தோனிக்கும் சென்னைக்குமான நெருக்கம் பற்றிச் சொல்லிதான் தெரியவேண்டும் என்றில்லை. ஏனெனில் அது அவ்வளவு உணர்வுபூர்வமானது. என்னதான் இந்தியா முழுக்க அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் இருந்தாலும் சென்னை ரசிகர்களின் அன்பு தனித்துவமானது. அதேபோல் சென்னை மீது அவர் வைத்திருக்கும் அன்பும் அப்படித்தான். சுருக்கமாகச் சொன்னால் சென்னை அவருக்கு இன்னொரு தாய்வீடு. அப்படிப்பட்ட சென்னையில் தோனி, பைக்கை எடுத்துக்கொண்டு சுற்றித்திரிந்த தருணங்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன்.

இது பற்றிக் கூறிய சீனிவாசன், "பொதுவாக தோனி ஒரு பைக் பிரியர். அவர் 2008ம் ஆண்டு சென்னை வந்தபோது அவருக்கென்று பைக் ஒன்றைத் தயார் செய்து கொடுத்தோம். உடனே அங்கிருந்து மாயமானவர்தான். அன்று அந்த பைக்கை எடுத்துக்கொண்டு சென்னை முழுவதும் சுற்றித்திரிந்தார். பைக்கிலேயே சென்னை மாநகரின் மூலைமுடுக்கெங்கும் பயணம் செய்தார். அதுவே, சென்னை மீது அவர் அன்பு கொள்ள ஒரு முக்கிய காரணமாக அமைந்தது" என்றார்.