7090 கோடி ரூபாய் கொடுத்து புதிய IPL அணியான லக்னோவை வாங்கியது சஞ்சீவ் கோயங்காவின் RPSG நிறுவனம். கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டும் செயல்படும் அந்நிறுவனம் கிரிக்கெட் மட்டுமல்லாது பல்வேறு விளையாட்டுகளிலும் முதலீடு செய்திருக்கிறது.
இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான மோகன் பகானின் (இப்போது ATK மோஹன் பகான்) பெரும்பாலான பங்குகள் இந்நிறுவனத்திடமே உள்ளன. இக்கிளப்பின் மற்றுமொரு பங்குதாரராக இருப்பவர் சௌரவ் கங்குலி. அணியின் இயக்குனரும் இவரே. இதுவே இந்த புதிய சர்ச்சைக்கான காரணம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதாவது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிகள் ''பிசிசிஐ, அதன் உறுப்பினர்கள், IPL நிர்வாகம் அல்லது அணியின் உரிமையாளர்கள் மேற்கொள்ளும் ஏதேனும் ஓர் ஒப்பந்தத்தில் அவர்களுக்கு சம்மந்தப்பட்ட தனிநபர், உறவினர், பங்குதாரர் அல்லது நெருங்கியவர்களின் நிறுவனம் ஆகியவற்றுக்கு தொடர்பிருந்தால் அந்த ஒப்பந்தத்தின் முழுமையான செயல்திறன் மேற்கூறிய சம்பந்தப்பட்டவர்களால் சமரசம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது'' என்று கூறுகிறது. இந்த Conflict of interest சர்ச்சையைத் தவிர்பதற்காக மோகன் பகான் கிளப்பின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்போது கங்குலி விலக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசியுள்ள RPSG நிறுவனத்தின் துணைத்தலைவர் சஞ்சீவ் கோயங்கா இது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை கங்குலி விரைவில் வெளியிடுவார் என்று கூறியுள்ளார்.

இது போன்ற Conflict of Interest சர்ச்சைகளில் கங்குலியின் பெயர் அடிபடுவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. 2019-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைவராக கங்குலி தேர்ந்தெடுக்கப்பட்ட அதே நேரத்தில் அவர் மேற்குவங்க மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராவும் இருந்தார். அதுமட்டுமல்லாது ஐபிஎல் அணியான டெல்லி கேபிட்டல்ஸின் ஆலோசகராகவும் பணிபுரிந்த அவர் கமென்ட்ரி பாக்ஸிலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.