Published:Updated:

மகாராஷ்டிரா அரசு திடீர் ஆலோசனை.. ஐபிஎல் தொடர் ரத்தா.. கங்குலி சொல்வது என்ன?!

கங்குலி
கங்குலி

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெறவிருந்த இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில், மார்ச் 29-ல் தொடங்கவிருக்கும் ஐபில் முதல் போட்டி சென்னை - மும்பை அணிகளுக்கு இடையே, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 3,500-க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எளிதாக பரவும் இந்த வைரஸைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அந்தந்த நாடுகளில் உள்ள அரசும் வைரஸ் பரவுவதைத் தடுக்க பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. அதேநேரம் கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பல விளையாட்டுப் போட்டிகள், முக்கிய நிகழ்வுகள் தள்ளிவைக்கப்பட்டும் ரத்தும் செய்யப்பட்டும் வருகின்றன.

ஐபிஎல்
ஐபிஎல்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெறவிருந்த இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில், மார்ச் 29-ல் தொடங்கவிருக்கும் ஐபில் முதல் போட்டி சென்னை - மும்பை அணிகளுக்கு இடையே, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. வான்கடே ஸ்டேடியத்தில் மட்டும் இந்த வருடம் 7 போட்டிகள் நடைபெறுகின்றன. தற்போது கொரோனா அச்சம் காரணமாக இந்தப் போட்டிகளை நிறுத்துவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தகவல் தெரிவித்திருக்கிறார்.

``மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும்போது தொற்று நோய்கள் பரவுவதற்கான ஆபத்து எப்போதும் உள்ளது. இதனால் இதுபோன்ற நிகழ்வுகளை பின்னர் ஏற்பாடு செய்துகொள்ளலாம். எனவே, ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது" என்று அமைச்சர் கூறியிருக்கிறார்.

இந்த அறிவிப்பை அடுத்து கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்வது குறித்து பிசிசிஐ சிந்தித்து வருவதாகப் பேசப்பட்டு வந்தது. இந்தியாவின் பணம் கொழிக்கும் விளையாட்டு என்றால் அது ஐபிஎல்தான். அப்படியிருக்கையில் பிசிசிஐ போட்டியை ரத்து செய்யுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருந்துவந்தது. தற்போது இதுதொடர்பாக பிசிசிஐ தலைவர் கங்குலி பேசியுள்ளார்.

இந்தியா டுடேவுக்குப் பேசியுள்ள அவர் திட்டவட்டமாக இதை மறுத்துள்ளார். ``ஐபிஎல் திட்டமிட்ட அட்டவணையின்படி நடைபெறும். ஐபிஎல் லீக்கோடு தொடர்புடைய அனைவருக்கும் கிரிக்கெட் வாரியம் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கும். தற்போது அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.

ஐபிஎல் கோப்பை
ஐபிஎல் கோப்பை
IPL

இதேபோல் பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் பேசுகையில், ``நாங்கள் நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். தேவையான எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்போம். ஐபிஎல் போட்டிக்கு இன்னும் நேரம் இருக்கிறது. பீதியடைய வேண்டாம். தற்போது வரை, எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. போட்டி நடைபெறும்போது பிசிசிஐ கூடுதல் மருத்துவக் குழுவை அரங்கங்களில் தயாராக வைத்திருக்கும். அரசாங்கம் பரிந்துரைத்த முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களைத் தவறாமல் பின்பற்றுவோம்.

உரிமையாளர்கள், விமான நிறுவனங்கள், வீரர்கள் தங்கும் ஹோட்டல்கள், ஒளிபரப்புக் குழுக்கள் மற்றும் போட்டியை நடத்துவதில் ஈடுபட்டுள்ள அனைவரையும் உள்ளடக்கிய அனைத்து பங்குதாரர்களுக்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படும். மேலும், ரசிகர்களுடன் கைகுலுக்க வேண்டாம் அல்லது சொந்தமாக இல்லாத சாதனங்களைக் கொண்டு படங்கள் உள்ளிட்டவைகளை எடுக்க வேண்டாம் என்றும் கிரிக்கெட் வாரியம், வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது" என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு