இந்தியன்ஸுக்கு சாதகமாக முடிய வாய்ப்புள்ளது.

அரபு மண்ணில் ஐபிஎல் போட்டிகளின் இரண்டாவது பகுதி தொடங்கியபோது கேகேஆர் பிளே ஆஃபுக்கு முன்னேறக்கூடும் என்பதெல்லாம் யாருமே நினைத்துக்கூடப் பார்க்காத ஒன்று. ஏனெனில், முதல் பாதியில் அவர்களது செயல்பாடு அந்த வகையில்தான் இருந்தது. விளையாடிய ஏழு போட்டிகளில், பஞ்சாப் மற்றும் சன்ரைஸர்ஸுக்கு எதிரான போட்டியில் மட்டுமே வென்று, நான்கு புள்ளிகளோடு ஏழாவது இடத்தில் இருந்தது கேகேஆர்.

KKR v RR | IPL 2021
KKR v RR | IPL 2021

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மார்கனின் கேப்டன்ஷிப்பில் அணி மேம்படும் எனக் கருதப்பட்டதற்கு மாறாக, பல பிரச்னைகளை அணி சந்தித்திருந்தது. டாப் 3 வீரர்களின் நிலையற்ற ஆட்டம், தினேஷ் கார்த்திக் மற்றும் மார்கனின் பேட்டிங் எடுபடாமல் போனது, நரைன், வருண் ஆகியோர்களை உள்ளடக்கிய பௌலிங் படை, கடந்த காலங்களில் நிகழ்த்தியிருந்த மாயங்களை மீண்டும் நடத்தத் தவறியது, ரசல் தனது ஃபினிஷிங் டச்சைக் கொடுக்கத் திணறியது என அணி முழுமையிலுமே, மராமத்துப் பணிகள் மேற்கொள்ள வேண்டிய நிலையில்தான் இருந்தது. சிஎஸ்கேவுக்கு மரண பயம் காட்டித் தோற்றிருந்தாலும், வெல்ல வேண்டிய போட்டியில் மத்திய வரிசை வீரர்களின் மோசமான ஆட்டத்தால் மும்பையிடம் சரணாகதி அடைந்திருந்தது.

எனவே, அரபு மண்ணில் இந்த சீசனைவிட்ட இடத்திலிருந்து அவர்கள் தொடர்ந்தபோது, அவர்கள் மீது மிகப்பெரிய நம்பிக்கை எல்லாம் யாருக்குமே எழவில்லை. அந்த நம்பிக்கையை சற்றே துளிர்விட வைத்தது ஆர்சிபியுடனான அவர்களது முதல் போட்டி. ஆர்சிபியை 92 ரன்களுக்கு சுருட்டி, ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போதுதான் ஒட்டுமொத்த அணியுமே ஃபார்முக்குத் திரும்பியிருப்பது கண்கூடானது. அதுவும் அவர்களது பௌலிங், முன்னைப் போலவே வலுபெற்றிருப்பதும் அப்பட்டமாகத் தெரிந்தது. எனினும் ஒரு போட்டியை வைத்து எல்லாவற்றையும் தீர்மானிக்க முடியாதே என்ற பேச்சு அடிபட, அடுத்தடுத்த அடிகளும் அவர்களுக்குச் சாதகமான கோட்டில் நகர்ந்தன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கிடைத்த ரிதத்தை அப்படியே பற்றிக் கொண்டு, மும்பையையும் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய போதுதான் கேகேஆர் அனைவரது கவனத்தையும் தன்னை நோக்கி ஈர்த்தது. இடையில் சிஎஸ்கேயுடனான தோல்வி, அவர்களை சற்றே அசைத்துப் பார்த்தாலும், அது அவர்களை ஆட்டங்காண வைக்கவில்லை. ஏனெனில், உச்சத்தில் இருந்த டில்லி கேப்பிடள்ஸுடனான வெற்றி, அவர்கள் இழந்த மொமண்டத்தைத் திரும்பக் கொண்டு வந்துவிட்டது. புள்ளிப் பட்டியலின் மேல்பகுதியில் உலா வந்து கொண்டிருந்த மூன்று அணிகளுக்கும் தோல்வி பயத்தைக் காட்டியதன் மூலமாக புள்ளிகளை அள்ளிக் கொண்டு, ரன்ரேட்டை ஏற்றம் காண வைத்ததோடு, தனது தன்னம்பிக்கையின் அளவீட்டையும் கேகேஆர் அதிகரித்துக் கொண்டது. பஞ்சாப்புடனான தோல்விகூட, இறுதி ஓவரில்தான் வந்து சேர்ந்திருந்தது.

அப்படி அணிக்குள் நேர்ந்த என்ன மாற்றம், அவர்களை வெற்றி வழிகளில் திருப்பி விட்டது என்ற கேள்விக்கு, முதல் விடையாக விழிகள்முன் விரிவது வெங்கடேஷ்தான். பவர் பிளேயில் ரன் சேர்க்கத் தவறிய அவர்களது பாவக் கதைகளுக்கு, இவர்தான் முடிவுரை எழுதினார். அதற்கு முந்தைய போட்டிகளில், கில்லின் ஸ்ட்ரைக்ரேட், விரைவாக விழும் ஓப்பனிங் விக்கெட்டுகள் எனப் பல குறைகள், பவர் பிளேயில் ரன்குவிப்புக்கு வேகத்தடையிட்டன. ஃபீல்டர்கள் எல்லோரையும் பவுண்டரி லைனுக்கு வெளியே நிறுத்தினால்கூட, பேட்ஸ்மேன்கள் பவுண்டரி அடிக்கக்கூட யோசிப்பார்கள் என்ற நிலையே அங்கே நிலவியது. அதை வெங்கடேஷின் அஞ்சாத அக்ரஷிவ் ஆட்டம் மாற்றி விட்டது. அது அணிக்குள் ஒரு புதிய உத்வேகத்தையே கொண்டு வந்தது.

KKR v RR | IPL 2021
KKR v RR | IPL 2021

அடுத்ததாக, பௌலிங் துறை பலவீனம். விக்கெட் வீழ்த்தத் திணறியது மட்டுமின்றி, முதல் பாதியில் பௌலர்களின் எக்கானமியும் எகிறியிருந்தது. ஆனால், விட்டதைப் பிடிக்கும் நோக்கோடு, விண்டேஜ் கேகேஆர் பௌலிங்கை மறுபடியும் மீட்டெடுத்து வந்துவிட்டனர் கேகேஆர் பௌலர்கள். அரபு மைதானத்தில், முதல் போட்டியில் ஆர்சிபியை ஸ்தம்பிக்க வைத்தது போலவே லீக் போட்டிகளின் கடைசியிலும் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களை எழ விடாமல் அடித்து கதையை முடித்து வைத்துவிட்டனர்.

இந்த இரு குறைகளையும் நேர் செய்ததுதான், பிளேஆஃப் பெர்த்தைக் கிட்டத்தட்ட, கேகேஆர் உறுதி செய்ததற்குக் காரணமாக உள்ளது. பலவீனங்களாக இருந்த இந்த இரண்டுமே பலங்களாக மாறி, ஒரே புள்ளியில் குவிந்ததுதான் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றியை அவர்களுக்கு உரித்தாக்கியுள்ளது.

உண்மையில், இத்தனை ஓவர்களுக்குள் இலக்கை எட்ட வேண்டும், டிஃபெண்ட் செய்வதாக இருந்தாலும், அது இந்த வகையில் நடக்கவேண்டும் எனப் பல நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகத்தான் இருந்தது அவர்களது பிளேஆஃப் கனவு.

கணிப்பொறியையே குழம்பச் செய்யும் இந்தக் கணக்கீடுகள், கேகேஆரின் ஓட்டத்தை, சற்றே கட்டுப்படுத்தலாம் என கருதப்பட்டது. ஆனால், மூளைக்குள் கேட்ட சத்தங்களை அமைதியாக்கி, "வெற்றி பெற்றால் மட்டும் போதும், அந்த இரண்டு புள்ளிகள் மற்றவற்றைக் கவனித்துக் கொள்ளும்", என மார்கன் தங்களது வெற்றிக்கான சூத்திரத்தை சூசகமாக போட்டிக்கு முன்னதாகவே கூறி இருந்தார். அதை மட்டுமே கருதுகோளாகக் கொண்டுதான் கேகேஆரின் மொத்த வட்டாரமுமே இயங்கியது.

11 ஓவர்கள் வரை நீடித்த கில் - வெங்கடேஷ் கூட்டணி, மெதுவான தொடக்கத்தை அளித்திருந்தாலும், 'விக்கெட் இழப்பில்லை' என்பதே அவர்களை போட்டியில் ஒரு அடி முன்னாள் பயணிக்க வைத்தது. 2017-ம் ஆண்டுக்குப் பிறகு, கேகேஆர், முதல் பத்து ஓவர்களை விக்கெட் இழப்பின்றி கடந்தது இதுவே முதல்முறை. வெங்கடேஷ் 38 ரன்களில் ஆட்டமிழந்திருப்பினும், கில், கில்லர் மோடுக்கு மாறி இருந்தார். சன்ரைஸர்ஸுக்கு எதிரான கடந்த போட்டியில் அரைசதம் அடித்திருந்த அவர், இந்தப் போட்டியிலும், அதே பாணியில் தொடர்ந்தார். வழக்கம் போல, அவரது ஸ்ட்ரைக் ரேட், சற்றே பின்தங்கி இருப்பினும் அவரது அரைசதம் அந்த இடைவெளியை நிரப்பிவிட்டது.

KKR v RR | IPL 2021
KKR v RR | IPL 2021

அதற்கடுத்து வந்த வீரர்கள் எல்லோருமே, இரட்டை இலக்கங்களை எட்டும் வரையுமாவது காத்திருந்து, சின்ன சின்ன பார்ட்னர்ஷிப்கள் மூலமாக அணியின் ஸ்கோரை 171-க்குக் கொண்டு வந்து நிறுத்திவிட்டனர். முதல் பத்து ஓவர்களுக்கு 69 ரன்களை மட்டுமே கொடுத்திருந்த ராஜஸ்தான், இறுதி ஓவர்களில் கேகேஆருக்கு பிளே ஆஃபுக்கான ஃப்ரீ பாஸ் கொடுக்கும் நோக்கோடு, தாராளமாகவே ரன்களை வாரி வழங்கியது. "தொடக்கம் அதகளம், முடிவு படுபாதாளம்" என்பதுதானே ராஜஸ்தான் பற்றிய ஒருவரிக் கவிதை. அதையேதான் வழக்கம் மாறாது இப்போட்டியிலும் நிகழ்த்தி இருந்தனர்.

ஒன்பது ஓவர்களில் இலக்கை எட்டினால், பிளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்போடு வைக்கலாம் என்பது ராஜஸ்தானது ஆட்டத்தை உயிரோட்டமாக மாற்றுவதற்குப் பதிலாக, கூடுதல் பளுவாகி, அவர்களை மொத்தமாகச் சிதைத்துவிட்டது. கடந்த சில போட்டிகளில், ஓப்பனிங்கிற்கு வலிமை சேர்த்த லூயிஸ் இல்லாதது ராஜஸ்தானுக்கு பின்னடைவுதான் எனினும், மற்ற வீரர்களும், 'ஜெயித்து விடவே கூடாது' என்ற வைராக்கியத்தோடு ஆடியதுபோல் விளையாடினர்.

மார்கனின் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் என்னும் சமன்பாடு மிக அருமையாகவே வேலை செய்தது. ஓவருக்கு ஒரு விக்கெட் என்னும் ரீதியில் விக்கெட் வேட்டை ஆடினர். ஷகீப் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தி லாபம் எனத் தொடங்க, ஃபெர்கூசன் வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளைத் தகர்த்திருந்தார். ஷிவம் மவியின் நான்கு விக்கெட்டுகளுமே வெற்றியை உறுதி செய்தன.

இன்னிங்சின் முதல் ஓவரிலேயே விக்கெட் வாடை பார்த்த பந்து, ஸ்கோர் இரட்டை இலக்கத்துக்கு தாவுவதற்கு முன்னதாகவே இரண்டு விக்கெட்டுகளைப் பார்த்து விட்டது. ஷகீப்பிடம் தப்பினால், ஃபெர்கூசனிடம் மாட்டினர். அவரிடம் பிழைத்தாலோ விக்கெட்டுகளுக்கு என்றே இப்போட்டியில் சிறப்பு ஒதுக்கீடு பெற்றிருந்த ஷிவம் மவி சகலத்தையும் பார்த்துக் கொண்டார். ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் என்ன நடக்கிறது என நிதானிப்பதற்கு முன்னதாகவே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.

KKR v RR | IPL 2021
KKR v RR | IPL 2021

13 ரன்களுக்கே நான்கு விக்கெட்டுகளை இழந்துவிட்ட அணி, கூடவே நம்பிக்கையையும் இழந்துவிட்டது. அதுவும் பின்னர், அணியின் ஸ்கோர் 33-ல் இருந்து 35-ஐ எட்டித் தொடுவதற்கு முன்பே மேலும் மூன்று விக்கெட்டுகளைப் பறிகொடுத்துவிட்டது. நோக்கம், குறிக்கோள் என்பதற்கெல்லாம் ஸ்பெல்லிங்கே தெரியாது என்பதுபோல் ஆட்டமிழந்து சென்றனர் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள். அந்தச் சமயத்தில் எல்லாம் ஆர்சிபியின் 49 ரன்களுக்கு ஆல்அவுட்டான அவமானம் எல்லாம் கண்களில் தோன்றி மறைந்து, 'அந்த ரெக்கார்ட், இன்றே கடைசி', ராஜஸ்தான் அதனை முறியடிக்கும் என்றே தோன்றியது. ஆனால், திவேதியா மட்டுமே மறுமுனையில் உயிரைக் கையில் பிடித்துப் போராடி 44 ரன்களைச் சேர்த்தார். எனினும், 100 ரன்களைக் கூட எட்டாமல், 85 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது ராஜஸ்தான் ராயல்ஸ். 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, ரன்ரேட்டை எகிற வைத்துக் கொண்டது கேகேஆர்.

ஒட்டுமொத்த ராஜஸ்தான் வீரர்களும், "வர்றான், அவுட்டாறான், கிளம்பறான், ரிப்பீட்டு..." என 'மாநாடு' பட வசன ரீதியில் ஆட்டமிழந்திருந்தனர். 'வந்து களத்தில் நின்றார்கள்' என்ற வார்த்தையைக்கூட இங்கே பயன்படுத்த முடியாத நிலைதான். நடப்புத் தொடரில் அணிகளின் குறைந்த ஸ்கோரை பட்டியலிட்டால், அதில் இரண்டு முறை, (85/10, 90/9) ராஜஸ்தானின் பெயரே அடிபடுகிறது. நித்தியமின்மையே நிரந்தரம் என்ற ரீதியிலேயே', ராஜஸ்தான் ஆடுகிறது.

தனது ப்ளே ஆஃப் வாய்ப்பை கோட்டைவிட்டது மட்டுமில்லாமல், மற்ற அணிகளின் பிளேஆஃப் வாய்ப்பையும் கருக வைத்த பெருமையையும் ராஜஸ்தான் பெற்றுள்ளது. மும்பை, சன்ரைஸர்ஸுக்கு எதிரான போட்டியில் 250-க்கும் அதிகமான ரன்களைக் குவிக்க வேண்டும், பின் கிட்டத்தட்ட 170 ரன்கள் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்த வேண்டும். இது இரண்டுமே நடந்தால் மட்டுமே, அவர்களுக்கு பிளேஆஃப் நுழைவுச்சீட்டு கிடைக்கும். அதற்கு ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே உண்டு.

KKR v RR | IPL 2021
KKR v RR | IPL 2021

ஆக மொத்தம், ஹாட்ரிக் கோப்பை கனவைச் சுமந்து வலம்வந்த மும்பைக்கு, கேகேஆரின் வெற்றி வலி தருவதாக மாறி உள்ளது. கேகேஆரோ, இரண்டு ஆண்டுகளாக ஐந்தாவதாக முடித்து ரன்ரேட்டினால் ப்ளே ஆஃப் வாய்ப்பை நழுவ விட்ட சோகத்துக்கு இந்த வெற்றி மூலமாக மருந்திட்டுள்ளது.

முதல் பாதியில், 7-ல், 2 வெற்றியோடு போன கேகேஆர், இரண்டாவது பாதியை, 7-ல் ஐந்து வெற்றி என முடித்துள்ளது. சிஎஸ்கே மற்றும் ஆர்சிபியின் சமீபத்திய போட்டி முடிவுகள், ஒருவேளை, டெல்லியை கேகேஆர், இறுதிப் போட்டியில் சந்திக்குமா என்றெல்லாம் யோசிக்க வைத்துள்ளது.

அடுத்த ஓவர், அடுத்த பந்து நிச்சயமற்ற ஐபிஎல்லில் அதுவும் நடக்கலாம், எதுவும் நடக்கலாம்!