Published:Updated:

ஈ சாலா ஹீரோ கிளன் மேக்ஸ்வெல்… அதிரடி பர்ஃபாமென்ஸ்களால் மாஸ் காட்டும் ஆஸி மாஸ்டர்!

கிளென் மேக்ஸ்வெல்
News
கிளென் மேக்ஸ்வெல்

எந்த மேக்ஸ்வெல் மீது விமர்சனங்கள் குவிந்ததோ, அதே மேக்ஸ்வெல்தான், தற்போது ஆர்சிபிக்கு வெற்றி மேல் வெற்றிகளைப் பெற்று கொடுத்துக் கொண்டிருக்கிறார். கோலிக்கும் ஏபிடிக்கும் நடுவில், பெரிய பாலமாக இருந்து, அணியைக் கரையேற்றிக் கொண்டிருக்கிறார்.

வழக்கமாக புது வீரர்களை எதிரணியினர் சீண்டினால், அவர்களுக்கு ஆதரவாக கேப்டன் கோலி, "மோதுவது என்றால் என்னிடம் மோது" என சண்டைக்குச் செல்வார். அந்தப் பணியை நேற்று, கோலிக்கு பதிலாக மேக்ஸ்வெல் செய்தார்.

ஆர்சிபியின் தூதுவனாக அவதரித்துள்ள மேக்ஸ்வெல், அடுத்தடுத்து அரைசதம் அடித்து அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அருகில் கொண்டு வந்து சேர்த்துள்ளார். வழக்கமாக ஆர்சிபி என்றாலே, இரு பேட்ஸ்மேன்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிவார்கள் - கோலி மற்றும் டிவில்லியர்ஸ். இவர்கள்தான் ஆர்சிபி, ஆர்சிபிதான் இவர்கள்... அந்தளவுக்கு இந்த இருவரைச் சுற்றியே அணியின் ஒட்டுமொத்த பேட்டிங்கும் பின்னப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு சீசனின் போதும், பல கோடி கொடுத்து ஒரு வெளிநாட்டு வீரரை வாங்கிக் கொண்டு வருவார்கள். அவர்களும் வந்த கடமைக்கு, சில போட்டிகளில் விளையாடி விட்டு, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல், ஒதுங்கி விடுவார்கள். அடுத்த சீசனில், அவர்களுக்கு பதிலாக, மற்றொருவர். இப்படித்தான் பல வருடங்களாக, ஆர்சிபிக்குள், நிகழ்வுகள் நகர்ந்து கொண்டுள்ளன.

மேக்ஸ்வெல்
மேக்ஸ்வெல்

இந்த சீசனும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது போல் ஜேமிசனை 15 கோடிக்கும், மேக்ஸ்வெல்லை 14.25 கோடிக்கும் ஆர்சிபி வாங்க, சோஷியல் மீடியா ரசிகர்கள் ஆர்சிபியை ரவுண்டு கட்டி அடித்தார்கள். 30 கோடிக்கு வெறும் 2 வீரர்களை மட்டுமே எடுத்துள்ளார்கள், அதுவும் அதுவும் ஷேவாக்கால் ‘10 Crore Cheerleader - Maxwell’ என விமர்சிக்கப்பட்ட ஒருவரை, அணிக்குள் கொண்டு வந்தார்கள். மற்றொரு முறை ‘மேக்ஸ்வெல் அதீத பணத்தோடு மற்றொரு விடுமுறைக்கு வந்து செல்லப் போகிறார்’ என்கிற விமர்சனங்களும் வந்து குவிந்தன.

எந்த மேக்ஸ்வெல் மீது விமர்சனங்கள் குவிந்ததோ, அதே மேக்ஸ்வெல்தான், தற்போது ஆர்சிபிக்கு வெற்றி மேல் வெற்றிகளைப் பெற்று கொடுத்துக் கொண்டிருக்கிறார். கோலிக்கும் ஏபிடிக்கும் நடுவில், பெரிய பாலமாக இருந்து, அணியைக் கரையேற்றிக் கொண்டிருக்கிறார்.

முதல் பாதி, இந்தியாவில் வைத்து நடைபெற்ற போட்டிகளில் 39, 59, 78 என பல நல்ல இன்னிங்ஸ்களில் ஆடியிருந்தார் மேக்ஸ்வெல். இரண்டாவது பாதி துபாயில் வைத்துத் தொடங்கிய போது, அவருக்கான நல்ல தொடக்கம் அமையவில்லை. கேகேஆர், சிஎஸ்கேவுடன் அவர் சரியாக ஆடாமல் போக, தோல்வி ஆர்சிபிக்குப் பரிசாகக் கிடைத்தது. ஆர்சிபி, மீண்டும் ஒருமுறை ப்ளேஆஃப் செல்வார்களா, அல்லது லீக் போட்டிகளுடன் நடையைக் கட்டுவார்களா என்ற கேள்வி எழுந்தபோதுதான் மேக்ஸ்வெல் வெகுண்டெழுந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மும்பையுடனான போட்டியில், திரும்பிய பக்கம் எல்லாம் மேக்ஸ்வெல்தான் அவர்களுக்கு எமனாக தெரிந்தார். பேட்டிங்கில், ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்விட்ச் ஹிட் ஷாட்களின் மூலம், மும்பை பௌலர்களுக்கு ஆட்டம் காட்டினார். அதுவும் மில்னேவின் அடுத்தடுத்த பந்தில், ரிவர்ஸ் ஷாட்டில் அடித்த சிக்ஸ் மற்றும் பவுண்டரி, மும்பை பௌலர்களை ஆட்டம் காணச் செய்து விட்டது. பேட்டிங்கில் அரைசதம் அடித்து அசத்தியவர், ஃபீல்டிங்கில், டிகாக்கின் கஷ்டமான கேட்சைப் பிடித்தார். அடுத்த ஓவரில், ரோஹித் ஷர்மா என்னும் பிக் ஃபிஷ்ஷை வீழ்த்தி வெற்றியை மும்பையிடம் இருந்து தட்டிப்பறித்து ஆர்சிபிக்கு அன்புப் பரிசளித்தார். ஹர்ஷல் பட்டேல், ஹாட்ரிக் விக்கெட் எடுத்தும், மேன் ஆஃப் தி மேட்ச் விருது மேக்ஸ்வெல்லைத் தேடிச் சென்றது.

மேக்ஸ்வெல்
மேக்ஸ்வெல்

தொடர் தோல்விகளால் துவண்டிருந்த ஆர்சிபிக்கு, இந்த வெற்றி, உற்சாக டானிக் அளிக்க, நேற்றைய போட்டியில் அந்த உற்சாகம் இன்னும் அதிக அளவில் தெரிந்தது. நேற்று ராஜஸ்தானை ஒன்றும் இல்லாமல் செய்து, அவர்களின் பிளே ஆஃப் வாய்ப்பை மங்கச்செய்து, அமோக வெற்றி பெற்றது, ஆர்சிபி. இந்த வெற்றியிலும், தனது பெயரை, பெரிதாக எழுதியுள்ளார் மேக்ஸ்வெல்.

முதல் பேட்டிங் ஆடிய ராஜஸ்தானில், லூயிஸ் அதிரடியில் பயமுறுத்த, 11 ஓவர்களில், 100 ரன்களுக்கு 1 விக்கெட் என இருக்க, ராஜஸ்தான் நிச்சயம் 200 ரன்களைத் தாண்டிவிடும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆர்சிபியின் புதுமுக வீரர் கார்டன், லூயிஸை வீழ்த்த, ராஜஸ்தானின் வீழ்ச்சி அங்கேதான் தொடங்கியது. சஹால் மற்றும் ஷபாஸ் அஹமத், அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த, அடுத்த 9 ஓவர்களில், வெறும் 49 ரன்கள் மட்டுமே எடுத்து, 149 ரன்களுக்கு, தங்களது இன்னிங்ஸை முடித்துக் கொண்டது, ராஜஸ்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

150 ரன்கள் சேஸிங்கை, ஆர்சிபி தொடங்கிய சிறிது நேரத்தில், படிக்கல் மற்றும் கோலி, அடுத்தடுத்து ஆட்டமிழந்து, நடையைக் கட்ட, ஆர்சிபி இந்த ஸ்கோரை சேஸ் செய்யுமா, அல்லது ராஜஸ்தான் கம்பேக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால், மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ள மேக்ஸ்வெல்லுக்கு, இந்த ஸ்கோர் எல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல் ஆடத் தொடங்கினார். அவருக்கு உறுதுணையாக, பரத் ஆட, ஆட்டம் முழுவதுமாக, ஆர்சிபியின் கட்டுபாட்டுக்குள் வந்தது.

மேக்ஸ்வெல்
மேக்ஸ்வெல்

13-வது ஓவரில், கிரிஸ் மோரிஸ் பந்தில் பரத் சிக்ஸ் அடிக்க, மோரிஸ் அவரைச் சீண்ட ஆரம்பித்தார். உடனே மேக்ஸ்வெல் தலையிட்டு, "நீ இளைஞனிடம் உன் வேலையைக் காட்டாதே, என்னிடம் காட்டு" என்று பரத்துக்கு ஆதரவாக வந்து நின்று, ஆர்சிபி ரசிகர்களை ஆனந்த உற்சாகத்தில் ஆழ்த்தினார். வழக்கமாக, புது வீரர்களை எதிரணியினர் சீண்டினால், அவர்களுக்கு ஆதரவாக கேப்டன் விராட் கோலி, சண்டைக் கோழியாக, அவர்களுடன் சண்டையிட ஆயத்தமாவார். இது பலமுறை நாம் பார்த்த காட்சிகள்தான். ஆனால், இம்முறை, "மோதுவது என்றால் என்னுடன் மோது!" என்று அதே பணியைத்தான் மேக்ஸ்வெல் செய்தார்.

வெறும் வாய்ச் சண்டை மட்டும் செய்யவில்லை மேக்ஸ்வெல், மோரிஸ் வீசிய 18-வது ஓவரில், அவரை ஓட ஓட அடித்தார். முதல் பந்தில், மிட் விக்கெட் திசையில் சிக்ஸர் உடன் ஆரம்பித்தவர், அந்த ஓவர் முழுவதும், பவுண்டரிகளால் வறுத்தெடுத்தார். அந்த ஓவரில், விக்கெட் வீழ்த்த வேண்டும் இல்லையெனில், குறைந்தபட்சம், ரன்களையாவது கட்டுப்படுத்த வேண்டுமென்னும் நோக்கத்தில், மோரிஸ் வீசிய பவுன்சர், யார்க்கர், ஸ்லோ பால்கள் எல்லாமே வான்வெளியில் எறியப்பட்ட பந்தாக, பவுண்டரிகளுக்குப் பறந்து கொண்டே இருந்தது. மொத்தம் 22 ரன்கள் அடித்து, மோரிஸைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, தனது அரை சதத்தைக் கொண்டாடினார். எடுத்த செயலை நிறைவேற்றிய திருப்தியோடும், சற்றே அழகிய இறுமாப்போடும்.

30 பந்தில், 6 பவுண்டரிகள் மற்றும், 1 சிக்ஸர் அடித்து, 50 ரன்கள் எடுத்து, எளிதாக அணியை வெற்றிபெற வைத்துள்ளார், ஆர்சிபி அணியின் புதுத் தூதுவன், மேக்ஸ்வெல். கிட்டத்தட்ட பிளேஆஃப் வாய்ப்பை நெருங்கிவிட்ட ஆர்சிபி, 'இந்த வருடம் ஈ சாலா கப் நம்தே', சொல்லுமேயானால், அதில் மேக்ஸ்வெல்லின் பங்குதான், பெரும்பங்காக இருக்கும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை!