Published:Updated:

2020-ல் நாக் அவுட்டான கிளென் மேக்ஸ்வெல் மீண்டு வந்தது எப்படி… ஹாட்ரிக் அரைசதங்களின் பின்னணி என்ன?!

கிளென் மேக்ஸ்வெல்
News
கிளென் மேக்ஸ்வெல்

நேற்று பஞ்சாபுக்கு எதிரான போட்டியில், 12-வது ஓவரில் கூட, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து, 70-களில் தள்ளாடிய அணியை, தூக்கி நிறுத்தியது, மேக்ஸ்வெல்லின் 33 பந்துகளில் வந்து சேர்ந்த 57 ரன்கள்.

வருடத்துக்கு 10 கோடிக்கு குறையாமல் ஐபில் அணிகளால் வாங்கப்படுவார், ஆனால் போட்டிகளில் பெரியதாக பர்ஃபாமன்ஸ் இருக்காது... இதுதான் கிளென் மேக்ஸ்வெல்லைப் பற்றிய ஒன்லைன்! "ஒரு ஆடம்பர பர்சேஸ்" என்று பல முன்னாள் வீரர்களால் விமர்சனம் செய்யப்பட்ட அதே மேக்ஸ்வெல்தான் தற்போது அந்த விமர்சனங்களுக்கு வட்டியும் முதலுமாக பதிலடி கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

நடைபெற்று வரும், ஐபிஎல் தொடரின் இறுதிச் சுற்றில், ஸ்பின்னர்களுக்கு எதிரான மேக்ஸ்வெல்லின் ஸ்விட்ச் ஷாட்டுகளும், தனது இன்னிங்சில், காலூன்றி நின்ற பிறகு வாள் வீசும் நிதானமோடு கூடிய அவரது செயல்வீரமும், பேசு பொருளாகிக் கொண்டுள்ளன. முத்தாய்ப்பாக, அவரது ஹாட்ரிக் அரை சதங்கள், ஆர்சிபியை, ப்ளே ஆஃபுக்குள்ளும் நுழைய வைத்து விட்டன. இத்தருணத்தில், பழைய மேக்ஸியாக, சொல்லப் போனால், முன்னிலும் மெருகேறியவராக உருமாற, அவர் கடந்து வந்த பாதையை, நாமும் சற்றே திரும்பிப் பார்க்க வேண்டும்.

ஏனெனில், தனியொரு வீரர், ஃபார்முக்குத் திரும்பியிருப்பது, அதனால் அணிக்கு நன்மை விளைந்திருப்பது ஆகியவற்றையும் கடந்து, இந்தச் சங்கிலித் தொடர் நிகழ்வுகள், நமக்குள் கடத்த விரும்பும் விஷயம் இன்னும் ஒன்றும் உண்டு.

மேக்ஸ்வெல்
மேக்ஸ்வெல்

டிப்ரஷன்!

இது இல்லாத இடமே இல்லை எனுமளவு, நீக்கமற நிறைந்திருக்கிறது. காலமும் நேரமும் காத்திருக்காது என்பதால், அதோடு போட்டி போட்டு, நாமும் ஓட முயற்சிக்க, இறுதியில், பின்தங்குவது நாமாக மட்டுமே இருக்கிறோம். கல்லை உடைக்க ஆகும் நேரத்தில், மலையையே நகர்த்த சொல்வதால் விளையும் விளைவு இது. அதற்கும் மேலாக, எதிர்பார்ப்புகள், தலைக்குள் திணிக்கப்படும் போது, அந்த அழுத்தம் ஏற்படுத்தும் ஆபத்து, திறமைகள் மரத்துப் போனவர்களாய், திக்கற்றவர்களாக்கித் திணறடிக்கும். இதைக் கடக்காதவர்கள் இங்கே பெரும்பாலும் இருக்கவே முடியாது.

'The worst witch' என்ற வெப் தொடரில், மில்ரெட் ஹப்பிள் என்னும் பிரதான கதாபாத்திரம் வரும். இந்தக் கதாபாத்திரத்தை, ராம்சே என்னும் குழந்தை நட்சத்திரம் ஏற்றிருந்தார். முதல் மூன்று சீசன்களில், அவரது கதாபாத்திரம் மிகவும் விரும்பப்பட்டு, கொண்டாடப்பட, வெற்றி உலா வந்தார் ராம்சே. சிறிய குழந்தைகளுக்கான சீரிஸ் தான் எனினும், ராம்சேயின் கள்ளம் கபடமற்ற சிரிப்புக்காகவே, அந்த சீரிஸுக்கு, 18+லும் ரசிகர்கள் உண்டு. அப்படி இருந்த சமயத்தில், நான்காவது சீசன் வரப் போகிறது என்ற அறிவிப்பு அவர்களை உற்சாகப்படுத்த, கடைசியில் மிஞ்சியது ஏமாற்றமும், கவலையுமே.

ஏனெனில், ராம்சேயின் கதாப்பாத்திரத்தை வேறொரு சிறுமி ஏற்றிருந்தார். ராம்சேயின் இடத்தில் வேறொரு சிறுமியை அவர்களால் பொருத்திப் பார்க்க முடியாமல் போக, தங்களது ஏமாற்றத்தை, ட்விட்டரில் டிரெண்ட் செய்து, விஷயத்தை வைரலாக்கினர். அதனை அடுத்து தெரிய வந்த செய்தி, தனது மன நலம் பேண, தொடரில் இருந்து தானாகவே முன்வந்து, ராம்சே விலகினார் என்பது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இது எல்லோரையும் திடுக்கிடச் செய்து, வருத்தத்தில் ஆழ்த்தியது. ஏனெனில், அச்சமயம் ராம்சேயின் வயது, வெறும் 15 மட்டுமே. "இந்த வயதிலா?!" என்பதுதான், அச்சமயம் ரசிகர்களின் ஆதங்கமாகவும் இருந்தது.

உண்மையில், அழுத்தத்துக்கு வயது வரம்பல்ல. கணிதச் சமன்பாட்டினை கொண்டு விளக்கினால், அது எந்தக் காரணியும் சார்ந்ததல்ல. இந்த விஷயத்தில் நாம் கவனிக்கத் தவறிய இன்னொன்று, முதலாமவரை கொண்டாடி ஆராதிப்பதால், இரண்டாவதாக அந்த இடத்திற்கு வருபவர், அனுபவிக்கும் வலி. சில சமயம் வேறு மாதிரியும் நிகழலாம்; புதியவர்கள் வர, பழையவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். இந்தச் சமூகம், ஏதோ ஒரு கட்டத்தில், யாரோ ஒருவர் தலையில், டன் கணக்கில் பாரத்தைத் தூக்கி வைக்கத்தான் செய்கிறது.

மேக்ஸ்வெல்
மேக்ஸ்வெல்

இந்தக் கதைக்கும், நமது கதையின் நாயகன் மேக்ஸ்வெல்லுக்கும் என்ன தொடர்பு எனத் தோன்றலாம். மன அழுத்தம்தான் தொடர்பு. இதே மேக்ஸ்வெல் ஒரு கால கட்டத்தில், மன அழுத்தத்திற்கு ஆளாகி, அதிலிருந்து தனது மனோ திடத்தால் மீண்டு வந்தவர்தான். பஞ்சாப் அணியில் இருந்த போது, சரியாக ஆடவில்லை என அதற்கான ஏச்சுப் பேச்சுக்களையும் வாங்கியவர்தான். ஒருமுறை, ஆட்டமிழந்தார் என்பதற்காக, மிகுதியான கோபத்தில், குப்பைத் தொட்டியை எட்டி உடைத்து, பின் தனது செய்கைக்காக அதனிடம் மன்னிப்புக் கேட்டு, தங்களது உறவைச் சுமூகமாக்கிக் கொண்டதாகவும் நகைச்சுவையாக ட்வீட் செய்தவர்தான். எல்லாத் தொடரிலும் ஆடுவார், ஐபிஎல்-ல் மட்டும் அவரது பேட் சோக கீதம் இசைக்கும் என கிண்டல் கேலிகளுக்கு உள்ளானவர்தான்.

'Tough times won't last, tough people do' என ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. எவ்வளவு கடினமான நேரமாக இருந்தாலும், கடந்து போகும் என்னும் வைராக்கியம், நிகழ், எதிர் காலங்களோடு, கடந்த காலத்தையும் சேர்த்தே மாற்றும் வல்லமையைத் தரும். அதற்கு நாம் அவர்களுக்கான நேரத்தையும், இடைவெளியையும் தர வேண்டும். அப்படி மீண்டு வருபவர்களுக்கு, எதையும் ஆக்கிக் காட்டும் ஆக்க சக்தி மேலிடும். பென் ஸ்டோக்ஸும், அதை உணர்ந்துதான், எல்லாவற்றையும் விட்டு சில காலம், விலகி நடக்கும் முடிவை எடுத்துள்ளார்.

ஆர்சிபியில், மேக்ஸ்வெல் மட்டும் இந்த வலியை அனுபவித்தவர் அல்ல, வலிமை மிகுந்த கோலியும்தான். அவரும் 2010-களின் முற்பகுதியில், தான் கிரிக்கெட்டில் சோபிக்கத் தவறியதால், டிப்ரஷனை அனுபவித்ததாகவும், பின் அதிலிருந்து மீண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோலி சமீபத்தில் சந்தித்துக் கொண்டிருக்கும் அழுத்தமும், அவர் முன்னர் சந்தித்த அழுத்தத்திற்கு, சற்றும் குறையாதது. வேறுபாடு என்ன எனில், அவரது மன நரம்புகள் முன்னிலும், வலிமையுடையதாக மாறி உள்ளது மட்டும்தான். அவர், இதைக் கடந்து விடுவார். Passion can relieve anyone from depression! மறக்கடிக்கப்பட்ட, பழகிப் போன வலிகளை விட, அணுஅணுவாய் அனுபவித்த வலி, ஒருவரை சர்வ நிச்சயமாக, உயரப் பறக்க வைக்கும்.

மேக்ஸ்வெல்
மேக்ஸ்வெல்

இதோ, ஹைலைட்டாக, தனது ஐபிஎல் பயணத்தில், 2014-க்குப் பிறகு, முதல்முறையாக, ஒரே சீசனில், 400 ரன்களை மேக்ஸ்வெல் கடந்துள்ளார், அதுவும், 40.70 என முன் எப்போதும் இல்லாத, ஆவரேஜோடு! அவரது ஒன்பது ஆண்டுகள் ஐபிஎல் கரியரில், அவர் அடித்த 11 அரை சதங்களில், ஐந்து, இந்த சீசனில் வந்ததுதான். குறிப்பாக, கடைசியாக ஆடிய மூன்று போட்டிகளிலுமே, அரைசதம் கடந்துள்ளார்,மேக்ஸ்வெல். விளைவு, ஆர்சிபியின், ப்ளே ஆஃப் இருக்கையும், இவரால் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது பாதி ஐபிஎல் அரபு மைதானங்களில் தொடங்கப்பட்டபோது அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை பெற்று அதிர்ந்த ஆர்சிபிக்கு, அரணாக நின்று அடுத்து வந்த 3 போட்டிகளிலும் அரைசதம் அடித்து அணியை வெற்றிபெற வைத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் உடனான போட்டியில் பேட்டிங், பெளலிங், ஃபில்டிங் என முப்பரிமாண பர்ஃபாமென்ஸினால் வெற்றிபெற வைத்தார் என்றால் ராஜஸ்தான் உடனான போட்டியில் அரணாக நின்று சேஸிங் செய்து கொடுத்தார்.

மேக்ஸ்வெல்
மேக்ஸ்வெல்

நேற்று பஞ்சாபுக்கு எதிரான போட்டியில், 12-வது ஓவரில் கூட, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து, 70-களில் தள்ளாடிய அணியை, தூக்கி நிறுத்தியது, மேக்ஸ்வெல்லின் 33 பந்துகளில் வந்து சேர்ந்த 57 ரன்கள். இதே பஞ்சாபுக்காக ஆடியபோது, கடந்த சீசனில், ஒரு சிக்சரைக்கூட அடிக்கவில்லை என்ற கேலிகளைச் சுமந்தவர், பஞ்சாப்புக்கு எதிரான இந்தப் போட்டியில் மட்டுமே, நான்கு சிக்சர்கள் வெளுத்தார்.

ஆர்சிபி ரசிகர்கள், மேக்ஸ்வெல்லை, தங்களது எக்ஸ் ஃபேக்டராகக் கொண்டாடத் தொடங்கி விட்டனர். கொண்டாட்டத்துக்கு தகுதியானவர்தான் அவர். சோகச் சேற்றில் மூழ்கி, முகவரி தொலைத்தவர்களுக்கு மத்தியில், தன்னை மீட்டெடுத்ததற்காகவே, அவரைக் கொண்டாடலாம்.

மனிதன், சமூகத்தோடு ஒன்றி வாழ பழக்கப்பட்ட ஒரு உயிரி! நம்பிக்கையும், அன்பும் நிரம்பி வழியும் கரங்கள் அவனை நோக்கி நீட்டப்படும் போது, சாவிலும் கொடுமையான டிப்ரஷன் என்னும் கோரப் பிடியில் இருந்து அவனைக் காப்பாற்றிக் கரை சேர்க்கலாம். அப்படிப்பட்ட சூழலிலிருந்து கம்பேக் கொடுக்கும் மேக்ஸ்வெல்களுக்கு, மீண்ட பின் எதுவும் சாத்தியமே!