Published:Updated:

சென்னை சூப்பர் கிங்ஸ்: ஒரு யுகத்துக்கான மாவீரன் - 'கேப்டன் தோனி' இல்லாத சிஎஸ்கே இனி எப்படி?

தோனி - சென்னை சூப்பர் கிங்ஸ்

கேப்டன் பதவியைத் தவிர்த்துவிட்டு பார்த்தாலும் விக்கெட் கீப்பர் + ஹார்ட் ஹிட்டிங் ஃபினிஷர் என்கிற இந்த கேட்டகரியிலேயே புதிதாக ஒரு வீரரை அழைத்து வருவது அசாத்தியமான விஷயமே. சொற்பமான வீரர்களே இந்த இரண்டையும் சேர்த்து செய்து கொண்டிருக்கின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்: ஒரு யுகத்துக்கான மாவீரன் - 'கேப்டன் தோனி' இல்லாத சிஎஸ்கே இனி எப்படி?

கேப்டன் பதவியைத் தவிர்த்துவிட்டு பார்த்தாலும் விக்கெட் கீப்பர் + ஹார்ட் ஹிட்டிங் ஃபினிஷர் என்கிற இந்த கேட்டகரியிலேயே புதிதாக ஒரு வீரரை அழைத்து வருவது அசாத்தியமான விஷயமே. சொற்பமான வீரர்களே இந்த இரண்டையும் சேர்த்து செய்து கொண்டிருக்கின்றனர்.

Published:Updated:
தோனி - சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தனது கேப்டன் பதவியிலிருந்து விலகியிருக்கிறார். ஏற்கெனவே, சர்வதேச போட்டிகள் உள்ளூர் போட்டிகள் என அத்தனை விதமான போட்டிகளிலிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், தோனி ஐபிஎல்-இல் மட்டுமே ஆடி வந்தார். இப்போது அந்த ஐபிஎல்-லிலும் சென்னை அணியின் கேப்டன் பதவியைத் துறந்திருக்கிறார். தோனி ரசிகர்களைத் தாண்டி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையுமே இந்த முடிவு அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
ஜடேஜா புதிய கேப்டனாக பொறுப்பேற்கும் நிலையில் சிஎஸ்கேவின் எதிர்காலம் என்ன? கேப்டன் பதவியிலிருந்து விலகிய தோனி கூடிய விரைவிலேயே ஓய்வு முடிவையும் அறிவிப்பாரா? அப்படிச் செய்தால் தோனியின் இடத்தை சிஎஸ்கே எப்படி நிரப்பும்? - இதுபோன்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.
MS Dhoni | தோனி
MS Dhoni | தோனி
KBPHOTOGRAPHY

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தோனியின் இந்த கேப்டன்சி விலகல் அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் இது சிலகாலமாகவே எதிர்பார்க்கப்பட்டதுதான். அதற்கான அறிகுறிகளையும் தோனியே ஆங்காங்கே வெளிப்படுத்திக் கொண்டேதான் வந்திருந்தார். 2020 ஐ.பி.எல் சீசனின் போது பல வீரர்களும் தோனியின் ஜெர்சியை அவரின் கையொப்பத்தோடு நினைவுப்பரிசாக வாங்கி சென்றனர். அப்போது ஒரு போட்டிக்கு பிறகான பேட்டியில், "எல்லாரும் என் ஜெர்சியை வாங்கி செல்கிறார்கள். நான் ஓய்வுபெறப்போகிறேன் என நினைக்கிறார்களோ என்னவோ" என அதற்கெல்லாம் வாய்ப்பில்ல ராஜா என்கிற தொனியில் பேசியிருப்பார். அதே சீசனில்தான் ஓய்வு பற்றிய கேள்விக்கு 'Definitely not' என்றும் பதிலளித்திருப்பார். அந்த வார்த்தைகள் அப்போது வைரல் டிரெண்டாகின.

ஒய்வு தற்போதைக்கு இல்லை என 2020-ல் தீர்க்கமாக இருந்த தோனி 2021-ல் அவ்வளவு உறுதியாக இல்லை. ஐ.பி.எல் கோப்பையை வென்றுவிட்டு 'பிசிசிஐயின் மெகா ஏல விதிமுறைகள் ஒத்துழைத்தால்தான் தொடர்ந்து ஆடுவேன்' எனப் பேசியிருப்பார். அதேமாதிரி, சில நிகழ்ச்சிகளில் சென்னை சேப்பாக்கத்தில் வைத்தே தனது கடைசி போட்டியை ஆட வேண்டும் எனவும் பேசியிருந்தார். இவையெல்லாம் தோனி தனது Farewell ஐ பற்றி சிந்திக்கத் தொடங்கிவிட்டார் என்பதற்கான அறிகுறிகளாக அமைந்தன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில்தான் 2022 சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன்பான வீரர்கள் ரீட்டென்ஷனில் ஜடேஜாவை விட தோனி குறைவான சம்பளத்தை பெற்றுக்கொள்ள தாமே முன்வந்து ஒப்புக்கொண்டார். அப்போதே தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகுவார். ஜடேஜாவே அடுத்த கேப்டனாக பொறுப்பேற்பார் எனும் விஷயங்களெல்லாம் பேசப்பட்டன. அது இப்போது நிஜமாகியிருக்கிறது. ஐபிஎல் தொடங்குவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பாக தோனி தனது கேப்டன்சி விலகல் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். தோனி தனது கரியரின் கடைசிக்கட்டத்தில் இருக்கும்போது இது தக்க சமயத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவாகவே பார்க்கப்படுகிறது.

தோனி, அடுத்து என்ன?

Dhoni | Chennai Super Kings (CSK)
Dhoni | Chennai Super Kings (CSK)

தோனி 41 வயதை எட்டவிருக்கிறார். நாற்பது வயதைக் கடந்த பிறகும் விரல்விட்டு எண்ணும் வகையில் ஒரு சில வீரர்கள் மட்டுமே கிரிக்கெட் ஆடுவார்கள். அவர்களும் தொடர்ந்து ஆடினாலும் முன்பை போன்று நல்ல ஃபார்மில் இல்லாமல் சிறப்பாக ஆட முடியாமல் வெகு சீக்கிரமே ஓய்வை நோக்கி நகர்ந்துவிடுவார்கள். தோனியும் கிட்டத்தட்ட அந்த நிலையில்தான் இருக்கிறார். 'கேப்டன்' தோனி மீது யாருக்குமே விமர்சனம் இருக்காது. ஆனால், 'பேட்ஸ்மேன்' தோனி கடந்த சில சீசன்களாகவே சுமாராகத்தான் ஆடியிருக்கிறார். தன்னுடைய ஆட்டம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது என்பதை தோனியும் பல மொழிகளில் ஏற்கெனவே வெளிப்படுத்தியிருக்கிறார்.

அப்படியென்றால் தோனியிடமிருந்து வெகு சீக்கிரமே ஓய்வு அறிவிப்பையும் எதிர்பார்க்கலாமா?

இதற்குத் தெளிவான பதிலை கூற முடியாது. சென்னை சேப்பாக்கத்தில் வைத்துதான் தனது கடைசி போட்டியில் ஆட வேண்டும் என்கிற விருப்பத்தை தோனி வெளிப்படுத்தியிருக்கிறார். அதை எதோ போகிற போக்கில் அல்லாமல் பல இடங்களில் அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார். சென்னையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் "சேப்பாக்கத்தில்தான் எனது கடைசி போட்டியை ஆடுவேன். அது அடுத்த சீசனாக இருந்தாலும் சரி இல்லை இன்னும் சில சீசன்கள் கழித்தென்றாலும் சரி" என தோனி பேசியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதிலிருந்து தோனி தனது Farewell ஆட்டம் குறித்து எவ்வளவு தீர்க்கமாக இருக்கிறார் என்பதை உணர முடியும். இந்தியா பார்த்திடாத வெற்றிகளை பெற்றுக் கொடுத்த தோனி தனது கடைசி டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியாவிலும், லிமிடெட் ஓவர் போட்டியை இங்கிலாந்திலுமே ஆடியிருந்தார். உள்ளூரில் தன்னுடைய மண்ணில் கடைசி போட்டியை ஆடும் வாய்ப்பு தோனிக்குக் கிடைக்கவே இல்லை. அதனால் சேப்பாக்கத்தில் வைத்துதான் தோனியின் கடைசிப்போட்டி நிகழ வேண்டும் என்பதில் ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். அது இந்த சீசனில் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. இந்த சீசனில் அத்தனை லீக் போட்டிகளும் மும்பையைச் சுற்றியிருக்கும் மூன்று மைதானங்களிலேயே நடைபெறுகின்றன. ப்ளே ஆஃப்ஸ் பற்றி இன்னமும் அறிவிக்கப்படாவிடிலும் அதுவும் மும்பையில் நடைபெறவே அதிக வாய்ப்பிருக்கிறது. சேப்பாக்கத்தில் போட்டி நடைபெற வாய்ப்பே இல்லை.

விஜய்யுடன் தோனி
விஜய்யுடன் தோனி

ஆக, தோனி இந்த சீசனில் முழுமையாக ஆடுவதற்கான வாய்ப்பே அதிகம் இருக்கிறது. கேப்டனாக இல்லாவிடிலும் சென்னை அணிக்குமே தோனி இன்னமும் தேவைப்படத்தான் செய்கிறார். தோனியைத் தவிர அணியில் விக்கெட் கீப்பரென அம்பத்தி ராயுடுவும், ஜெகதீசனும் மட்டுமே இருக்கின்றனர். இதில் ஜெகதீசனுக்கு ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பதே அதிசயம்தான். அம்பத்தி ராயுடு விக்கெட் கீப்பராக நின்றே பல வருடங்கள் ஆகிவிட்டன. அதனால், தோனி விக்கெட் கீப்பராக ஆடியே ஆக வேண்டிய தேவை இருக்கிறது. இடையிலேயே ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு வேறு மாற்றுவீரரை வரவழைத்து க்வாரன்டீனில் வைத்து காலம் கடந்து அழைத்து வரும் சிரமத்தையெல்லாம் தோனி சென்னைக்கு கொடுக்கப்போவதில்லை.

தோனி ஃபார்ம் அவுட் ஆகியிருக்கிறார். முன்பை போல் ஆடுவதில்லை. ஆனாலும், சில போட்டிகளில் அவரின் அனுபவத்தின் மூலம் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். மேலும், புதிதாக கேப்டன் பொறுப்பேற்கும் ஜடேஜாவை விராட் கோலியை ஒரு சாதாரண வீரராக இருந்து தோனி எப்படி வழிநடத்தினாரோ அப்படி வழிநடத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. ஆக, தோனி இந்த சீசன் முழுவதுமே ஒரு சாதாரண வீரராக அணியில் தொடர்ந்து ஆடவே வாய்ப்பிருக்கிறது. அடுத்த சீசனில் ஆடுவாரா, சேப்பாக்கத்தில் போட்டி நடைபெறுமா என்பதை எல்லாம் விவாதிக்க இன்னும் நேரமிருக்கிறது.

சிஎஸ்கே, அடுத்து என்ன?

13 ஆண்டுகள். 4 கோப்பைகள். 2020ஐ தவிர எல்லா சீசனிலும் ப்ளே ஆஃப்ஸிற்கு தகுதி. இவற்றையெல்லாம் சாதித்தது ஒரே கேப்டன் என்பது நிச்சயமாக இமாலய சாதனைதான். சென்னையை விட ஒரு கோப்பையை அதிகம் வென்றிருக்கும் மும்பையையே 7 கேப்டன்களுக்கு மேல் பயன்படுத்தியிருக்கிறது. பெரும் சாம்ராஜ்யத்தையே கட்டியெழுப்பியிருக்கும் தோனி போன்ற வீரர் விட்டு செல்லும் தடத்தை நிரப்புவதென்பது சிஎஸ்கேவிற்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும்.
ஜடேஜா - தோனி
ஜடேஜா - தோனி

கேப்டன் பதவியைத் தவிர்த்துவிட்டு பார்த்தாலும் விக்கெட் கீப்பர் + ஹார்ட் ஹிட்டிங் ஃபினிஷர் என்கிற இந்த கேட்டகரியிலேயே புதிதாக ஒரு வீரரை அழைத்து வருவது அசாத்தியமான விஷயமே. சொற்பமான வீரர்களே இந்த இரண்டையும் சேர்த்து செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கும் பயங்கர டிமாண்ட் இருக்கும் சூழலில் தோனியின் அந்த இடத்தை ஒரே ஒரு வீரரை கொண்டு சிஎஸ்கேவால் நிரப்பிவிட முடியுமா என்பதே மிகப்பெரிய கேள்விக்குறிதான். ஓய்வுக்குப் பிறகு தோனி ஒரு வீரராக அணியில் இல்லாவிட்டாலும் பயிற்சியாளர் - ஆலோசகர் என்றளவில் எதோ ஒரு விதத்தில் சென்னை அணியோடு தொடர்ந்து பயணிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கிரிக்கெட்டைத் தாண்டி ஐபிஎல்-ஐ சுற்றி நடக்கும் வணிகத்திற்குமே இது ரொம்பவே முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

தோனி ஒரு யுகத்துக்கான வீரர். வெற்றி மேல் வெற்றிகளால் பெரும் சாம்ராஜ்யங்களைக் கட்டியெழுப்பியவர். அவரின் தடத்தை அப்படியே வேறொருவரால் நிரப்பிவிட முனைவது அசாத்தியமே. அதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism