Published:Updated:

மலிங்கா இல்லாத மும்பை ப்ளே ஆஃப்கூட தாண்டியதில்லை... இந்த முறை எப்படி? #MumbaiIndians

மலிங்கா, Mumbai Indians

மும்பையின் சார்பாக, 122 போட்டிகளில் 170 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், மலிங்கா. இவருக்கு அடுத்ததாய் மும்பை இந்தியன்ஸின் சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பெளலர் ஹர்பஜன்தான்.

மலிங்கா இல்லாத மும்பை ப்ளே ஆஃப்கூட தாண்டியதில்லை... இந்த முறை எப்படி? #MumbaiIndians

மும்பையின் சார்பாக, 122 போட்டிகளில் 170 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், மலிங்கா. இவருக்கு அடுத்ததாய் மும்பை இந்தியன்ஸின் சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பெளலர் ஹர்பஜன்தான்.

Published:Updated:
மலிங்கா, Mumbai Indians
மே 12, 2019, இரவு 11 மணி... கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் முகத்திலும், பயங்கர டென்ஷன். நெயில் பைட்டிங் ஃபினிஷ் என்று சொல்வார்களே, அப்படிப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த போட்டியை, ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

6 பந்தில் 9 ரன்கள் எடுக்க வேண்டும்... களத்தில் வாட்சன், ரத்தம் சிந்தி, உயிரைக் கொடுத்து ஆடிக் கொண்டிருக்கிறார். எப்படியும் போட்டியை வென்று கொடுத்துவிடுவார், என்பது ரசிகர்களின் எண்ணமாய் இருந்தது. மறுமுனையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பக்கமும், பயங்கர டென்ஷன்... யாரைப் பந்து வீசவைப்பது என முடிவெடுக்க முடியாத ரணகள சூழல்... புயல்வேக பும்ரா மற்றும் இறுதி ஓவர்களில் வேரியேஷன் காட்டும் மெக் லாசன் என இருவரின் ஓவரையும் முடித்தாகிவிட்ட நிலையில், கைவசம் இருப்பதோ, இரு பெளலர்கள். ஒருவர், அனுபவம் குறைந்தவர். மற்றொருவரோ, அனுபவம் நிறைந்தவர். ஆனால், அன்றைய நாளில், அனுபவம் நிறைந்தவரின், முதல் 3 ஓவர்களில் சிஎஸ்கே வீரர்கள், 42 ரன்களை எடுத்துவிட்டனர். அதுவும், அவரின் 3வது ஓவரை துவம்சம் செய்து, 20 ரன்களைக் குவித்து விட்டனர். இந்நிலையில், 9 ரன்களை மட்டுமே டிஃபெண்ட் செய்ய வேண்டிய நிலையில், அவரை நம்பி, எப்படி இறுதி ஓவரைக் கொடுப்பது?!

ஷேன் வாட்சன்
ஷேன் வாட்சன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவர் டிஃபெண்ட் செய்துவிடுவாரா, வெற்றியைத் தேடிக் கொடுத்து விடுவாரா எனப் பல கேள்விகள் காத்திருக்க, கேப்டன் ரோஹித் ஷர்மா, தைரியமாக, அவரின் கைகளில் பந்தைக் கொடுத்து வீசச் சொல்கிறார். பந்தை முத்தமிட்டுக் கொண்டே வீசிய அந்தக் கைகள், மும்பை இந்தியன்ஸுக்கு, நான்காவது ஐபிஎல் கோப்பையைப் பெற்றுக் கொடுத்தது. அந்தக் கைகள் வேறு யாருடையதுமல்ல, மும்பை இந்தியன்ஸின் முதுகெலும்பான லசித் மலிங்காவுடையது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
விரைவில் தொடங்க இருக்கும் ஐபிஎல்-கான எதிர்பார்ப்புகள் விண்ணை முட்டிக் கொண்டிருக்க, அன்று அவர், இன்று இவர், நாளை எவர் என்ற கணக்கில் அடுத்தடுத்து, ஐபிஎல் முகங்கள் விலகிக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் தற்போது இணைந்திருப்பவர் மும்பை எக்ஸ்பிரஸ், லசித் மலிங்கா. மலிங்காவிற்கு பதிலாக ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர், ஜேம்ஸ் பேட்டின்சனை மும்பை அணி, விளையாட வைக்க உள்ளது.

நான்கு முறை ஐபிஎல் கோப்பை, இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளை வென்று அத்தனை அணிகளுக்கும், களத்தில், சிம்ம சொப்பனமாய்த் திகழ்கின்ற அணி மும்பை இந்தியன்ஸ். அத்தகைய பெளலிங் யூனிட்டின் முதுகெலும்பாய், ஒவ்வொரு சீசனிலும் திகழ்ந்து வருகின்ற வேகப்பந்து வித்தகன்தான் மலிங்கா. அவர் இல்லாமலிருப்பது, மும்பை அணிக்கு பேரிழப்பு.

Malinga
Malinga

முதலில் சச்சின், பிறகு ரோஹித் என மும்பையின் பேட்டிங்கிற்கான அடித்தளத்தை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு நபர்கள் ஏற்படுத்திக் கொடுத்திருப்பினும், மும்பையின் பெளலிங் யூனிட் மொத்தமும் 2009-ம் ஆண்டிலிருந்து சவாரி செய்து வந்திருப்பது மலிங்காவின் தோள்களில்தான்.

மும்பையின் சார்பாக, 122 போட்டிகளில் 170 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், மலிங்கா. இவருக்கு அடுத்ததாய் மும்பை இந்தியன்ஸின் சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பெளலர் ஹர்பஜன்தான். அவர் 136 போட்டிகளில் 127 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். இவர்களுக்கு இடையேயான ஒப்பீடே சொல்லும், இவர் எந்த அளவுக்கு மும்பையின் ஒற்றை நம்பிக்கையாகத் திகழ்ந்து வந்திருக்கிறார் என்பதனை!

வேகப் பந்து வீச்சாளர்களிடம் இயல்பாகக் காணப்படும் ஒன்று, ஆக்ரோஷம். ஆனால், ஆக்ரோஷத்தின் அடையாளம் கொஞ்சமுமின்றி சிரித்த முகத்துடனே ஸ்டம்ப்புகளைச் சிதறச் செய்து, எதிரணியின் கூடாரத்தை சத்தமேயில்லாமல் காலி செய்யும் மந்திரக்காரர்தான் மலிங்கா. தன்னுடைய ஸ்லிங் ஆக்ஷன் பெளலிங்கால், பேட்ஸ்மேன்களின் நரம்பினைச் சில்லிடச் செய்யும் 'ஸ்லிங்கா மலிங்கா', சராசரியாக ஒவ்வொரு போட்டியிலும் 1.39 விக்கெட்டுகளை வீழ்த்தி, 170 விக்கெட்டுகளுடன், ஐபிஎல்-ல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

அடுத்த இடத்தில் உள்ள டெல்லி அணியின் அமித் மிஸ்ரா, 147 போட்டிகளில் 157 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க, மலிங்காவின் அருகில் கூட யாரும் வர முடியாத சாதனையாக இதைப் பார்க்கலாம்.

Malinga
Malinga
AP

குறிப்பாய், குறைந்த ரன்களைத் தன் அணி இலக்காய் நிர்ணயித்திருக்கும் சமயங்களில், அவருடைய தலையில் இரட்டைப் பொறுப்புகள் சுமத்தப்படும்; விக்கெட்டை வீழ்த்துவது மற்றும் எதிரணியின் ரன்கள் எகிறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது. இதனைக் கேக் வாக் எனச் சொல்லப்படும் சொல்லாடல் போல மிக எளிதாய்ச் செய்து முடிப்பார்.

தனது ஐபிஎல் பயணத்தில் மொத்தமாய் 2827 பந்துகளை வீசியுள்ள மலிங்கா அதில் 1155 பந்துகளை ரன் எதுவும் அளிக்காத டாட் பாலாக வீசியுள்ளார் என்பதே இதற்குச் சான்று. அதிக டாட் பந்துகளை வீசியுள்ளவர்கள் பட்டியலில், ஹர்பஜனுக்கு அடுத்ததாய் இரண்டாம் இடத்தில் உள்ளார் மலிங்கா.

இவரின் யார்க்கர்களை சமாளித்து ஆடவே பிரம்மப் பிரயத்தனப்படும் அவர்கள், இதில் ரன் எடுப்பது என்பது இயலாத காரணம் என்பதாலேயே, இவரது பந்களைத் தொடாமல் அடுத்த பெளலரின் ஓவர்களுக்காகக் காத்திருக்கத் தொடங்கினர். இதனால்தான், இதுவரை 8 மெய்டன் ஓவர்களை வீசி, அதிக மெய்டன் ஓவர்களை வீசியவர்கள், பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளார்.

ஒவ்வொரு சீசனிலும், மும்பையின் வெற்றிக்குக் காரணமாய் இருக்கும் மலிங்காவின், மிகச் சிறந்த சீசன் என்றால் அது 2011-ம் ஆண்டுதான். அந்த ஆண்டுதான், 28 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராய் ஜொலித்து, அதற்கான பட்டியலில் பிராவோவுக்கு அடுத்ததாய் இரண்டாமிடத்தில் ஒளிர்கிறார்.
Malinga
Malinga

டி20, பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும் கிரிக்கெட் ஃபார்மேட். அத்தகைய ஒரு ஃபார்மேட்டில், ஒரு பெளலரால் எண்ணற்ற மைல்கற்களை அடைய முடியுமென்றால், அவர் பெளலிங் வித்தையில் சகலமும் கற்ற சாணக்கியனாய்த்தான் இருக்க முடியும். அத்தகையவராய் மலிங்கா இருந்ததற்கான இன்னொரு சான்று, ஐபிஎல்-ல் அவரது எக்கானமி, 7.14 என்பதே!

அதிலும் குறிப்பாய், 2017 மற்றும் 2019 என்ற இரண்டு ஆண்டுகளைத் தவிர, வேறு எப்போதும் அவருடைய எக்கானமி எட்டைத் தாண்டியதில்லை. அப்படி அவர் அறிந்த அத்தனை ஆட்ட நுணுக்கங்களையும், தனக்காய் வைத்துக் கொள்ளாது, துரோணராய் மும்பையின் அத்தனை வேகப்பந்து வீச்சாளர்களிடமும் அவர் எடுத்துப் போய் சேர்த்ததன் விளைவாய்த்தான், மும்பை இந்தியன்ஸுக்கு மட்டும் அல்ல இந்திய அணிக்கும் பும்ரா என்ற புயல் மனிதர் கிடைத்தார். யார்க்கர் பந்துகளை எப்படி வீசுவது என்பதை, மலிங்காவிடம் கற்றுக் கொண்டதாய் பும்ராவே குறிப்பிட்டுள்ளார்.

2008, 2009, 2016 மற்றும் 2018-ம் ஆண்டு என இந்த நான்கு ஆண்டுகள் மட்டும்தான் மும்பை இந்தியன்ஸ், லீக் சுற்றோடு வெளியேறியது. இதில் நான்கில் மூன்று முறை மலிங்கா காயம் மற்றும் இதர காரணங்களால் ஐபிஎல்-ல் ஆட முடியாமல் போக தோல்வியின் பள்ளத்தில் துவண்டு விழுந்தது மும்பை இந்தியன்ஸ். இந்த சீசன்களில், ப்ளே ஆஃபிற்கு முன்னேறாமல், முறையே 5, 5, 7, 5 இடத்தோடு நிறைவு செய்தது. அதனால்தான் அவர் இல்லாததை, மும்பை இந்தியன்ஸ் எப்படி எதிர்கொள்ளப் போகிறது, என்ற கவலை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

நான்கு விக்கெட்டுகளை ஆறு முறையும், ஐந்து விக்கெட்டுகளை ஒரு முறையும் என கொத்துக் கொத்தாக விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

2011 ஏப்ரலில் நடந்த, டெல்லி டேர்டெவில்ஸ்க்கு எதிரான இந்தப் போட்டியில், 22 பந்துகளை வீசி, வெறும் 13 ரன்களைக் கொடுத்து, 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதலில் ஆடிய டெல்லியை 95 ரன்களில் சுருட்டி, வெற்றியைத் தம் வசமாக்கிக் கொள்ள, மும்பைக்கு இந்த ஐந்து விக்கெட்டுகள் காரணமாய் அமைய, ஐபிஎல்-ன் சிறந்த பெளலிங் ஃபிகர்களில் இதுவும் இடம்பெற்றது. மலிங்காவின் மேலும் சில சிறந்த ஸ்பெல்களாய், 2010-ம் ஆண்டு பஞ்சாப்க்கு எதிராக 4/22, 2012-ல் டெக்கான் சார்ஜர்ஸுக்கு எதிராக 4/16 ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

மலிங்கா, Mumbai Indians
மலிங்கா, Mumbai Indians

2013, 2015, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி, கோப்பையை மும்பை இந்தியன்ஸ் வெல்ல, முக்கியமான பங்களிப்பை அளித்திருந்தார் மலிங்கா. இந்த நான்கு இறுதிப் போட்டிகளில் மூன்று முறை சென்னையையும் ஒரு முறை புனேயையும் எதிர்கொண்டது, மும்பை. இதில் அத்தனை போட்டிகளிலும், எதிரணிக்கு இலக்கை நிர்ணயித்து, இரண்டாவதாய் பெளலிங் செய்தது, மும்பை. இதன் விளைவாக, ஒட்டுமொத்த அழுத்தமும் பெளலர்களின் பக்கம் திரும்ப, அதனை அழகாய் எதிர்கொண்டு அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தனர் பெளலர்கள். இந்த பெளலிங் யூனிட்டின் தலைவனாய், இந்த நான்கு இறுதிப் போட்டிகளில் அவருடைய சராசரி வெறும் 7.31. இந்த நம்பரே எடுத்துரைக்கும் அணியின் வெற்றிக்கு எப்படி அவர் வித்திட்டார் என்று!

இப்படி கணக்கில் இல்லா பல சாதனைகளை மும்பைக்காக நிகழ்த்தியிருக்கும் மலிங்காவின் இடத்தினை யார் நிரப்புவார்? மலிங்கா இல்லாமல் ப்ளே ஆஃப்க்குக் கூட முன்னேறாத மும்பை இம்முறை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.