Published:Updated:

IPL 2021 : மொமன்ட்டம், ப்ராசஸ், பாசிட்டிவிட்டி... பழைய தோனியா வாங்க, விசில் போட CSK ரசிகர்கள் ரெடி!

''ஐபிஎல் மாதிரியான பெரிய தொடர்களில் ஒரு தோல்வியுடனேயே அணிகள் சுதாரித்துக்கொள்ள வேண்டும். அப்படியில்லையெனில் கண்ணை மூடி திறப்பதற்குள் ஐந்து அல்லது ஆறு போட்டிகளில் தோல்வி தொடர்ந்திருக்கும். அதன்பிறகு, ப்ளே ஆஃபுக்கு செல்வதற்கான வாய்ப்பு பறிபோய்விடும்''

ஐபிஎல் 2021 சீசனில் ஏறக்குறைய எல்லா அணிகளும் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்துவிட்டன. சிஎஸ்கேவும், சன்ரைசர்ஸும் மட்டுமே இன்னும் வெற்றிக்கணக்கதை தொடங்கவில்லை. கடந்த போட்டியில் டெல்லி அணியுடன் தோற்றிருந்த சிஎஸ்கே இன்று வலுவான பஞ்சாப் அணியுடன் மோதவிருக்கிறது. இந்த போட்டியில் வென்று முதல் வெற்றியை பதிவு செய்யுமா தோனியின் #CSK?!

இரண்டாவது போட்டிதானே இதில் தோற்றாலும் இன்னும் 12 போட்டிகள் இருக்கிறதே என நினைக்கலாம். ''ஐபிஎல் மாதிரியான பெரிய தொடர்களில் ஒரு தோல்வியுடனேயே அணிகள் சுதாரித்துக்கொள்ள வேண்டும். அப்படியில்லையெனில் கண்ணை மூடி திறப்பதற்குள் ஐந்து அல்லது ஆறு போட்டிகளில் தோல்வி தொடர்ந்திருக்கும். அதன்பிறகு, ப்ளே ஆஃபுக்கு செல்வதற்கான வாய்ப்பு பறிபோய்விடும்'' என கெவின் பீட்டர்சன் பல முறை குறிப்பிட்டிருக்கிறார். இந்த விஷயத்தில்தான் சென்னை அணி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யோசிப்பதற்கே நேரமில்லாமல் தொடர் தோல்விகள் துரத்தியதால்தான் சென்னை அணி கடந்த சீசனில் கடுமையாகத் தடுமாறியது. இந்த சீசனிலும் அப்படி ஒரு நிலைமை ஏற்படக்கூடாதெனில் சென்னை அணி பஞ்சாபுக்கு எதிரான இன்றைய போட்டியை வென்றே ஆக வேண்டும்.

இந்த போட்டியில் வெல்வதற்கு தோனி என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்தியாக வேண்டும்?

டாஸ் முடிவு என்பது தோனி கையில் இல்லையெனினும் ஆட்டத்தின் முடிவுகளில் டாஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. டாஸ்காயின் கூட இப்போதெல்லாம் #CSK-வுக்கு எதிராக சதி செய்வதைப் போலத்தான் தோன்றுகிறது.

தோனி - சுரேஷ் ரெய்னா
தோனி - சுரேஷ் ரெய்னா

கடந்த சீசனில் 7-ஆவது போட்டியில்தான் முதன்முதலாக தோனி டாஸையே வென்றார். இந்த சீசனிலும் முதல் போட்டியில் டெல்லிக்கு எதிராக டாஸில் தோற்றிருக்கவே செய்தார். வான்கடே மைதானத்தில் டாஸில் தோற்று முதல் பேட்டிங் செய்தது தோனிக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவே இருந்தது. நேற்று சிறிய டார்கெட் என்றாலும் ராஜஸ்தான் அணியை சிறப்பாக கட்டுப்படுத்தியிருந்தது டெல்லி. ஆனால், கடைசி சில ஓவர்களில் ஆட்டம் தலைகீழாக மாறியது. 19-வது ஓவரில் ரபடாவே இரண்டு சிக்சர்களை கொடுத்து டெல்லியின் வெற்றிக்கு வேட்டு வைத்தார்.

போட்டிக்குப் பிறகு பேசிய ரிஷப் பன்ட், 'பனியின் தாக்கம் அதிகம் இருந்தது' என குறிப்பிட்டிருந்தார். இதனாலேயே டாஸுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கிறது. சிஎஸ்கே முதல் பேட்டிங் செய்து எவ்வளவு பெரிய ஸ்கோரை எடுத்தாலும், வெற்றிகரமாக சேஸ் செய்துவிட பஞ்சாபிடம் பலம் இருக்கிறது. மேலும், ரபடாவே டெத் ஓவர்களில் அடி வாங்கும் போது சிஎஸ்கேவின் பௌலிங் டெத் ஓவர்களில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே. ஆனால், டாஸ் காயின் யார் பக்கம் நிற்கப்போகிறதோ?!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பௌலிங் லைன் அப்!

''11 பேருமே பேட்ஸ்மேனா இருந்தா என்னப்பா பண்றது!'' என ப்ளேயிங் லெவன் முழுவதையும் பேட்டிங் ஆடக்கூடிய வீரர்களாக வைத்திருக்கிறது சிஎஸ்கே. கடந்த சீசனில் வாங்கிய அடி அப்படி யோசிக்க வைத்திருக்கலாம். ஆனால், இதனால் பேட்டிங் சரியாகி பௌலிங்கில் பெரிய ஓட்டை உண்டாகிவிட்டதுபோல் தெரிகிறது. தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், சாம் கரண், பிராவோ என நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், யாராலும் 140+ கிமீ க்கு மேல் வீச முடியாது. இதுவே மிகப்பெரிய பின்னடைவு.

அதேபோலத்தான், ஸ்பின்னிலும் ஜடேஜா, மொயின் அலி என இரண்டு ஆல்ரவுண்டர்கள்தான் இருக்கிறார்கள். பிரதான ஸ்பின்னரான இம்ரான் தாஹிர் பென்ச்சிலேயே இருக்கிறார். கடந்த சீசனிலும் இம்ரான் தாஹிரை ப்ளேயிங் லெவனில் கொண்டு வர முடியாமல் தடுமாறியிருந்தார் தோனி. இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் சிஎஸ்கேவுக்கு உடனடி தீர்வு வேண்டும். 140+ வேகத்தில் வீச லுங்கி இங்கிடியும் பிரதான ஸ்பின்னராக இம்ரான் தாஹிரும் அணிக்குள் வந்தாக வேண்டும்.

டுப்ளெஸ்சி, மொயின் அலி, பிராவோ, சாம் கரண் இந்த நால்வரில் யாரை பென்ச்சில் வைத்துவிட்டு இங்கிடி, இம்ரான் தாஹிர் இருவரையும் தோனி அணிக்குள் கொண்டு வரப்போகிறார் என்பது சர்ப்ரைஸாக இருக்கும். கெயிலுக்காக இந்த போட்டியில் ஆஃப் ஸ்பின்னரான மொயின் அலி கட்டாயம் இருக்க வேண்டும் என தோனி நினைக்கலாம். அப்படியிருக்கும்பட்சத்தில் இம்ரான் தாஹிருக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே. அதேப்போல் லுங்கி எங்கிடி க்வாரன்டைன் விதிகளால் இன்றும் விளையாடமுடியாதே சூழலே நிலவுகிறது.

சாம் கரண்
சாம் கரண்

பவர்ப்ளே முக்கியம்!

பேட்டிங்கிலும் சரி, பௌலிங்கிலும் சரி சென்னை அணியின் பவர்ப்ளே பர்ஃபாமென்ஸ் என்பது மிகவும் மோசமாகவே இருக்கிறது. கடந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக பவர்ப்ளேவில் சென்னை அணி 33 ரன்களை மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 36 பந்துகளில் 22 பந்துகளை டாட் ஆக்கியிருந்தது சென்னை அணி. இது கவலைக்குரிய விஷயம். கடந்த சீசனிலிருந்தே பவர்ப்ளேவில் அதிகம் டாட் ஆடும் அணியாக சென்னை அணியே இருக்கிறது. மேலும், கடந்த சீசனிலிருந்து டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்குப் பிறகு பவர்ப்ளேவில் அதிக விக்கெட்டுகளை இழந்தது சென்னைதான்.

பவர்ப்ளேவில் மட்டும் 23 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது சென்னை அணி. மேலும், கடந்த போட்டியில் பௌலிங்கிலும், பவர்ப்ளேவில் 65 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டைக்கூட எடுக்கவில்லை. பேட்டிங்கில் பவர்ப்ளேவில் சொதப்புவதால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீது அழுத்தம் கூடுகிறது.

வெற்றி தோல்வி என போட்டியின் முடிவை கூட பவர்ப்ளே சொதப்பல்கள் மாற்றிவிடுகிறது. டெல்லிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு ''ஒரு 15-20 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்'' என தோனி கூறியிருந்தார். அந்த கூடுதல் 15-20 ரன்கள் பவர்ப்ளேவில் வந்தே ஆக வேண்டும். பௌலிங்கிலும் குறிப்பாக இன்றைய போட்டியில் பவர்ப்ளேவில் விக்கெட் எடுத்தே ஆக வேண்டும். கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால், கெயில் எல்லாம் நின்றுவிட்டால் பிரித்து மேய்ந்துவிடுவார்கள்.

ஓப்பனிங் கூட்டணி!

கடந்த சீசனில் தொடர் தோல்விகள் ஏற்பட்டதற்கு ''ஓப்பனிங்கில் மொமன்ட்டம் இல்லை'' என்பதையே தோனி பல முறை காரணமாக கூறியிருந்தார். இந்த முறையும் முதல் போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட்- டுப்ளெஸ்சி கூட்டணி சொதப்பியே இருந்தது. பஞ்சாபுக்கு எதிராக இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்து 200+ ரன்களை எடுக்க வேண்டுமாயின் ஓப்பனிங் கூட்டணி கட்டாயம் நல்ல பார்ட்னர்ஷிப்பை கொடுத்தாக வேண்டும்.

ஆசிஃப், ருத்துராஜ் கெயிக்வாட்
ஆசிஃப், ருத்துராஜ் கெயிக்வாட்

தோனியின் மனநிலை!

டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோற்றதைவிட, தோனியின் மனநிலையையும் உடல் மொழியும்தான் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. தோனியிடம் எந்தவித உற்சாகமும் தன்னம்பிக்கையும் இல்லவே இல்லை. 2018-ல் சென்னையின் கம்பேக் போட்டியில் பதற்றத்தில் தோனி டிரெஸ்ஸிங் ரூமில் குறுக்க மறுக்க நடந்து கொண்டிருந்தார். அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால், கடந்த போட்டியிலும் தோனி அவ்வளவு பதற்றத்துடனேயே திரிந்துக் கொண்டிருந்தார்.

ஃபீல்டிங்கின் போதுமே அவரிடம் வழக்கமான உற்சாகம் தென்படவில்லை. சான்ட்னர் கேட்ச் ட்ராப் செய்யும்போதெல்லாம் வழக்கத்துக்கு மாறாக நெகட்டிவ் ரியாக்ஷனை வெளிக்காட்டியிருந்தார். இது வழக்கமான தோனியே இல்லை. கடந்த சீசனில் தொடர் தோல்விகள் கொடுத்த அழுத்தம் தோனியின் நேர்மறை எண்ணத்தை பறித்தது. ஆனால், இது புது சீசன் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது.

இங்கேயும் தோனி எதிர்மறையான உடல்மொழிகளையே வெளிப்படுத்துவதற்கான காரணம் புரியவில்லை. அவரின் மோசமான பேட்டிங் ஃபார்ம் அவரின் மனநிலையிலும் தாக்கம் ஏற்படுத்துகிறதோ என தோன்றுகிறது. எதுவாக இருந்தாலும் தோனி பழைய மாதிரி பாசிட்டிவியோடு மீண்டு வர வேண்டும். தோனிதான் சிஎஸ்கே...சிஎஸ்கேதான் தோனி...தோனியே துவண்டு போனால் எப்படி?! மீண்டு வாங்க தோனி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு