Published:Updated:

IPL : மைதானம் மாறினாலும், வீரர்கள் மாறினாலும்... கோலி மாறவில்லையே, ஆர்சிபி-யின் அவலம் தீரவில்லையே!

விராட் கோலி

வருண் சக்ரவர்த்தியைக் கொண்டு மார்கன் தொடங்கியதைப் போல், கோலியும் தொடக்கத்திலேயே பந்தை ஹசரங்கா கையில் கொடுப்பார் என்றே எதிர்பார்க்கப்பட, கோலி அதைச் செய்யத் தவறினார்.

IPL : மைதானம் மாறினாலும், வீரர்கள் மாறினாலும்... கோலி மாறவில்லையே, ஆர்சிபி-யின் அவலம் தீரவில்லையே!

வருண் சக்ரவர்த்தியைக் கொண்டு மார்கன் தொடங்கியதைப் போல், கோலியும் தொடக்கத்திலேயே பந்தை ஹசரங்கா கையில் கொடுப்பார் என்றே எதிர்பார்க்கப்பட, கோலி அதைச் செய்யத் தவறினார்.

Published:Updated:
விராட் கோலி

சீசன்கள் மாறலாம், வருடங்கள் ஓடலாம், ஆர்சிபி ரசிகர்களின் ஏமாற்றங்கள் மட்டுமே என்றைக்கும் மாறாது... அதற்கு கொல்கத்தாவுடனான நேற்றைய போட்டியும் விதிவிலக்கு அல்ல!

ஆர்சிபி பார்த்துள்ள வெற்றிகளுக்குச் சமமான தோல்விகளைச் கொல்கத்தா சந்தித்திருந்தாலும், புள்ளிப் பட்டியலில் ஏணிபோட்டு ஏறிவிடலாம் எனும் நம்பிக்கையோடு மார்கன் தனது படையோடு அபுதாபியில் கால் பதித்தார். விட்ட இடத்திலிருந்து, வெற்றிக் கணக்கைத் தொடங்கும் நோக்கோடு, கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, நீல ஜெர்ஸியில் ஆர்சிபி இறங்கியிருந்தது.

என்றைக்காவது நிகழும் அதிசயமான கோலி டாஸ் வெல்லும் வைபவமும் அரங்கேறி, கோலி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். ஆர்சிபியின் மூன்றாவது இடம், கடந்த போட்டிகளில், சுழற்சி முறையில் வாடகைக்கு விடப்பட்டது தெரிந்த கதைதானே?! அவ்வகையில், அந்த இடத்தில் இம்முறை, புது கேப் தந்து, பரத்தினை இறக்கி வெள்ளோட்டம் பார்த்தது ஆர்சிபி. எங்களிடமும் ஆள் இருக்கிறது என, கேகேஆர், வெங்கடேஷை இறக்கியிருந்தது.

இயான் மார்கன் - விராட் கோலி
இயான் மார்கன் - விராட் கோலி

இந்த சீசனின், முதல் பாகத்தில், கேகேஆர் பௌலர்கள் வாங்கிய அடிகளும் இடிகளும் பலவகை என்பதோடு, கம்மின்ஸும் இல்லாததால், இம்முறையும் கடந்த என்கவுன்ட்டரில் நேர்ந்ததைப் போல், "200+ என எழுதிக்கோ!",என உற்சாகமாகினர் ஆர்சிபி ரசிகர்கள். ஆனால், நான் அவன் இல்லை ரீமேக் போல், உருமாறி, வேறுமாதிரி இறங்கியிருந்தது கேகேஆர் குழு.

ஓப்பனிங்கில் கோலியை இந்த சீசனில் ஏற்கெனவே பார்த்து விட்டாலும், இப்போட்டியில், அவர் புதிதாக தெரிந்தார். கோலியின் 200-வது போட்டி என்பதோடு, ஆர்சிபியின் கேப்டன் பதவியிலிருந்து தன்னை, இந்த சீசனோடு விடுவித்துக் கொள்வதாகக் கூறியிருந்த அவரது அறிவிப்பும் சேர்ந்து, ரசிகர்களின் கண்களில் நீர் ததும்ப வைத்திருந்தது. தேவ்தத்தோடு இறங்கிவந்த கோலி, சத தவத்தை முடித்து வைப்பார் என்ற பேராசை எல்லாம் இல்லையெனினும், நினைவில் நிற்கும்படியான ஒரு இன்னிங்ஸை ஆட வேண்டுமென ரசிகர்கள் ஆசைப்பட்டனர். "டெஃபனிட்லி நாட்" சொல்லி, வொய்ட் ஆஃப் கவரில் அடித்த ஒரு சிக்நேச்சர் ஷாட்டோடு விடைபெற்றார் கோலி. 'கடந்து போகும் என நினைப்பது, ஒரு கட்டத்தில் பழகிப் போகும்' என்பது போல், நொந்து கொண்டு, அணியின் வெற்றிக்கான பிரார்த்தனைகளைத் தொடங்கினர் ஆர்சிபி ரசிகர்கள்.

இந்த சீசனின் ஃப்ளாஷ்பேக்கில், காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பில் இடம்பெற்றிருந்த, ரசல், வருண் எல்லோருக்கும் முலாம் பூசி, புதுப் பொலிவேற்றிக் கூட்டி வந்திருந்தது கேகேஆர். ஆர்சிபியோ, பேக் டு த பழைய ஃபார்மாக, இதயங்களை உடைக்கும் பணியை செவ்வனே செய்யத் தொடங்கியது.

ஆறுதல் பரிசாக, ஓவருக்கொன்றாய் சேர்ந்த ஒரு பவுண்டரியைத் தவிர்த்துப் பார்த்தால், பவர் ப்ளேயின் நிலை பரிதாபமாக, படிக்கல் மட்டுமே ஏதோ, சமாளித்துக் கொண்டிருந்தார். ஆனால், அவரும், ஃபெர்குசன் வீசிய பவர்ப்ளேயின் இறுதிப் பந்தை, 'ராம்ப் ஷாட் ஆடுகிறேன் பார்' என முயற்சிக்க, அது எட்ஜாகி, தினேஷ் கார்த்திக்கிடம், சமர்த்தாக சேர்ந்தது. ஆறு ஓவர்களின் முடிவில், வெறும் 42 ரன்களோடு, மோசமான தொடக்கத்தை, ஆர்சிபி கொடுத்தது.

மேக்ஸ்வெல் வந்த கையோடு, ரசலை மார்கன் கொண்டு வர, யார்க்கர்கள் சூழ் உலகு என அடிக்க முடியாத பந்துகளின் அணிவகுப்பு நடத்தியது கேகேஆர். ஒரே ஓவரில், ஆர்சிபியை, புரட்டிப் போட்டு அடித்தது ரசல் மேனியா. ரன்கள் ஏறாததால், தலைக்கேறிய அழுத்தத்தால், பரத், ஷார்ட் பாலில், புல் ஷாட் ஆடியே தீருவேன் என, மிடில் பேட்டில் அடி வாங்கிய பந்தை, டீப் மிட் விக்கெட்டில் நின்றிருந்த கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஏபிடி களமிறங்கினார்.

கோலி
கோலி

'அடுத்த அதிர்ச்சி, இன்னும் சில நிமிடங்களில்' என அறிவிப்பின்றி அடுத்த அடி, வந்து சேர்ந்தது ஆர்சிபி-க்கு. "யார் வந்தால் என்ன யார் போனால் என்ன, ஏலியன் ஏபிடி இருக்க, பயமென்ன?" என ரசிகர்கள் தேற்றிக் கொண்டிருக்க, சந்தித்த முதல் பந்திலேயே, ஏபிடியின் ஸ்டம்ப்பை, ஒரு அசத்தலான யார்க்கரால் முறியச் செய்து, கிட்டத்தட்ட எல்லாவற்றையும் முடித்து வைத்தார் ரசல்.

நொறுங்கிப் போன நம்பிக்கைக்கு, மேக்ஸ்வெல் எனும் டேப்பினைக் கொண்டு ஒட்டுக் கொடுக்க ஆர்சிபி முயற்சிக்க, அவதாரமெடுத்து வந்து அதனை, ஒரே ஓவரில், வெட்டிச் சாய்த்தார் வருண் சக்ரவர்த்தி. விக்கெட் சக்ரவர்த்தியாக மாறிய அவர், ஒரே ஓவரில், அடுத்தடுத்த பந்துகளில், மேக்ஸ்வெல்லையும், ஹசரங்காவையும் ஒருவர்பின் ஒருவராக, அனுப்பி வைக்க, அங்கேயே அவசர சிகிச்சைப் பிரிவில், அட்மிட் ஆகி விட்டது ஆர்சிபி. மேக்ஸ்வெல்லின் லெக் ஸ்டம்பைக் காலி செய்ய வருண் வீசிய பந்தெல்லாம், தொடருக்கான பந்து. 63/6 என ஆர்சிபிக்கு, அங்கேயே முடிந்து போனது எல்லாமே. மும்பைக்கு எதிரான போட்டியில், சிஎஸ்கே பயணித்த பாதையிலேயே, தொடக்கத்தில் ஆர்சிபி பயணித்ததால், எப்படியாவது மீண்டு வந்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அப்படி நின்று ஆட, ஆர்சிபிக்கு ஆளில்லை.

சம்பிரதாயமாக வீசப்பட வேண்டிய மீதம் எட்டு ஓவர்களில், எஞ்சி இருந்த நான்கு விக்கெட்டுகள் எத்தனை ஓவர்கள் நீடிக்கும், 100 ரன்களையாவது அணி தாண்டுமா என்ற கேள்வி மட்டுமே மிஞ்ச, கோலி மட்டுமல்ல, ஆர்சிபியே சதமடிக்கவில்லை. இறுதியாக, ஒரு ஓவர் மிஞ்சியிருந்த போதே, 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆர்சிபி.

தலா மூன்று விக்கெட்டுகளை எடுத்த ரசலும் வருண் சக்ரவர்த்தியும், ஆர்சிபியின் சரிவுக்கான சங்கதிகளை சரியாகச் செய்து முடித்திருந்தனர். ஏழு வீரர்கள் ஒற்றை இலக்கத்தோடு வெளியேறி இருந்த ஆர்சிபியில், எல்லோருமே, 'பயிற்சி ஆட்டம் ஆடுகிறோம்' என யாரோ காதில் சொன்னது போல ஆடிச் சென்றிருந்தனர்.

ரஸல் - கோலி
ரஸல் - கோலி

ரசலை ஓப்பனிங் இறக்கினாலே, பவர் பிளேயில் போட்டியை முடித்து வைத்து விடுவார் எனும்படியான இலக்கையே ஆர்சிபி நிர்ணயித்திருந்தது. டிஃபெண்ட் செய்யும்படியான இலக்கில்லை என்பது போட்டியின் சுவாரஸ்யத்தையே குறைத்து விட, வெற்றிக்காக ஆடாமல், ரன் ரேட் சேதாரத்தையாவது தவிர்க்கலாம் என்னும் முடிவோடு ஆடத் தொடங்கியது ஆர்சிபி.

வருண் சக்ரவர்த்தியைக் கொண்டு மார்கன் தொடங்கியதைப் போல், கோலியும் தொடக்கத்திலேயே பந்தை ஹசரங்கா கையில் கொடுப்பார் என்றே எதிர்பார்க்கப்பட, கோலி அதைச் செய்யத் தவறினார். தொடக்க ஓவர்களில், வேகப் பந்து வீச்சாளர்களால், பெரிதாக, எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தி விட முடியவில்லை. சீசனின் முற்பகுதியில், நிலைத்தன்மையற்ற கேகேஆரின் பேட்டிங் லைன் அப்பை, கண்முன் ஓட்டிப் பார்த்த ரசிகர்களுக்கு, இம்மியளவு நம்பிக்கை ஒளி, லேசாக இருளில் சுற்றிக் கொண்டிருந்தது. ஆனால், அதனை மொத்தமாக இருட்டிலேயே கிடத்தி விட்டது, கில் - வெங்கடேஷ் ஐயர் கூட்டணி. டாஸில், இரண்டாவது பேட்டிங் கடினமாக இருக்கும் என கோலி குறிப்பிட்டிருந்தார். ஆனால், உண்மையில், இரண்டாவது பேட்டிங் இலகுவாக இருக்க, துரிதகதியில் ரன்களைச் சேர்த்தது இக்கூட்டணி. பிட்சின் தன்மையை சரியாக கணிக்கத் தவறியது, ஆர்சிபிக்கு எதிரான முடிவை நோக்கி, போட்டியை நகர்த்தியது.

அதனை, சரியாகப் பயன்படுத்தியது கேகேஆர். பௌலிங் குறைபாடால் படாத பாடுபட்ட கேகேஆர், வறட்சியான ஓப்பனிங்காலும், பெரும்பாடு பட்டது. முன்னதாக ராணாவும், கில்லும், முதலில் யார் ஆட்டம் இழப்பது என போட்டா போட்டி நடத்துவர். ஆனால், எல்லாப் பழுதையும் நீக்கி, மீண்டு வந்திருந்தது, கேகேஆர்.

ரஸல் - வருண் சக்ரவர்த்தி
ரஸல் - வருண் சக்ரவர்த்தி

கில் ஒருபக்கம் சிறப்பாக ஆடினார் என்றால், இன்னொரு பக்கம், அறிமுக வீரராகக் களமிறங்கி இருந்த வெங்கடேஷும், சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார். சிராஜினை, வெல்கம் பவுண்டரிகளைக் கொடுத்து வரவேற்ற இக்கூட்டணி, தொடர்ந்து எல்லா பௌலர்களின் பந்துகளையும், அடித்து நொறுக்கியது. ஜேமிசனின் பந்துகள், இந்தியாவில்தான் எடுபடவில்லை என்று பார்த்தால், அபுதாபியிலும் அதே கதிதான். 48 ரன்களோடு கில்லை அனுப்பி, அவரை அரை சதத்தைச் சேர்க்க விடாமல் சாஹல் ஆட்டமிழக்கச் செய்தது மட்டுமே, ஆர்சிபி பௌலர்களின், உச்சகட்ட சாதனையாக இருந்தது. இறுதியாக, ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது கேகேஆர்.

இப்போட்டியின் முடிவு, புள்ளிப் பட்டியலில் ஆர்சிபியின் நிலையை மாற்றி விடவில்லை என்றாலும், இந்த சீசனின் முந்தைய பாகத்தில் சேர்த்து வைத்திருந்த அவர்களது நம்பிக்கையின் அளவீட்டை சற்றே ஆட்டங்காணச் செய்துள்ளது. இந்நிலையில், வெற்றி மகுடம் சூடி, முதல் இடத்தில் வீற்றிருக்கும் சிஎஸ்கேயை அடுத்த போட்டியில், ஆர்சிபி சந்திக்க இருப்பதும் அவர்களுக்குக் கூடுதல் சவாலாக இருக்கப் போகிறது.

வீரர்கள் மாற்றம், முக்கிய வீரர்கள் சோபிக்காமல் போனது ஆகியவை ஆர்சிபிக்கு எதிராக முடிந்தது என்றாலும், அது மட்டுமே அவர்களது தோல்விக்குக் காரணம் இல்லை. கேகேஆர் ஒரு அணியாக, தனது இழந்த மாண்பை, குறிப்பாக, சீசன் சீசனாகக் கட்டிக் காத்த பௌலிங் பாரம்பரியத்தை மீட்டெடுத்தது என்றே சொல்ல வேண்டும்.

எனினும், இன்னமும் பல போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், எதுவும் நடக்கலாம், காட்சிகளும் மாறலாம், புள்ளிப் பட்டியலைப் பொறுத்தவரை, கடைசிப் போட்டி வரை நிலையாமை மட்டுமே நிலையானது!